திருமண மண்டபங்களில் மாநாடுகளை நடத்தும் வழமைக்கு மாறாக முதன்முறையாக ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மிகப் பெரும் மாநாட்டு அரங்கு (300 அடி நீளம், 80 அடி அகலம்) தகரப் பலகைகளைக் கொண்டு மின்விசிறி வசதியோடு அமைக்கப்பட்டிருந்தது.

•              மாநாட்டு மேடைக்கு அருகே, நிகழ்ச்சிகளை கடைசி வரிசையில் உள்ளோர் வரை காண் பதற்காக மிகப் பெரும் எல்.சி.டி. காணொளி திரை (11 அடி நீளம் - 7 அடி அகலம்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

•              மாநாட்டு அரங்கிற்கு வெளியே ஈரோடு, பாட்டாளி படிப்பகம் தோழர்கள், பெரியார் வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியை நிறுவி யிருந்தனர். கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு அறிவியல் கழகம் சார்பில் அறிவியல் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு அரங்குகளிலும் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதியது.

•              மேடையின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பதாகையில், மாநாட்டுப் பெயரோடு ‘நாங்கள் சாதியற்றவர்கள்; சாதியை ஒழிக்கக் கூடிய வர்கள்’ என்ற முழக்கம் இடம் பெற்றிருந்தது.

•              மாநாட்டில் திரண்டிருந்த தோழர்களில் இளைஞர்களே அதிகம். பெண்களும் குழந்தை களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தனர். மாநாட்டின் சிறப்பு  அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்த அனைவரும் இளைஞர் பாசறையைக் கண்டு மகிழ்ச்சியையும் வியப்பையும் தெரிவித்தனர்.

•              மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான், “இந்த மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்கு ‘சக்கிலிய’ வகுப்பில் பிறந்த அதியமானும், நிறைவு செய்வதற்கு ‘பறையர்’ வகுப்பில் பிறந்த தொல் திருமாவளவனும் வந்திருப்பது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி” என்று கூறிய போது, அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

•              முதன்மைச் சாலையிலிருந்து மாநாட்டு அரங்கு வரை கழகக் கொடிகள் பெரியார்-அம்பேத்கர் பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. முதன்மை சாலையிலிருந்து அரங்கிற்கு செல்லும் வழியில் ‘திராவிடர் விடுதலைக் கழக மாநில மாநாடு’ என்ற வளைவு நிறுவப்பட்டிருந்தது.

•              இசை நிகழ்ச்சி நடத்திய தோழர் தலித் சுப்பையா, மனு சாஸ்திரத்துக்கு எதிரான எழுச்சிப் பாடல் களோடு இடையிடையே

சாதி எதிர்ப்பு வர்ணா ஸ்ரம எதிர்ப்பு கருத்துகளையும் பெரியாரின் கொள்கை ஆளுமையையும் பதிவு செய்தார்.

•              மேடையில் சால்வைகள், துண்டுகள் அணி விப்பது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது. தொல். திருமாவளவன் மட்டும் தனது உரையைத் தொடங்கும்போது தலைவர், பொதுச் செயலாளருக்கு சால்வைகள் போர்த்தினார்.

•              பேரணியில் சிறப்பாக அணி வகுத்து வந்த மூன்று மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளுக்கு மறைந்த கழகப்  போராளிகள் மேட்டூர் கருப்பரசன், சென்னை பத்ரி நாராயணன், கிருட்டிண கிரி, பழனி பெயர்கள் சூட்டப்பட்டன.

•              மாநாட்டு மேடையில் நடந்த ஜாதி மறுப்புத் திரு மணங்கள், நாடகத் திருமணம் என்று கொச்சைப்படுத்துவோருக்கு சரியான பதிலடி யாக இருந்ததை தோழர்கள் பேரார்வத்துடன் வரவேற்று கரவொலி எழுப்பினர். “மணமக்கள் வாழ்க; ஜாதி ஒழிக” என்ற வாழ்த்தொலிகள் பீறிட்டுக் கிளம்பின.

•              மிகச் சிறிய மாலை மாற்றுதலோடு எளிமையாக நடந்த திருமணத்தில் தோழர் கொளத்தூர் மணி பேசுகையில், “இராகு கால நேரத்தில் இத்திருமணங்களை நடத்த திட்டமிட்டோம்; காலம் கடந்துவிட்டதால் ‘ராவு’ காலத்தில் நடக்கிறது. இந்த திருமணத்துக்குப் பிறகு நாடகம் நடைபெறவிருக்கிறது. இது நாடகத் திருமணம் அல்ல; திருமணத்துக்குப் பிறகு நடக்கும் நாடகம்” என்று கூறியபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பினர்.

