கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து:

வால்மீகி இராமாயணத்தை சீனிவாச அய்யங்கார் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சி.ஆர். நரசிம்ம ஆச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்தார். அதில்... எண்பது மைல் அகலம், எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இராமன் பாலம் கட்டியதாகத்தான் வால்மீகி இராமாயணம் சொல்கிறது. இங்கிருந்து இலங்கைக்கு முப்பது மைல் தூரம் தான். எனவே எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இங்கு பாலம் கட்டியிருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் கூட இராமாயணப்படி இராமன் கட்டியது மிதக்கும் பாலம் தானே தவிர, நிலம் வரைக்கும் இருந்த பாலம் அல்ல. அது மட்டும் அல்லாமல் இராமாயணக் கதைப்படி இராமன் திரும்பி வந்தவுடன், இதன் வழியாக அரக்கர்கள் வந்துவிடுவார்கள் எனக் கருதி, அம்பு எய்தி பாலத்தை அழித்து விடுகிறான்.

நாம் வைக்கும் வாதங்கள் என்னவென்றால்.... சூர்ப்பனகை இங்கு வருகிறாள், அவள் தாக்கப்பட்ட பிறகு, இராவணன் இங்கு வருகிறான். சூர்ப்பனகை, இராவணன், அனுமன் ஆகிய இவர்கள் அனைவரும் ராமன் பாலம் கட்டும் முன்பே பாலம் இல்லாமலேயே போகிறார்கள் - வருகிறார்கள் என்கிறபோது, கடவுள் அவதாரம்(?) இராமனுக்கு மட்டும் எதற்குப் பாலம்?

இராமாயணக் கதைப்படி, லட்சுமணன் மற்றும் போர் வீரர்கள் எல்லாம் இறந்து விடுகிறார்கள். அவர்களை பிழைக்க வைப்பதற்காக இந்தியாவி லுள்ள சஞ்சீவி வேர் தேவைப்படுகிறது. பறந்து வந்த அனுமனுக்கு சஞ்சீவி வேர் எதுவென்று தெரியாத தால், சஞ்சீவி மலையையே தூக்கிச் சென்று விடுகிறான். அதன் மருத்துவ சக்தியால் இராமனின் படையினர் உயிர்த்தெழுந்தார்கள் என்று இராமாயணம் கூறுகிறது. மீண்டும் அந்த மலையை இங்கு கொண்டு வந்து விட்டால் இங்கு உள்ள நோய்களையெல்லாம் தீர்த்துவிடலாம் அல்லவா? எனவே இராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டும் என்று போராடுகிற இந்து முன்னணி போன்றவர்கள் எல்லாம், முதலில் அந்த சஞ்சீவி மலையை தேடி கண்டுபிடித்து அதை மீட்பதற்காக போராட்டம் நடத்தலாமே?

வலசை நீரோட்டம், இடசை நீரோட்டம் என்று சொல்வார்கள். அதாவது கடிகார முள் ஓடும் திசை, அதற்கு எதிர் திசை. கடலுக்கு அடியில் ஓடுகிற நீரோட்டங்கள் மூன்று மாதம் வலப் பக்கமாகவும், மூன்று மாதம் இடப் பக்கமாகவும் ஓடுகிறபோது இயற்கையாக ஏற்படுவது தான் மணற்திட்டு. இது உலகம் முழுவதும் பல இடங்களில் காணப்படுகிறது. முதல் மட்டம் பவளப் பாறைகளாகவும், அதற்கு மேல் சுண்ணாம்பு பாறைகளாகவும், அதற்கு மேல் மணலாகவும் மூன்று மட்டங்கள் இருப்பதாகவும், இவை நீரோட்டங்களால் இயற்கையாக உருவானவை என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஹோமோ சேப்பியன்ஸ் என்று சொல்லப்படுகிற முழு மனித இனம் தோன்றியது இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால். இந்தியாவிற்கு மனித இனம் வந்தது ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான். இங்கு கிடைக்கிற அடையாளங்களை வைத்துப் பார்க்கிறபோது, ஒரு லட்சம் ஆண்டு களுக்கு முன்பு இந்தியாவில் மனித இனமே இல்லை. இராமாயணம் நடந்ததாக சொல்லப்படுவது, பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு.

