மனுதர்ம எரிப்புக் கிளர்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் அனுமதித்தால், நானும் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்கத் தயார் என்று பலத்த கரவொலிக்கிடையே ஈரோட்டில் கழக மாநாட்டில் தொல் திருமாவளவன் அறிவித்தார். டிசம்பர் 24 ஆம் தேதி மாநாட்டில் தொல். திருமாவளவன் ஆற்றிய நிறைவுரை:

இம்மாநாட்டில் பங்கேற்று நிறைவாக உரையாற்றக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நெஞ் சார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நெருக்கடியான காலக் கட்டத் தில் ஒரு தேவையான மாநாட்டினை ஒருங் கிணைத்து வெற்றிகரமாக நடத்திக் கொண் டிருப்பது பெரும் ஆறுதலைத் தருகிறது. தனிமைப் படுத்துகிற முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு கொண்டிருக்கிற நேரத்தில், ஒடுக்கப்பட்டவர்களை யாரும் தனிமைப்படுத்த முடியாது; இதோ நாங்கள் இருக்கிறோம்; பெரியாரின் பிள்ளைகள் இருக்கிறோம்; கருஞ்சிறுத்தைகள் இருக்கிறோம் என்று இன்றைக்கு களமாடிக்கொண்டிருக்கிற, திராவிடர் விடுதலைக் கழகத்தின் அத்துணைத் தோழர்களுக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கிறேன்.

வருகிற ஏப்ரல் திங்கள் பதினான்காம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளன்று, மனுதர்ம சாஸ்திரத்தை எரிக்கும் போராட்டம் இந்த மாநாட்டில் அறிவிக்கப் பட்டிருக்கிறது. அந்த எரிப்பு போராட்டம் ஏன் என்பதை விளக்குவதற்கான மாநாடாக, இந்த இரண்டு நாள் மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டு, முற்போக்கு சிந்தனையாளர்கள், ஜனநாயக சக்திகள் பலரும் இங்கே வருகை தந்து, இந்த புரட்சி நெருப்பை பற்ற வைத்திருக்கிறார்கள். இன்னும் பெரியாரின் கருத்துக்கள் குறைந்தது ஐம்பது ஆண்டுகளுக்காவது பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை, இன்றைய புதிய மனுவாதிகள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். தந்தை பெரியார் பிறந்த மண்ணில், அவருடைய நினைவு நாளில் இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடாக இது தன்னில் பதிவு செய்திருக்கிறது.

1920 களில் தந்தை பெரியார் அவர்களும், எம்.சி.இராஜா போன்றவர்களும், சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த தோழர் கண்ணப்பர் போன்றவர்களும், மனுதர்ம சாஸ்திரத்தை எரிக்க வேண்டிய தேவையை அன்றைக்கு எந்த அடிப்படையில் சொன்னார்களோ, அந்த அடிப்படை இன்னும் அப்படியே இருக்கிற காரணத்தால் மீண்டும் மனுதர்மத்தை எரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. மனுதர்மத்தை எரிப்பதனால் ஜாதி ஒழிந்துவிடுமா? அப்படி எரிப்பதனால் ஒழிந்து விடாது. ஆனால் இங்கே நிலவுகிற இந்த ஜாதிய கட்டமைப்புக்கு, ஜாதிய வன்கொடுமைகளுக்கு, எது அடிப்படை என்பதை அடுத்தடுத்த புதிய தலைமுறைகளுக்கு அடையாளம் காட்டுகிற ஒரு போராட்டமாக இந்த போராட்டம் அமையும். மனுதர்மம் என்பது அன்றைய அரசியல் அமைப்பு சட்டம். இந்த நாட்டை மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் அன்றைக்கு அரசர்களுக்குத் தேவையாக இருந்த சட்ட விதிகளாகத் தான் மனுதர்மம் விளங்கியிருக்கிறது. இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது. இன்றைய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதியவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். ஆனால் அன்றைய இந்துக்களின் அரசியல் அமைப்புச் சட்டமாக இந்த மனுதர்மம் விளங்கியது. ஆனால் இதை எழுதியவன் யார்? அப்படி ஒரு ஆள் யாருமே இல்லை என்பது தான், ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு.    

மனுதர்மம் என்பது மனித தர்மம் என்கிற பொருளில்தான் தொகுத்திருக்கிறார்கள்; இந்துக் களின் தர்மம் என்கிற பொருளில் தான் தொகுத் திருக்கிறார்கள்; ஆனால், பார்ப்பனர்களின் தர்மம் என்பதைத் தான் அதிலே உறுதிப்படுத்தியிருக் கிறார்கள். மனுதர்மத்தின் அடிப்படை என்பது, பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் – அவர்கள் உழைக்க மாட்டார்கள் – மற்ற அனைவரும் தாழ்ந்தவர்கள் – அவர்கள் பார்ப்பனர்களுக்காக உழைக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்ட ஒரு தர்மம். அதை தர்மம் என்றே சொல்லக் கூடாது, அதர்மம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசியல் அமைப்புச் சட்டமாகத்தான், அன்றைய காலத்தில் அன்றைய மன்னர்களால் கையாளப் பட்டு வந்தது. அதனால் தான் இந்த மண்ணில், தனித்தனி ஜாதிகளாய் மக்கள் பிரிந்து கிடக்கும் நிலை, அதை வலுப்படுத்தும் சூழல் அதனை தொடர்ந்து கட்டிக் காப்பாற்றுகிற ஒரு நிலைமை வளர்ந்துவிட்டது. அதை அவ்வளவு எளிதாக அசைக்க முடியவில்லை. அதை வேரறுக்க முடிய வில்லை. அதை அசைப்பதற்கு – வேரறுப்பதற்கு இந்த மண்ணிலே தோன்றிய மகான்களுள் – மாமனிதர்களுள் முன்னணியில் இருக்கிற தலைவர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் என்பதை, நாம் நன்றிப்பெருக்கோடு நினைவு கூறுகிற ஒரு மாநாடாகத்தான், இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

தந்தை பெரியார் என்ற ஒரு மாமனிதர் இந்த மண்ணிலே பிறந்திருக்காவிட்டால், நமக்கு கொளத்தூர் மணி என்கிற இந்த போராளி கிடைத்திருப்பாரா? விடுதலை இராசேந்திரன் என்கிற இந்த மனிதநேயப் போராளி நமக்கு கிடைத்திருப்பாரா? பெரியார் பெயரால் பல இயக்கங்கள் செயல்படலாம், திராவிடர் கழகமாகவோ, பெரியார் திராவிடர் கழகமாகவோ, திராவிடர் விடுதலைக் கழகமாகவோ இந்த மண்ணில் இயங்கினாலும், அத்தனைப் படை வரிசையிலும் இருக்கிற, பெரியாரின் தளபதிகளாக இருந்து, ஜாதியவாதிகளுக்கு எதிராக இன்றைக்கு குரல் கொடுக்கிறார்கள் - எதிர்ப்புக் குரல் கொடுக்கிறார்கள் - மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிற போது, நமக்கு பிரமிப்பும், அதே நேரத்தில் ஒரு சிலிர்ப்பும் ஏற்படுகிறது.

நினைத்துப் பாருங்கள் ! ஜாதி வெறியர்களெல்லாம் ஜாதி தர்மத்தை - மனுதர்மத்தை தூக்கிப் பிடிக்கிறபோது - ஜாதி வெறியர்களெல்லாம் ஜாதிக் கட்டுப் பாடுகளை நியாப்படுத்துகிறபோது - ஜாதி வெறியர் களெல்லாம் காதல் திருமணங்களே கூடாது என்று கூச்சல் போடுகிறபோது - பெண்களுக்கு சொத்துக் கள் கூடாது என்று இயக்கம் எடுக்கிறபோது - அதற்குப் பதிலடி கொடுக்கிற வகையிலே இன்றைக்கு துணிந்து வீரியமாய் களத்தில் வந்து நிற்பவர்கள், பெரியாரின் பிள்ளைகள்-பெரியாரின் சீடர்கள். இந்த களம் இல்லையென்று சொன்னால் திருமாவளவனுக்கு பாதுகாப்பு உண்டா? ஒடுக்கப் பட்ட மக்களுக்கு பாதுகாப்பு உண்டா ? ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு உண்டா? ஜாதியின் பெயரால் வஞ்சிக்கப்படுகிற - சுரண்டப்படுகிற - நசுக்கப்படுகிற இந்த மக்களுக்கு பாதுகாப்பு உண்டா?

நிறைவேற்றப்பட்டிருக்கிற எட்டுத் தீர்மானங் களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீட்டி யிருக்கிற - நிறைவேற்றியிருக்கிற தீர்மானங்களைப் போல் இருக்கிறது. இந்த தீர்மானங்களுக்கு இன்றைய புதிய மனுவாதிகள் பதில் சொல்ல முடியுமா? திருமாவளவனும் திருமாவளவனின் இயக்கத்தைச் சார்ந்தவர்களும் ஜீன்ஸ் பேண்ட் போட்டால் அவர்களுக்கு வயிற்றெரிச்சல் வருகிறது; அண்ணன் கொளத்தூர் மணி இப்போது ஜீன்ஸ் பேண்ட் போட்டிருக்கிறார், அண்ணன் விடுதலை இராசேந்திரன் இப்போது ஜீன்ஸ் பேண்ட் போட்டிருக்கிறார், புதிய மனுவாதிகளே! ஜாதி வெறியர்களே! இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? மணி அண்ணனும் இராசேந்திரன் அண்ணனும் காதலிக்கப் போகிறார்கள் திருமா வளவன் தூண்டிவிட்டான் என்று சொல்லப் போகிறீர்களா? திருமாவளவன் வகுப்பெடுத்தான் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

