சடங்குப் போராட்டங்களை அல்ல; சமரசமற்ற போராட்டங்களை நடத்தியவர் பெரியார்

“இந்துத்துவ” சக்திகளுக்கு எதிராக களமிறங்க வேண்டும்

திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஈரோட்டில் 2012, டிசம்பர் 23, 24 நாட்களில் நடைபெற்ற ‘மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டை’ தொடக்கி வைத்து ஆதித் தமிழர் பேரவை நிறுவனர், தலைவர் அதியமான் ஆற்றிய உரை:

மாநாட்டில் கலந்து கொண்டு, தொடங்கி வைத்து உரையாற்ற வேண்டும் என்று கூறியபோது, உண்மையில் என்னுடைய உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி வந்தது. ஏனென்றால், நான் எங்கே பேச வேண்டும் என்று எண்ணினேனோ, அந்த இடத்திலேயே ஒரு மரியாதை கிடைத்திருக்கின்றது என்றே முதலில் நினைத்தேன். அதை எப்படி மரியாதை என்று சொல்கிறேன் என்றால், எனக்குக்கூட ஆறு மாதங்களுக்கு முன் டாக்டர் பட்டம் தருகிறேன் என்று சிலர் என்னை அணுகினர். அப்போது நான் அவர்களிடத்தில், ‘நாங்கள் பட்டங்கள் வாங்குவ தில்லை, இருக்கின்ற இழிவுப் பட்டங்களைப் போக்குவதற்குத்தான் நாங்கள் இயக்கம்  தொடங்கி யிருக்கிறோம், பட்டங்களை போடுவதுகூட எங்களுக்குப் பழக்கம் இல்லை’ (கைதட்டல்) என்று சொன்னேன்.  அப்படிப்பட்ட நிலையில், இப்போது இங்கே தொடக்க உரையாற்றுகின்ற இந்தப் பட்டத்தைத் தான் வரலாற்றில் மகிழ்வோடு நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

சில நாட்கள் முன்பு நான் இந்தியத் தலைநகர் டெல்லியிலே இருந்தேன். அப்போது தலைவர் கொளத்தூர் மணி என்னுடன் இந்த மாநாட்டுக் காகத் தொடர்பு கொண்டார். அப்போதுகூட அவர் நினைத்திருக்கலாம். நான் இந்த மாநாட்டுக்கு வந்து சேருவேனா என்று, வர முடியும்.  நான் டெல்லி யிலே கலந்து கொள்ளச் சென்றது ஒரு மாநாட் டிற்கு.  அய்.நா. சபையின் ஒரு பிரிவு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் 45 பேரை மட்டும் அழைத்து, கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிப்பதற்கான ஒரு கலந்துரையாடல் என்பதுதான் அந்த மாநாடு. மாநாட்டில் கலந்து கொண்டு பேசினேன். எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. என்ன அதிர்ச்சி என்றால், தூய்மைப் பணியை செய்கிறவர்களை, அந்தப் பணியிலிருந்து விடுதலை செய்வது என்பது அந்த மாநாட்டின் நோக்கம். தூய்மைப் பணியிலிருந்து விடுதலைப் பெற்று வேறு பணிக்குச் சென்றவர்கள், அங்கு வந்து தங்களின் நடைமுறைகளைச் சொன்னார்கள். எப்படி அந்தப் பணியிலிருந்து விடுபட்டு, இப்போது எப்படி இருக்கிறோம். இந்த நாட்டிலே அதற்கு என்ன மாதிரியான மரியாதை இருக்கிறது என்பதை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். அந்த மாநாட்டை ஒருங்கிணைத்தவரிலிருந்து கடைசியாகப் பேசிய நபர் வரைக்கும் ஏறத்தாழ ஒரே ஒரு செய்தியைக் குறிப்பிட மறந்து விட்டார்கள்.

