2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி இந்தியாவில் கழிப்பறை இல்லாத வீடுகள் 49.8 சதவீதம் திறந்த வெளியிலேயே தான் மலம் கழிக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, 63.2 சதவீதம் வீடுகளில் தொலைபேசி இணைப்பு இருக் கிறது. இதில் 52.3 சதவீதம் செல்பேசி இணைப்புள்ள வீடுகள். அநேகமாக மொத்த மக்கள் தொகையில் பாதியளவுக்கு தொலைக்காட்சி பெட்டிகளும் வீடுகளில் இருக்கின்றன. ஆனால், தொலைக்காட்சி, தொலைபேசியைவிட முக்கியமானது கழிப்பறைகள் தான் என்பது குறித்து, இந்த இந்து பார்ப்பனிய சமூகமோ அதை மூளையில் திணித்துக் கொண்டு நடக்கும் ஆட்சிகளோ சிந்தித்தனவா?

இதைத்தான், மத்திய கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், செவியில் அரையும்படி கூறினார். இந்த நாட்டில் கழிப்பறைகளைவிட கோயில்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று! உடனே, பார்ப்பனர்களும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சிவசேனை கூட்டமும், ஜெய்ராம் ரமேசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிப் புறப்பட்டுவிட்டன. மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக அமைச்சர் மீது பா.ஜ.க. பேச்சாளர் ராஜீவ் பிரதாப் ருட்டி பாய்ந்துள்ளார். ஜெய்ராம் ரமேசின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி யிருக்கிறது. பால்தாக்கரே, ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார். சங் பரிவாரங்கள், ஜெய்ராம் ரமேஷ் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளன. இவ்வளவு நடந்த பிறகும், காங்கிரஸ் கட்சியோ, இந்தப் பிரச்சினையிலிருந்து தன்னை முழுமையாக ஒதுக்கிக் கொண்டு விலகி நிற்கிறது.

மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக எந்த மூலையிலிருந்தாவது சிறு முனகல் எழுந்தாலே போதும், உடனே ஓடிச் சென்று அதைச் சரி செய்ய அரசியல் கட்சிகள் துடிக்கின்றன. ரஷ்யாவிலே பகவத் கீதைக்கு தடை என்றால், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, அதை இந்தியாவுக்கு எதிரான சர்வதேசப் பிரச்சினையாக்கி, ரஷ்ய தூதுவரையே அழைத்துக் கண்டிக்கிறார். ஆனால், கழிப்பறைகள் இல்லாத ஒரு சமுதாயமாகவும் பொது இடங்களிலும் வெட்டவெளியிலும் மலம்கழிக்கும் ஒரு சமூகமாகவும் இந்த ஆண்டவன் அவதரித்த புண்ணிய பூமி நாறிக் கிடப்பது பற்றி எவருக்குமே வெட்கமில்லை.

கழிப்பறைகள் போதுமானதாக இல்லாத காரணத்தால் சுகாதாரக் கேடுகள் உருவாகி அதன் காரணமாக நிகழும் மரணங்களாலும் (குறிப்பாக குழந்தைகள் மரணம்), பரவும் நோய்களாலும், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவதாலும் ஆண்டுதோறும் இந்தியாவில் ஏற்படும் பொருளாதார இழப்பு, ரூ.24,000 கோடி என்று (அதாவது தனி நபர் வருவாயில் 6.4 சதவீதம்) சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட உலக வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது.

சமூக சுகாதாரத்தையே சீரழித்தது இந்து பார்ப்பனியம்தான்! பூஜை அறைகள் கட்டப்பட வேண்டும் என்பதில் கவலையாக இருக்கும் இந்த சமூகம், கழிப்பறைகள் பற்றி கவலைப்படுவதே இல்லை. வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்படும் வீடுகளில் கழிப்பறைகளுக்கு இடமில்லை. ‘இந்து’ கடவுள்களுக்கு பெரிய பெரிய வீடுகள் (கோயில்கள்) உண்டு. ஆனால், கழிப்பறைகள் கட்டுவது ‘ஆகமத்துக்கு’ எதிரானது. இத்தனைக்கும் இந்துக் கடவுள்களுக்கு தான், மணி ஓசையுடன் ‘உணவுப் படையல்கள்’ நடக்கின்றன. நவீன கழிப்பறைகள் இல்லாத வீடுகளோ, திருமண மண்டபங்களோ, அரங்குகளோ இருக்கக் கூடாது என்று வலியுறுத்தும் சட்டம், பக்தர்கள் கூடும் கடவுள்களின் வீடுகளுக்கு கழிப்பறைகள் ஏன் இல்லை என்ற கேள்வியை எழுப்ப முடியாது. கேட்டால், ஆகமத்தின் சட்டம் இப்படித்தான். இங்கே ஆட்சிகளின் அரசுகளின் சட்டங்களுக்கு இடமில்லை என்று பார்ப்பனர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள். நேராக உச்சநீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டி, தடையாணைகளும் வாங்கி விடுவார்கள்.

கோயில்களைச் சுற்றி வட்டமிட்டுவரும் இந்த நாற்றமெடுத்த பார்ப்பனிய பண்பாடுதான் இந்த மக்களின் பண்பாடாகவும் மாற்றப்பட்டது. எனவே கழிவறை இல்லாத ஆண்டவன் வீடுகளைப் போலவே மக்களும் தங்கள் வீடுகளில் ஆண்டவனுக்கு அறை ஒதுக்கீடு செய்துவிட்டு, திறந்தவெளியைக் கழிப்பறை யாக்கிக் கொண்டார்கள்.

கையிலே ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக் கொண்டு, பூணூலை காதில் சொறுகிக் கொண்டு திறந்தவெளியை கழிப்பறையாக்குவது பார்ப்பனக் கலாச்சாரம். ஜெயேந்திரன் போன்ற கிரிமினல் சங்கராச்சாரிகள்கூட தாங்கள் கைது செய்யப்பட்ட போது ‘வாழை இலை’யை இந்த ‘புண்ணிய கைங்கர்யத்துக்குப்’ பயன்படுத்திய செய்தி வந்தது.

ஊர்தோறும் தெருதோறும் கோயில்களைக் கட்டி ‘புண்ணியம்’ தேடிக் கொள்ளும் இந்த சமுதாயம், கழிப்பறைகளைக் கட்டினால் அது சமுதாயத்துக்குப் பயன்படுமே! என்று ஏன் சிந்திக்க மறுக்கிறது?

இந்த அர்த்தமுள்ள கேள்வியை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எழுப்பியதே குற்றமா?

‘மதத்தைப் புண்படுத்துகிறது’ என்று ஓலமிட்டுப் பயனில்லை. சமூக அவமதிப்பு என்பது அதைவிட முக்கியம். சமூகத்தைப் புண்படுத்தலாம்; ஆனால், மதத்தை - பார்ப்பன ஆதிக்கத்தை புண்படுத்தும் உரிமை இந்த பூமியில் எவருக்கும் இல்லை என்பதே ‘மனு சாஸ்திரம்’. அந்த மனுசாஸ்திரத்தின் மனப்போக்கே ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பிலும் புதைந்து கிடக்கிறது!

Pin It