தோழர்களே பெரியார் இயக்கம் எந்த அளவிற்கு இங்கே ஒரு கலகத்தை ஏற்படுத்துகிறது பார்த்தீர்களா! பெரியார் இயக்கம் எந்த அளவிற்கு இங்கே ஒரு எதிர்க்குரலை எழுப்பியிருக்கிறது பார்த்தீர்களா! பெரியார் இயக்கம் ஜாதி வெறியர்களை எந்த அளவிற்கு அம்பலப்படுத்துகிறது பார்த்தீர்களா! பெரியார் இயக்கம் எந்த அளவிற்கு ஜாதி வெறியர்களின் முகத்திரையை கிழிக்கிறது பார்த்தீர்களா! நன்றி உணர்வோடு இன்று நான் இந்த மேடையிலே உரையாற்றிக் கொண்டிருக்கிறேன். பெரியாரின் காலடிகளில் நான் இந்த நன்றி மலர்களை காணிக்கையாக்குகிறேன். அந்த அளவிற்கு இந்த சமுதாயத்திலே ஒரு மிகப் பெரிய நெகிழ்வு உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஜாதி வெறியர்களின் இறுக்கத்தை இது தளர வைத்திருக்கிறது. ஜாதி வெறியர்களின் இந்த கொடூரமான கூச்சலை இது அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தொண்ணூற்று நான்கு வயது வரையில் தந்தை பெரியார், உடல் நலிவுற்ற நிலையிலும் – சிறுநீரை தாங்குகிற சட்டியை சுமந்தவாறு – ஊர் ஊராய் சுற்றி இந்த பிரச்சாரத்தை அவர் ஏன் எடுக்க வேண்டும்? வசதியான குடும்பத்தில் பிறந்தவர்; வணிகராக இந்த மண்ணில் வாழ்ந்தவர்; விரும்பியதையெல்லாம் கொண்டுவந்து கொடுப்பதற்கு ஆட்கள் இருந்தார்கள்; உயர் ஜாதிக் காரர்களின் தோளிலே கைகளைப் போட்டுக் கொண்டு சுகபோகமாக வாழலாம்; அப்படி எல்லா வசதிகள் இருந்தும், இன்னும் சொல்லப் போனால் அவருக்கும் இந்த சமூகத்திலே ஒரு ‘ஜாதி இந்து’ என்ற பாதுகாப்பு இருந்தது; அவர் ‘பள்ளரோ’ ‘பறையரோ’ ‘சக்கிலியரோ’ என்கிற அந்த இழிவுப் பட்டத்தை சுமந்து கொண்டு இந்த மண்ணிலே வாழவில்லை; ’நாயக்கர்’ என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அளவுக்கான ஒரு பாதுகாப்புப் பட்டமும் அவருக்கு இருந்தது; அப்படிப்பட்ட சூழலில் அவர் நமக்கென்ன என்று வாழ்ந்திருக்க முடியும். உயர் ஜாதி இந்துக்களோடு அவர் கூடி குலாவியிருக்க முடியும்; உயர் ஜாதி இந்துக்களோடு அவர் நட்புறவு கொண்டாடி அவர் வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்திருக்க முடியும். ஆனால் அதையெல்லாம் உதறி எரிந்து விட்டு, இந்த மனுசாஸ்திர குப்பைகள் என்ன சொல்லுகின்றது என்பதை தோண்டி – துருவி – ஆராய்ந்து, இது தான் இந்த சமூகத்தின் கேடுகளுக்கு - அனைத்து கேடுகளுக்கும் அடிப்படை என்பதை அறிந்து, இந்த மண்ணில் அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளக் கூடிய அளவிலே, தொன்னூற்று ஐந்து வயது வரையில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்தப் பிரச்சாரம் வீண் போகவில்லை

தோழர்களே! ஏசு பெருமானுக்கு எப்படி நல்ல சீடர்கள் கிடைத்ததனால் உலகம் முழுவதும்  எப்படி கிருத்துவம் பரவியிருக்கிறதோ, அதைப் போல் தந்தை பெரியாருக்கு நல்ல சீடர்கள் கிடைத் திருக்கிறார்கள், அந்த கருத்துக்கள் இன்றைக்கு வலுவாக பரவிக் கொண்டிருக்கிறது; அந்த பிரச்சாரம் இன்று மக்களிடத்திலே சென்று கொண் டிருக்கிறது. அதனால் தான், திரைப்படங்களிலே காட்டுவார்கள்…. தாலி என்பது வேலி என்று. ஒருவன் எவ்வளவு நோஞ்சானாக இருந்தாலும் – எவ்வளவு அழுக்கானவனாக இருந்தாலும் – எவ்வளவு கேவலமானவனாக இருந்தாலும், தாலியை ஒரு பெண்ணின் கழுத்தில் கட்டி விட்டால், அவன் தான் அவளுக்குக் கணவன் என்று சொல்லத் தக்க வகையிலே இந்துத்துவம், தாலியின் மீது ஒரு புனிதத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்கிற அடைமொழிகளின் மூலம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

அப்படிப்பட்ட தாலிக் கயிற்றினை பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கிற இந்த மேடையிலே வந்து அறுத்தெறிந்தார்கள் தோழர்கள் என்றால், அந்தத் துணிச்சலைத் தந்தது எது ? பெரியாரியம் தந்திருக் கிறது. இது தான் தோழர்களே பெரியாரியத்துக்கு கிடைத்திருக்கிற மகத்தான வெற்றி. ஆண்களுக்கு அந்த துணிச்சல் வரலாம்; பெண்களுக்கும் அந்த துணிச்சல் வந்திருக்கிறது இதுதான் பெரியாருக்கு கிடைத்த வெற்றி. ஆண்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொள்ளலாம் அது அழகு என்று கூட அவர்கள் கருதக் கூடும்; ஆனால் பெண்களும் ஜீன்ஸ் பேண்ட் போடுவோம் என்று துணிச்சலாக மேடை ஏறி வந்திருக்கிறார்கள் என்பது தான் பெரியாரியத்துக்கு கிடைத்திருக்கிற வெற்றி.

மனுதர்மம் என்பது பெண்களையும் கொச்சைப் படுத்துகிற ஒரு தர்மம் – தலித்துகளையும் கொச்சைப் படுத்துகிற ஒரு தர்மம் – விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான அநீதியைத் தருகிற ஒரு சாஸ்திரம். அப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக – பெண்களுக்கு எதிராக பேசப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும், ஆண்கள் விரும்பிய ஆணாதிக்க சிந்தனைகள் அனைத்தையும் தொகுத்து, மனுதர்மம் என்று இந்த மண்ணில், இந்துக்களின் சட்டமாக – பார்ப்பனர் களின் சட்டமாக வரையறுத்துக் கொடுத்தார்கள். அது தான் தோழர்களே இன்றைக்கும் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது. மனுதர்மம் பால்ய விவாகத்தை நியாயப்படுத்தியது; விதவை மறு மணத்தைத் தடை செய்தது; ஜாதியை நியாயப் படுத்தியது; தீண்டாமையை நியாயப்படுத்துகிறது; பெண்களை அடிமைப்படுத்துவது சரி என்று வலியுறுத்துகிறது. இவை அனைத்தையும் அடித்து நொறுக்கி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், குழந்தைத் திருமணம் சட்டப்படி குற்றம்; விதவைத் திருமணம் சட்டப்படி ஏற்கப்படும்; ஜாதி என்பது சட்டப்படி ஏற்கமுடியாத ஒரு அமைப்பு; தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம், இப்படி எல்லாவற்றையும் சொல்லமுடிந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒன்றை சொல்ல முடியவில்லை தோழர்களே !

மனுதர்மம் சொன்ன அனைத்தையும் மறுத்துச் சொன்ன இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், மனுதர்மம் சொன்ன ஒன்றை மட்டும் மறுத்துச் சொல்ல முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை நாம் உணர்ந்து பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது தோழர்களே. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதியவர் புரட்சியாளர் அம்பேத்கர்; சமஸ்கிருதத்தை அவரே விரும்பி படித்து, மனுதர்மத்தையும் படித்து, இவைகள் என்ன சொல்லுகின்றது என்பதை பெரியாரைப் போலவே ஆய்ந்து – தேர்ந்து, அதன் மூலம் அவற்றையெல்லாம் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, போராடிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மனுதர்மத்தில் நியாயப்படுத்திய ஜாதியை மறுதளிக்க முடியாமல் போனது. மனுதர்மம் இன்னொன்றை நியாயப்படுத்துகிறது; ஜாதிக்குள் ஜாதி – குலத்திற்குள் குலம் திருமணம் செய்வதை மனுதர்மம் நியாயப் படுத்துகிறது; அப்படி ஜாதிப் பார்த்து - குலம் பார்த்து - கோத்திரம் பார்த்து திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று அரசியல் அமைப்புச் சட்டத்திலே இணைக்க முடியவில்லை. இந்த இடத்திலே ஆழமாக நாம் ஒன்றை எண்ணிப்பார்க்க வேண்டிய – ஒப்பிட்டு பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த – பழங் குடியின வகுப்பைச் சார்ந்த அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதிலே இட ஒதுக்கீடு தேவை என்பதை உணர்ந்து, ஒரு அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள்; மாநிலங்களவையிலே அது நிறைவேற்றப்பட்டுவிட்டது; மக்களவையிலே அறிமுகப் படுத்துகிற நிலையிலேயே அந்தத் தாள் பறிக்கப்பட்டுவிட்டது. அதை விவாதிக்க விடா மலேயே – நிறைவேற்ற விடாமலேயே தடுத்து விட்டார்கள். தோழர்களே! ஆட்சி அதிகாரம் என்பதுதான் – அரசியல் அதிகாரம் என்பது தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கக் கூடிய ஆற்றலை கொண்டது. அப்படி ஆட்சி அதிகாரத்தை – அரசியல் அதிகாரத்தை யார் கைகளில் வைத்திருக் கிறார்களோ, அடிப்படைச் சட்டங்களை இயற்றுகிற வலிமையை யார் பெற்றிருக் கிறார்களோ, அவர்கள் தான் வெற்றி பெறுகிறவர்களாக எப்போதும் இருக்கிறார்கள். அந்த ஆட்சி அதிகாரத்தை அல்லது அரசியல் அதிகாரத்தை தொடமுடியாத விளிம்பு நிலையில் நாம் கிடக்கிறோம். அதை தீர்மானிக்க முடியாத இடத்தில் எங்கோ தொலைதூரத்தில் நாம் ஓரங்கட்டப்பட்டு கிடக்கிறோம்.