அதை நான் அங்கே குறிப்பிட்டு வந்தேன். அது என்னவென்றால், கையால் மலம் அள்ளும் தொழில் என்பது மனு சாஸ்திரத்தோடு தொடர்புடையது. இந்த நாட்டை அரசியல் சட்டம் ஆளவில்லை; அதற்கு பதில் மனு சாஸ்திரம் தான் ஆள்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? இங்கே சாதியை ஒழிக்க வேண்டும் என்கிறோம். சாதி, மதத்திற்குக் கட்டுப்பட்டு இருக்கிறது. ஆக, அந்த மதத்திற்கு எதிராக இங்கே ஏதேனும் தீர்மானம் போட முடியுமா? அதை விவாதிக்க முடியுமா? என்ற கருத்தை நான் அங்கே வைத்தேன். அந்த மதத்தைப் பற்றிப் பேச யாரும் தயாராக இல்லை. மனிதனின் உடலிலிருந்து வெளியே வருகிற புண்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த நோய் வருவதற்கான அடிப்படைக் காரணத்தைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை. அதன் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால் அது இந்த வர்ண, ஜாதி முறையிலிருந்துதான் தொடங்குகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம்மைப் பொறுத்தவரை, திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிற இந்த மாநாடு உண்மையில் மிக நீண்ட நெடிய தந்தை பெரியாரின் வரலாற்றில் நடைபெறு கிறது. பெரியார் தன் வாழ்நாளில் நடத்தியப் போராட்டங்களை நாம் திரும்பிப் பார்த்தாலே, அவர் எதை நோக்கி பயணத்தைத் தொடங்கி யிருக்கிறார் என்பதை நாம் கவனிக்க முடியும்.

தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருக்கிறவர்கள் ‘தமிழர் என்றே சொல்ல வேண்டும்; திராவிடர் என்று சொல்லக் கூடாது’ என்று கூறுகிறார்கள். அவர்கள் ஒன்றைத் தெளிவாக மறந்துவிட்டார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறார், ‘திராவிட என்ற சொல்லே தமிழ் என்ற சொல்லிலிருந்து வந்ததுதான்’ என்று. ஆக, திராவிடர்கள் என்று சொல்லும்போது, அது தமிழர்களை மட்டுமேதான் குறிக்குமே தவிர, ஆந்திரர்களையோ, கன்னடியர்களையோ, கேரளத்தவர்களையோ குறிப்பதானது அல்ல. இன்னும் சொல்லப் போனால், பெரியார் தன் வாழ்நாளில் ஒரு முழக்கத்தை வைத்தார். ‘தமிழ்நாடு தமிழர்களுக்கே’ என்று. நான் கேட்கிறேன், இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் குறைந்தபட்சம் இந்த முழக்கத்தை யாவது போடத் தயாரா?  (கைத் தட்டல்) பெரியார் அன்றைக்கே ‘தமிழ்நாடு தமிழர்களுக்கே’ என்று ஓங்கி ஒலித்துச் சொன்னார். அதை இன்றைக்குப் பேசினால் உள்ளே தள்ளிவிடுவார்கள் என்று அவர்கள் பேசாமல், மேம்போக்காக, பொத்தாம் பொதுவாக தமிழ்த் தேசியம் பேசுகிறார்கள். பத்து பேர் தமிழ்த் தேசியத்தைப் பேசுகிறார்கள் என்றால் பத்து  பேரும், பத்து விதமான தமிழ்த் தேசியத்தைப் பேசுகிறார்கள். நமக்கு தமிழ்த் தேசியம் உடன் பாடானதா என்றால் உடன்பாடானதுதான். எப்படிப்பட்ட தமிழ்த் தேசியம் என்றால் இங்கே இருக்கிற சாதி, சம்பிரதாயங்கள் மட்டுமல்ல இன்றைக்கு நடக்கிற இந்த அடக்குமுறைகளையும் நீக்க வேண்டும்.

அதற்கு எங்கே இருந்து தொடங்க வேண்டும் என்பதுதான் அடிப்படை. அந்த அடிப்படையிலே தான் இந்த மாநாடு இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். பெரியார் பல போராட்டங்கள் நடத்தினார். வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், கோயில் நுழைவுப் போராட்டம், வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமைப் போராட்டம், வடவர் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம், பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம், அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், தேசியக் கொடி எரிப்புப் போராட் டம் ராமன் பட எரிப்புப் போராட்டம், காந்தி பட எரிப்புப் போராட்டம், காந்தி பொம்மை உடைப் புப் போராட்டம், தமிழ்நாடு நீங்கிய தேசப் பட எரிப்புப் போராட்டம், கம்பராமாயண எரிப்புப் போராட்டம் - இப்படி பல போராட் டங்கள்.

