இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, போர் முடிந்த பிறகு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை, கடந்த 13 ஆம் தேதி அய்.நா.வின் அறிக்கையாக சமர்ப்பித்தது. இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் இவை:

சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் 9வது பிரிவு, “எந்த ஒரு நபரையும் சட்ட விரோதக் காவலிலோ, கைது செய்தோ, அடையாளம் தெரியாத ரகசிய இடத்திலோ தடுத்து வைக்கக் கூடாது” என்று திட்டவட்டமாக கூறுகிறது. இது சர்வதேச சட்டமாக ஏற்கப்பட்டுள்ளது. எல்லா அரசு களையும் இது கட்டுப்படுத்தும்; சாக்கு போக்குகள் எதையும் கூறி அரசு இந்த பிரகடனத்திலிருந்து விலகி நிற்க முடியாது.

ஆனால், சட்ட விரோதமாக பல்வேறு அடக்கு முறை சட்டங்களின் கீழ் காவலில் தடுத்து வைப்பது சிறீலங்காவில் தொடர் கதையாகும். 1971 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டில் அசர நிலை பிரகடனம் அமுலில் இருந்தது. போருக்குப் பிறகு 2011 ஆக. 30 ஆம் தேதி தான் இது விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், ‘பயங்கரவாத தடுப்புச் சட்டம்’ தொடர்ந்து அமுலில் உள்ளது. அவசர நிலை பிரகடனத்திலுள்ள பல்வேறு கடுமையான சட்டப் பிரிவுகள் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் மீதான தடையும் நீடிக்கிறது. புலிகளின் ஆதர வாளர்கள் என்ற சந்தேகத்தினால், ஆயிரக்கணக்கில் சட்ட விரோத காவலில் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர். அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. வழக்கு விசாரணையும் இல்லை. பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் காவலில் வைத்த பிறகு விடுதலை செய்யப்பட்டவர்கள் புலனாய்வுத் துறையில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். காவல் நிலையத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும். தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சிவில் நிர்வாகம் இராணுவத்திடமே உள்ளது. (உணவுப் பொருள் வினியோகம், மருத்துவமனை கண்காணிப்பு, குறிப்பாக அலைபேசிகளுக்கு சிம்கார்டு வாங்குதல்; அலைபேசியைப் பயன்படுத்த முன் பணம் செலுத்து வதற்கே ராணுவத்தினரிடம் தான் செல்ல வேண்டும் - ஆர்) தொடர்ந்து மனித உரிமை மீறல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிறப்பு அதிரடிப் படை இலங்கை முழுதும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீதே மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றன.

1.             2009 மே மாதத்தில் கொழும்பில் உள்ள மனித உரிமைகள் மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் அதிகாரியாக பணியாற்றிய ஸ்டீபன் சுந்தர்ராஜ், ராணுவ உடை தரிந்திருந்த சிலரால் கடத்தப் பட்டு, கொழும்பில் மூன்று மாதம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். இப்போது காவல் நிலையத்திலும் அவர் இல்லை. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. சட்ட விரோத மாகக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போது, அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது. (மே 7, 2009) நீதிமன்றத்திலிருந்து தனது மனைவி யுடன், தமது வழக்கறிஞரின் ‘மோட்டார் பைக் கில்’ வந்த சுந்தர்ராஜை உளவுப் பிரிவினர் பின் தொடர்ந்தனர். நண்பர் ஒருவர் வீட்டில் இருந்த குழந்தைகளை அழைத்துச் செல்லும் நோக்கத் தோடு வந்து கொண்டிருந்தபோது, வெள்ளை நிற கார் ஒன்று வழி மறித்தது. மோட்டார் பைக்கில் இருந்த சுந்தர்ராஜை துப்பாக்கி முனையில் மிரட்டி, இழுத்துத் தள்ளி, காரில் ஏற்றிப் பறந்தனர். மோட்டார் பைக்கில் பின் தொடராமல் சாவியையும் பறித்துக் கொண்டனர்.

