களமிறங்கினர் ஈரோடு கழகத் தோழர்கள்!

ஈரோடு மாவட்ட கழகத் தோழர்கள் உடனடியாக களமிறங்கி, கொடுமுடியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விநாயகன் கோயில் குடமுழுக்கை தடுத்து நிறுத்தினர்.

14.6.2012 அன்று காலை 6 மணிக்கு கொடுமுடி சாலைப்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் விநாயகனுக்கு கோவில் கட்டி குடமுழுக்கு நடத்துவதாக இருந்தது. இந்தச் செய்தி கழகத் தோழர்களுக்கு 13.6.2012 மதியம் கிடைத்தது. உடனே களமிறங்கிய தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் ரத்தின சாமி தலைமையிலான தோழர்கள் சசிக்குமார், மோகன் மற்றும் பாண்டியன் ஆகியோர் அன்று மாலையே கொடுமுடி காவல் நிலையத்தில், அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதத்தைக் குறிப்பிடும் சின்னங்களோ, கோவில்களோ, கடவுளர் பொம்மை களோ இருக்கக் கூடாது என்ற அரசாணையை சுட்டிக்காட்டி இந்த கும்பாபிஷேகத்தை நிறுத்தக் கோரி புகார் அளித்தனர்.

காவல் நிலையத்தில் புகார் மனுவை வாங்க மறுத்த காவல் துறையினர் இந்த மனுவை மாவட்ட காவல்துறைக்குத்தான் அனுப்ப வேண்டும். மேலும், இவ்வாறு கடைசி நேரத்தில் வந்து புகார் தருகிறீர்களே என்றனர். மேலதிகாரிக்கு அனுப்புவது உங்கள் வேலை. இப்போதுதான் தகவல் கிடைத்தது என்றனர் கழகத் தோழர்கள். நாளை நடக்க இருக்கும் கும்பாபிஷேகத்தை தடுக்காவிட்டால் நாங்கள் தடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

வேறு வழியில்லாத காவல் துறையினர் இரவோடு இரவாக யாகக் குண்டம், பந்தல் போன்றவற்றை அகற்றி, அங்கிருந்த பார்ப்பனர்களையும் விரட்டினர். முறைகேடாக அரசு விதிகளுக்குப் புறம்பாக நடக்க இருந்த கும்பாபிஷேகம் ஈரோடு கழகத் தோழர்களின் சீரிய முயற்சியால் தடுக்கப்பட்டது.

அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களோ சிலைகளோ இருக்கக் கூடாது என்ற அரசாணை பொது மக்களுக்கும் குறிப்பாக அரசு அலுவலர் களுக்கேகூட தெரியாமல் இருக்கும் நிலையைப் போக்க கொடுமுடி சாலைப் புதூரில் 18.6.2012 அன்று மாலை 4 மணிக்கு மக்கள் கவன ஈர்ப்புப் பொதுக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இதனிடையே இப்பிரச்சாரத்தைத் தடுக்க காவல்துறை முயற்சிகளை மேற்கொண்டது. அதனைத் தகர்த்தெறிந்து தோழர்களின் தளராத முயற்சியால் 18.6.2012 அன்று மக்கள் கவன ஈர்ப்புக் கூட்டம் வெற்றிகரமாக நடந்தது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் இராம.இளங்கோவன், மாவட்டத் தலைவர் நாத்திகசோதி, தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் ரத்தினசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி பொறுப்பாளர் ஆறுமுகம், பா.ம.க. மாவட்டச் செயலாளர் வடிவேல், தி.மு.க. மாநிலப் பொறுப்பாளர்கள் பரமத்தி சண்முகம், இளஞ்செழியன், கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் சேதுபதி, ஆதித் தமிழர் பேரவைப் பொறுப்பாளர் வீரகோபால், வீரமுருகு ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக கொடுமுடி பாண்டியன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சென்னிமலை நாத்திகர் விழாவின் மூலம் பெரியார் கொள்கைகள் பால் ஈர்க்கப்பட்ட புதிய தோழர்கள், சென்னிமலை செல்வராசு தலைமையில் கலந்து கொண்டனர்.

இதன் தொடர் நிகழ்வாக, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அருகே நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் கோவிலை விரிவாக்கம் செய்வதைக் கண்டித்தும் ஈரோடு சென்னிமலை ரோட்டில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து முறைகேடாக கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு போக்குவரத்துக் கழகப் பணிமனையிலிருந்து முறைகேடாக மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தடுக்கக் கோரியும் கோவை மண்டல காவல்துறை ஆணையர் ஜெயராமிடம் கழகத் தோழர்கள் மனு அளித்துள்ளார்.

கொடுமுடி நகப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை இடிக்கும் போராட்டத்தில் கழகத் தோழர்கள் பெருவாரியாகக் கலந்து கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.    

Pin It