அவரின் போராட்டங்களின் வரலாற்றைப் பார்த்தால் இதிலே மிக முக்கியமானப் போராட் டம் - இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட் டம். எதற்காக அரசியல் சட்டத்தை எரிக்க வேண்டும்? அரசியல் சட்டத்திற்குள் ஜாதி இன்றைக்கும் இருக்கிறது, இல்லை என்று வாதிட முடியாது. இன்றைக்கும் உச்சநீதிமன்றத்திலுள்ள குடுமிகள் எல்லாம் அதை நிலைநிறுத்த என்ன பாடுபடுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில், ஜாதியை ஒழிப்பதற்காக அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை பெரியார் நடத்தினார். அந்தப் போராட்டம் என்பது இன்றைக்கு நாம் நடத்துகிற காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்படுகிற போராட்டம் அல்ல. அந்தப்போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ மூவாயிரம் பேர் கைது செய்யப்பட்டார்கள். மிகப் பெரிய போராட்டம் அது. அதிலே மிக மிகச் சிறப்பு என்னவென்றால், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைச் சென்றவர்கள் யாரும் எனக்கு அந்தப் பிரச்சினை இருக்கிறது. இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஆகவே பிணையில் விடுதலை ஆகிறேன் என்று கேட்காதப் போராட்டம். கோவையில்கூட சிலர் போராட்டம் நடத்து கிறார்கள். அது ஏற்பாடு செய்யப்பட்ட போராட் டம். நாங்கள் போராட்டம் நடத்துகிறோம், காவல்துறையாகிய நீங்கள் காலையிலே கைது செய்யுங்கள்; மாலையிலே விட்டுவிடுங்கள் என்று இப்படி ஒப்பந்தம் போட்டுச் செய்கிற போராட் டங்கள்கூட இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பெரியார் நடத்திய சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஏறத்தாழ 3000 பேர் கைதாகி ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை தோழர்கள் சிறை தண்டனை பெற்றார்கள் என்றால், வரலாற்றின் உள்ளே நுழைந்து பார்த்தால் தான் அந்தப் போராட்டத்தின் வீரியம் நமக்குத் தெரியும். அது மட்டுமல்ல, போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஏறத்தாழ பனிரெண்டு பேர் சிறையிலேயே இறந்திருக்கிறார்கள். வரலாற்றில் மிகப் பெரிய போராட்டம். அப்படிப்பட்ட போராட்டத்தை இந்தியாவில் யாரும் நடத்தவே முடியாது. பெரியாரை இன்று நிiவு கூர்கிறோம். அவர் வழியிலே செல்கிறோம் என்று சொன்னால், அவர் நடத்திய அத்தனைப் போராட்டங்களையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

காதலைப் பற்றி பெரியார் என்ன சொன்னார் பாருங்கள் என்று, பெரியார் ஏதோ ஒரு கூட்டத்தில், ஏதோ ஒரு சூழலில் பேசிய பேச்சை இன்றைக்கு ஒருவர் வாசிக்கிறார். காதலைப் பற்றி பெரியார் என்ன சொன்னார் என்று கழகத் தோழர்களுக்குத் தெரியாதா? காதலைப் பற்றி பெரியார் கொண்டிருக்கின்ற கொள்கையை உலகத்திலே வேறு யாரும் கொண்டிருக்க முடியாது. பெண்கள் தங்கள் கர்ப்பப் பையையே எடுத்துவிட வேண்டும் என்றார் பெரியார். காதல் பொதுவானது; உலகத்தில் அதை யாருமே தடுத்துவிட முடியாது. பெரியாருக்கு இணையாக இன்னும் யாருமே காதலைப் பற்றிச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட கொள்கை படைத்தவர் தந்தை பெரியார். அப்படிப் பட்ட உயர்ந்த நோக்கம் உடைய பெரியார், காதலைப் பற்றி எங்கேயோ சொன்னதை வைத்துக் கொண்டு பெரியாரும் காதலை எதிர்ப்பது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார் ஒருவர்.

இன்று தமிழ்நாட்டில் இரண்டு அணிகள் உருவாகியிருக்கின்றன. ஒன்று காதலை ஆதரிக்கிற, சாதியை ஒழிக்கிற அணி அதுதான் இந்த மாநாட் டுக்கு வந்திருக்கிற இந்த அணி. இன்னொன்று காதலை எதிர்க்கிற, சாதியை நிலைநிறுத்துகிற ஒரு அணி. மிகத் தெளிவாக இரு அணிகள் பிரிந்திருக்கின்றன. அது மிக நல்லது. ஏனென்றால், மருத்துவர் அய்யா ராமதாஸ், இன்றைக்கு 21 வயது பூர்த்தியான பெண்கூட தன்னுடைய பெற்றோர் அனுமதியின்றி திருமணம் செய்யக்கூடாது என்று சொல்கிறார். பெண்களை இன்னும் போகப் பொருளாக நினைத்துத் தானே பெண்களைப் பற்றி இப்படி பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்? முடிந்து போன பலவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்தத் தானே நீங்கள் அதைப் பற்றிச் சொல்கிறீர்கள்?