பெரியார் எழுதிய இராமாயண குறிப்புகள் என்ற நூலைப் படிக்கும்போது, பொய்யான கதை என்பதை தெரிந்து கொள்ளலாம். இராமாயணத்தில் பல இடங்களில் புத்தரைப் பற்றி பேசப்படுகிறது. புத்தனும் நாத்திகனும் ஒன்று; எச்சரிக்கையாக இரு. புத்தர்கள் திருடர்கள் அவர்களிடம் ஜாக்கிரதையாக இரு என்று ஜாபாலி என்ற அமைச்சன் சொன்னதாகக்கூட அதில் வருகிறது. அதேபோல் மற்றொன்று. அனுமன் இலங்கைக்கு பறந்து செல்லும்போது கீழே பார்க்கிறார். புத்த விகாரங்கள் போல் கட்டப்பட்ட அரண்மனைகள் தெரிகிறதாம். புத்தர் வரலாற்று மனிதர். ஆய்வுகள் நடத்தப்பட் டிருக்கிறது. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்.இன்றைய கணக்குப்படி 2556 ஆண்டுகள். ஆகவே வால்மீகி இராமாயணமும்கூட புத்தமதம் தோன்றிய பிறகு எழுதப்பட்டவைதான். எனவே இராமாயணம் பழைய கதையும்கூட அல்ல.

இராமாயணம் போன்ற கதைகள் உலகம் முழுவதும் இருக்கின்றது. ரோம் நாட்டில் ஹோமர் எழுதிய ஒடிசி என்ற  கதையும் இராமாயணம் போன்றதே. பெண்ணை கடத்திச் செல்வது, காப்பாற்றுவது உள்பட இதே காட்சிகள் அதிகம் உள்ளது. ஆனால், ஒடிசியின் கதாநாயகன் பல பெண்களுடன் தொடர்புள்ள அயோக்கியன். இந்த கதாநாயகனை யோக்கியனாக வைத்திருக்கிறார்கள். மற்றபடி ஒரே கதை தான். இப்படிப்பட்ட உலகம் முழுவதும் உள்ள கதைகளை கொஞ்சம் மாற்றி வால்மீகி எழுதியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

சங்பரிவார கூட்டங்களுக்குள் இப்போது விவாதம் நடக்கிறது. பி.ஜே.பி. இராமர் பாலத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்கிறது. காரணம் என்னவென்றால், அயோத்தி பிரச்சினையில் இசுலாமியர்களை எதிரிகளாகக் காட்டி, (இராமனின் அரண்மனையை, இந்து கோவிலை இடித்து மசூதி கட்டியதாக) இந்துக்களை ஒன்றாக்க முடிந்தது. இராமர் பாலம் விவகாரத்தில் நமது எதிரியாகக் காட்ட யாரும் இல்லை. எனவே, நம் அரசியலுக்கு பயன்படாது, விட்டு விடலாம் என்கிறது. சச்சார் ஆணைய அறிக்கை இருக்கிறது. அதில் இசுலாமியர் களுக்கு நிறைய சலுகைகள் செய்திருக்கிறார்கள். எனவே, அந்தப் பிரச்சினையை கையில் எடுத்தால் இதைவிட கூடுதலான இலாபம் இருக்கிறது என்று ஒரு கூட்டம் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

வாஜ்பாயின் ஆதரவாளர்கள் இராமர் பாலம் விசயத்தை விட்டு விடலாம் என்கிறார்கள். அத்வானி யின் ஆதரவாளர்கள் விடக் கூடாது என்கிறார்கள். இந்தப் பிரச்சினையைப் பொருத்தவரை விசுவ இந்து பரிசத் பார்த்துக் கொள்ளும், பி.ஜே.பி. தலையிடத் தேவையில்லை என்று வி.எச்.பி.யினர் சொல் கிறார்கள். இப்படி வடநாட்டு அரசியல்வாதிகள் இதை விட்டுவிட்டாலும், தமிழ்நாட்டிலுள்ள ஜெயலலிதாவிற்கு இதைவிட்டால் வேறு பிரச்சினை இல்லை. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சச்சார் ஆணைய பிரச்சினையைப் பேசுவார்கள். ஆனால், இங்கு ஜெயலலிதாவால் இசுலாமிய எதிர்ப்பை வெளிப் படையாகப் பேச முடியாது. எனவே ஜெயலலிதா விற்கு இந்தப் பிரச்சினை தேவைப்படுகிறது.

இலங்கையைச் சுற்றி அனைத்து கப்பல்களும் போகிறபோது, கொழும்பு துறைமுகம் சென்று எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்ல வேண்டும். எனவே வணிகம் பெருகுவதற்கான வாய்ப்பு கொழும்பில் இருக்கிறது. சேது கால்வாய் திட்டம் அமைக்கப்பட்டால் கொழும்புவின் முக்கியத்துவம் குறைந்துவிடும். ஆக இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவில் இருக்கிற கைக்கூலிகளில் சிலர் நேரடியாக எதிர்க்க முடியாமல், இந்த திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள்.

