ஜாதி வெறியர்களை எதிர்த்து கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் நேரடியாக களமிறங்கியது

ஜாதி கலப்பு நிகழ்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக பேசி வருகிற கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை சார்பாக, 14.10.2012 அன்று கோவை இராமநாதபுரம் எஸ்.என்.அரங்கில், ஜாதி மறுப்பு திருமண எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நடத்துவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இது போன்ற ஜாதி வெறி பரப்புரைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான அனைத்துக் கட்சி அவசர ஆலோசனைக் கூட்டம், திராவிடர் விடுதலைக் கழக, கோவை மாநகர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. முற்போக்கு, பெரியாரிய, தலித்திய அமைப்புகள் பலவும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை சார்பாக நடைபெறவிருக்கும் கூட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு மனு அளிப்பது எனவும், தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அரங்க கூட்டம் என்பதால் நீதிமன்றத்தில் தடை கோர முடியாது என்று கருதிய தோழர்கள், மாவட்ட கூடுதல் நீதிபதியிடமும், காவல் துறை ஆணையரிடமும் கூட்டத்தை தடை செய்ய கோரி புகார் தெரிவித்தனர். 14.10.2012 அன்று மாலை அந்த அரங்கிற்கு எதிரில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஜாதி ஒழிப்புப் பரப்புரைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, காவல்துறையில் அதற்கான அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

ஏற்கனவே சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக கோவை மாவட்ட அமைப்பாளர் அ.ப.சிவா, சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு இது அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது என்று 4.10.2012 அன்று சூலூர் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார். அதில், சாதி மறுப்பு திருமணங்களை வலியுறுத்தி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும், தமிழக அரசின் சாதி மறுப்பு திருமண ஊக்குவிப்பு திட்டங்களின் நோக்கங்களுக்கும் எதிராக கொங்கு வேளாளர் பேரவையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதால், அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பும் மனுவில் இணைக்கப்பட்டிருந்தது. (புகார் மனு ஏற்பு எண்.2705) தொடர்ந்து 10.10.2012 அன்று கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் அவர்களிடமும் மாவட்ட ஆட்சியர் கருணாகரன் அவர்களிடமும் சாதி மறுப்பு கலப்பு திருமண எதிர்ப்பு உறுதியேற்பு நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி, கழக கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன், காவல் ஆணையரையும், மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து மனு அளித்தார். இவ்வளவுக்குப் பிறகும், நிகழ்ச்சி தடை செய்யப்படாததால் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை நிகழ்ச்சி நடக்கும் எஸ்.என்.அரங்கத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துமாறு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் 14.10.2012 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணியளவில், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை நடத்தும் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களின் கூட்டம் நடக்கவிருந்த எஸ்.என். அரங்கத்திற்கு எதிரில், கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விசயன் தலைமையில் திரண்டு, தோழர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் சட்டத்திற்கு எதிராக, கலப்பு திருமணத்தை எதிர்க்கும் ஜாதி வெறியர்களைக் கைது செய்! சாதி வெறியை தூண்டும் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை அமைப்பை தடை செய்! ஜாதி வெறியர்களை அடக்கி வை! முதலான ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இராமநாதபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

72 ஜாதி வெறியர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்தக் கூட்டம் விரைவாக முடிக்கப்பட்டது. கோவை மாவட்ட தலைவர் வெள்ளமடை நாகராசு, மாநகர செயலாளர் ஜெயந்த், மாநகர அமைப்பாளர் நேரு தாசு, மாவட்ட துணைத் தலைவர் நிர்மல்குமார், சு.க.ப.க. மாவட்ட செயலாளர் அனுபட்டி பிரகாசு, பல்லடம் சு.வடிவேல், பெரிய நாய்க்கம் பாளையம் மோகன்ராசு, உடுமலை செந்தில்குமார் உள்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, சுமார் 30 தோழர்கள் கைது செய்யப்பட்டு, புளியங்குளம் புனித அந்தோணியர் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். கோவை பூலே கல்வி மைய தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்ட தோழர்களை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார். மாலையில் அனைவரும்  விடுதலை செய்யப்பட்டனர். ஜாதி மறுப்பு திருமண உறுதி ஏற்பு பரப்புரைகளை கோவை மண்டலம் முழுவதும் நடத்துவதற்கென முயற்சிகளில் தோழர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Pin It