குத்தாலம் ஒன்றியம் வழுவூர் ஊராட்சி நாகை மாவட்டத்தில் வீரடேஸ்வரி கோவிலில் அனைத்து சமூகத்தைச் சார்ந்த மக்களும் வழிபட்டும், கரகமெடுத்தும் வந்தனர். சில ஆண்டுகளாக கோவில் சேதமடைந்த காரணத்தினால் கோவில் விழா நடக்காமல் இருந்தது. பிறகு தலித் மக்கள் சேதப் பகுதிகளைச் சரிசெய்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் வழிபடத் தயாராகினர்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மணி கண்டன், (பவர் பிளாண்ட்டிற்கான நிதியில் ஒரு கோடி மோசடியில் சம்பந்தப்பட்ட,வன்,) அ.தி.மு.க செந்தில்நாதன் நாகை மாவட்ட அம்மா பேரவைத் தலைவர், மக்களை மிரட்டி இதுவரை ஊராட்சி மன்றத் தலைவராக நான்கு முறை வந்திருக்கிறார். ராஜேந்திரன் குத்தாலம் ஒன்றியச் செயலாளர், இத்தகைய சக்திகள் தான் சாதிவெறிச்செயலை செய்துவருகின்றனர். தலித்மக்களைக் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை.

இச்செயலைக் கண்டித்து அப்பகுதி தலித் மக்கள் ஆர்.டி.ஓ மற்றும் வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். புகாருக்குப் பின் அரசுத் தரப்பில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஓராண்டு கடந்தும் பிரச்சனைத் தீர்க்கப்படவில்லை. 10.03.2015 தலித் மக்கள் வழிபடும் உரிமையைத் தடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் சாதிஆதிக்க வெறியர்கள் அடங்கியபாடில்லை. தலித் மக்களைத் தாக்கிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். பிறகு காவல்துறை பகுதிக்குள் குவிக்கப்பட்டது. அப்பாவிகள் ஒன்பது பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் ஈழவளவன் இந்த ரவுடி கும்பலுக்கு எதிராக மக்கள் விடுதலை கட்சியோடு களத்தில் நின்று போராடி வருவதால் அவர் மீது பொய் வழக்கு போட்டு தேடுதல் வேட்டையை காவல்துறை தொடங்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வந்த அரசுத் தரப்பும், ஆதிக்க சாதிவெறியர்களோடு கைகோர்த்துக் கொண்டு அறுவடை நிலையில் இருக்கும் பயிரை அறுவடை செய்யவிடாமல் தடுக்கிறது. நடவு வேலை, களை எடுப்பு என எந்த வேலையையும் நடக்கவிடாமல் தடுக்கிறார்கள். ஓராண்டாக நூறு நாள் வேலையையும் தர மறுக்கிறார்கள். பள்ளி மாணவிகள் அப்பகுதியைக் கடப்பதில் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அது மட்டுமில்லாமல், கடந்த 10 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதிகளும் (சாலை, குடிநீர்) செய்து தர மறுக்கின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பண்பாட்டு உரிமையையும், பொருளாதார வளர்ச்சியையும் தடுத்துவருகின்றனர். இப்போக்கைக் கண்டித்து 23.07.2015 அன்று மயிலாடுதுறையில் சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குணசேகரன் தலைமையில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

அரசு தரப்பில் இதுவரை அமைதிக்கான பேச்சுவார்த்தை இரண்டுமுறை நடைபெற்றிருக்கிறது. ஆனால் சாதிவெறி ரவுடி சக்திகள் மேல் எந்த நடவடிக்கையையும் நிர்வாகம் எடுக்கவில்லை. அவர்கள் இதுவரை கைதுசெய்யப்படவும் இல்லை. மாறாக 107 வழக்கின் கீழ் இரு தரப்பு சிக்கலாக திசைமாற்றி 25 பேர் மீது வழக்கு போட்டு அலைகழிக்கிறது ஆர்டிஓ. இவை தலித் மக்களுக்கான பாதுகாப்பை வழிபாட்டு உரிமையை சீர்குலைக்கும் விதமாகவே அமைந்திருக்கிறது.

ஆக சாதிமோதலை தூண்டி உழைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை கெடுக்கும் சக்திகள், மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடும் போராளிகள் மற்றும் சமூகப் போராளி தோழர் ஈழவளவன் உள்ளிட்ட அப்பாவி மக்கள் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்ப பெறவேண்டும். தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விவசாய வேலையை தலித் மக்கள் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து சாதிவெறி சக்திகளை முறியடிக்க களம் காண்போம். 

Pin It