சென்னையில் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பள்ளி ஆசிரியரை குத்திக் கொலை செய்த செய்தி, நாட்டில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது. இது தொடர்பாக காட்சி ஊடகங்களும் அச்சுஊடகங்களும் விரிவான விவாதங்களை நடத்தி வருகின்றன. மாணவர்களை வன்முறைக்குத் தூண்டும் சமூகச் சூழல், அவர்கள் மீது திரைப்படங்கள், இணையதளங்கள் திணிக்கும் வன்முறை கலாச்சாரம், குடும்பங்களில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்குமான இடைவெளி, மனப்பாடம் - மதிப்பெண் போட்டிகளை ஊக்குவிக்கும் கல்வி முறை, ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் என்று பல்வேறு தளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன. சமூகம் சார்ந்த இந்த விவாதங்கள் அனைத்தும் வரவேற்கப்பட வேண்டியவைதான். இப்படி ஏதேனும் கடுமையாக உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய நிகழ்வுகள் நேரும்போது மட்டும், இத்தகைய விவாதங்கள் தலைதூக்கி, பிறகு படிப்படியாக மறைந்து போய் விடுவது வாடிக்கையாகிவிட்டது என்பதே உண்மை.

முதலில் இப்படி ஒரு நிகழ்வை முன் வைத்து அதையே பொதுவான சமூகப் போக்கு என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இது, ஒரு ‘தனித்துவமான’ வழமைக்கு மாறான விரும்பத்தகாத, நடக்கக்கூடாத ஒரு செயல்பாடு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 9 ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போது கத்தியை கையில் எடுத்துவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்து விடவும் கூடாது.

சோகமான - கொடூரமான முறையில் உயிரைப் பறி கொடுத்துவிட்ட ஆசிரியை, மாணவன் ‘ஒழுங்காக’ படிக்கவில்லை என்பதை மாணவனுக்கு தெரியும் வகையில் மாணவர் குறிப்பேட்டில் எட்டுமுறை பதிவு செய்து பெற்றோருக்கு தெரிவிக்க, அதுவரை ஆடம்பரமான வாழ்க்கை முறையில் சீராட்டப்பட்ட சிறுவனுக்கான வாய்ப்பு வசதிகளை மறுத்த பெற்றோர்கள், கண்டிக்கத் தொடங்கிய நிலையில் குடும்பம், பள்ளி இரண்டிலும் அவமதிப்புக்கு உள்ளான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு விட்டான், இந்த சிறுவன். ஆசிரியை மரணமடைவார் என்றோ, தான் கைது செய்யப்படுவோம் என்றோ தமக்குத் தெரியவில்லை என்று மாணவன் போலீசாரிடம் கூறியதாக செய்திகள் வருகின்றன. ‘10 ஆம் வகுப்புக்கு தேர்வு ஆக மாட்டாய்’ என்று ஆசிரியை கூறிய எதிர்மறையான கருத்து மாணவனை கடுமையாக பாதித்ததின் மோசமான விளைவாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆண்டுக்கு குறைந்தது ரூ.10 லட்சம் ஊதியம், கார், சொகுசு வீடுகள் வசதியுடன் வாழ்வதற்கான கல்விப் போட்டிக்கான மைதானத்தில் மாணவர்கள் பெற்றோர்களால் களம் இறக்கப்படுகிறார்கள். வகுப்பறைகள் - மதிப்பெண்கள் - கிரேடுகளில் தான் மாணவர்களின் தகுதியை நிர்ணயிக்கின்றன. குழந்தைகள் - மாணவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் பள்ளிக்குச் செல்லும் சமூகச் சூழல் இல்லாமலே போய்விட்டது. பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பியவுடன் சீருடையை கழற்றாமலே தொலைக்காட்சியின் ‘கார்ட்டூன்’களைப் பார்க்க ‘ரிமோட்டை’ கையில் எடுக்கும் குழந்தைகளைத்தான் பெரும்பான்மையான இல்லங்களில் காண முடிகிறது. குழந்தைகளின் மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டும். விடுமுறைகளை விரும்பாமல், குழந்தைகள், மாணவர்கள் பள்ளிக்குப் போவதற்கு ஆர்வம் காட்டும் கல்வி, வகுப்பறைச் சூழல் உருவாகும்போதுதான் கல்வி அமைப்பு வெற்றிப் பெற்றதாகக் கருத முடியும்.

