ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு - மனுதர்ம எரிப்புப் போராட்டம் விளக்கப் பரப்புரைப் பயணம் 23.6.2012 முதல் திருவள்ளூர் - வேலூர் - திரு வண்ணாமலை - விழுப்புரம்  காஞ்சி புரம் ஆகிய அய்ந்து மாவட்டங்களில் 10 நாட்கள் எழுச்சி நடைபோட்டு வருகிறது. சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் இந்த பரப்புரையை ஒழுங்கு செய்துள்ளது. பயணத்தின் துவக்கப் பொதுக் கூட்டம் 22.6.2012 அன்று சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பயணத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினர். சிற்பி ராசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியும், சமர்பா எழுச்சி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இக் கூட்டத்தை மயிலைப் பகுதி கழகத் தோழர்கள்   பா.ஜான், இராவணன், சுகுமாறன், மனோகரன், மாரிமுத்து, முருகன், வாகனராஜ், பார்த்திபன், நாத்திகன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மறுநாள் 23.6.2012 அன்று காலை 10 மணியளவில் கு.அன்புதனசேகர், வழக்கறிஞர் சு.குமாரதேவன் ஆகி யோரின் உரையைத் தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் பரப்புரைப் பயண பேருந்தை இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்திலிருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து புது வண்ணாரப் பேட்டை பெரியார் பூங்கா அருகில் முதல் பரப்புரை நடைபெற்றது.

முன்னதாக திருவொற்றியூர் கழகம் சார்பில் அந்தப் பகுதித் தோழர்கள் டார்வின் தாசன், ஏசுக் குமார், துரை, முனுசாமி, செல்வம், சத்யா, டில்லி பாபு, கலையரசன் ஆகியோர் குழுவினருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து காலை 11.45 மணியளவில் திருவொற்றியூர் பேருந்து  நிலையம் அருகில் பரப்புரை நடந்தது.

அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் தெய்வ மணி பேசினார். மதியம் 1 மணியளவில் திருவொற்றியூரில் நான்கு முனைச் சாலை அருகில் என்பீல்டு தொழிற் சங்கத்தைச் சார்ந்த ஆதித் தமிழன் சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் களுக்கு மதிய உணவை மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் துரை வழங்கினார். மாலை 3.30 மணியளவில் மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகிலும், 4.30 மணிக்கு பொன்னேரி பேருந்து நிலையம் அருகிலும், இரவு 8 மணியளவில் திருவள்ளூர் மார்க்கெட் அருகிலும், இரவு 9 மணியளவில் திருவள்ளூர் இரயிலடி அருகிலும் பரப்புரை நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் அஸ்வத்தாமன் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.

பயணத்தில் தோழர்கள் இரா. உமா பதி, சு. மருதமூர்த்தி, செ. செந்தில், ராஜன், மனோகர், சுகுமார், முழக்கம் உமாபதி, அசோக் ஆகியோர் பங் கேற்றனர். அனைத்து இடங்களிலும் சிற்பி ராசன் மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சி நடத்தினார். தோழர் நாத்திகன், சாதி ஒழிப்புப் பாடல் களைப் பாடினார். கு. அன்பு தனசேகர், ந. அய்யனார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இரண்டாம் நாள்

24.6.2012 அன்று காலை 9 மணி யளவில் கடம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் பரப்புரைப் பயணம் துவங்கியது. காலை 10.30 மணிக்கு பேரம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகிலும் 11.30 மணியளவில் தக்கோலம் நான்கு முனை ரோடு அருகிலும், மதியம் 12.30 மணியளவில் அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகிலும் பரப்புரை நடந்தது. நிகழ்ச்சிகளில் மார்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த தமிழேந்தி சிறப்புரை நிகழ்த்தினார். மோகன் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்தார். மாலை 3.30 மணியளவில் தமிழேந்தி இல்லத்தில் தோழர்களுக்கு தேனீர் வழங்கப்பட்டது. மாலை 5 மணியளவில் நெமிலி பெரியார் சிலை அருகிலும், மாலை 6 மணியளவில் பணப்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலும், மாலை 7 மணியளவில் மேலப்புலம்புதூர் கிராமத்திலும், இரவு 8 மணியளவில் ஆற்காடு பேருந்து நிலையத்திலும் பரப்புரை நடைபெற்றது.

பயணத்தில் செ. அஸ்வத்தாமன், 69 காரணை சு.பரசுராமன், ஏ.சீனிவாசன், கீற்று இரமேசு, பாலமுரளிகிருஷ்ணா, வேலூர் மாவட்ட அமைப்பாளர் திலீபன், சென்னை திலீபன் ஆகியோர் பங்கேற்றனர்.

