தமிழ்நாட்டில் சாதி-மத மறுப்புத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. அகமண முறையில் இறுக்கமாக நிலவி வரும் சாதி அமைப்பு, மெல்ல மெல்ல உடைபடத் தொடங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பெரியார் இயக்கம் தொடங்கி வைத்த சாதி எதிர்ப்பு மற்றும் கல்வி உரிமைப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே இதை கருத வேண்டும். நகர்ப்புறத்தில் குறிப்பாக சென்னையில் சாதி-மத மறுப்பு திருமணங்கள் அதிகரித்துள்ளன. வேகமாக மாறி வரும் இந்த சமூகப் போக்கு சமூக செயல்பாட்டாளர்களிடையே வியப்பையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி யிருக்கிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (பிப்.14) எழுதியுள்ளது. அந்நாளேடு வெளியிட்டுள்ள செய்தி:

2010-2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 77,000 திருமணங்கள் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருமணப் பதிவு அலுவலக தகவல் தெரிவிக்கிறது. இதில் சிறப்புதிருமணப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் 7,601. மதம் கடந்து நடக்கும் திருமணங்களே இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. மொத்த திருமணப் பதிவுகளில் 10 சதவீதம் மதம் கடந்த திருமணங்களாக நடந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் கட்டாய திருமணப் பதிவு சட்டம் கொண்டு வரப்பட்டது. பல சாதி மறுப்புத் திருமணங்கள் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இந்து திருமண சட்டத்தின் கீழும், சாதி மறுப்பு திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களில் சாதி குறித்து பலரும் குறிப்பிடாத நிலையில் சாதி மறுப்பு திருமணங்கள் பற்றிய சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் சாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரித்து வருவது உண்மை என்கிறார், ஒரு மூத்த அதிகாரி. 2011-12 இல் முதல் 3 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட மதம் கடந்த திருமணங்கள் 2969. அதற்கு முந்தைய ஆண்டு அதே காலகட்டத்தில் நிகழ்ந்த மத மறுப்பு திருமணங்களைவிட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

சென்னையில் 20-11-2012 இல் இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் 52,303.

இதில் மதம் கடந்து சிறப்பு திருமணப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை 5716.

சென்னையில் தமிழ்நாடு கட்டாய திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் 30,141.

முதல் 3 மாதங்களில் இந்து திருமண சட்டததின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் 24,351. இதில் மதங்களைக் கடந்த சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவானவை 2949.

தமிழ்நாடு கட்டாய திருமண சட்டத்தின் கீழ் பதிவானவை 14,557.

இவை சென்னையைத்தழுவிய புள்ளி விவரங்கள்.

Pin It