மாவட்டம் தோறும் ஜாதி ஒழிப்பு மாநாடுகள் - மாநாட்டில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி அறிவிப்பு

பொது மாநாட்டுக்கு தலைமை தாங்கிய கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 அன்று மனு சாஸ்திரம் தீயிட்டு எரிக்கப்படும் என்றும், அதுவரை மாவட்டம் தோறும் சாதி ஒழிப்பு மாநாடுகள் நடத்தப் படும் என்றும் அறிவித்தார். தோழர் கொளத்தூர் மணி முன்மொழிந்த போராட்ட அறிவிப்பு தீர்மானம்:

சாதி தீண்டாமையின் வடிவங்கள் தொடர்ந்து நிலை பெற்றிருப்பதை இம்மாநாடு கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. தாழ்த்தப்பட்டோர் வாழ்விடங்கள் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. இதை மாற்றுவதற்கு அரசு கட்டித் தரும் தலித் மக்களுக்கான குடியிருப்புகள் ஆதிக்கசாதிகள் வாழும் ஊர்ப் பகுதிகளிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளாக அரசு கட்டித்தர வேண்டும்; ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு கல்வி - வேலை வாய்ப்புகளில் ஜாதியற்றோர் என்ற பிரிவை உருவாக்கி அவர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; இடஒதுக்கீட்டைத் தவிர வேறு எந்த வடிவிலும் ஜாதி அடையாளத்தை பயன்படுத்தக் கூடாது; இடஒதுக்கீட்டைத் தவிர வேறு எந்த வடிவிலும் ஜாதி அடையாளத்தை பயன்படுத்தக் கூடாது; திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தேனீர்க் கடைகள், முடி திருத்தகங்கள், வழிபாட்டிடங்கள் என்பன போன்ற பொது பயன்பாட்டு இடங்களில் தீண்டாமைக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் - போன்ற ஜாதி-தீண்டாமை ஒழிப்புக்கான தீர்மானங்களை திருப்பூரில் 29.4.2012 நடத்திய ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றி, அதனடிப்படையில் அந்த ஜாதி - தீண்டாமைக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் பார்ப்பனிய மனு சாஸ்திர எரிப்புப் போராட்டத்தை அறிவித்தோம்.

இப்போது தலித் மக்களை தனிமைப்படுத்துதல் என்ற செயல் திட்டத்தோடு ஜாதிய கட்சிகள் வெளிப்படையாக இயக்கங்களை நடத்தி தமிழகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் ஆபத்துகள் உருவாகியுள்ளன. இந்த மனுவாத ஜாதிய கட்சிகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி, அவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவும், மனு சாஸ்திர அடிப்படையில் ஜாதிய - தீண்டாமைக் கொடுமைகள் நிலைப்பதை மாற்றியமைக்கக் கோரியும் ஜாதி எதிர்ப்பு மாநாடுகளை நடத்திடவும் அதற்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, ஜாதி, தீண்டாமைக்கு எதிரான பரப்புரைப் பயணங்களை நடத்திடவும், ஒவ்வொரு பயணத்தின் நிறைவிலும் அந்தந்த மண்டலங்களில் சாதி எதிர்ப்பு மாநாடுகளை நடத்துவது என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது. அதனடிப்படையில் ஜனவரி 22 இல் சென்னையிலும், பிப்ரவரி 9 இல் திண்டுக்கல்லிலும், பிப்ரவரி 16 இல் சேலத்திலும், பிப்ரவரி 23 இல் தஞ்சையிலும்,

மார்ச் 9 இல் திருநெல்வேலியிலும், மார்ச் 16 இல் கோவையிலும், மார்ச் 23 இல் புதுவையிலும், ஏப்ரல் 6 ஆம் தேதி திருச்சியிலும் இந்த மாநாடுகள் நடத்திடவும், நிறைவாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று மனு சாஸ்திரத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்துவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

Pin It