அப்படிப்பட்ட நிலையிலே அன்றைக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதுகிற வாய்ப்பினை புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றிருந்தாலும் கூட, அவர் எழுதிய ஒவ்வொரு சொல்லும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. ஒவ்வொரு அதிகாரமும் – உறுப்பும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புரட்சி யாளர் அம்பேத்கர் விரும்பியவாறு அரசியல் அமைப்புச் சட்டத்தை அவரால் எழுத முடியாமல் போனது. கட்டுப்படுத்துகிற ஆற்றலை உயர்ஜாதி இந்துக்கள் அல்லது பார்ப்பனர்கள் பெற்றிருந் தார்கள். ஆகவே புரட்சியாளர் அம்பேத்கர் விரும்பியபடி மனுதர்மத்திற்கு எதிரான கருத்துக்கள் அனைத்தையும் அரசியல் அமைப்புச் சட்டத்திற் குள்ளே அவரால் கொண்டுவர முடியவில்லை. அதிலே அம்பேத்கரால் அகமண முறைக்கு எதிரான ஒரு சட்டத்தைக் கொண்டுவர முடியவில்லை. அன்றைக்கு அது எப்படி தோற்றுப்போனதோ, அப்படித்தான் தோழர்களே இன்றைக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை மக்களவையில் அறி முகப்படுத்துகிற நிலையிலேயே அதைக் கிழித்தெறிந்தார்கள்; நிறைவேற்ற விடாமல் தடுத்தார்கள். 

தலித்துகளுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மட்டுமல்ல, பெண்களுக்கு அரசியல் இட ஒதுக்கீடு கூடாது என்றும், தோற்கடித்துக்கொண்டே இருக் கிறார்கள். இந்தச் சமூகத்தில் பெண்களும், தலித்துகளும் விளிம்புநிலை மக்கள் என்பதை மறந்து விடக் கூடாது. பெண்களுக்கும், தலித்து களுக்கும் எதிரான சட்டம் தான் மனுதர்மம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்தால், இன்றைக் கும் இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது மனுதர்மம் தான்; புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்புச் சட்டமல்ல என்பதை நாம் பார்க்கலாம்.

இன்றைக்கும் பால்ய விவாகம் நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது; இன்றைக்கும் விதவைகள் மறுமணம் செய்யக் கூடாது என்பது அப்படியே நடைமுறையில் இருக்கிறது; இன்றைக்கும் ஜாதிக்குள் ஜாதி செய்யும் அகமண முறை காப்பாற்றப்படுகிறது அதைத்தான் இன்றைய புதிய மனுவாதிகள் வாதிடுகிறார்கள். அவரவர் ஜாதிக்குள் தான் அவரவர் காதலித்துக்கொள்ள வேண்டும் - திருமணம் செய்து கொள்ள வேண்டும்; இது தான் மனுதர்மம். ஜாதி கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது – வர்ணக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது அதனால் சம உரிமை, சம அதிகாரம், சம தகுதி என்பது அனைவருக்கும் உருவாகிவிடக் கூடாது என்று ஜனநாயகத்தை மறுக்கிற நிலை நீடிக்கிறது. ஆக ஆட்சி அதிகாரத்தோடு தொடர்புடைய ஒரு சமூகமாக - அதிகார வலிமை கொண்ட ஒரு சமூகமாக அடிநிலையில் கிடக்கிற ஒடுக்கப்பட்டவர்களும், பெண்களும் என்றைக்கு மாற்றம் பெறுகிறார்களோ – அந்த வலிமையைப் பெறுகிறார்களோ அன்றைக்கு தான் தோழர்களே பெரியாரியம் வெல்லும் - அன்றைக்கு தான் தோழர்களே அம்பேத்கரியம் வெல்லும்.

ஆட்சி அதிகாரம் - அரசியல் அதிகாரம் என்பது நமக்கு தொடர்பில்லாத ஒன்றாக நாம் இன்னும் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆடு, மாடுகளை சொத்து என்று கருதுகிறோம்; நில புலங்களை சொத்து என்று கருதுகிறோம்; நகை நட்டுகளை சொத்து என்று கருதுகிறோம்; பணம், பைசா போன்றவற்றை நாம் சொத்து என்று கருதுகிறோம்; வீடு மனைகளை சொத்து என்று கருதுகிறோம் ஆனால் அதிகாரத்தை நாம் ஒருபோதும் சொத்து என்று கருதுவது இல்லை. அதிகாரமும் ஒரு சொத்து; அதிலும் அரசியல் அதிகாரம் என்பது தான் சொத்து. நாம் எல்லோரும் சேர்ந்து உருவானதுதான் அரசு; நாம் எல்லோரும் சேர்ந்து உருவானதால் வந்ததுதான் அரசியல் அதிகாரம்; நாம் வாக்களித்துதான் அரசு உருவாகிறது  - ஆட்சி உருவாகிறது - அதிகாரம் பிறக்கிறது. 

ஆகவே நம்முடைய உழைப்பில் உருவான எந்த ஒன்றுக்கும் நமக்கு பங்கு பெறுவதற்கான உரிமை உண்டு. அப்படி பார்க்கிற போது இந்த அரசியல் அதிகாரத்தில் – ஆட்சி அதிகாரத்தில் நமக்கு என்ன பங்கு என்று என்றைக்காவது நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா? நமக்குரிய பங்கை நாம் கேட்டு பெற்றிருக்கிறோமா? பெறுகிற வலிமையை நாம் பெற்றிருக்கிறோமா? அப்படி ஆட்சி அதிகாரத்தை, அரசியல் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்வதற்கு அரசியல் சக்தியாக இவர்கள் வலுப் பெற்றுவிடக் கூடாது என்பதால் தான் இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் நாடகத் திருமணங்களை திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்ற அவதூறு பரப்பப்படுகிறது. தோழர்களே ! இது ஏனோ தானோ என்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் பரப்பப்படுகிற ஒரு கருத்து அல்ல; ஒடுக்கப்பட்டவர்கள் – சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் – பெண்கள், அதிகார வலிமை பெற்று விடக் கூடாது என்று எண்ணுகிற ஆணாதிக்க - ஜாதி ஆதிக்க வெறியர்களின் நிலைப்பாடு இது.

தருமபுரியிலே நடந்த சம்பவம் கொடூரமானது என்பதை திருமாவளவன் சொன்ன பிறகா, திராவிடர் விடுதலைக் கழகம் புரிந்து கொண்டது ? திருமாவளவன் சொன்ன பிறகா இடதுசாரிகள் புரிந்துக் கொண்டார்கள் ? திருமாவளவன் சொன்ன பிறகா மனித உரிமை அமைப்புகள் சொல்லின ? நவம்பர் ஏழாம் தேதி நான் லண்டன் மாநகரத்திலே இருந்தேன், நவம்பர் பன்னிரண்டாம் தேதிதான், நான் தருமபுரிக்கு போகிறேன். நவம்பர் பதினாறாம் நாள்தான் செய்தியாளர்களை சந்திக்கிறேன்; அந்த சந்திப்பிலே செய்தியாளர் ஒருவர் என்னைக் கேட்கிறார் “பா.ம.கவிற்கு இதில் தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா” என்று கேட்டார். இதில் என்ன சந்தேகம் எல்லோரும் இதை உறுதிப் படுத்தியிருக்கிறார்களே, பா.ம.க தான் அதனை ஒருங்கிணைத்திருக்கிறது என்று தான் நான் சொன்னேன்.

எனக்கு முன்னால் இடதுசாரிகள் போய்வந்து சொல்லிவிட்டார்கள்; பெரியார் இயக்கத் தலைவர்கள் போய் பார்த்து விட்டு சொல்லிவிட்டார்கள்; மனித உரிமை அமைப்பைச் சார்ந்தவர்கள் சென்று பார்த்துவந்து சொல்லி விட்டார்கள்; தொண்டு நிறுவனங்கள் எல்லாம் ஆய்வு செய்து, பா.ம.க – வன்னியர் சங்கம் தான் இதை ஒருங்கிணைத்திருக்கிறது என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். எல்லோரும் சொன்னதை நான் சொன்னேன். ஆனால் மற்ற எந்த இயக்கத்தின் மீதும் கோபப்படாமல் - ஆத்திரப் படாமல், அவர்களை விமர்சிக்காமல், அவர்களெல் லாம் சொன்னதை வழிமொழிந்து சொன்ன திருமாவளவன் மீது ஏன் கோபம் ? ஏன் ஆத்திரம் ? ஏன் இந்த விமர்சனம் ? ஒரே ஒரு காரணம் தான் தோழர்களே, ஒடுக்கப்பட்டவர்களை ஒரு அரசியல் சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் அணி திரட்டு கிறது, அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இவ்வளவு காலம் ஆளும் கும்பலோடு – அதிகார வர்க்கத்தோடு அவர்கள் சேர்ந்து நடத்திய கட்டப் பஞ்சாயத்து நடவடிக்கைகளில் முதன் முறையாக விடுதலைச் சிறுத்தைகள் குறுக்கிடுகிறார்கள் - தடுக்கிறார்கள். ஓடிப்போன காதலர்களை பிரிப் பதற்காக காவல் நிலையங்களிலே காலங்காலமாக பஞ்சாயத்து நடக்கிறது. ஓடிப்போன காதலர்களை பிரிப்பதற்காக, பணம் உள்ள ஜாதி இந்துக்கள் பணத்தை கட்டுக்கட்டாக கொண்டுபோய் காவல் துறையிடம் கொடுத்து, அரசாங்க வண்டியிலே அரசாங்க டீசல் போட்டு, அரசாங்க நேரத்தை பயன்படுத்தி, காதலர்களை தேடிப்போய் கொண்டு வந்து பிரிப்பது தான் காவல் துறையினரின் வேலை. அது காவல் நிலையம் என்று சொல்வதை விட கட்ட பஞ்சாயத்து நிலையம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அதுவும் காதல் பஞ்சாயத்துகள் நடத்துகிற நிலையங்களாகத்தான் அவை இருக்கின்றன. அப்படி காதலர்களைப் பிரிக்கிற போது முதல்முறையாக, ஏன் பிரிக்கிறாய் என்று அங்கே போய் நின்று கேள்வி எழுப்புகிறவன், விடுதலைச் சிறுத்தையாக இருக்கிறான்; அதைத் தடுக்கிறான்; பிரிக்கக் கூடாது என்கிறான். இது தான் ஜாதி வெறியர்களின் எரிச்சலுக்குக் காரணம். ஆகவே இவர்கள் கட்டப்பஞ்சாயத்து பண்ணு கிறார்கள் என்று சொல்லுகிறார்கள், உலகத்துக்கு தெரியும் தோழர்களே கட்டப்பஞ்சாயத்து யார் செய்வது, அதை தடுப்பது யார் என்பது மனசாட்சி உள்ள நம்முடைய தலைவர்களுக்கு – உங்களுக்கு தெரியும்.

