கிராம ஊராட்சிகளில் காந்தியடிகள் சொன்னதுபோல் கிராம ராஜ்யம் வாழ்கிறதா, அம்பேத்கர் சொன்னது போல சாதி ஆதிக்க சக்திகளின் ராஜ்யம் நிலவுகிறதா என உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கேள்வி எழுப்பினார்.

திருநெல்வேலியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஏப்.28 அன்று உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியலின பிரதிநிதிகளின் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. கலந்துரையாடலை துவக்கி வைத்து நீதிபதி கே. சந்துரு உரையாற்றினார். அவரது பேச்சு:

அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு தான் தீண்டாமை ஒழிப்பு. அந்த வகையில் பொதுவான வழக்கங் களை மீறி, ஒரு நீதிபதியாகிய நான் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்பது என்பது நாங்கள் எடுத்த உறுதி மொழியின் ஒரு பகுதிதான். மேலும், தற்போது எங்களுக்கு விடு முறை காலம் என்பதால் என்னுடைய பணிக்கு எந்த பங்கமும் இல்லாமல் நான் இந்த கூட்டத்தில்கலந்து கொள் கிறேன்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் விவேகானந்தர் சென்னையிலுள்ள தன்னுடைய ஆசிரியர் மூலம் உதவி பெற்று அமெரிக்காவிற்குச் சென்றார். அப்படி சென்ற அவர், தனது ஆசிரி யருக்கு எழுதிய கடிதத்தில், “இந்து மதத்தைப் பரப்ப நான் இங்கு வந்தேன். இந்தியாவில் மனிதர்கள் மனிதர்களை மனிதர்களாக நடத்துகிறார்களா?” என்று கேள்வியை எழுப்புகிறார். இது 19 ஆம் நூற்றாண்டின் சூழல் என்பதல்ல. இன்றைக்கும் இந்த நிலை இப்படியே தான் தொடர்கிறது.

ஊராட்சி மன்ற வழக்குகள் பல உயர்நீதிமன்றத்திற்கு வரும்போது, தீர்ப்புகள் பல நேரங்களில் ஊராட்சி களுக்கு எதிராக வழங்கப்படுவதை பார்க்கிறோம். காரணம், இந்த வழக்குகளை திறமையாகக் கையாள் வதற்கான வழக்குரைஞர்கள் இருப்ப தில்லை. எனவே, இந்த வழக்குகளை கையாள்வதற்கென்று பிரத்யேகமான வழக்குரைஞர்களை ஊராட்சிகள் நியமித்துக் கொள்ளலாம். ஊராட் சிகள் அதற்கான அதிகாரம் பெற்ற அமைப்புகள் தான். மேலும், ஊராட்சி மன்ற தலைவர்களும் திறம்படச் செயல்படுவதற்கான தகுதியினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோது 1930 ஆம் ஆண்டு வந்த பூனா ஒப்பந்தத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அன்றைக்கு தலித் மக்களின் இந்த கோரிக்கைக்கு எதிராக காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தபோது, டாக்டர் அம்பேத்கருக்கு இக் கட்டான ஒரு சூழல் ஏற்பட்டது. அண்ணல் காந்தியின் உயிர் என்ற உணர்ச்சிப்பூர்வமான போராட்டம் ஒரு புறம்; தலித் மக்களின் உரிமைப் போராட்டம் மறுபுறம். அந்தச் சூழலில் டாக்டர் அம்பேத்கர் எடுத்த முடிவு வரலாற்றுப் புகழ் பெற்றது. இலட்சியம் தொடரும், தற்போது இந்த கோரிக்கையினை விலக்கிக் கொள்கிறேன் என்றார். இது வரலாறு.

உண்மையான அதிகாரம் என்பது உள்ளாட்சிகளுக்கு இருக்கிறதா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும். உள்ளாட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவர முடியும். அவர்களுடைய நிதி அதிகாரத்தை இல்லாமல் செய்ய முடியும். மாவட்ட ஆட்சியாளரின் விசாரணைக்கு உட்படுத்த முடியும் எனும்போது, தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களின் நிலை இன்னும் மோசம்.

