தமிழ்நாட்டில் இடைநிலைச் சாதிகளை தலித் மக்களுக்கு எதிராக அணி திரட்டிடும் ஆபத்தான பார்ப்பனியம் தலைதூக்கி இருக்கிறது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமை தாங்குகிறார் என்ற சேதி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் உருவாக்குகிறது.

சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகவும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களை பலவீனப்படுத்தவும் மருத்துவர் ராமதாஸ் கூட்டிய தலித் மக்கள் எதிர்ப்புக் கூட்டம் வலியுறுத்தியிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.

இப்படித்தான் பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் “சூத்திரர்”களுக்கு எதிரான கோட்பாடுகளை முன் வைத்து, ‘சூத்திர-பஞ்சமர்’களை அடிமைகளாக தற்குறிகளாக நிலைக்க வைத்தனர். இந்த ஆதிக்க வெறியைத் தட்டிக் கேட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு பாதை போட்டுக் கொடுத்தது பெரியார் கண்ட திராவிடர் இயக்கம். இப்போது மருத்துவர் ராமதாசு ஒட்டுமொத்த தலித் மக்களுக்கு எதிராக முன் வைக்கும் இதே வெறுப்புணர்ச்சியைத் தான் அன்று பார்ப்பனர்கள் கக்கினார்கள். அப்போது பார்ப்பன எதிர்ப்பை புறந்தள்ளி சமூக நீதி உரிமைகளால் பயன் பெற்றவர்கள் இப்போது தலித் மக்களுக்கு எதிராக அதே பார்ப்பன குரலை முன் வைப்பதை வரலாற்றுத் துரோகம் என்றுதான் குறிப்பிடவேண்டியிருக்கிறது.

வன்னியர் பெண் ஒருவர் தலித் ஆணை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு நிகழ்வை முன் வைத்து தலித் மக்கள் மீது வன்முறைப் போர் தொடுத்து, அவர்கள் பணம் நகைகளைக் கொள்ளையடித்த கொடூரமான வன்முறையைக் கண்டிக்க முன் வரவில்லை. மாறாக, அவற்றை நியாயப்படுத்திக் கொண்டு இப்போது தலித் மக்களை தனிமைப்படுத்திட களம் இறங்கியிருக்கிறார்கள். இது சாதிவெறி வன்முறையை நியாயப்படுத்தும் அக்கிரமம்! இந்தக் கலவரத்துக்குக் காரணமாக சொல்லப்படும் திருமணம், காவல்துறையின் பாதுகாப்பு அங்கீகாரத்துடன் நடந்ததாகும். அப்படியே அதைப் பெரும் சமுதாயக் குற்றமாகக் கருதும் இந்த ‘நவீன சாதியர்கள்’ தொடர்புடையவர்கள் மீது தாக்குதலை நடத்தியிருந்தால்கூட தங்கள் செயலை நியாயப்படுத்தியிருக்க முடியும். அதற்காக 3 கிராமங்களில் 450 தலித் மக்களின் குடியிருப்புகளைத் தாக்கி, அவர்களின் பணம், நகை, உடைமைகளைக் கொள்ளையடிப்பது என்ன நியாயம் என்ற கேள்விக்கு மருத்துவர் இராமதாசிடமிருந்து பதில் இல்லை.

இளவரசன் எனும் தலித் இளைஞரைத் திருமணம் செய்து கொண்ட வன்னிய சமூகத்தைச் சார்ந்த திவ்யாவின் தந்தை நாகராஜ், முதலில் எதிர்த்தாலும் பிறகு ஒரே மகளின் எதிர்கால நலன் கருதி ஏற்றுக் கொண்டார். ஆனால், இது போன்ற சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக காடுவெட்டி குரு போன்றவர்களின் ஆவேச பேச்சுகளால் தூண்டிவிடப்பட்ட அப்பகுதி வன்னியர்கள், நாகராஜை தனிமைப்படுத்தியதால் திருமணம் முடிந்து 40 நாட்களுக்குப் பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாதிவெறியை உசுப்பிவிட்டு வன்னிய ஆதரவு தளத்தை வாக்கு வங்கி அரசியலுக்காக உறுதிபடுத்திக் கொள்ளும் சூழ்ச்சி தான் - இந்த கலவரத்தின் பின்னணியாகத் தெரிகிறது.