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும்போது, ‘வன்னிய குல சத்திரியர்’ என்று பதிவு செய்யும்படி உங்கள் சாதியினருக்கு நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியானால், வர்ண முறையில் சத்திரியர் என்ற இடம் நோக்கி நீங்கள் போய்க் கொண்டு இருக்கிறீர்கள், அந்த இடத்தைத் தேடிக் கொண் டிருக்கிறீர்கள். வர்ணத்தை ஒழிப்பதற்கு நாம் மாநாடு நடத்திக் கொண்டு இருக்கிறோம். வர்ணத்திலே இடம் பிடிப்பதற்கு அவர்கள் சாதியை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். தேவேந்திர குல வேளாளரும் அதேபோல்தான். என்ன இது? நான் குற்றம் சொல்லவில்லை. நீண்டகாலமாக அது இருக்கிறது. ஆனால், அதை தூக்கிப் பிடிக்கின்ற அந்த நிலையை நாம் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாக்குகிறோம். ஏனென்றால், ஜாதி ஒழிப்பு எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை இந்த மாநாடு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

கையாலே மலம் அள்ளும் அந்த மக்களைப் பற்றிச் சொல்லும்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. திருப்பூரிலே பெரியார் தி.க. மாநாடு ஒன்று முன்பு நடந்து கொண்டிருந்தது. பெரும் மழை. அந்த மேடையில் பேசும்போது, நான் ஒரு கோரிக்கையை வைத்தேன். கையால் மலம் அள்ளும் தொழிலை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பது இந்த அரசாங்கம் தான். அரசின் இரயில்வே துறையில்தான் இந்தத் தொழில் மிகப் பெரும் அளவில் இடம் பெறுகிறது. எனவே இரயில் மறியல் போராட்டத்தை ஆதித் தமிழர் பேரவை சார்பாக நாங்கள் நடத்தப் போகிறோம். பெரியார் தி.க.வாகிய நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று நான் வேண்டுகோள் வைத்தேன். அந்த மாநாடு முடிவதற் குள் அதே மேடையில் தலைவர் கொளத்தூர் மணி, ‘உங்கள் போராட்டத்தில் நாங்களும் கலந்து கொண்டு சிறை செல்வோம்’ என்று அறிவித்தார். அறிவித்தது மட்டுமல்ல, அந்தப் போராட்டத்தில் இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டு சிறைச் சென்றார்கள் என்பது இன்றைக்கு வரலாறாக இருக்கின்றது.

‘கையால் மலம் அள்ளும் தொழிலை யார் செய்யச் சொல்கிறார்கள்’ என்றும், ‘அவர்கள் படிக்கவில்லை’ என்றும் சிலர் சொல்கிறார்கள். படிப்பை அந்த மக்களுக்கு இவர்கள் தர மறுக் கிறார்கள் என்பதை மறந்துவிட்டுக் கூறுகிறார்கள். ‘அவர்கள் குளிப்பதில்லை’ என்கிறார்கள். தண்ணீர் என்ன இருபத்து நான்கு மணி நேரமும் அவர்களுக்குக் கிடைக்கிறதா? அக்கிரகாரத்தில் இருக்கும் அபார்ட்மெண்ட்டிலா அவர்கள் வசிக்கிறார்கள், 24 மணி நேரமும் தண்ணீர் கிடைப்பதற்கு? அவர்களுக்கு வேலையே உறுதி செய்யப்படவில்லை.

மருத்துவர் ராமதாசு அய்யா சொல்கிறார், “தாழ்த்தப்பட்டவன் காலையில் கட்டிட வேலையை முடித்துவிட்டு வந்து ஜீன்ஸ் பேண்ட் டும், கூலிங் கிளாசும் போட்டுவந்து நிற்கிறான். எங்கள் பெண்களை மயக்கிக் கொண்டு போய்விடு கிறான்’  என்கிறார். நான் சொல்கிறேன், ‘அப்படியா உங்கள் பெண்களை வளர்த்து வைத் திருக்கிறீர்கள்? அவர்களுக்குக் கல்வி கொடுக்க வில்லையா? அவர்களுக்குத் தானே சிந்திக்கிற அந்த சிந்தனை இல்லாமல் போய்விட்டதா? (கைத் தட்டல்) ஏன் உங்கள் பெண்களை நீங்களே இழிவுபடுத்துகிறீர்கள்? பெண்களை இழிவுபடுத்து வதை மருத்துவர் அய்யா ராமதாசு, தயவுசெய்து நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?