தமிழ்நாடு வளர்வது பொறுக்காமலோ, இலங்கை அரசின் மறைமுக தூண்டுதலாலோ, இப்படி நடக்கிறது என்றுதான் கலைஞர் அவர்கள்கூட பேசினார்கள். புலிகளின் ஆதரவாளர் என்று சொல்லிவிடுவார்கள் என்ற காரணத்தினாலோ என்னவோ அதோடு நிறுத்திக் கொண்டார். இதை செய்கிறவர்களைப் பார்த்தால் தெரியும். இந்தத் திட்டத்திற்கு எதிராக எழுதும் ‘இந்து’ இராமிற்கு 2004 ஆம் ஆண்டு ‘லங்கா ரத்னா’ (இங்கு வழங்கும் பாரத ரத்னா போன்றது) என்ற பட்டம் இலங்கையில் வழங்கியுள்ளார்கள். இலங்கை நாட்டின் மிக உயரிய விருதை அந்நாட்டு குடிமகன் அல்லாத, இந்திய நாட்டின் குடிமகனான ‘இந்து’ இராமிற்கு வழங்கு கிறார்கள் என்றால், இவர் இலங்கைக்கு ஆற்றி யிருக்கும் சேவை எவ்வளவு இருக்கும்? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ‘இந்து’ இராம். சுப்ர மணியசாமி போன்ற இலங்கைக்கு கைக்கூலிகளாக இருப்பவர்கள் இதை எதிர்க்கிறார்கள். எனவே இந்த கோணத்திலும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

ரொமிலா தாப்பர் என்பவர் எழுதியிருக்கிறார். அதற்கு முன்பு இரவிக்குமார்கூட ஒரு கட்டுரை எழுதினார். ஆதரிப்பது எதிர்ப்பது என்பது, “சுற்றுச் சூழல் கெட்டுவிடும், சுனாமி வந்துவிடும், கடல் வளங்கள் பாதிக்கப்படும், கடல்வாழ் தாவரங்கள் அமுத்தப்படும்விடும். இப்படி ஏதேனும் காரணங்கள் இருந்தால் அதைச் சொல்லி எதிர்ப்பதில் வேண்டுமானால் நியாயம் இருக்கிறதே தவிர, இராமன் பெயரைச் சொல்லி எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை” என்று. ஆனால், அதுவும்கூட, முப்பது மைல் நீளமுள்ள மணல் திட்டில், முன்னூறு மீட்டர் மட்டுமே வெட்டவிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் பார்த்தால் ஒரு இருபது அடி  சுவரில் இரண்டு செ.மீ. அளவிற்கு துளையிடுவது போன்றது. நமது வீடுகளில் ஒயரிங் செய்ய சுவரை உடைப்பார்கள் அல்லது சுற்றுச்சுவர் கட்டும்போது இரண்டு அங்குல இடைவெளிவிட்டுக் கட்டுவார்கள். ஒப்பீட்டு அளவில் இவ்வளவுதான்.

தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டம் ஒன்று தடுக்கப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு அறிவியல் ஆதாரமற்ற ஒரு கதை காரணமாக சொல்லப்படு கிறது. சொல்லப்படுகிற கதையும் தமிழர்களைத் தாழ்த்துகிற, வடவர்களை உயர்த்துகிற, ஒரு கதை அல்லது திராவிடர்களைத் தாழ்த்துகிற, ஆரியர்களை உயர்த்துகிற ஒரு கதை. எனவே நாம் இவற்றை எதிர்க்க வேண்டியதும், இதை மக்களிடையே விளக்க வேண்டியதும் நமது கடமை ஆகும்.

நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் அளித்ததில், திட்டம் தொடங்குவதற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவிக் கிறார்களா? என்று கண்டறிய, 2004 செப்டம்பர் முதல் 2005 பிப்ரவரி வரைக்கும், ஆறு கடலோர மாவட்டங்களிலும், மூன்று சுற்றுகளாக, மொத்தம் பதினான்கு இடங்களில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. எந்த தரப்பில் இருந்தும் இதற்கு எதிர்ப்பு வரவில்லை. அப்போது இந்த திட்டத்தைக் கொண்டுவர வேண் டும் என்ற ஜெயலலிதா, இப்போது எதிர்க்கிறார்.