2. சட்ட விரோத காவலை எதிர்ப்பவர்கள் தாக்கப் படுகிறார்கள்; அவர்களும் காவலில் தடுத்து வைக்கப்படுகின்றனர். 2011 டிசம்பர் 9 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் காரணமின்றி கைது செய்து காவலில் வைக்கப்பட்டோரின் குடும்பத்தில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய பேரணி ஒன்றுக்கு திட்டமிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த இரண்டு செயல்பாட் டாளர்கள் பேரணிக்கு செல்லும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கடத்தப்பட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரிய வில்லை.

3.             ‘ஆம்னஸ்ட்டி இன்டர் நேஷனல்’ (சர்வதேச பொது மன்னிப்பு சபை) அமைப்புக்கு கிடைத்த புகார்களிலிருந்து கீழ் வரும் உண்மைகள் கண்டறியப்பட்டன.  கைது செய்வதற்கான ஆணை எதுவுமின்றி சாதாரண உடையில் அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று, ரகசிய இடங்களில் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படு கிறார்கள். தங்களைக் கடத்தி வந்தது காவல் துறையா, இராணுவமா, அதிரடிப் படையா, யார் என்பதுகூட, தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு தெரிவதில்லை. கைது செய்த அதிகாரிகள் பெயரும் தெரிவதில்லை.

4. தேடப்படுவோரின் குடும்ப உறுப்பினர்கள், துன்புறுத்தப்படுகிறார்கள். அலைக்கழிக்கப்படு கிறார்கள். அவர்கள் பகுதியிலேயே தடுத்து வைக்கப்படுவதும் நிகழ்கிறது.

5. எதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளோம் என்பதே பலருக்கும் தெரியாது. எவ்வளவு காலம் காவலில் இருப்பார்கள் என்பதும் தெரியாது.  நெடும் தொலைவிலுள்ள இவர்களின் குடும்பத்தினருக்கு எந்த சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்த எந்த தகவலும் தெரிவதில்லை.

6. குடும்பத்தினரை சந்திக்கவும் அனுமதிப்பதில்லை. காவலில் தடுத்து வைக்கப்படும் இடங்களும் அவ்வப்போது மாற்றப்படுகின்றன.

7. பல மாதங்கள், வாரங்கள் வரை கைது செய்யப் பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் பெறும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. விசாரணையில் அடைத்து வைக்கப்படும்போது தங்களுக்கு வழக்கறிஞர் உதவிகோரும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவே கைதான வர்களில் சிலர்  நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

8. தங்கள் கைதை எதிர்த்து நீதிமன்றம் செல்வதற்குக் கூட அபூர்வமாகவே அனுமதி வழங்கப்படுகிறது. அப்படியே நீதிமன்றம் போக அனுமதித்தாலும் நீதிமன்ற நடைமுறைகள் கைதுக்கு ஒப்புதல் வழங்குவதாகவே உள்ளன.

9. காவலில் வைக்கப்பட்டவர்கள் மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கடுமையாக நடத்தப்படுகிறார்கள். கொடூரமாகத் தாக்கப்படு கிறார்கள். ராணுவம் அரசுக்கு ஆதரவாக செயல்படும் குழுவினர், சிறைக் கைதிகள், சிறைக் காவலர்கள் எல்லோரும் இணைந்து கைது செய்தவர்களை அவமதிப்பதும் இழிவாகப் பேசுவதும் தொடருகிறது.

10. விடுவிப்பதற்கு ராணுவமும் போலீசும் கையூட்டு கேட்கிறது.

11. விடுவிக்கப்படும் தனி நபர்கள் தொடர்ந்து ராணுவத்தால் கண்காணிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் மீண்டும் கைது செய்யப்படுகிறார் கள். தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை களை வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டப்படுகிறார்கள். இலங்கைக்கு வெளியே வேறு நாட்டிலிருந்து ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனலை’ தொடர்பு கொண்டு பேசும் அனை வருமே, இதனால், இலங்கையில் தங்கள் குடும்பத் தினர், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அஞ்சு கிறார்கள்.