இவையெல்லாம் ஏன் நிகழ்கிறது? இவ்வளவு காலமாக பெரியார் முகமூடி – அம்பேத்கர் முகமூடி - மார்க்ஸ் முகமூடி - எவ்வளவு இளிச்சவாயர்களாக நாம் இருக்கிறோம் பார்த்தீர்களா! பெரியாரிய வாதிகளும் ஏமாந்துபோய் இருக்கிறார்களே என்பது தான் பெரிய வேடிக்கையாக இருக்கிறது. பெரியாரியல்வாதிகள் எப்போதும் விவரமான வர்கள் –- ஆட்களை எடை போடுவதிலே கெட்டிக் காரர்கள் என்று தான் நம்பி இருந்தோம். ஆனால் அண்ணன் கொளத்தூர் மணி போன்ற பெரியாரியவாதிகளும், பெரியார் முகமூடி போட்ட வர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள் என்பது தான் தோழர்களே நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

பார்ப்பனர்கள் எல்லாத் தளங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்; அதனால் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டிய தேவை இருந்தது. எனவே டி.எம்.நாயர், சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் நடேசன் இவர்களெல்லாம் தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத் திலேயே பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தை உருவாக்க அடித்தளமிட்டார்கள். ஏன் பார்ப்பன ரல்லாதோர் இயக்கத்தை உருவாக்க வேண்டிய தேவை வந்தது ? பார்ப்பனர்கள் என்ற ஜாதியின் மீது இருக்கிற வெறுப்பு அல்ல; பார்ப்பனர்கள் அனைத்து தளங்களிலும் செலுத்திய ஆதிக்கத்தின் மீது இருந்த வெறுப்பு. நிர்வாகத் துறையிலே அவர்கள்தான்; நீதித் துறையிலே அவர்கள்தான்; சட்டத்துறைகளிலே அவர்கள்தான்; ஊடகத் துறைகளிலே அவர்கள்தான்; அத்துனை தளங்களிலும் அவர்கள் மக்கள் தொகையிலே குறைவாக இருந்தாலும், தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருக்கிறார்கள்; கலாச்சார துறைகளிலும் அவர்கள் தான், கோவிலில் மணி ஆட்டுவதிலிருந்து, வசூலிப்பதிலிருந்து, அத்துனை நிர்வாகத் துறைகளிலும் அவர்களின் ஆதிக்கம் இருந்தது. ஆகவே ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக பார்ப்பனரல்லாதோர் இயக்கம் தேவைப்பட்டது.

தலித்துகள் அப்படி எந்த இடத்திலே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? தலித்துகள் கோவில் பூசாரி களாக இருக்கிறார்களா? தலித்துகள் உச்ச நீதி மன்றத்திலும், உயர்நீதி மன்றத்திலும் நீதிபதிகளாக – மிகப் பெரும் இடங்களில் அமர்ந்திருக்கிறார்களா? தலித்துகள் கோவில் தர்மகர்த்தாவாக இருக் கிறார்களா? தலித்துகள் எந்த இடத்திலே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? ஆக தலித்துகளை எதிர்ப்பதற்கான சூழல் எங்கிருந்து வந்தது? தலித் அல்லாதோர் இயக்கம் உருவாக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? தொண்ணூற்று ஐந்து வயதுகள் வரை தந்தை பெரியார் அவர்கள் உழைத்த உழைப்பு வீணாகிறதோ  - விரையமாகிறதோ என்கிற கவலை இருந்த நேரத்தில் தான் தோழர்களே, பெரியாரியத்தை எந்த சக்தியாலும் வீழ்த்தமுடியாது, இதோ நாங்கள் திரளுகிறோம் என்று, இன்று ஈரோட்டு மண்ணில் பெரியார் பிள்ளைகள் திரண்டிருக் கிறோம். இதை யாராலும் வீழ்த்தமுடியாது – யாராலும் அதை சாய்த்துவிட முடியாது. அவ்வளவு வலுவாக அது வேர்கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். எவ்வளவு ஆபத்தான போக்கு இது, தலித் அல்லாதோர் இயக்கம் உருவாக்க வேண்டிய அளவுக்கு இந்த மண்ணிலே என்ன நேர்ந்துவிட்டது? தயவு கூர்ந்து நாம் இதை யெல் லாம் எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம் தோழர்களே.

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் என்கிற இந்த மாமனிதர்கள் இந்துத்துவத்திற்கு எதிராக - மனுதர்மத்திற்கு எதிராக, தொடக்கி வைத்த இந்த போராட்டம் நம்முடைய தலைமுறையோடு முடிந்துவிடுகிற போராட்டமாக இல்லை. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் இது தேவைப்படுகிறது. ஆகவே திராவிடர் விடுதலைக் கழகத்தின் இது போன்ற மாநாடுகள் தவிர்க்க முடியாத ஒரு தேவையாக மாறியிருக்கிறது. இந்த மாநாடோடு இது முடிந்து விடாமல் அடுத்தடுத்து மண்டல வாரியான மாநாடுகளும், நிறைவாக இந்த மனுசாஸ்திர எரிப்புப் போராட்டமும் நடைபெறும் என்று இந்த மாநாட்டிலே நிறைவேற்றப் பட்டிருக்கிற இந்த தீர்மானத்தை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமனதோடு வரவேற்று ஆதரிக்கிறது.

நீங்கள் உடன்பட்டால் அந்த எரிப்புப் போராட்டத்தில் திருமாவளவனும் பங்கு கொள்வான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன். (கைதட்டல்) விடுதலைச் சிறுத்தைகளும் பங்கு கொள்ளலாம் என்பதை நீங்கள் கட்சி ரீதியாக – உங்கள் இயக்க அடிப்படையிலே உடன்பாடு இருந்தால், அந்த மனுசாஸ்திர எரிப்பு போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்பதை நான் உறுதியாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். (கைதட்டல்) இது உங்களுக்கு ஆதரவாக அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதற்காக. பெரியாரியத்தை வளர்தெடுக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்திருப்பதால் சொல்லுகிறோம்.

பெரியாரியம் என்பது இந்த மண்ணில் தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறது தோழர்களே; நாமெல்லாம் பிறக்காத காலத்திலேயே இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள். இன்றைக்கு பெரியாரைக் கூட, அவர் தமிழர் அல்ல என்று சில கும்பல் பேசுகிறது. எவ்வளவு வெட்கக்கேடாக இருக்கிறது பாருங்கள் ! எவ்வளவு குறுகிய மனம் படைத்த, குண்டுச்சட்டிக்குள்ளே குதிரை ஓட்டக் கூடிய மூடர்களாக இருக்கிறார்கள் என்பதை எண்ணி நான் வேதனைப் படுகிறேன். அப்படிப் பார்த்தால் மார்க்ஸ் இந்த மண்ணில் அடக்கப்பட்ட -  ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக தத்துவம் வழங்கிய தலைவர்; அவரை எந்தப் பட்டியலிலே சேர்ப்பது? தந்தை பெரியாரையே தமிழர் அல்ல என்று சொல்லுகிறபோது, புரட்சியாளர் அம்பேத் கரை இவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ? எவ்வளவு கீழ்த்தரமான ஒரு சிந்தனை? இந்த இரண்டு மாமனிதர்களும் இந்த மண்ணில் இந்துத்துவத்தை வேரறுக்கப் பிறந்தவர்கள். இந்த தத்துவங்களை வேரறுக்க வேண்டும் என்று இன்றைக்கும் மனுதர்ம வாதிகள் வரிந்து கட்டிக்கொண்டு, வேலை செய்கிறார்கள், ஆனால் அவர்கள் தோற்றுப் போவார்கள் என்பதற்கு சாட்சியம் தான் இந்த மாநாடு.

1920களிலே எழுதப்பட்ட குடிஅரசு கட்டுரை களையெல்லாம் தொகுத்து, இன்றைக்கு புதிய தலைமுறைகளுக்கு வழங்குகிறார்கள். அவர்கள் படித்துப் பார்க்கிறபோது, அவர்களும் போராளி களாக இந்த மண்ணில் முளைத்தெழுவார்கள். ஆகவே மனுதர்மவாதிகளால் வெற்றி பெற்றுவிட முடியாது, பெரியாரியத்தை வீழ்த்தி விட முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்தத் தான் போகிறோம். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்றைக்கு தூய தமிழ் வாதம் பேசுகிறவர்கள் – தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள், தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர் களையும், கன்னடம் பேசுபவர்களையும் கூட தமிழர்கள் அல்ல என்று, குதர்க்கவாதம் பேசி ஒற்றுமையை சீர்குலைக் கிறார்கள். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிற இந்த களத்தில், தமிழீழம் தான் ஒரே தீர்வு என்று, எல்லோரும் கைகோர்த்து நிற்கிற இந்த சூழலில், தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கிற வகையிலே இன்றைக்கு புதிய மனுவாதிகள் புறப்பட்டிருக்கிறார்கள்.