இந்த மாணவனுக்கு இந்திப் பாடம் வரவில்லை; அதில் அவன் பெற்ற மதிப்பெண் வெறும் சுழி; ஆசிரியை அதைத்தான் கண்டித்திருக்கிறார். அதே மாணவன் ஒரு இந்திப் படத்தை பலமுறை பார்த்து, அதில் கொலை செய்யப்படும் காட்சியை மனத்தில் பதியச் செய்திருக்கிறான். இந்திப் பாடம் கசக்கிறது, இந்திப் படம் இனிக்கிறது என்ற மனநிலையை இது காட்டுகிறது. கல்வி முறையில் மாற்றத்தின் தேவையையே இது உணர்த்துகிறது. அந்த ஒரு திரைப்படமே மாணவனை குற்றவாளியாக்கிவிட்டதாகக் கூற முடியாது. மாணவனின் குற்ற மன நிலைக்கு உவப்புடையதாக அத் திரைப்படக் காட்சி அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அந்தப் படம் பார்த்த அனைவருமே கத்தியைத் தூக்கவில்லையே!

எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இளைய தலைமுறைக்கு எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்யும் கடமை பொறுப்புகளிலிருந்து அரசு முற்றாக தன்னை விடுவித்துக் கொண்டு, பொருளாதாரம் - அரசியல் - சமூகத்தை சந்தைப் பொருளாதார மைதானங்களில் தள்ளிவிட்டதுதான்!

பரம்பரை பரம்பரையாக பார்ப்பனியம் சமூகத்தில் திணித்து வைத்திருந்த குலத் தொழில்களை விட்டொழித்து, சமூக நீதி தளத்தில் காலூன்றி, முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியுள்ள இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறையை சிதைத்து, சின்னாபின்னமாக்கி “முடிந்தால் போட்டியிட்டு வா” என்ற பார்ப்பனிய கொள்கையை பன்னாட்டு நிறுவனங்களுடன கை கோர்த்துக் கொண்டு இந்திய அரசு திணித்துவிட்டது. திசை தெரியாத இலக்குகளை நோக்கி நமது இளைய சமுதாயம் அல்லாடுகிறது. அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உலக வங்கியிலும் அதிகார மய்யங்களிலும் அமைச்சகத் துறைகளிலும் உட்கார்ந்துக் கொண்டு ஆணவத்தோடு இந்த சீரழிவுகளைப் பார்த்து “அவாள்கள்” குதூகலிக்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இளைஞர்களுக்கு ‘கடவுள் பக்தி’ குறைந்ததுதான் இவற்றிற்கெல்லாம் காரணம் என்று ‘தினமணி’ பார்ப்பன ஏடு சந்தடி சாக்கில் தலையங்கம் தீட்டுகிறது. கடவுள் பக்தியின் மொத்த உருவமான சங்கராச்சாரியே கொலை வழக்கில் சிக்கி, நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருப்பது ‘தினமணி’க்கு தெரியாதா?

இன்றைய இளைஞர்களுக்குத் தேவை அறிவியல் சார்ந்த பொது ஒழுக்கம்; ஆர்வமுடன் தங்களைத் தாங்களே வடிவமைத்துக் கொள்ளத்தக்க கல்விமுறை. சக மனிதர்களின் கவலையில் பங்கேற்று, அவர்களுக்கு உதவக்கூடிய சமூகம் சார்ந்த கவலை உணர்வுகள், அதை வடிவமைக்கக் கூடிய கல்விமுறை, பொதிந்து கிடக்கும் ஆற்றல், திறமைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தக் கூடிய வகுப்பறைச் சூழல், பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் தோழமையுடன் உணர்வுகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகள், இவைகளைப் பற்றித் தான் சிந்திக்க வேண்டுமே தவிர, கடவுள், புராணங்களின் மீது கவனத்தைத் திருப்பி மீண்டும் ‘அக்கிரகார அடிமை யுகத்துக்கு’ திருப்பிவிடத் துடிக்கக் கூடாது.

அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்க ஆட்சிகள் வராமல், வலுத்தவன் போட்டியிட்டு வெற்றிப் பெறட்டும் என்ற கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியதே அனைத்து சமூக முரண்பாடுகளுக்கும் குழப்பங்களுக்கும் அடிப்படையான காரணம். சமத்துவத்தை மறுத்து, சமூகத்தை ஏற்றத் தாழ்வு அடுக்குகளுக்குள் திணித்து, முடிந்தால் முன்னேறிப் பார் என்று சவால் விடும் பார்ப்பனிய கொள்கையே இன்றைய ஆட்சிகளின் கல்விக் கொள்கையாக பொருளாதாரக் கொள்கையாகியிருக்கிறது. அவை உருவாக்கும் சமூக முரண்பாடுகள், சீரழிவுகளின் தொடர்ச்சியாகவே கல்வி அமைப்பும் மாறி நிற்பதுதான், இந்த அவலங்களுக்குக் காரணம்.

Pin It