இராமதாசு என்றைக்கு ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் என்று சொன்னாரோ இல்லையோ, நமது திராவிடர் விடுதலைக் கழகம் உடனே அறிவித்து விட்டது, எங்களுடைய சீரணி உடையே ஜீன்ஸ்  பேண்ட்தான் என்று. (பலத்த கைதட்டல்) எங்கு தாக்கம் வருகிறது? நாளை அந்தப் பேரணியை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே சீருடை. இதுவரையில் தமிழ் நாட்டில் இப்படி யாராவது அறிவித்து இருக் கிறார்களா? (பலத்த கைதட்டல்) ஆகவே தீர்வு எங்கே கிடைக்கும் என்று தேடுவதல்ல. இருக்கிறது தீர்வு.

நான் பல கூட்டங்களில் பேசியதை இங்கே நினைவுபடுத்துகிறேன். அம்பேத்கரை எனக்குத் தெரியாது. எப்படி நான் தெரிந்து கொண்டேன்? முதன்முதலில் சுயமரியாதை பிரச்சாரக் கழக வெளியீடாக ‘சாதி ஒழிப்பு’ என்கின்ற சுருக்கமான நூல் வெளியே வந்தது. அந்த நூலைப் படித்துத் தான் இப்படிப்பட்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்று நான் தெரிந்து கொள்வதற்கு அந்த நூல் தான் வழி வகுத்தது. அதன் பிறகு 1990களில் அம்பேத்கர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா வந்தபோது வெளிவந்த அம்பேத்கர் பற்றிய நூல்கள் மூலம் இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. முதலில் ஆங்கிலத்தில் வந்தது. பிறகு எல்லா மொழிகளிலும் வந்தது. தமிழில் முப்பத்து ஏழு தொகுதிகளாக வந்தது. கம்யூனிஸ்ட்கள் இத்தனை நாள் அம்பேத்கரைப் பற்றி மறந்துவிட்டு இப்போது படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தொகுதிவாரியாக நான்கு, நான்கு பேர்களாகப் படித்து, ஒவ்வொரு பாராவையும் விளக்கிச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று அம்பேத்கரை படிக்கத் தொடங்கி யிருக்கிறார்கள் என்றால், யாருக்கு வெற்றி கிடைத்தது?

ஒரு காலத்தில் எந்தச் சிக்கலுக்கும் நாங்கள் சாதி, மதம் பார்க்க மாட்டோம், கேட்க மாட்டோம் என்று சொன்ன கம்யூனிஸ்ட்டுகள் இன்று சாதி பார்த்துத்தானே அருந்ததியர்கள் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்கள். இதுதானே சமூகநீதி.  சாதி பார்த்துத்தான் ஆக வேண்டும் இந்த காலக் கட்டத்தில். அப்போதுதான் இந்த சாதி, சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கிறதா? இல்லையா? என்பது  தெரியும். ஆக, சாதி பார்த்து அருந்ததியர்களின் உள்ஒதுக்கீடுக்கு ஆதரவு என்ற  நிலை எடுப்பதற்கே 45 ஆண்டுகள் கம்யூனிஸ்ட்டுகளுக்குப் பிடித்திருக் கிறது. 45 ஆண்டுகளுக்கு முன்பு இதை எடுத்திருந் தால் பலருக்கு (உயர் ஜாதி) வேலை இல்லாமல் போயிருக்கும். எங்கே சிந்திக்க  வேண்டுமோ அங்கே அவர்கள் நிச்சயமாக சிந்திக்கவில்லை. ‘இந்தியா வில் இருக்கின்ற எந்த ஒரு ஜாதியும் சமமானதல்ல’ என்று புரட்சியாளர் அம்பேத்கர் சொல்கிறார்.

