இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு போன்று இரட்டை வாழ்விடங்களாக பிரிந்து கிடக்கும் ‘ஊர் - சேரி’ப் பிளவுக்கு எதிராக கழகம் கள  இறங்குகிறது. இது குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை:

திராவிட இயக்க நூற்றாண்டில் சாதியக் கட்டமைப்புகளுக்கு எதிரான பெரியார் திராவிடர் கழகம் பரப்புரைப் பயணம்.

“... நம்மவர்கள் தங்களுக்கு சூத்திரப் பட்டமும், தீண்டாதார், பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப்பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமேயாகும். ஏனெனில் எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் சூத்திரப் பட்டமும், பஞ்சமப் பட்டமும் தானே எடுத்து தன் தலையில் சூட்டிக் கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை.

இந்தியாவில் இந்துமதம் உள்ளவரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போக மாட்டார்கள். அதுபோலவே இந்துமத வேதமும், சாஸ்திரமும், இராமாயண பாரதமும், பெரிய புராணம், சிவபுராணம், திருவிளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ள வரையில் சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்து விடுவது என்பது முடியவே முடியாது...”- பெரியார், ‘குடிஅரசு’ 25.10.1931

சாதி அடிப்படையில் மனிதர்களை இழிவுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கி, உரிமைகளைப் பறிக்கும் தீண்டாமைக் கொடுமைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயிர்த் துடிப்போடு செயல் பட்டுக் கொண்டிருப்பதை சான்றுகளுடன் பட்டிய லிட்டு பல போராட்டங்களை நாம் முன்னெடுத் துள்ளோம்.

முதல் கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டைக் குவளை மற்றும் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து 2007 ஆம் ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று பரப்புரைப் பயணத்தைத் தொடங்கினோம். சாதி ஆதிக்க வாதிகளால் தாக்கப்பட்டோம்.

இரட்டைக் குவளை மற்றும் தீண்டாமைக் கொடுமைகளால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வரும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் 80 கிராமங் களில் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரப் புரைப் பயணத்தை நடத்தினோம்.  தேநீர்க் கடை களில் ‘இரட்டைக் குவளைகளை உடைப்போம்’ என்ற முழக்கத்துடன் களமிறங்கிய பெரியார் திராவி டர் கழகம் இரட்டைக் குவளைகளை வைத்திருந்த கடைகளின் பட்டியலைத் தயாரித்து கழக ஏடான “புரட்சிப் பெரியார் முழக்க”த்தில் வெளியிட்டு அரசின் கவனத்திற்குக் கொண்டுச் சென்றது. காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் நாள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இரட்டைக் குவளைகள் இருந்த கடைகள் முற்றுகையிடப்பட்டன.  நூற்றுக்கணக்கான தோழர்கள் கைதானார்கள்.

1957 ஆம் ஆண்டு பெரியாரின் ஆணைப்படி சாதியை ஒழிக்க அரசியல் சட்டத்தையே கொளுத்தி 10000க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகிய நாளான நவம்பர் 26 ஆம் நாளில் 2007 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கிராமம் கிராமமாக நுழைந்து இரட்டைக் குவளைகளை உடைத்தெறிந்தனர். நூற்றுக்கணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

நம்பியூரில் தாழ்த்தப்பட்டோருக்கு திருமண மண்டபங்களில் அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து களம் கண்டு வெற்றிப் பெற்றோம். கோவையில் அஞ்சல் நிலையத் தீண்டாமையை எதிர்த்து களமிறங்கிப் போராடினோம்.

திருச்சியில் கிறிஸ்தவர்களின் இரட்டைச் சுடுகாட்டையும், தமிழ்நாடு முழுவதும் அரசே கட்டியிருக்கும் இரட்டைச் சுடுகாடுகளையும் எதிர்த்து 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாளில் இருந்துமே 14 ஆம் நாள் வரை ஜாதி - தீண்டாமைக்கு எதிராக ஒரு மாத பரப்புரைப் பயணத்தை நடத்தினோம். இரட்டைச் சுடுகாடுகள் போன்ற பல தீண்டாமைக் கொடுமைகள் பற்றி விரிவான தகவல்களைக் கொடுத்தும் செயல்படாத தீண்டாமை ஒழிப்புக் காவல் துறை அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை 2010 அக்டோபர் 2 ஆம் நாள் திருச்சியில் நடத்தினோம்.

இரட்டைக் குவளைகள் - இரட்டைச் சுடுகாடு கள் - தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்க மறுக்கும் மண்டபங்கள் - கோவில்கள் - முடிதிருத்தகங்கள் - உணவகங்கள் என ஆய்வுக் குழுக்கள் அமைத்து தேடித் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து இதுவரை போராடி னோம். இந்த ஆண்டில், தேடி அலைய வேண்டிய அவசியமோ, புலனாய்வுக் குழுக்கள் அமைத்து நிரூ பிக்க வேண்டிய தேவையோ இல்லாமல் தமிழ்நாட் டின் அனைத்து கிராமங்களிலும் நீங்காமல் நிலவி வரும் ஊர் - சேரி என்ற இரட்டை வாழ்விடத் தீண்டாமையை எதிர்த்தும் - அனைத்து வகையான சாதியக் கட்டமைப்புகளை எதிர்த்தும் களமிறங்க உள்ளோம்.