ஒருவேளை இவர்கள் சிங்களவர்களின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது தோழர்களே. இராசபக்சேவின் கைக்கூலிகளாக இருந்து செயல்பட தொடங்கி யிருக்கிறார்களோ என்று அய்யப்பட வேண்டியிருக் கிறது தோழர்களே. முள்ளிவாய்க்கால் இனப்படு கொலைகளுக்கு பிறகு - இன அழித்தொழிப்புக்கு பிறகு, பல்வேறு முரண்பாடுகளுக்கிடையிலே சிதைந்து கிடக்கிற தமிழர்களெல்லாம் இன்று ஒன்றுசேர்கிற சூழல் கனிந்து வந்தது; பல்வேறு மாறுபாடுகளுக் கிடையிலே தமிழர்கள் ஒன்று சேர்ந்து களமாடுகிற ஒரு சூழல் வந்தது. இன்றைக்கு ஈழத்தைப் பற்றிப் பேசவோ, விடுதலைப் புலிகள் பற்றி பேசவோ, சர்வதேச விசாரணை தேவை என்பதைப் பற்றி பேசவோ வாய்ப்பில்லாத ஒரு நிலையை ஏற்படுத்தி, ஜாதி, ஜாதி, ஜாதி என்று பேசுகிற ஒரு சூழலை இவர்கள் ஏற்படுத்தி யிருக்கிறார்கள் என்றால், உண்மையிலேயே இவர்கள் சிங்களவர்களோடு கைகோர்த்து, தமிழக சூழலை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் – தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் தோழர்களே நாம் எண்ண வேண்டியிருக்கிறது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்து கிறார்களாம்; தவறாக பயன்படுத்து வது காவல் துறையா - தலித்துகளா? சட்டத்தை யார் பயன்படுத்துவார்கள் என்பது கூடவா தெரியாது? இந்த அடிப்படை அறிவுக் கூடவா இல்லை? சட்டத்தை மக்களால் பயன்படுத்த முடியுமா? அதிகாரிகளால் தானே பயன்படுத்த முடியும்! ஒருவேளை ஒரு சட்டம் தவறாக பயன்படுத்தப் பட்டால், தவறாக பயன்படுத்திய காவல் துறையை அல்லவா எதிர்த்து போராடவேண்டும்; காவல் துறைக்கு எதிராகவல்லவா பிரச்சாரம் செய்ய வேண்டும். தமிழ் நாட்டிலே, இந்தியாவிலே, உலகத்திலே எந்த சட்டம் சரியாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது? பிராப்பர் யூஸ் ஆப் லா  (proper use of law) எங்கே இருக்கிறது? ஐ.பி.சி சரியாக பயன்படுத்தப்படுகிறதா? இந்திய தண்டனைச் சட்டம் சரியாக பயன்படுத்தப் படுகிறதா? பொருளியல் குற்றங்களுக்கான சட்டங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா? ஆயுதப் பரவலை தடுக்கிற சட்டம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா? தடா சட்டம் சரியாக பயன்படுத்தப்பட்டதா? பொடா சட்டம் சரியாக பயன்படுத்தப்பட்டதா? இன்றைக்கு நில அபகரிப்பு என்று எல்லோர் மீதும் வழக்கு போடுகிறார்களே, அது மிகச் சரியாகப் போடுகிற வழக்கா?

நேற்றுக்கூட பல்லாவரம் பகுதியில் நான்கு ஈழத்தமிழ் இளைஞர்களை பிடித்து, சிறைப் படுத்தியிருக்கிறார்கள்; ஏனென்று கேட்டால் கொழும்பிலே இரண்டு இளைஞர்கள் பிடிபட்டார்கள், அந்த இரண்டு பேரும் புலிகள் என்று உறுதியாகியிருக்கிறது, அவர்களின் நண்பர்கள் பல்லாவரம் பகுதியில் இருக்கிறார் களாம், அவர்களையும் பிடியுங்கள் என்று சிங்கள அரசு சொல்லுகிறது – இந்திய அரசு கேட்கிறது; இந்திய அரசு சொல்கிறது – தமிழக அரசு கைது செய்கிறது. இவர்கள் யாருடைய ஏவலை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்? சிங்களவன் சொல்வதை கேட்கிற தமிழ்நாடு அரசு இருக்கிறது – இந்திய அரசு இருக்கிறது; தமிழ் இளைஞர்களை கைது செய்கிறார்கள். இது சரியான வழக்கா – சரியான சட்டமா ? எந்த சட்டம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது? காவல் துறையினரால் என்றைக்காவது சரியான குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறதா? காவல் துறை என்றைக்காவது சட்டத்தை சரியாகப் பயன்படுத்தியதாக சான்றுகள் உண்டா?

சமூகத்திலே சட்டங்கள் பலவகை இருக்கின்றன. அதிலே கருப்புச் சட்டங்கள் என்பது ஒரு வகை, சமூக பாதுகாப்புச் சட்டங்கள் என்பது ஒரு வகை. சமூக பாதுகாப்புச் சட்டங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை; பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை தடுக்கிற சட்டங்கள் அனைத்தையும் நாம் பாதுகாத்தாக வேண்டும். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் இருக்கிறது; பெண்களை கேலி செய்வதை – தொல்லை தருவதை தடுக்கிற சட்டம் இருக்கிறது; வரதட்சணையைத் தடுக்கிற சட்டம் இருக்கிறது; இப்படிப் பெண் களைப் பாதுகாப்பதற்கு பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன. இந்த சட்டங்களையெல்லாம் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று – பெண்கள் பொய் புகார்கள் தருகிறார்கள் என்று – இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று சொல்லுவது அறிவுடமை ஆகுமா ? அது ஜனநாயக வாதியின் கடமையாக இருக்க முடியுமா ? அது சமூக பாதுகாப்புச் சட்டம்.

1955 லே வந்தது பி.சி.ஆர் சட்டம் –  Protection of Civil Rights - அது தலித்துகளுக்கான சட்டம் அல்ல - குடியுரிமை பாதுகாப்பு சட்டம். குடியுரிமை பாதுகாப்பு என்பது, ஓவ்வொரு தனி மனிதனுக்கும் குடியுரிமை உண்டு; அந்த குடியுரிமையை பாதுகாப்பதற்காக வந்த சட்டம் 1955. அந்த சட்டத்தின்படி இந்திய அளவிலே ஒரு விழுக்காட்டு அளவிற்காவது எவனாவது தண்டிக்கப்பட் டிருக்கிறானா – யாராவது சான்று காட்ட முடியுமா? அந்த சட்டம் பல் இல்லாத பாம்பிற்கு சமம் என்று அரசாங்கமே முடிவு செய்து, அதனால் எந்த பயனும் இல்லை என்று முடிவு செய்து, இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது; இன்றைக்கும் செருப்பு அணிந்து போகமுடிய வில்லை; சைக்கிளிலே போக முடியவில்லை; நல்ல சட்டை அணிய முடியவில்லை. இன்றைக்கும் காது கழுத்துகளிலே தங்க நகைகள் அணிந்து கொள்ள முடியவில்லை. இன்றைக்கும் ஷூ போட்டு போக முடியவில்லை – பேண்ட் அணிந்து போக முடியவில்லை. இன்றைக்கும் பெண்கள் – தலித் பெண்கள் கொடூரமான பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாக்கப்படுகிற நிலை தொடர்கிறது.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மண்ணில் நாக்பூர் அருகே கயர்லாஞ்சி என்ற இடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தோழர்களே, நூறு பேர் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கிறபோது, தாயையும், பிள்ளையையும் காமவெறி பிடித்த ஜாதி வெறியர்கள், பாலியல் வல்லுறவு கொண்டு அங்குலம் அங்குலமாக சூடு வைத்து அவர்களைத் துடிக்கத் துடிக்க வதை செய்து, கொலை செய்தார்கள். ஜாதியின் பெயரால் நடைபெறும் இது போன்ற வன்கொடுமைகள் உலகில் வேறு எங்கேனும் உண்டா ? இன்றைக்கும் வாயிலே மலத்தைத் திணிக்கிறார்கள் - வாயிலே சிறு நீரை கழிக்கிறார்கள். இன்றைக்கும் எத்தனையோ பெண்களை கடத்தி சென்று வல்லுறவு செய்து கொடுமை செய்து கொலை செய்கிறார்கள்.

தர்மபுரி சம்பவத்திற்கு பிறகு பண்ருட்டி பக்கத்திலே காந்தல்வாடி என்ற கிராமத்தைச் சார்ந்த பிரியா என்ற ஒரு கல்லூரி மாணவி, கல்லூரிக்கு சென்று திரும்புகிற வேலையிலே கடத்திக் கொண்டுபோய், பாலியல் வல்லுறவு கொண்டு, கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்; கொலை செய்து குளத்திலே தூக்கி எறிந்து விட்டார்கள். இதற்காக இந்த புதிய மனுவாதிகள் கவலைப் பட்டிருக்கிறார்களா? பெண்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்களே - பெண்களை கேலி செய்கிறார்கள் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்களே - பெண்களை சீண்டுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்களே - பிரியா ஒரு பெண் இல்லையா ? ஏன் பிரியாவை கடத்தினார்கள் ? ஏன் கொலை செய்தார்கள் ?

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த, ஒரு தலித் இளைஞனும், ஒரு வன்னிய பெண்ணும் அவர்கள் விரும்பி காதலித்து, பல வருடம் கழித்து, ஓடிப் போகிறார்கள்; வீட்டை விட்டு வெளியேறு கிறார்கள். கல்லூரி மாணவியாக இருப்பவள் வன்னியர் சமூகத்தைச் சார்ந்த பெண்; வெறும் பிளஸ் டூ வரையிலே படித்து விட்டு சென்னையிலே வேலை செய்து கொண்டிருப்பவன் தலித் இளைஞன். அவன் பள்ளித் தோழன்; கல்லூரித் தோழன் அல்ல. ஆனாலும் இவர்களுக்கு இடையிலே மறுபடியும் உறவு மலர்கிறது; அது நட்பாக மாறுகிறது; மறுபடியும் அது காதலாக விரிவடைகிறது.