எந்த ஒரு ஜாதியை எடுத்தாலும், சாதி அடுக்கில் ஒரு ஜாதி மற்றதைவிட ஒன்று கீழிருக்கும் அல்லது மேலிருக்கும். இன்னும் சொன்னால், ஒரே சாதியின் உட்பிரிவுகளுக்குள் போனால் அதிலும் ஒரு அடுக்கு கீழே அல்லது மேலே என்ற நிலைதான். இன்னும் சிலர் சொல்கிறார்கள், ‘தருமபுரியில்  தாழ்த்தப் பட்டவர்களின் குடியிருப்பில் தீ வைத்தார்கள்; கொள்ளையடித்தார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட வர்களின் ஒரு உயிரைக்கூட அவர்கள் எடுக்கவில்லை’ என்று. இப்படி ஒரு பாராட்டு வேறு தாக்கியவர்களுக்கு. வெட்கமாக இல்லை? தாழ்த்தப்பட்டவர்களின் 40 ஆண்டுகால சேமிப்பை, 6 மாதமாகத் திட்டமிட்டு, வெறும் 7 மணி நேரத்தில் சூறையாடியிருக்கிறார்கள் என்றால், அந்த 7 மணி நேரமும் தமிழ்நாட்டில் அரசு என்று ஒன்று இருந்ததா? இல்லையா? காவல்துறை என்று ஒன்று இருந்ததா? இல்லையா? 108 ஆம்புலன்ஸ என்னவாயிற்று? தீயணைப்பு வாகனங்கள் என்னவாயிற்று? (கைதட்டல்) தாக்கப்பட்ட இடங்களை நேரில் பார்த்தவர்களுக்குத் தெரியுமே அது எவ்வளவு பெரிய கொடுமை என்று.

இதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. தாழ்த்தப்பட்ட இனத்துப் பறையன் படித்து விட்டானே! அவன் வேலைக்குப் போகிறானே! என்பதுதானே? காவல்துறையில் வேலை கிடைத்துப் பணிக்குச் சேரும் ஆணையையும் போட்டு எரிக்கிறார்கள். குறிப்பாக, குழந்தைகள், மாணவர் படிக்கும் புத்தகங்களையும் எரிக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி கற்பதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் புத்தகங்ளை எரித்திருக்கிறார்கள். இதற்குப் பெயர் என்ன? இதுதானே மனு சாஸ்திரத்தை பின்பற்று வது என்பது? தாழ்த்தப்பட்டவர்கள் படிக்கக் கூடாது என்று நினைப்பது மனு சாஸ்திரத்தி லிருந்து தானே வருகிறது? சரி, தருமபுரியில் இப்படி நடந்தது. விழுப்புரத்தில் என்ன நடந்தது? அருந்ததியரான கார்த்திகேயன், கோகிலா என்ற ஆதி திராவிடப் பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார். என்ன நடந்தது அங்கே? ஒரு அருந்ததியன், ஒரு பறையரைத் திருமணம் செய்யக் கூடாதா? காதலிக்கக் கூடாதா? காதலுக்கு மதம் எங்கே குறுக்கே நிற்கிறது? ஜாதி எங்கே இருக்கிறது? வயது எங்கே இருக்கிறது? இல்லை - நாடு, இனம், தேசம் ஏதாவது காதலுக்கு எதிராக இருக்கின்றதா?

கரூரைச் சேர்ந்த ஒரு அருந்ததியத் தோழர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் முடித்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காதலுக்கு எல்லை என்று எதுவுமே கிடையாது. அப்படியிருக்கும் போது தலித் என்று சொல்லிக் கொண்டு, அதன் உட்சாதிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. ஆனால், இந்த சாதிக்கு வெளியே உள்ள மற்றவர்களைப் பற்றி பேசுவார்கள் இவர்கள். இதைச் சொல்வதற்கு வசதியாக இருக்கிறது. ஆனால், இதன் தொடக்கம் எங்கே? சாதியை ஒழிக்க எங்கே கை வைக்க வேண்டும்? மெயின் ஸ்விட்ச் எங்கே இருக்கிறது? அதுதான் மனு சாஸ்திரம். அதைத் தொடாமல் இந்த நாட்டில் எந்தப் புரட்சியும் வந்துவிடாது. ஆக, கார்த்திகேயன் என்ற சக்கிலியர், கோகிலா என்ற பறையர் பெண்ணை திருமணம் செய்து  கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக அந்தப் பெண்ணை கவுரவக் கொலை செய்தார்கள். இது கவுரவக் கொலை அல்ல; இதன் பெயர் வக்கிரக் கொலை. ஒரு சக்கிலிப் பையனை திருமணம் செய்யலாமா எனறு அப்பெண்ணின் பெற்றோரும் மற்றவர்களும் அப் பெண்ணை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு அதைத் தற்கொலை என்று அவர்கள் அறிவிக் கிறார்கள். ஆக, வர்ணதர்மம் எந்த அளவுக்குப் பாய்ந்து நிற்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டிய அவசியம் இன்று நிச்சயமாக இருக்கிறது.