இத்தகைய உள்ளாட்சி அதிகாரம் பற்றிய கருத்து மோதலும் காந்தியடி களுக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் இடையில் இருந்தது. காந்தி, கிராமம் வாழ்கிறது என்றும், கிராம ராஜ்யம் பற்றியும் பேசுகிறார். டாக்டர் அம் பேத்கர், கிராமங்களில் ஆதிக்கச் சக்திகளின் அதிகாரம் இருக்கும் வரையில், கிராமங்கள் வாழ்வதற்கான வாய்ப்பில்லை என்பதோடு, கிராமங் கள் நசுக்கப்படுகின்றன என்கிறார். இதுபோன்ற விவாதங்கள் இன்றைக்கு நம்மிடையே இல்லை. அதற்கு பொருள் இன்று இந்த சூழல் என்பதே இல்லை என்பதல்ல. இதற்கான விவாதங்கள் மக்களிடையே இல்லை. கருத்து மோதல்கள் இல்லை. இப்படிப் பட்ட விவாதங்களை நாம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். சில அடிப்படை யான கருத்து மோதல்களை உருவாக்க வேண்டும்.

தலித்துகளுக்கென்று இந்த அரசாங்கம் விசேஷமாக நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால்,அவை முறையாக தலித் மக்களுக்குச் சென்று சேர்வ தில்லை. வரையறுக்கப்பட்ட அதி காரத்திற்குள் உள்ளாட்சி தலைவர் களால் சுதந்திரமாக செயல்பட முடிவ தில்லை. பல கிராமங்களில் செயல்  படும் சுய நிதிக் கல்லூரிகள் ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் என்று வரி கட்ட வேண்டும். ஆனால், தடை யாணை வாங்கி வைத்துக் கொண்டு இந்த வரி யினை கட்டுவதில்லை. அரசாங்கம் பஞ்சாயத்துகளுக்கு வரவேண்டிய நிதி பற்றி போதிய அக்கறை செலுத்துவ தில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஒரு ஊராட்சியில் ஒரு நூலகம் கட்ட தீர்மானிக்கப்படுகிறது. அந்த கிராம சபை அலுவலகத்திற்குப் பக்கத்தில் ஒரு ஜாதி இந்துவின் வீடு உள்ளது. அவர் நூலகம் இங்கு இயங் கினால், தலித் மக்கள் இந்த தெருவுக் குள் வருவார்கள் என்பதால், ஊராட் சியை அணுகி ஒரு புறம்போக்கு நிலத்தில் நூலகத்தை அமைப்பது என்ற தீர்மானத்தை இயற்றச் செய் கிறார். அதன் பிறகு, அந்தத் தீர் மானத்தின் அடிப்படையில், நூல கத்தை புறம்போக்கு நிலத்தில் கட்ட வேண்டும் என்று கோரி அவரே வழக்கு தொடர்கிறார். இந்த வழக்கின் உள்ளடக்கம் தீண்டாமை என்பது தான். ஆனால், தீண்டாமை வெளியே தெரியாமல் வழக்கு ஜோடிக்கப்படு கிறது. இதில் உள்ளது ஆதிக்கச்சாதி வெறி என்பதாகும். இங்கே பெரும் பான்மையினரின் முடிவு என்பதோ, தீர்மானம் என்பதோ பிரச்சனையல்ல. சமூகநீதி அமலாக்கப்பட வேண்டும் என்பதுதான். அந்த அடிப்படையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.

பிறக்கும்போதும் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த உலகம் இது. இறப்பிற்குப் பிறகும் சாதி ரீதியான சுடுகாடுகளும், இடுகாடுகளும் இங்குள்ளது. “சமரசம் உலாவும் இடமே” என்ற சினிமா பாடல் அனைவரும் கேட்டிருப் பீர்கள். அதனால்தான், ஒவ்வொரு பஞ்சாயத்திலும், ஒவ்வொரு மாநக ராட்சியிலும், ஒவ்வொரு ஊராட்சி யிலும்  தனித் தனி சுடுகாடு இருக்கக் கூடாது. முதலில் வருபவர்களுக்கு முதல் இடம் நிலை இருக்க வேணடும். இறப்பின் போதாவது சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும்.

- நன்றி: ‘தீக்கதிர்’ 29.4.2012

Pin It