இதற்கு இடையிலே அவர்களுக்கு துணைச் செய்தது, அவர்களின் கையிலே இருக்கிற கைப்பேசி (செல் போன்) தான். காதல் மலர்ந்ததற்கு திருமாவளவன் காரணமா - கைப்பேசி காரணமா ? இதை எதிர்க்க வேண்டியவர்கள் திருமாவளவனை எதிர்க்க வேண்டுமா -  செல்போனை எதிர்க்க வேண்டுமா? இன்றைக்கு ஒவ்வொருவரின் கைகளிலும் செல்போன் இருக்கிறது - ஃபேஸ் புக் இருக்கிறது -ஈ மெயில் இருக்கிறது, இவர்கள் தலைகீழாக நின்றாலும் கூட காதல் திருமணங்களை தடை செய்ய முடியாது தோழர்களே. உலக மயமாதல் நமக்கு முரண்பாடான ஒன்று என்றாலும் கூட, அது ஜாதியைத் தகர்த்துக் கொண்டிருக்கிறது. ஆக ஒடிப்போனவர்களுக்கு உதவி செய்தாள் என்ற காரணம் காட்டி பிரியா கடத்தி கொண்டு போய் கொலை செய்யப்பட்டாள். ஓடிப்போனவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லவில்லையாம் அதனால் கடத்தி கொண்டு போய் கொலை செய்கிறார்கள். இது கொடுமை இல்லையா ?

சிதம்பரம் தொகுதியிலே சேத்தியாதோப்பு பக்கத்திலே சென்னிநத்தம் கிராமத்தைச் சார்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற ஒரு தலித் இளைஞன் - கல்லூரி மாணவன், வரகூர் என்கிற கிராமத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை விரும்பி, இருவரும் படிக்கிற தோழர்கள், கல்லூரித் தோழர்கள்; ஒருவரை ஒருவர் மனமார நேசித்து, மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார்கள். இப்போது ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு குழு அமைத்து, யார் யாரை காதலிக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்களாம். இவர்களின் வேலைத் திட்டம் எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா?

ஈழத்துக்காக குரல் கொடுத்தவர்கள் – தமிழுக்காக போராடி யவர்கள் – பெரியாரியத்தை உரத்து முழங்கியவர்கள் இன்றைக்கு என்ன கணக்கெடுப்பு நடத்துகிறார்கள்? எந்த ஊரிலே, எந்த தலித் இளைஞன், எந்த ஜாதிப் பெண்ணை காதலிக்கிறான்; பட்டியல் தயாரித்து பின்னால் தொடர்ந்து போய் அவர்களை கொலை செய்யக்கூடிய ஒரு கூலிப் படை கும்பலை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள். அப்படி கோபாலகிருஷ்ணன் பின்னால் தொடர்ந்து போய், அந்த பெண்ணைக் கொண்டு போய் வரகூரிலே விட போயிருக்கிறான்; வீட்டுக்கு வந்து விட்டுவிட்டுப் போ என்று அந்த பெண்ணே அவனை வரச் சொல்லியிருக்கிறாள், இது அந்த குடும்பத்தினருக்கு தெரிந்திருக்கிறது. வந்து விட்டுவிட்டு திரும்புகிற போது அவனை தேடிப் பிடித்து, கொண்டு போய், கழுத்தை அறுத்து படுகொலை செய்து, சாக்கு மூட்டையிலே கட்டி வீசி எறிந்திருக்கிறார்கள். என்ன கொடுமை இது ?

தூத்துக்குடி புனிதா பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருக்கிறாள்; பத்து பன்னிரண்டு வயது சிறுமி. பெண்களுக்காக – பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் தூத்துக்குடி புனிதாவுக்காக குரல் கொடுத்திருக்கிறார்களா ? டில்லியிலே ஒரு மாணவி எவ்வளவு கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறாள்! ஆறு பேர் அங்கே இருந்து ஓடும் பேருந்திலே வதை செய்திருக்கிறார்கள், இரும்பு பைப்பால் வயிற்றில் ஓங்கி அடித்ததால் குடல் சிதைந்திருக்கிறது; இன்றைக்கும் அவள் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறாள்; அவளும் பெண் தானே; அது கொடுமை இல்லையா? ஆறு பேரில் ஒரே ஒருவனுக் காவது மனிதத் தன்மை இருந்ததா ? அந்த ஆறு பேரில் எவனாவது ஒருவனாவது பெரியாரியத்தை படித்திருந்தால் இப்படி செய்திருப்பானா? பெரியாரியம் அவர்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தால் இந்த கொடுமை நடந்திருக்குமா?

 ஆறு பேரும் மிருகங்களாக இருந்திருக்கிறார்கள்; ஒருவன் கூட தப்பு என்று தடுக்கவில்லை தோழர்களே, மாறி மாறி ஆறு பேரும், ஓடும் பேருந்தில், ஒரு இளம் பெண்ணை கசக்கி எறிந்திருக்கிறார்கள்; வெளியிலே தூக்கி வீசியிருக்கிறார்கள்; பெண்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறவர்களே – புதிய மனுவாதிகளே, அந்தப் பெண்ணிற்காக நீங்கள் குரல் கொடுத்திருக் கிறீர்களா? யோசித்துப் பாருங்கள்; ஆக வெறும் அரசியல் ஆதாயத்திற்காக ஜாதி வெறியை தூண்டிவிட்டு, தமிழர் ஒற்றுமையை சிதைக்கிற முயற்சி நடக்கிறது; ஈழத் தமிழர்களுக்காக, தமிழர்கள் ஒன்றுபட்டு விடக் கூடாது என்கிற சதித் திட்டத்தோடு இந்த முயற்சி நடப்பதாகத் தான் நாம் கருத வேண்டியிருக்கிறது தோழர்களே.

எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் நாமெல்லாம் செங்கொடியை அடக்கம் செய்யும் போது கைகோர்த்து நின்றோம்; முத்துக்குமாரை அடக்கம் செய்யும் போது கைகோர்த்து நின்றோம்; இன்றைக்கு மூன்று பேர் தூக்கு கூடாது – மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற களத்திலே கைகோர்த்து நின்றோம். இந்த ஒற்றுமை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக உருவானது. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை ? இவர்கள் ஏன் ஒன்று பட வேண்டும் - இதை தடுத்தே ஆக வேண்டும் – தருமபுரியிலே ஜாதி ஒழிப்பு மாநாடு, ஈரோட்டிலே மனுதர்ம எரிப்பு விளக்க மாநாடு என்று இப்படி மாநாடு போட்டு நம் நேரத்தை இப்படி திசை திருப்ப வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது தோழர்களே. எவ்வளவு பெரிய மோசமான ஆபத்து இந்த மண்ணிலே உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆக சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லுவது அப்பட்டமான பொய். தாழ்த்தப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், அதை யாரும் சொல்லாமலேயே காவல் துறையினர் புறந்தள்ளி விடுவார்கள்; ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மூன்றே மூன்று சூழல்களில் தான் வழக்குப் பதிவு செய்வார்கள். தலித் இயக்கங்கள் வற்புறுத்தி, போராடி, வழக்குப் பதிவு செய்கிறாயா – இல்லையா என்று காவல் நிலையத்திலே போய் வாதாடுகிற போது வழக்குப் பதிவு செய்வார்கள்.

இரண்டாவது, ஒரே சமூகத்தைச் சார்ந்த இரண்டு குழு (கவுண்டர் சமூகம் என்று எடுத்துக் கொள்வோம்) கவுண்டர்களிலேயே அரசியல் ரீதியாக முரண்பாடுள்ள இரண்டு குழு; உள்ளாட்சி தேர்தலிலோ, சட்டமன்ற தேர்தலிலோ முரண்பாடு வந்திருக்கும்; நிலம் வாங்குவதிலோ விற்பதிலோ முரண்பாடு – மோதல் வந்திருக்கும். அதில் ஒரு குழு இன்னொரு குழுவைப் பழிவாங்க வேண்டும் என்று விரும்புகிற போது, ஒரு தாழ்த்தப்பட்டவனை (அவன் தானே இழிச்சவாயன் – அவன் தானே விவரமில்லாதவன்) பிடித்துக் கொண்டு போய், நீ போய் அவன் மேல பி.சி.ஆர் கேஸ் போடு, மற்றதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் அப்படீன்னு, அவனிடம் வெறுமனே ஒரு தாளில் கையெழுத்து போட வைத்து, அதைக் காவல் துறையிடம் கொடுத்து, அதிகாரிகளைக் கவனிக்க வேண்டிய முறையிலே கவனித்து – கொடுக்க வேண்டியதைக் கொடுத்து – தள்ள வேண்டியதை தள்ளி, அவன் மீது எப்.ஐ.ஆர் போட வைப்பதே, அதே ஜாதியைச் சார்ந்த இன்னொரு குழு தான்; அப்போதுதான் வழக்குப் போடுகிறார்கள். இதை யாரும் மறுக்க முடியுமா ? பல சான்றுகளை சொல்ல முடியும்.