தமிழ்ப் பேரரசன் என்று புகழப்படும் இராஜராஜ சோழன் காலத்தில்தான் தமிழ்நாட்டில் ஊர் - சேரி என்ற இரட்டை வாழ்விடங்கள் உறுதியாக்கப்பட்ட தாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த இராஜராஜன் காலத்திற்குப் பிறகு எத்தனையோ தமிழ் மன்னர்களும், தெலுங்கு மன்னர்களும், இஸ்லாமிய மன்னர்களும், பிரிட்டிஷ், பிரெஞ்சு மன்னர்களும் இந்த நாட்டை ஆண்டிருந்தாலும் சேரித் தீண்டாமையை அகற்ற யாரும் முன்வரவில்லை.

மிக மிகப் பழைமையான - கிராமப் பாரம்பரியம், கிராமப் பண்பாடு என்று சொல்லத்தக்க அளவில் உள்ள சேரித் தீண்டாமையும், இன்னும் பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளும், இன்று வரை சராசரி மனிதனையோ, மனித உரிமையில் அக்கறையுள்ள எவரையுமோ கூனிக் குறுக வைக்கவில்லை. முற்போக்கு சிந்தனையாளர்களிடமேகூட செயல் அளவில் இல்லாவிட்டாலும் மனதளவில்கூட இது ஒரு பெருங் குற்றம் என்ற எண்ணம் இல்லை.

இந்தச் சூழலில் இந்து மதத்தாலும், மனுதர்மத்தாலும், சாஸ்திர - சம்பிரதாயங்களாலும் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இந்த தீண்டாமைக் கொடுமைகளைத் தமது பண்பாடாக, கடைபிடிக்க வேண்டிய சம்பிரதாயமாக, வாழ்வியல் நெறியாக, சாதாரண இயல்பான விஷயமாக கருதிக் கொண்டுள்ள மக்களிடம் ஊர் - சேரி என்ற இரட்டை வாழ்விடத் தீண்டாமையையும், இரட்டைக் குவளைகள் - இரட்டைச் சுடுகாடுகள் - இரட்டை வழிபாட்டிடங்கள் - இரட்டை உணவகங்கள் என அனைத்து வகையான தீண்டாமைக் கொடுமைகளுக்கும் காரணம் என்ன? அகற்ற வேண்டிய அவசியம் என்ன? அழிக்கும் வழி என்ன? என்பவற்றை விரிவாக விளக்க பெரியார் திராவிடர் கழகம் பயணத்தைத் தொடங்குகிறது.

தமிழர் சமுதாய முன்னேற்றத்திற்காக திராவிடர் இயக்கம் ஆற்றிய பெரும் பணிகளை இளந்தலை முறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய சூழலில், திராவிடர் இயக்க நூற்றாண்டில், திராவிட இயக் கங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை நோக்கியும் புறப்படுகிறது பெரியார் திராவிடர் கழகம்.

சாதி எதிர்ப்புக் களத்தில் தன் உயிரை ஈந்த மாவீரன் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14 ஆம் நாளில் பெரியாரின் பணி தொடங்குகிறது. சாதி எதிர்ப்புப் போராளி மேலவளவு முருகேசன் நினைவிடம் வழியாக, சாதிப் போராளி செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் புரட்சிக் கவிஞர் பிறந்த ஏப்ரல் 29 ஆம் நாளில் பயணம் நிறைவடைகிறது.

பெரியார் 1922 ஆம் ஆண்டில் “மனுதர்ம சாஸ்திரத்தையும், இராமாயணத்தையும் எரிக்க வேண்டும்” என்று முழங்கிய திருப்பூரில் பயணத்தின் நோக் கத்தை விளக்கியும், தீண்டாமைக் கொடுமைகளை அகற்றுவதற்கு அரசு ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பயணத்தின் இறுதி நாளில்  முடிவுகளை எடுப்போம்; பயணம் வெற்றிப் பெற கழகத் தோழர்கள் முனைந்து ஏற்பாடுகள் செய்து பயணக் குழுவினருக்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் - என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு தீண்டப்படாதவனின் நிலைமை யூதனின் நிலைமையைவிட மிக மிக மோசமானது; பரிதாபத்திலும் பரிதாபத்திற்குரியது. யூதனுக்கு ஏற்பட்டுள்ள அவலங்கள் அவனே உருவாக்கிக் கொண்டவை. ஆனால், தீண்டப்படாதவனுக்கு ஏற்பட்டள்ள துன்ப, துயரங்களோ அப்படிப்பட்டவை அல்ல; அவற்றிலும் கொடுமையினும் கொடுமையானவை. இந்து மதத்தின் திட்டமிட்ட சதியே இதற்கெல்லாம் காரணம், நாகரிகமற்ற, காட்மிராண்டித்தனமான, முரட்டுத்தனமான வன்முறையைவிடவும் அதிக குரூரங்களை விளைவிக்க வல்லது, இந்த தீண்டாமை எனும் சாபக்கேடு.”   - அம்பேத்கர், தொகுதி 17, பக். 9

Pin It