மூன்றாம் நாள்

25.6.2012 திங்கள் காலை 9 மணியளவில் வேலூர் பேருந்து நிலையம் அருகில் பரப்புரை நடைபெற்றது. காலை 10.30 மணியளவில் காட்பாடி பேருந்து நிறுத்தம் அருகிலும், 11.30 மணியளவில் லித்தேரி பேருந்து நிறுத்தம் அருகிலும், 12 மணியளவில் கே.வி.குப்பம் பேருந்து நிறுத்தம் அருகிலும் பரப்புரை நடைபெற்றது.

கே.வி.குப்பத்தில் பரப்புரை முடித்துவிட்டு குடியாத்தம் செல்லும் வழியில் தேவரிஷக் குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த 300-க்கு மேற்பட்ட பொது மக்கள் “நூறு நாள் வேலை உறுதித் திட்ட”த்தில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதைக் கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவரை எதிர்த்து ஆலமரம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த பரப்புரைப் பயணக் குழுவினர் போராட்டக்காரர்களிடம் போராட்டத்தைப் பற்றி விசாரித்தபோது கழகத் தோழர்களிடம், “ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், அரசு 100 நாள் வேலைத் திட்டத்தில் அரசு அறிவித்துள்ள ரூ.119-க்கு பதிலாக ரூ.50 மட்டுமே ஒரு நாள் கூலியாக தருகிறார். அதோடு இல்லாமல் 100 நாள் வேலைத் திட்டப் பணிகளுடன் தனது சொந்த தோட்ட வேலைகளான பருத்தி, மஞ்சள் விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்துகிறார்” என்றும் கூறினர்.

இந்நிலையில் காவல்துறையினர் போராட வந்த தொழிலாளர்களை விரட்டியடிக்க முயன்றனர். அதனைத் தடுத்து நிறுத்திய நமது கழகத் தோழர்கள் போராடும் மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினர். கழகத் தோழர்களின் போராட்டத்தை அறிந்த காவல்துறையினர், அதற்குப் பிறகு, வேறு வழியின்றி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பஞ்சாயத்துத் தலைவரையும் நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இனிமேல் உரிய கூலி வழங்கப்படும் என்றும், முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். போராட்டத்தில் பங்கேற்ற கழகத் தோழர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து பரப்புரைக்கு குழு பயணத்தை தொடர்ந்தது.

மாலை 5.30 மணியளவில் பள்ளி கொண்டா பேருந்து நிறுத்தம் அருகிலும், மாலை 5.30 மணியளவில் அணைக்கட்டு பேருந்து நிறுத்தம் அருகிலும், மாலை 7.30 மணியளவில் கணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகிலும், 8.30 மணியளவில் கண்ணமங்கலம் பேருந்து நிலையம் அருகிலும் பரப்புரை நடைபெற்றது.

நிகழ்வில் குடியாத்தம் சிவா, மோகன், செந்தில், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த கோதண்டபாணி மாலை உணவு வழங்கினார். குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கழக ஆதரவாளர் மதிவாணன், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்ற வாசகம் பொருந்திய புகைப்படத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

பயணக்குழு தொடர்ந்து பரப்புரை இயக்கத்தை நடத்தி வருகிறது.            

பரப்புரைப் பயணத்தில்...

•                 சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் மேற்கொண்டுவரும் சாதி-தீண்டாமை எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தில் ‘அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்’ என்ற விளக்க துண்டறிக்கை பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. பலரும் துண்டறிக்கைகளை ஆர்வத்துடன் படிக்கிறார்கள். சிலர் துண்டறிக்கைகளை வாங்கவே மறுத்துவிடுகிறார்கள்.

•                 சிற்பி ராசனின் ‘மந்திரமா தந்திரமா’ பகுத்தறிவு விளக்கத்தைத் தொடர்ந்து, சாதி தீண்டாமைக்கு எதிரான கருத்துக்களை தோழர்கள் பேசும்போது பலரும் அமைதியாக கேட்கிறார்கள். வெளிப்படையாக கருத்துக் கூறாமல், சிலர் மவுனம் சாதிக்கிறார்கள். நிகழ்வுகளில் நேரில் பாராட்டுவோரும் உண்டு.

•                 தோழர்கள் மக்களிடம் உண்டியல் மூலம் நிதி திரட்டுகிறார்கள். நாள்தோறும் 3000 ரூபாய்க்கு குறையாது மக்கள் நிதியளிக்கிறார்கள்.

•                 காட்பாடி அருகே தேவரிஷி குப்பம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் நடக்கும் மோசடிகளை எதிர்த்து அமைதி வழியில் போராட வந்த மக்களை போலீசார் விரட்டியடிக்க முயன்றபோது கழகப் பயணக்குழுவினர் அந்த முயற்சியை முறியடித்து போராட்டத்தைத் தொடரச் செய்தனர்.

•                 பல ஊர்களில் கழகத்தில் சேர இளைஞர்கள், தங்கள் தொடர்பு எண், முகவரிகளை ஆர்வத்துடன் தருகிறார்கள்.

Pin It