‘ஜீன்ஸ் பேன்ட், டி சட்டை, கூலிங்கிளாஸ்’ அணிந்து கொண்டு,  தலித் இளைஞர்கள் வன்னியப் பெண்களை மயக்கி ஏமாற்றுவதாக மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடையே கூறியிருப்பது தலித் சமூகத்தையே அவமதிக்கும் கருத்தாகும். அதுமட்டுமல்ல, அவர் சார்ந்துள்ள வன்னிய சாதிப் பெண்களையும் இழிவுபடுத்துவதாகவே நாம் கருதுகிறோம். கிளுகிளுப்புக்கு மயங்குவோர்தான் பெண்கள் என்ற கருத்தும் இதிலே உள்ளடங்கியுள்ளது. நாட்டில் எத்தனையோ சாதி மறுப்பு திருமணங்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. சாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமல்ல, ஒரே சாதிக்குள் நடக்கும் திருமணங்கள்கூட கருத்து மோதலில் முடிந்திருக்கின்றன. வன்னிய சாதிக்குள்ளேயே நடக்கும் திருமணங்கள் எல்லாம் முறிவே ஏற்படுவதில்லையா? வன்னிய சாதிப் பெண்களை திருமணம் செய்து கொண்ட வன்னிய இளைஞர்கள், பெண்களைக் கைவிடுவது இல்லையா? இந்தப் போக்கு அனைத்து சாதிக் குழுவிற்குள் நடக்கும் சமூக மற்றும் குடும்பப் பிரச்சினைகள். இதற்கு சாதி முலாம் பூசி, ஏதோ தலித் சமுதாய இளைஞரெல்லாம் ஒழுக்கக் கேடானவர்களாக சித்தரிப்பது சாதி வெறியின் உச்சக்கட்ட வெளிப்பாடு என்றே கூற வேண்டியிருக்கிறது.

இப்படி சாதி வெறியை உயர்த்திப் பிடிப்பவர்கள் தங்களை தமிழர்கள் என்றும், தமிழ்த் தேசியவாதிகள் என்றும் அடையாளம் காட்டுவதும், தமிழ்ப் பண்பாட்டைப் பேணி காப்பவர்களாக பெருமை பேசுவதும் தான் வேடிக்கை! சுயசாதிப் பற்றும் தலித் எதிர்ப்பும்தான் தமிழருக்கான அடையாளமா?

தமிழ்த் தேசியத்துக்குள் சாதி அடையாளத்தைப் புகுத்திடும் இந்தப் போக்கை உண்மை தமிழ்த் தேசியவாதிகளாக தங்களை கூறிக் கொள்ளும் அமைப்புகள் வெளிப்படையாக கண்டிக்க முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

சாதி மறுப்புத் திருமணங்கள் பல்கிப் பெருக வேண்டும் என்று உச்சநீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வருகின்றன. சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்திடவே ஆட்சிகள் பல்வேறு நலத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. கல்வி உரிமை, தகவல் பெறும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளைப்போல் திருமணம் என்பதும் அடிப்படை உரிமை.

18 வயதுள்ள பெண்ணும் 21 வயது ஆணும் விரும்பினால் சாதி, மதங்களைக் கடந்து திருமணம் செய்து கொள்ளும் உரிமைகளை சட்டங்கள் அனுமதிக்கும்போது வட நாட்டில் நடக்கும் சட்டவிரோத ஜாதி பஞ்சாயத்து களுக்கு நிகராக இந்தத் திருமணங்களைத் தண்டிக்கும் அதிகாரங்களை சில சாதித் தலைவர்கள் கையில் எடுத்துக் கொள்வதை எந்த ஒரு நாகரிக சமூகமும் ஏற்க முடியாது.

