வேதிக் கருத்தரைத்து வீதியெங்கும் தூவிவிட்டு
சாதிப் பிரிவினையைத் தூக்கிப் பிடித்தபடி
நீதி தனைமறுத்து நீசரெனச் சொல்லியெம்மை
ஏதிலிக ளாக்கிவிட்டார் அடி யாத்தாடி!
ஏழையெமை ஆட்டிவைத்தார்

துள்ளிக் குதித்து விளையாடத் துடிக்குமிளம்
பள்ளிக் குழந்தைகளைப் பாரம் சுமக்கவைத்தார்
உள்ளம் வெதும்பிஅவர் பள்ளி தனைவெறுக்க
கள்ளத் தனம்புரிந்தார் அடி யாத்தாடி!
கல்வி தனையழித்தார்

மாட்டுக் கறிபுசித்து வாழ்ந்த எமதவரைக்
காட்டு மிருகமெனக் கொன்று சினம்தணித்தார்
தீட்டுப் படியுமெனத் தாழ்ந்து கிடக்குமெங்கள்
வீட்டைப் புறக்கணித்தார் அடி யாத்தாடி!
வெறுப்பை உமிழ்துவைத்தார்

வானூர் அமரருமே வந்து பணியும்படி
பூணூல் அணிந்தஅவர் பாநூல் புனைந்துவைத்தார்
தானூர் வெளிகளிலே தாழ்ந்தோர் புழங்குவதை
வீணாய்த் தடுத்துவைத்தார் அடி யாத்தாடி!
மனிதத் தனம்அழித்தார்

அத்தி வரதரென ஆங்கொரு தெய்வமையோ!
புத்தி கெடுத்ததையோ! பூலோக மாந்தரையே
கத்திக் கதறியது காஞ்சிபுர மாநகரம்
பத்தி இதுபோலே அடி யாத்தாடி!
பெருக்கெடுத்தால் என்செய்வோம்

பாயை விரித்துசாதிப் பண்டம் அதில்படைக்க
நாயைத் துணைக்கழைத்து நாமம் தரித்தசிலர்
காயை நகர்த்துகின்றார் கூச்சம் சிறிதுமின்றி
தீயை வளர்க்கின்றார் அடி யாத்தாடி
தீண்டாமை வேரூன்றவே!

கோசலை மைந்தனுக்குக் கோயில்கட்ட எத்தனித்து
வாசலைத் தான்திறந்தார் வன்முறையை உள்ளேவிட
பூசலை ஏற்படுத்தி பாரதத்தைக் காவியாக்க
பாசவலை வீசுகின்றார் அடி யாத்தாடி
பாசிஸத்தைப் பாய்ச்சுகின்றார்

சாதிக் கயிறுகல்விச் சாலை முழுதுமின்று
ஆதிக்கம் செய்கிறது யாரும் தடுப்பதில்லை
பாதிப் படைபவராம் பாடுபடும் ஏழைகளை
மோதிக்கொள்ள வைக்கின்றார் அடி யாத்தாடி!
மநுதருமம் காக்கின்றார்

என்தாய் எனக்களித்த இன்பத் தமிழ்சாக
வம்பாய் வடமொழியை வந்து திணிக்கின்றார்
அன்பாய் எடுத்துரைத்தால் யாரோ அதைக்கேட்பார்!
தென்பால் தமிழ்தனக்கே அடி யாத்தாடி
தீங்குவந்து சேர்ந்ததடி!

ராமரைத் தெய்வமாக ஏற்றிட வேண்டுமென்று
தாமரைப் பூவினர்தான் தாவிக் குதிக்கின்றார்
பாமரர் வாழ்வுதனைப் பாழ்பட வைக்கின்றார்
சாமரம் வீசுகின்றார் அடி யாத்தாடி
தமிழகம் ஆள்வோர் அதற்கு!

சாதிமத பேதமெல்லாம் பாடுபடும் ஏழையர்க்கு
ஆதிமுதல் இன்றுவரை தேவையில்லாத் தீங்குகளே!
வீதிதோறும் சாதிவெள்ளம் ஓடுவது ஞாயமில்லை
சேதியிதை ஏற்பவர்யார்! அடி யாத்தாடி
தேசம்போற போக்கினைப்பார்!

- மனோந்திரா

Pin It