அடுத்து மூன்றாவதாக எந்த சூழலிலே வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்று சொன்னால், ஜாதி இந்துக்களிலே சில பேரை காவல் துறையினருக்குப் பிடிக்காது; ஏதாவது ஒரு காரணத்தால். அவனை பழிவாங்க வேண்டும் என்று விரும்புகிற போது – நினைக்கிற போது, காவல்துறை அவன் மீது இந்த வழக்கைப் போடும். இந்த மூன்று சூழல்களில் தான் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலான வழக்குகளை, தோழர்களே ! பதினைந்தே நாட்களில் அல்லது முப்பதே நாட்களில், ஆளைவயமந டிக குயஉவ என்ற பெயரால் – தவறான தகவல் என்ற பெயரால் சமரசம் செய்து, காசு வாங்கிக் கொண்டு, காவல் துறையினர் பஞ்சாயத்து செய்து, இரு தரப்பினரும் ஒரே ஜாதியைச் சார்ந்தவர்கள் – ஏன் மோதிக் கொள்கிறீர்கள் – ஒற்றுமையாக இருங்கள் என்று சொல்லி, ஜாதி இந்துக்களுக்கு இடையிலே சமாதானம் செய்கிற போது, இவனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படி பயன்படுத்துகிற போது வழக்குகள் தள்ளுபடி ஆகி விடுகின்றன; Mistake of Fact என்கிற பெயரால். இப்படிப்பட்ட நிலைமை இருக்கிற போது, இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப் படுகிறது என்று சொல்லுவது, எவ்வளவு அப்பட்டமான பொய் இது – பொய் பிரச்சாரம் இது. இந்த சட்டமே ஒரு பல் இல்லாத பாம்பு என்று தான் சொல்ல முடியும்; இதனால் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

பெயிலபுல் அஃபன்ஸ், நான் பெயிலபுல் அஃபன்ஸ் என்பது எல்லா சட்டங்களிலும் இருக்கிறது. பெயிலபுல் அபன்ஸ் என்பது உடனடியாக காவல் நிலையத்திலேயே ஜாமினில் விட்டு விடலாம். நான் பெயிலபுல் அபன்ஸ் என்பது, காக்னைஸபுல் அபன்ஸ்; அதாவது சமூகத்தை சீரழிக்கக் கூடிய கொடூரமான குற்றங்கள் என்று அரசு கருதுகிற சில குற்றங்கள் இருக்கின்றன; அப்படிப் பட்ட குற்றங்கள் நான் பெயிலபுல் அபன்ஸ் – காக்னைஸபுல் அபன்ஸ்.  அந்த வழக்குகளில் பதிவு செய்யப்படும் போது பதினைந்து நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு பிறகு ஜாமின் போட்டு வெளியிலே வருவது; அதற்காக ஜாமினே இல்லை என்று பொருள் அல்ல. அப்படித்தான் இந்த சட்டங்களிலும் சில வழக்குகள் நான் பெயிலபுல் என்று போடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் - இந்த சட்டத்தில் கைது செய்யப்படு கிறவர்கள் ஒரே வாரத்தில் திரும்பி வந்து விடுகிறார்கள்; மூன்றே நாட்களிலும் வெளியில் வந்து விடுகிறார்கள் – நீதிபதிகளே விட்டு விடுகிறார்கள் தோழர்களே. இந்த சட்டத்தைத் தவறாக பயன்படுத்துகிறார்களாம், அதனால் இவர்கள் ஒன்று சேர்கிறார்களாம். இது ஒரு சமூக பாதுகாப்புச் சட்டம் – தி சோசியல் லா; இவை கருப்புச் சட்டங்கள் கிடையாது.

குண்டர் சட்டத்தை எதிர்த்துப் போராடுவோம் வாருங்கள் - தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து போராடுவோம் வாருங்கள் –- பொடா சட்டம் இருந்த போது அதை எதிர்த்து நாம் போராடினோம்; தடா சட்டம் இருந்த போது அதை எதிர்த்து நாம் போராடினோம்; இன்றைக்கும் அப்படி எத்தனையோ கருப்பு சட்டங்கள் நடைமுறையிலே இருக்கின்றன. காஷ்மீரிலே நடக்கிற சட்டம் அது தான்; ஸ்பெஷல்ஆம்ஸ் ஆக்ட் என்று சொல்லப்படக் கூடிய ஆயுத தடுப்பு சட்டம் தான்; அந்த சட்டத்தை எதிர்த்து தான் தொடர்ந்து மக்கள் அங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். யாரை வேண்டுமானாலும் ஆயுதம் வைத்திருந்ததாகப் பிடித்து உள்ளே தள்ளி விட முடியும்; வெளியே வர முடியாது. அப்படி கருப்புச் சட்டங்களை எதிர்த்துப் போராடுவதற்கு பதிலாக, சமூக பாதுகாப்புச் சட்டங்களை எதிர்த் துப் போராட வேண்டும் என்பது, மிக மோசமான ஒரு அதர்மம் - அநீதி தோழர்களே; இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த கருத்துப் பிரச்சாரங்களை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

புரட்சியாளர் அம்பேத்கர் மிகப்பெரிய சிந்தனைகளை இந்த மண்ணுலகிற்கு தந்து விட்டு போனாலும், தந்தை பெரியாருக்கு பிறகு, அவருடைய கருத்துக்களைப் பரப்புவதற்கு இருக்கின்ற இயக்கங்களைப் போல, புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்துக்களை பரப்புகிற இயக்கங்கள் இந்திய அளவிலே உருவாகவில்லை. ஒரு மிஷினரி – இராமகிருஷ்ணா மிஷினரி இருப்பதைப் போல, இந்துத்துவத்தைப் பரப்புகிற மிஷன்கள் இருப்பதைப் போல, கிருத்துவத்தை பரப்ப கிருத்துவ மிஷனரிகள் இருப்பதைப் போல, புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்துகளை பரப்புகிற மிஷனரி – இயக்க நடவடிக்கை என்பது இந்திய அளவில் இல்லை தோழர்களே. ஒன்றிரண்டு இயக்கங்கள் இப்போது தான் தலை தூக்கி வந்திருக்கிறோம். கருத்துக்களை பரப்பக்கூடிய ஒரு வலிமையை பெறுகிற சூழலை பெற்றிருக்கிறோம்;

ஆனால் பெரியார் இயக்கம் அப்படி அல்ல. திருமாவளவனை வேண்டுமானால் உங்களால் ஓரங்கட்ட முடியும்; திராவிடர் விடுதலைக் கழகத்தை உங்களால் ஓரங்கட்ட முடியாது. திருமாவளவனின் குரலை உங்களால் நசுக்க முடியும்; அண்ணன் கொளத்தூர் மணியின் குரலை உங்களால் நசுக்கி விட முடியாது. திருமாவளவனை, ஜாதி வெறியர்களிடம் காட்டிக் கொடுத்து, ஒருவேளை ஆளையே காலி செய்து விட முடியும்; அண்ணன் விடுதலை இராசேந்திரனை உங்களால் நெருங்க முடியாது. பெரியாரியம் அவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கிறது. ஆகவே மனுவாதிகள் நினைத்துக்கொண்டிருக் கிறார்கள், வெற்றி பெற்றுவிடலாம் என்று. அவர்களே தங்கள் முகத்திரையை கிழித்துக் கொண்டு இப்போது தெருவிலே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் யாரும் அந்த முகத்திரையை கிழிக்க வேண்டிய தேவை இல்லை என்கிற அளவுக்கு, அவர்களே தங்களுக்கு தாங்களே முகத்திரையை கிழித்துக்கொண்டிருக்கிற நிலை உருவாகியிருக்கிறது.

இப்படிபட்ட இந்த கொடுமைகளெல்லாம், எந்த அடித்தளத்தில் இருந்து உருவாகி யிருக்கின்றன ? மனிதனை வழிநடத்துவது கருத்து தான் – சிந்தனை தான் – தத்துவம் தான் – கோட்பாடு தான் – கொள்கை தான். சீனிவாச ராவ் அவர்களைப் பற்றி, தோழர் சம்பத் சொன்னார். சீனிவாச ராவ் பிறப்பால் பார்ப்பனர்தான் ஆனாலும், சாணிப்பால் – சவுக்கடிக்கு எதிராக போராடினார் என்று அவர் சொன்னார்; சாணிப்பால் – சவுக்கடியை எதிர்த்து அவர் போராடியதற்கு காரணம், அவர் உள்வாங்கிய மார்க்சியம் என்ற கொள்கை தான். ஒரு எஞ்சினியராக படித்தாலும் கூட, இந்த தமிழ்நாடு விடுதலைப் பெற வேண்டும் என்பதற்காக தன் படிப்பை பாதியிலேயே முடித்து விட்டு, தமிழ்நாடு விடுதலைப் படை கட்டி, அழித்தொழிப்பு நட வடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று, படையைக் கட்டிக் கொண்டிருந்தான் பொன்பரப்பி தமிழரசன். பொன்பரப்பி தமிழரசனை வழிநடத்தியது எது ? அவன் உள்வாங்கிக் கொண்ட நக்சல்பாரி கருத்துக்கள் தான் – தமிழ்நாடு விடுதலை என்கிற தமிழ்த் தேசிய கருத்துக்கள் தான் அவனை வழி நடத்துகிறது.

ஜாதியால் – பிறப்பால் வன்னியராய் இருந்தாலும், ஜாதி ஒழிப்புதான் இந்த மண்ணுலகிற்குத் தேவை - தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்குத் தேவை என்பதை மாநாடு கூட்டி அவனால் அறிவிக்க முடிந்தது. ஏன், அவன் உள்வாங்கிக் கொண்ட கருத்துதான். அண்ணன் கொளத்தூர் மணி உட்பட மேடையில் அமர்ந் திருக்கிற தலைவர்கள் - இங்கே வந்து அமர்ந் திருக்கிற தோழர்கள், எண்பது விழுக்காடு – தொண்ணூறு விழுக்காடு தலித் அல்லாதவர் களாகத் தான் இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இப்படி இத்தனை ஆயிரம் பேர் திரண்டு வந்து, பெரியாரியத்தை உயர்த்திப் பிடிக்கிறோம் என்று, இந்த மாநாட்டிலே பங்கேற் கிறார்கள் என்று சொன்னால் – புதிய மனுவாதிகளை எதிர்த்துக் குரல் எழுப்புகிறார்கள் என்று சொன்னால் அதற்கு உங்களை வழி நடத்துவது பெரியரியம் என்கிற மனித நேயக் கருத்துகள்தான் தோழர்களே.