இந்த சாதித் தலைவர்கள் அந்தந்த சாதிக் குழுவினரால் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்களும் அல்ல. ஒவ்வொரு சாதிக் குழுவிலும் சாதியத்தை மறுக்கும் உண்மை ஜனநாயகவாதிகள், முற்போக்காளர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் துணிவுடன் வெளியே வந்து மீண்டும் இருண்ட காலத்துக்கு இழுத்துப் போகத் துடிக்கும் தங்கள் சாதியத் தலைவர்களுக்கு எதிராக அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். இது அவர்களின் வரலாற்றுக் கடமை!

தமிழ்நாட்டில் இந்த சாதி தீண்டாமை எனும் கொடும் நோயை எதிர்த்து ‘பெரியார் திராவிடர் கழக’மாக நாம் செயல்பட்ட காலத்திலேயே களமிறங்கினோம். அதற்காகக் கடும் எதிர்ப்புகளை மிரட்டல்களை சந்தித்தோம். அனைத்துப் பிரச்சினைகளையும்விட முன்னுரிமைக்கான செயல்திட்டம் இதுவே என உறுதிகொண்டு திட்டங்கள் தீட்டினோம். அதே நோக்கத்துக்காகவே ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ உருவாக வேண்டிய கட்டாயம் நிகழ்ந்தது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடக்க நிகழ்விலேயே சாதி தீண்டாமைக்கான கருத்தியலை வழங்கிக் கொண்டிருக்கும் மனுசாஸ்திர எரிப்புக் கிளர்ச்சியையும் போராட்ட விளக்க மாநாட்டையும் அறிவித்தோம். அதற்கு நாம் ஆயத்தமாகி வரும் நிலையில் ஜாதிவெறிக் கூச்சல் சமூகக் களத்தில் வேகமாக வெளிப்படையாக ‘கர்ஜிக்க’த் தொடங்கியிருக்கிறது.

வன்னியப் பெண்களை தலித் ஆண்கள் காதலிப்பதுதான் இவர்கள் பார்வையில் பெரும் குற்றமாகிறது. இது வர்ணாஸ்ரமம் என்ற அடிமைத்தனத்தை வலியுறுத்த ‘மனு’ என்ற கொடுங்கோலன்  தொகுத்த மனுசாஸ்திரத்தில் வலியுறுத்தப்படும் ‘நச்சுக்’ கருத்தாகும். “பிராமணன்”, “சத்தியர்” என்ற பூணூல் அணியும் உரிமைப் பெற்ற இரு பிறப்பாளர்களான ஆண்கள் முதலில் தங்கள் வர்ணத்தைச் சார்ந்த பெண்களையும், மீண்டும் திருமணம் செய்ய விரும்பினால், அடுத்தடுத்த வைசிய, சூத்திரப் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறது மனுவின் கோட்பாடு.

“சூத்திரன் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும். வைசியனுக்கு வைசிய, சூத்திரப் பெண்; சத்தியரியனுக்கு சத்திரிய வைசிய சூத்திரப் பெண்கள்; பிராமணருக்குப் பிராமண சத்திரிய, சூத்திரப் பெண்கள்” (மனு அத்.3;

சுலோகம் 13) என்று வரையறுக்கிறது. ‘மேல் சாதி’ ஆண்,  எத்தனை கீழ்சாதிப் பெண்களையும் திருமணம் செய்யலாம். ஆனால், ‘மேல்சாதி’ப் பெண்ணை ‘கீழ் சாதி’ ஆண் திருமணம் செய்வதற்கு மனுதர்மம் தடை போடுகிறது. தங்கள் சாதிப் பெண்கள் திட்டமிட்டு ‘தலித்’ ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்று இன்று பேசப் புறப்பட்டிருப்பவர்கள் இதே மனுதர்மத்தின் குரலையே எதிரொலிக்கிறார்கள்.