•              பேரணியில் பெண்களும், பாலின வேறுபாடின்றி நீலநிற ஜீன்ஸ் பேண்ட், கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அணி வகுத்து வந்த குழந்தைகளும் அதே சீருடையில் வந்தனர். பேரணியில் வெள்ளைக் குதிரையில் சீருடையோடு கம்பீரமாக கழகக் கொடி பிடித்து வந்த பெண் தோழர், ஈரோடு நகர கழகப் பொருளாளர் சுகுணா மற்றொருவர் திவ்யா - இவர் கழகப் பொருளாளர் இரத்தின சாமியின் பேத்தி. பேரணியில் இளைஞர்கள் மட்டுமல்ல, கழகத் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் மூத்த உறுப்பினர்களும் ஜீன்ஸ் பேண்ட்-கருப்புச் சட்டை சீருடை யிலேயே வந்தனர்.

•              பேரணியில் அணி வகுத்து வந்த தோழர்கள் இறுதி வரை பேரணியை விட்டு விலகாமல் ஜாதி எதிர்ப்பு - வர்ணாஸ்ரம எதிர்ப்பு - பெண் ணுரிமை முழக்கங்களை முழங்கி வந்தனர்.

•              பேரணி ஒரு இடத்தைக் கடக்க 55 நிமிடம் ஆனது.

•              கருத்தரங்கில்  பேசிய மார்க்சிய சிந்தனையாளர் அருணன், ஊர் சுகாதாரம் பெற குப்பைகளை எரிக்க வேண்டும்; சமுதாயம் நோயின்றி சுகாதார மாக வாழ மனு சாஸ்திரத்தை எரிக்கத்தான் வேண்டும் என்று கூறி போராட்டத்தை வாழ்த்தினார்.

•              தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர் சம்பத், இப்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியாக செயல்படும் தங்கள் அமைப்பு அடுத்த கட்டமாக சாதி ஒழிப்பு முன்னணியாக மாறும். திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் சாதி-தீண்டாமை ஒழிப்பு இயக்கங்களோடு இணைந்து நிற்கும் என்று அறிவித்தபோது பலத்த கரவொலி எழுந்தது.

•              திராவிடர் விடுதலைக் கழகம் அனுமதித்தால், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 இல் நடக்கும் மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தில் தானும், விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்கத் தயார் என்று தொல். திருமாவளவன் தனது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் என்று அறிவித்தபோது, அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

•              அரங்கிற்கு வெளியே குறைந்த கட்டணத்தில் சைவ-அசைவ உணவு விற்பனையகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சைவ உணவகம் நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்த கழகத்தின் தீவிர ஆதரவாளர் மோகன், குடும்பத்துடன் தயாரித்து வழங்கிய உணவு தரமானதாக சுவையாக குறைந்த கட்டணத்தில் இருந்ததை தோழர்கள் பலரும் பாராட்டினர்.

•              கருத்தரங்குகள், பட்டிமன்றங்களில் கழகத் தோழர்களே பெருமளவில் பங்கேற்கச் செய்யப்பட்டனர். தங்கள் தலைப்புகளின் கீழ் செறிவான கருத்துகளை தோழர்கள் முன் வைத்துப் பேசினர்.

•              பெண்கள் மட்டுமே பங்கேற்றுப் பேசிய கவியரங்கில், திருநங்கை ஈரோடு அர்ச்சனாவும், மனுசாஸ்திரத்தை எதிர்த்துக் கவிதை வாசிக்க வந்தபோது, அவருடன் 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் உடன் வந்து மாநாட்டில் பங்கேற்றனர்.

•              அண்ணா தீட்டிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்த ‘வெங்காயம்’ திரைப்பட இயக்குனர் ராஜ்குமார், மிகக் குறுகிய நாட்களில் நாடக தயாரிப்பை சிறப்பாக செய்ததோடு, அவரே ‘சந்திர மோகன்’ பாத்திரமேற்று நடித்தார்.