12. பூசா தடுப்பு மய்யத்திலிருந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப் பட்டிருந்தவர்களில் 118 பேர் 2011 மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டு கைதிகளை விடுதலை செய்து விட்டதாக அரசு பெரிய விளம்பரங்களை செய்தது. உண்மையில் விடுதலை செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்ட அவர்களை மீண்டும் பூந்தோட்டம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு போய் இரண்டு ஆண்டுகள் வெளியே வர முடியாத ‘அவசரகால’ப் பிரிவு சட்டத்தின் கீழ் அடைத்து விட்டனர். வழக்குப் பதிவு செய்யாமல், நீதிமன்ற விசாரணையும் இன்றி, அவர்கள் இப்போதும் முகாமுக்குள்ளே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். (தடுப்புக் காவலில் வைக்கப்படும் இடங்களுக்கு ‘முகாம்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளன.)

13.           2011 மே மாதத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பற்றிய தகவல்களைக் கேட்டு ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ இலங்கையின் சிறைத் துறை ஆணையருக்கு கடிதம் எழுதியது; இதுவரை பதில் இல்லை.

14.           2011 ஆகஸ்ட் இறுதியில் இலங்கை அவசர நிலை பிரகடனத்தை நீக்கம் செய்தது. நீக்கம் செய்த, 24 மணி நேரத்துக்குள் அதிபர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திலேயே அவசர நிலை பிரகடனத்திலுள்ள பிரிவுகளை இணைத்து அறிவித்தார்.

15. ஆனால், இலங்கையின் அவசரகால சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் செப்.1, 2011-க்குப் பிறகு (அந்தச் சட்டம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு) என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. (இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அரசு அவசர நிலையை நிறுத்தி விட்டதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. - ஆர்) சர்வதேச மனித உரிமை சமூகத்துக்கு விடை தெரியாத உள்ளத்தை அழுத்தும் பிரச்னையாக இது இருக்கிறது. ஊடகங்கள் வழக்கறிஞர்கள் வழியாகக் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சி தருகின்றன. அவர்களை விடுதலை செய்வதாக அல்லது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், அதைச் செய்ய வில்லை. அவர்கள் அரசின் ரகசியப் பிடியில் சிக்கிக் கிடக்கிறார்கள். தடுப்புக் காவலில் உள்ளவர்கள் பற்றி எந்தப் பதிவுகளும் அரசிடம் இல்லை.

16. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் காவலில் வைக்கப்பட்டவர்கள் அதிகபட்ச தண்டனைக் காலம் முடிந்த பிறகு பயங்கரவாத புலனாய்வு விசாரணைத் துறைக்குக் கொண்டு செல்லப் பட்டு, தடுப்பு முகாம்களில் வைக்கப்படுகிறார்கள்.

17. தடுப்புக் காவலில் வைப்பதற்கு இலங்கை அரசு ‘புனர் வாழ்வு’ என்று பெயர் சூட்டியிருக்கிறது. ராணுவத்திடம் சரணடைவதை தாமாக விரும்பி சரணடைந்தவர்கள் என்று கூறுகிறது. மயில் வாகனம், வினோதலிங்கம், 2009 இல் போர் முடிந்தவுடன் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, 2012 ஜனவரி வரை 3 ஆண்டுகள் புலனாய்வுத் துறை விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார். ஜனவரியில் நீதிபதி முன் நிறுத்தப்பட்டார். எவ்வளவு காலம் “புனர் வாழ்வு” (காவல்) மய்யத்தில் இருக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டதற்கு அதை முடிவு செய்யும் அதிகாரம், புனர் வாழ்வுத் துறையிடம் தான் உள்ளது என்று நீதிபதி கூறி விட்டார். இலங்கை அரசியல் சட்டம், சட்ட விரோத காவல், சித்திரவதை, மனித விரோத அடக்கு முறைகள் போன்றவை கடுமையான குற்றம் என்று தெளிவாகக் கூறு கிறது. ஆனால், இந்த சட்டங்கள் செயல்படாமல் முடக்கப்பட்டுவிட்டது.

18. இலங்கை ராணுவம் மக்களுக்கு எதிராக செயல் படுவதை விமர்சித்த, இலங்கை பத்திரிகையாளர் ஜெ.எஸ். திசநாயகம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்று நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. தன்னிடம் கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் என்று ஜெ.எஸ். திசநாயகம் கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. உலகம் முழுதுமிருந்தும் கண்டனம் வெடித்ததால், அவரக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார்.

(தொடரும்)

Pin It