இந்த மாநாட்டில் சிறந்த கருத்துரைகளை மட்டுமே கேட்க இங்கே வந்திருக்கிறார்கள். எந்த ஆரவாரமும் இல்லை என்பதை நான் கவனித்தேன். கொள்கைக் கூர்மை வெளிப்பட வேண்டும். அப்படி ஒரு நிலைதான் இந்த மாநாட்டில் இருக்கிறது. அம்பேத்கர் 1956 இல் மதம் மாறினார். அப்போது எல்லோரும்  எதிர்த்தார்கள். அவர் இஸ்லாமையோ கிறித்துவத்தையோ வேறு மதங்களையோ தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில், இவைகள் வெளிநாட்டு மதங்கள். புத்தமதம் என்பது இந்த நாட்டிலேயே தோன்றிய கொள்கை மார்க்கம் என்று முடிவெடுத்தார்.

புத்தமதத்தில் சேரவேண்டும் எனில், கொல்கத்தாவிலுள்ள மகாபோதி சங்கத்தில்தான் போய் சேரவேண்டும் என அங்கே போய் கடிதம் கொடுத்தார். அங்கே இருந்த புத்தமதக்காரர்கள், ‘தயவுசெய்து இந்த மதத்திற்கு வந்துவிடாதீர்கள்’ என்று அம்பேத்கருக்குக் கடிதம் எழுதினர். ஏனெனில், புத்தமதத்தை பார்ப்பனர்கள் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதால் அப்படிச் சொன்னார்கள். அதனால்தான் நியோ புத்திசம் Neo buddhism என்ற புதிய புத்திசத்தையே அம்பேத்கர் படைத்தார். ஏற்கனவே பார்ப்பனர்களால் உள் வாங்கப்பட்ட அந்த புத்தமதத்தை அவர் ஏற்க வில்லை. இவர் 21 கொள்கைகளை அறிவிக்கிறார். கொல்கத்தாவில் இருக்கிற மகாபோதி சங்கம் மறுத்துவிட்ட நிலையில், புத்தமதத்தைச் சார்ந்த அய்ரோப்பியர் (ஆங்கிலேயர்) ஒருவர் அங்கே இருக்கிறார். அந்த ஆங்கிலேயர் மூலம்தான் அம்பேத்கர் புத்தமதத்திற்கே வர முடிந்தது. இந்தியாவில் இருந்த எந்த புத்தமதக்காரனும் இவரை அனுமதிக்கவில்லை. புத்தமதத்தில் இவரை அனுமதிக்கவே ஒரு அய்ரோப்பியக்காரர்தான் உதவி புரிந்துள்ளார். புத்தமதத்தில் சேர வேண்டிய முறை அம்பேத்கருக்கு இப்படித்தான் நிகழ்ந்தது.

இன்று தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களிலும் தெற்கு மாவட்டங்களிலும் பிறக்கும் குழந்தைகளை சிசுவிலேயே கொல்லும் நிலை இருக்கிறது. பிறந்த குழந்தைகளை நெல் கொடுத்தோ அல்லது கழுத்தைத் திருகியோ கொன்று விடுவார்கள். அங்கே இருக்கிற பண்ணையார் வீடுகளிலும், ஆதிக்க சாதியினர் வீடுகளிலும் ஒரே ஒரு பையன் மட்டுமே இருப்பான். ஏன் வேறு குழந்தைகளே அவர்களுக்குப் பிறக்கவில்லையா? பக்கத்துத் தெருவில் இருக்கிற அருந்ததியர்கள் வீடுகளில் 5 பேர், 10 பேர் இருப்பார்கள். ஆனால், அவர்கள் வீடுகளில் மட்டும் ஒரே ஒரு பையன் மட்டுமே இருப்பான். பெண் கூட இல்லை. என்ன காரணம்? சொத்து பிரிந்துவிடக் கூடாது என்பது தான். டாக்டர் ராமதாசுக்கும் அவரோடு தற்போது இருக்கின்ற சாதி சங்கங்களுக்கும் இருக்கிற பிரச்சினையே காதல் இல்லை. பெண்களுக்கு சொத்து போய்விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

பெரியார் உணர்த்திய சொத்திலே பெண்களுக்கும் பங்கு உண்டு என்பதை கலைஞர், 1989-91 இல் தன் ஆட்சியிலே பெண்களுக்கும் சொத்திலே சம உரிமை என்று கொண்டு வந்தார். அதனால், ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும். செய்தியே தற்போது அதில்தான் உள்ளது. காதல் நாடகம் என்றும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் இவர்கள் சொலவதெல்லாம் இவர்களின் உள்நோக்கம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொத்து போய்விடக் கூடாது என்பதுதான். அதனால்தான் இவர்கள் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக இப்படி ஒரு நிலை எடுத்திருக்கிறார்கள்.

பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இல்லை. தமிழ் நாட்டில் மட்டும் இருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் இல்லாத புதுமை தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் கிடைத்தது. அண்ணா 1967 இல் ஆட்சியைப் பிடிக்கும் முன்பு, சுயமரியாதைத் திருமணங்கள் பெரியாரால் நிறைய நடத்தப் பட்டன. அந்தத் திருமணங்கள் எல்லாம் சட்டப்படி செல்லாத நிலை இருந்தது.அப்படி செல்லாத திருமணங்களால் பல தோழர்கள் தங்கள் சொத்துகளை இழந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற அண்ணா, பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்ற சட்டத்தை இயற்றினார். இதன் மூலம் தமிழ் நாட்டில் மாபெரும் புரட்சி ஏற்பட மூலவித்தகராக இருந்தார் தந்தை பெரியார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அதுமட்டுமல்ல, நம்மைப் பொறுத்த அளவு இன்றைக்கு பல்வேறு பிரச்சினைகளை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். என்ன பிரச்சினைகள்? நாம் ஏதோ அமைதியாக இருந்துகொண்டு இருக்கிறோம். நம்மை எதிர்க்கிற  அந்தக் கொள்கைகளை வைத்துக் கொண்டு இருக்கிறவர்கள் எல்லாம் நம்மைவிட மிக வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு ஒரு நீதிமன்ற வளாகத்திலே ஒரு விநாயகர் கோயில் கட்டப்படுகிறது. இங்கே இருக்கிற அத்தனை அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமையன்று பூஜை நடக்கிறது. அதற்கு ஒரு பூணூல் திருமேனி வருகிறார். ஆயுத பூஜை நடக்கிறது. இதை நம்மால் தடுக்க முடிந்ததா என்றால் இல்லை. இன்றைக்கு நம்மை எதிர்க்கிற ஆர்.எஸ்.எஸ். கருத்தை உள் வாங்கிய இந்துத்துவவாதிகள் மிகப் பெரிய அளவிலே ஆனால் அமைதியாக மேற்கு மண்டலத் திலே தங்கள் தலைமையை வைத்துக் கொண்டு,  இன்னும் குறிப்பாகச் சொன்னால் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் தங்களின் தலைமையை அமைத்துக் கொண்டு, நம்முடைய கருத்துகளுக்கு எதிராக வீரியமாக அவர்கள் செயல்பட்டுக் கொண் டிருக்கிறார்கள் என்பதைத் தோழர்கள் மறந்து விடக் கூடாது. எது வேண்டுமானாலும் நடக்கட் டும் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரமல்ல இது. நாமும் களத்திலே இறங்க வேண்டிய தருணம் இங்கு வந்துவிட்டது. ஒரு குற்றச் செயலை செய்வதைவிட அந்தக் குற்றச் செயலை பார்த்துக் கொண்டு இருப்பதுதான் முதல் குற்றம். நாம் பல குற்றங்களை மெதுவாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். தடை செய்ய முடியவில்லை.

ஆக, இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டுமென்று சொன்னால், நிச்சயமாக நான் சொல்கிறேன் இன்றைக்கு மனு சாஸ்திரம் என்ற இடத்திலே கை வைக்காமல் அதை சாதிக்க முடியாது என்று சொல்லி இந்த மாநாடு உண்மையிலேயே அவர்கள் சொன்னதைப்போல காலையிலே தொடக்கி வைப் பதற்கு ஒரு சக்கிலியன் அதியமானைத் தேர்ந்தெடுத் திருக்கின்றார்கள். மாநாட்டை முடித்து வைப்ப தற்கு ஒரு பறையன் திருமாவை தேர்ந்தெடுத் திருக்கிறார்கள் என்று சொன்னால் அதுதான் தந்தை பெரியாருக்குக் கிடைத்த வெற்றி! வெற்றி! (பலத்த கைதட்டல்) என்று கூறி இந்த மாநாட்டைத் தொடக்கி வைப்பதிலே பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உரை தொகுப்பு: ஜஸ்டின் ராஜ்

Pin It