4.6.2012 அன்று மாலை 6 மணிக்கு, தஞ்சை மாவட்டம் மன்னை பந்தலடியில், கழகம் சார்பாக, பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் இயக்க நூற்றாண்டில் சாதீய வாழ்வியலை எதிர்த்து நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்கக் கூட்டமாய் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம், சுயமரியாதை சுடரொளி அப்பர் சாமி நினைவாக அமைக்கப்பட்ட மேடையில், பள்ளத்தூர் நாவலரசன் இசைக் குழுவினரின் பாடல் களோடு துவங்கியது. இந்தக் கலைக் குழுவினரோடு இணைந்து சமர்பாகுமரன் சில பாடல்களைப் பாடினார். ஒரத்தநாடு ஒன்றிய கழக செயலாளர் சிவசுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார்.

இக் கூட்டத்திற்கு மன்னை நகர செயலாளர் காளிதாசு தலைமை உரையாற்றினார். திருச்சி புதியவன், சோலை மாரியப்பன், தமிழக மக்கள் புரட்சிக் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோரை தொடர்ந்து, தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் அரங்க. குணசேகரன் அரிய உரையை ஆற்றி, நாங்களும் எங்களோடு பல அமைப்புகளும் சேர்ந்து இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி தருவோம் என்ற ஆதரவு உரையையும் ஆற்றினார்.

இறுதியாக நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில், “இது திராவிடர் இயக்க நூற்றாண்டு. பார்ப்பனர்களை தவிர்த்து பார்ப்பனரல்லாத அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி, பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த இழிவுகள், பார்ப்பன பண்பாடு நம் மீது சுமத்தி யிருந்த இழிவுகளைத் துடைப்பதற்கு, அதிலிருந்து இந்த சமுதாயம் மீள்வதற்கான பெரும் போராட்டத்தை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டு, ஒரு நீண்ட காலம் நடந்தும் வந்திருக்கிறது. அதன் சமுதாய பிரிவுகள் தொடர்ந்து அந்த எண்ணத்தோடு இருந்தும், அரசியல் பிரிவுகள் ஆற்றிவிட்ட சில இழுக்குகளுக்காக ஒட்டு மொத்த திராவிடர் இயக்கத்தையும் விமர்சனம் செய்ய சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதைப் பற்றி இங்கு பலர் விளக்கிப் பேசியிருப்பதால் நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். இந்த திராவிடர் இயக்கம் தோன்றா மல் இருந்திருக்குமேயானால், இவர்கள் தங்களை தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. இந்த திராவிடர் இயக்கம் தோன்றுகிற வரை, இவர்கள் சூத்திரர்களாக - பஞ்சமர்களாகத் தான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்கள். இந்த இயக்கம் தோன்றி போராடி பெற்றுத் தந்த உரிமை யால் தான், தங்களை தமிழர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ள முடிகிறது என்பதை இவர்கள் முதலில் உணர வேண்டும்” என்று பேசினார்.

இந்த ஜாதி இழிவுகளுக்கு ஆட்படாதவர்கள் எவருமே இல்லை என்பதை விளக்குவதற்காக, முதல்வர்களாக இருந்த ஓமந்தூர் ராமசாமி, டாக்டர் சுப்பராயன், மேயராக இருந்த சர். பிட்டி. தியாகராயர், நகராட்சித் தலைவரின் (பெரியாரின்) தந்தையாகவும், பெரிய செல்வந்தராகவும் இருந்த வெங்கட்டர் போன்றவர்கள் பார்ப்பனர்களால் எப்படி இழிவுபடுத்தப்பட்டார்கள் என்பதையெல்லாம் விளக்கிப் பேசிய கொளத்தூர் மணி, பிசிராந்தையார் என்ற நாடகத்தைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதியுள்ளார். அதில் ஒரு உரையாடல் வருகிறது. அரசரும் அமைச்சரும் ஆலமரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, மரத்தின் மேல் இருந்த ஒரு பறவை எச்சமிட்டுவிடுகிறது. அது அரசரின் தோள்மீது விழுகிறது. அரசர் எரிச்சலோடு மேலே பார்க்கிறார். அப்போது அமைச்சர் சொல்வார்... “அரசே இது ஆலின் குற்றமன்று ஆலின் மர நிழலில் அண்டிய பறவை செய்த குற்றம்” என்று. இந்த திராவிடர் இயக்கம் என்ற ஆலமரத்தின் நிழலில் அண்டிய சிலர் செய்தது குற்றமாக இருக்கலாம். ஆனால், அதற்காக ஒட்டு மொத்த இயக்கத்தின் மீது வைக்கின்ற விமர்சனமாக, நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த காளான்கள் எல்லாம் பேசத் தொடங்கிவிட்டன. அது அவர்களின் புரியாத தன்மை மட்டுமல்ல, திமிரான போக்கு என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கூறி திராவிடர் இயக்கம் தோன்றிய காரணங்களையும், மனுதர்ம எரிப்புப் போராட்டம் ஏன் என்பதையும் விளக்கி விரிவாக உரையாற்றினார்.

Pin It