•              பெரியார் காலத்தில் நடத்திய மாநாடுகளைப் போன்ற உணர்வு இருந்ததாக கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

•              மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 8 தீர்மானங்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தீர்மானமாகவே இருக்கிறது என்று தொல்.திருமாவளவன் தனது உரையில் மனம் திறந்து பாராட்டினார்.

•              வனங்களில் வாழும் உயிரினங்களை அழிப்பது, சுற்றுச் சூழலுக்கு எதிரானது என்ற கருத்தை உணர்த்திடவே காட்டிலிருந்து அன்று காலை பிடித்த இரண்டு பாம்புகளை குழந்தைகளின் தோள்களில் தவழவிட்டு, விளையாடச் செய்த கோவை தோழர் சாந்தகுமார், அன்று இரவே இந்த பாம்புகளை காட்டில் மீண்டும் கொண்டு விடப் போவதாகக் கூறினார்.

•              தோழர் கொளத்தூர் மணியிடம் தமது குழந்தைக்கு ‘கயல்விழி’ என்று பெயரிடக் கோரி பி. அழகப்பன்-சித்ரா இணையர் மேடைக்கு வந்தனர். ‘கயல்விழி’ அமைதியான பெயராக இருப்பதால், ‘கனல் விழி’ என்று மாற்றி பெயர் சூட்டுவதாக கரவொலிக்கிடையே கொளத்தூர் மணி அறிவித்தார்.

•              கழக மாநாட்டுக்காக புதிய இசைக் கருவிகள், புதிய பாடல்களுடன் மேட்டூர் டி.கே.ஆர்.  இசைக்குழுவினர் தங்களை தயார்படுத்திக் கொண்டு நடத்திய இசை நிகழ்ச்சி எழுச்சி யுடனும் உணர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்தது.

•              காலை 9 மணிக்கு தொடங்கிய மாநாடு இடைவேளை ஏதுமின்றி இரண்டு நாட்களும் இரவு 11 மணி வரை தொடர்ந்தது.

•              இரண்டு நாள் மாநாட்டு நிகழ்வுகளையும் கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் தொகுத்து வழங்கினார். திருப்பூர் கழகத் தோழர் முகில் இராசு மேடை நிர்வாகத்தைக் கவனித்தார்.

•              தோழர் செம்பட்டி ராஜா வடிவமைத்த மாநாட்டு அழைப்பிதழ், மேடைப் பதாகைகளை பலரும் பாராட்டினர். ஒலி, ஒளி அமைப்பு எந்தத் தடையுமின்றி நேர்த்தியாக அமைவதற்கும், மாநாட்டு அரங்கு நிறுவுவ தற்கும் முழுப் பொறுப்பேற்று, செயல்பட்டார் கழகத் தோழர் ‘அருள் எலக்ட்ரானிக்ஸ்’ தெட்சிணாமூர்த்தி. மாநாட்டு விருந்தினர்களை வரவேற்று வழியனுப்பி, தங்க வைத்து - அனைத்து ஏற்பாடுகளுக்கும்  பொறுப்பேற்று செயல்பட்டார் தி. தாமரைக் கண்ணன்.

•              மாநாட்டு செயல்பாடுகளில் கழகத் தோழர் களும், அறிவியல் மன்றம் மற்றும் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத் தோழர்கள் தீவிரமாக களமிறங்கி செயல்பட்டதை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில் சுட்டிக்காட்டி பாராட்டியபோது, தோழர்கள் மகிழ்ந்து கரவொலி எழுப்பினர்.

•              மாநாட்டு வீடியோ பதிவுகளை கழகத் தோழர்கள் செம்பட்டி ராஜா, பீட்டர், கார்த்திக், வின்சென்ட் ஆகியோர் பொறுப்பேற்று செயல்பட்டனர். மேடை அலங்காரப் பொறுப்பை கழகத் தோழர்கள் மேட்டூர் ஆர்.எஸ். சவுந்தர், ராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

•              மாநாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் இணையதளங்கள் முக நூல் வழியாக மாநாட்டு அரங்கிலிருந்து தோழர் பூங்குழலி அனுப்பிக் கொண்டே இருந்தார்.

•              மாநாட்டு நிகழ்வுகளில் முழுமையாக இணைத்துக் கொண்டு கருத்து பகிர்ந்து, உணர்வுகளை உரமேற்றிக் கொண்டு அடுத்தக்கட்ட வேலைத் திட்டங்களை சுமந்து, கழகச் செயல் வீரர்கள் விடைபெற்றனர்.

Pin It