ஆகவே கருத்துப் பிரச்சாரம் என்பது சாதரணமான ஒன்று அல்ல; இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்காவது தேவைப்படு கிறது, இந்த மனுவாதிகளை விரட்டியடிப்பதற்கு – இந்த ஜாதி வெறியர்களை விரட்டியடிப்பதற்கு. ஆகவே திராவிடர் விடுதலைக் கழகம் மேற்கொண்டிருக்கிற இந்த முயற்சி என்பது, ஒரு அளப்பரிய முயற்சி; புரட்சிக்கு வித்திடுகிற முயற்சி; ஜாதியத்தைத் தோலுரிக்கிற முயற்சி; பார்ப்பனியத்தை – இந்துத்துவத்தை வேரறுக்கிற முயற்சி; ஒடுக்கப்பட்டவர்களை, சிறுபான்மை மக்களை, விளிம்பு நிலை மக்களை பாதுகாக்கிற - பாதுகாப்பு அரணை அமைக்கிற ஒரு முயற்சி. அந்த துணிச்சலோடு தான் தோழர்களே இந்த மேடை யிலே இன்று திருமாவளவன் முழங்கிக் கொண் டிருக்கிறான். பெரியாரியம் என்பது ஒரு பாதுகாப்பு அரண்; அம்பேத்கரியம் என்பது ஒரு அகழியாக இருந்து, ஒடுக்கப்பட்டவர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது; அரணும், அகழியாகவுமிருந்து இந்த ஏழை எளிய விளிம்பு நிலை மக்களை, பாது காக்கிற தத்துவங்களாக அவை விளங்குகின்றன.

எனவே இன்று நடந்து கொண்டு கொண்டிருக்கிற இந்த யுத்தம் என்பது, பிற்போக்குவாத சக்திகளுக்கும், முற்போக்கு சிந்தனையாளர் களுக்கும் இடையே நடக்கிற யுத்தம்; ஜன நாயகத்தைப் பாதுகாப்பதற்கான யுத்தம்; பெரியாரியத்தை - அம்பேத்கரியத்தை - மார்க்சி யத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு போர்; அறப் போர். இந்த போராட்டத்தில் நாம் ஒருபோதும் பின்வாங்கிவிடக் கூடாது. அவதூறுகளை முறியடிக்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்களின் – உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சிதைக்கிற முயற்சிகளை முறியடித்தாக வேண்டும். மிகத் தீவிரமாக நாம் இறங்கிக் களமாட வேண்டிய தேவை இருக்கிறது.

பலபேர் என்னைப் பார்த்துக் கேட்டார்கள், ‘அவர் ஜாதி வெறியர்களை எல்லாம் ஒருங்கிணைக்கிறார் நீங்கள் ஏன் தலித்துகளை எல்லாம் ஒருங்கிணைக்கக் கூடாது’ என்று. நான் ஜாதியவாதி அல்ல; கொள்கை சார்ந்து வளர்ந்திருப்பவன்; கொள்கை சார்ந்து இயங்கி கொண்டிருப்பவன்; நான் பெரியாரியவாதி – அம்பேத்கரியவாதி – மார்க்சியவாதி; நான் யாரையும் வலிந்து சேர்க்க வேண்டிய தேவை இல்லை. நான் கூப்பிட்டா திராவிடர் விடுதலைக் கழகம் அந்த களத்திற்கு வந்தது ? நான் சொல்லியா திராவிடர் விடுதலைக் கழகம் இந்த மாநாட்டை நடத்துகிறது ? நான் கேட்டுக்கொண்டா இடதுசாரிகள் அந்த களத்திலே நின்று முழங்குகிறார்கள் ?  என் வேண்டுகோளை ஏற்றா மனித உரிமை ஆர்வலர்கள் தருமபுரிக்கு சென்றார்கள் ? கொள்கை சார்ந்த மனித நேய சிந்தனையாளர்கள் இன்றைக்கு ஒன்று சேரவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நாம் ஒரு வகையிலே அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். மார்க்சியவாதிகளையும், பெரியாரிய வாதிகளையும், அம்பேத்கரியவாதி களையும், தமிழ்த்தேசிய சிந்தனையாளர்களையும், அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்டுவதற்கான ஒரு வாய்ப்பை அவர்கள் ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். அதற்கு நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட் டிருக்கிறோம்; ஆகவே நான் அடிப்படைக்கு வருகிறேன் தோழர்களே.

இந்த மண்ணில் ஜாதிய கொடுமைகள் எங்கெல்லாம் தலைவிரித்தாடுகிறது என்பதை இந்த எட்டு தீர்மானங்களில் வடித்துக் கொண்டுவந்து விட்டார்கள். எதையெல்லாம் செய்தால் ஜாதியத்தை ஒழிக்க முடியும் என்பதற்கு, இங்கே விடை சொல்லியிருக்கிறார்கள். திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தி தருகிற வணிக நிறுவனங்கள் கூட எப்படி ஜாதியத்தை கட்டி காப்பாற்றுகிறது; திருமண மண்டபங்களை ஒதுக்கிற போது கூட – வீடுகளை வாடகைக்கு தருகிற போது கூட, சைவம் பேசுகிறவர்கள் எப்படி இந்த ஜாதியத்தை கட்டி காப்பாற்றுகிறார்கள் என்பது உட்பட, எட்டே தீர்மானங்களில் மகத்தான செய்திகளை பதிவு செய்திருக்கிறது இந்த மாநாடு. இந்த எட்டு தீர்மானங்களையும் நடைமுறைப் படுத்துவதில் தான், பெரியாரியத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.

இந்த எட்டு தீர்மானங்களும் எதன் அடிப்படையில் வந்திருக்கிறது என்று சொன்னால், ஜாதியத்தை இங்கே கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிற, இந்துத்துவத்தை இங்கே கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிற, அல்லது பார்ப்பனியத்தை கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிற, அடிப்படை தத்துவம் மனுதர்மம். தத்துவம்தான் மக்களை வழிநடத்துகிறது என்று நான் சொன்னேன், பெரியாரியம் நம்மை வழிநடத்துகிறது; மனுதர்மம் அவர்களை வழிநடத்துகிறது. பெரியாரியம் ஜாதியைக் கூடாது என்கிறது; மனுதர்மம் ஜாதியம் வேண்டும் என்கிறது. நம் பார்வையில் அது அநீதியாக தெரிகிறது; அவர்களின் பார்வையில் நீதியாக தெரிகிறது. ஆகவே அவர்களின் அணுகுமுறைகளை, நடவடிக்கைகளை தடுக்க வேண்டுமானால் – முறியடிக்க வேண்டுமானால், அவர்களை வழிநடத்துகிற தத்துவமாக இருக்கிற, மனுதர்மம் என்கிற அந்த அநீதிக் கொள்கையை - அநீதித் தத்துவத்தை நாம் ஒழித்தாக வேண்டும் - எரித்தாக வேண்டும் - அதை அப்புறப்படுத்தியாக வேண்டும் என்பது தான் அடிப்படைத் தோழர்களே. ஆகவே தான் இந்த மாநாடு.

மனுதர்மம் என்று எழுதப்பட்டிருக்கிற அச்சு காகிதங்களை எரித்து விடுவதனால், இங்கே என்ன நிகழ்ந்து விடப்போகிறது என்று நாம் அதை எளிதாகவோ, இலகுவாகவோ பார்த்துவிடக் கூடாது. மனுதர்மம் என்கிற தத்துவம் தான், மனுதர்மம் என்கிற கோட்பாடு தான், ஜாதி வெறியர்களின் நடவடிக்கைகளை நியாயப் படுத்துகிறது – அவர்களை வழி நடத்துகிறது. ஜாதிக் கொரு நீதியை சொல்லுகிறது; குலத்துக்கொரு நீதியை சொல்லுகிறது; பார்ப்பனர்களுக்கு பாதுகாப்பைத் தருகிறது; ஆகவே அந்த தத்துவம் வேரறுக்கப்படுகிற போதுதான், இந்த கொடுமைகள் - புதிய மனுவாதிகள் புறந்தள்ளப்படுகிற நிலை ஏற்படும். எனவே தான் புதிய தலைமுறைக்கு அடையாளப்படுத்தக் கூடிய வகையில், அவர்களுக்கு புரட்சிகர சிந்தனையை உருவாக்கக் கூடிய வகையில், இந்த மாபெரும் போராட்டத் திட்டம் வழிவகுக்கிறது; இந்த போராட்டம் தவிர்க்கமுடியாத ஒரு வரலாற்றுத் தேவையாக மாறியிருக்கிறது; 1920 களிலே தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தை, பெரியாரின் பிள்ளைகள் இன்றைக்கு இருபத்தியோராம் நூற்றாண்டின் இறுதி பகுதியிலே, இன்றைக்கு நாம் தொடங்க வேண்டியிருக்கிறது - தொடக்க நிலையிலே தொடங்க வேண்டியிருக்கிறது. இன்னும் நான் சொன்னதை போல ஐம்பது ஆண்டுகளுக்காவது இந்த பெரியாரியத்தை பரப்ப வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது தோழர்களே.

வந்திருக்கிற விடுதலை சிறுத்தைகளுக்கும், தலித் அல்லாத தோழர்களுக்கும் நான் விடுக்க விரும்புகிற வேண்டுகோள், எங்கெல்லாம் அம்பேத்கரின் சிலைகளை எழுப்புகிறோமோ, அங்கெல்லாம் தந்தை பெரியாரின் சிலைகளை எழுப்புவோம். எங்கெல்லாம் அம்பேத்கரின் கருத்துகளைப் பரப்புகிறோமோ, அங்கெல்லாம் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பரப்புவோம். எங்கெல்லாம் புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க என்று முழங்குகிறோமோ, அங்கெல்லாம் தந்தை பெரியார் வாழ்க என்று முழங்குவோம். எங்கெல்லாம் அம்பேத்கரியம் தான் இந்த மண்ணுக்குத் தேவை என்று களப்பணி ஆற்றுகிறோமோ, அங்கெல்லாம் பெரியாரியத்தைச் சேர்த்து பரப்புவோம். இது தான் நமக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு – ஒரே பாதுகாப்பு என்று இந்த நேரத்திலே சொல்லி, திராவிடர் விடுதலைக் கழகம் உடன்பட்டால், இந்த மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தில், திருமாவளவனும், விடுதலை சிறுத்தைகளும் பல்லாயிரக்கணக்கிலே பங்கேற் போம் – பங்கேற்போம் என்று சொல்லி இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, நிறைவு செய்து விடை பெறுகிறேன்.

உரை தொகுப்பு: கோகுல கண்ணன்

Pin It