எந்த ‘மனுதர்மம்’ இவர்களை சூத்திரர்களாக்கி கல்வி உரிமை, மனித உரிமைகளைப் பறித்ததோ அதை புறந்தள்ளி, தங்களின் வாழ்நிலையை உயர்த்திக் கொண்டவர்கள் அதே மனு திணித்த நஞ்சை தமக்குக் கீழே உழலும் சமூகத்தின் மீது திணிக்கிறார்கள். ஆக, இது மனுதர்மத்தின் குரல்! பார்ப்பனியத்தை உயிர்ப்பிக்கும் பேராபத்து!

இந்த நிலையில் சேலத்தில் நவம்பர் 18 இல் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை நினைவூட்டுகிறோம்.

“பார்ப்பனரைத் தவிர ஏனைய பார்ப்பனரல்லாத சமூகத்தினர் ஜாதிய அடையாளத்தை வெளிப்படுத்து வதில் கூச்சமும், தயக்கமும்  காட்டிய பெரியார் காலத்தின் சூழல், இப்போது பின்னுக்குத் தள்ளப் பட்டு, வெளிப்படையாக

ஜாதிப் பெருமை பேசிக் கொண்டு தேர்தலுக்கான ஜாதிய அணி திரட்டலுக் கும், சமூக ஒற்றுமையைக் குலைப்பதற்கும் பயன்படுத்தும் ஆபத்தான நிலை உருவெடுத்து வருகிறது. பார்ப்பனர்களால் சமூகத்தில் திணிக்கப்பட்ட பார்ப்பனிய நச்சுக் கருத்துக்களை சமூகநீதியால் பயன் பெற்று வளர்ந்த பார்ப்பன ரல்லாத இடைநிலைச் சாதியத் தலைவர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த ஆபத்தான நவீன பார்ப்பனியவாதிகளை சமூகக் களத்தில் எதிர்கொண்டு முறியடிக்க அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரளுமாறு திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” - இதுவே, நாம் தீர்மானமாக வடித்த முன்னெச்சரிக்கை! அதுதான் இப்போது நடக்கிறது! - ஆம்! தமிழகத்தில் தலைதூக்கும் சாதிய வெறியை சாதி எதிர்ப்பாளர்கள் சந்தித்தேயாக வேண்டும்!

அதற்கான சாதிய பார்ப்பனிய எதிர்ப்பு, இயக்கத்தை உருவாக்கிடும் சூழலில் ஈரோட்டில் கூடுகிறோம்! ஈரோடு மாநாடு சாதிவெறி சக்திகளுக்கு அறைகூவலாக அமைய வேண்டும்!

பெரியாரியம் தந்த வெளிச்சத்தில் நாம் சமூகத்தை சரியான பார்வையில் பார்த்தோம். அதற்கான சாதி தீண்டாமை எதிர்ப்பு செயல் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்தோம்!

இப்போது இதுவே தமிழகத்தின் மய்யப் பிரச்னையாக கருக்கொண்டு விட்டது. இந்த சாதி தீண்டாமை எதிர்ப்புக் களத்தில் ஒதுங்கி நின்றவர்கள்கூட இப்போது களமிறங்கும் கட்டாயம் வந்துவிட்டது.

நாம் சரியான இலக்கு நோக்கி முன்னேறுகிறோம். பெரியாரியலின் கொள்கைத் தூதுவர்களாய் ஈரோட்டில் நம்பிக்கையுடன் கூடுவோம்! சாதி எதிர்ப்பு அணியை வலிமை யுடன் கட்டி எழுப்புவோம். ஈரோடு அழைக்கிறது; தோழர்களே! வாரீர்! வாரீர்! வாரீர்!

Pin It