பெரியார் ஒரு முறை சொன்னார், “நான் தமிழ்நாடு தமிழருக்கே என்றேன். அண்ணா அவர்கள் சென்னை ராஜ்ஜியத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டார். பாதி வேலை முடிந்தது. இனி தமிழருக்கே என்று மாற்றுவது மட்டும் தான் நம் வேலை” என்று. அதுபோலவே இதுவரை ஆடம் பிரிட்ஜ் என்று சொல்லி வந்ததை இராமர் பாலம் என்று சொல்ல வைத்துவிட்டார்கள். இனி இதுபற்றி பேசுகிறவர்கள் ஆடம் ப்ரிட்ஜ் என்று சொல்லாமல், இராமர் பாலம் என்று மட்டுமே பேசுவார்கள். இது இந்துத்துவா அமைப்புகளுக்கு கிடைத்துள்ள ஒரு வெற்றிதான்.

எம்.ஆர். இராதா நடித்த நாடகத்தின் பெயர் இராமாயணம் தான். ஆதித்தனார் தனது பத்திரிகையில் அதை கீமாயணம் என்று எழுதினார். கி.சுப்ர மணியம் சட்டமன்றத்தில் பேசும்போது, கீமாயாணம் என்ற நாடகம் நடப்பதாக பேசினார். இதைக் கண்டித்து, இராதா நடிப்பது கீமாயாணம் அல்ல, அதுதான் உண்மையான இராமாயணம் என்று அப்போது பெரியார் ஒரு அறிக்கை விடுத்தார். ஆனால், இன்றளவிலும் இராதா, கீமாயணம் என்ற நாடகத்தைப் போட்டார் என்று சொல்லப்படுகிறது. பத்திரிகைகள் அப்படி ஆக்கிவிட்டன. அது போலவே இராமர் பாலம் என்று பேசப்படுவதற்கு பத்திரிகையின் பங்கும் அதிகமாக இருக்கிறது.

முதலில் பிருந்தா காரத் (சி.பி.எம்.) என்பவர், பகவான் இராமரைப் பற்றி சொல்லியிருக்கக் கூடாது என்று சொன்னார். எப்படி இமயமலை என்பது உண்மையோ, கங்கை என்பது உண்மையோ அது போல இராமர் என்பதும்  உண்மை என்று சட்ட அமைச்சர் பரத்வாஜ் (காங்கிரஸ்காரர்) பேசினார். இந்த பரத்வாஜ் தான் 1980-85 வாக்கில் சட்டத்துறை இணை அமைச்சராக இருந்தார். 1949 இல் அயோத்தியை சர்ச்சைக்குரிய பகுதி என்று அறிவித்து உள்ளே நுழையக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். 1989 இல் இராஜீவ்காந்தியின் ஆட்சியின்போதுதான் நுழைவதற்கு முதல் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு காரணமானவர்தான் பரத்வாஜ். அடுத்து சிலா பூஜை என்ற அடிக்கல் நாட்டு விழா செய்தபோது, அதற்கு அனுமதி வழங்க காரணமாயிருந்தவரும் இவர்தான்.

அம்பிகாசோனி கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் எழுதினார்கள். இராமாயணம் என்பதில் நடந்ததாக சொல்லப்படுகிற நிகழ்ச்சிகள் நடந்ததுமில்லை. அதில் வருகிற கதாபாத்திரங்கள் வாழ்ந்ததுமில்லை என்று. இப்படி சொல்வதற்கு முன்னால்கூட ஒன்று சொல்கிறார்கள். இராமாயணமும் இராமரும் இந்த இந்து சமுதாயத்தின் உணர்வுகளில் எப்படி கலந்திருப்பார்கள் என்பதை நாங்கள் அறிந்தே சொல்கிறோம். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் இராமாயணத்தின் மீது வைத்திருக்கும் மதிப்பையும், இந்துக்களின் உணர்வுகளையும் மதிக்கிறோம். ஆனால், இருக்கிற தொழில்நுட்ப அறிவியல்களைப் பயன்படுத்தி, அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, உண்மையை சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், சொல்ல வேண்டியிருக்கிறது என்று கூறினார்கள்.

தொல் பொருள் ஆய்வுத் துறையின் முன்னாள் தலைவர் சூரஜ்பன் சொல்கிறார், “அரசு, ராமன் பாலம் இருந்ததற்கு வரலாற்று ஆவணங்கள் இல்லை என்று முதலில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றிருக்கக் கூடாது. அயோத்தி பிரச்சினையின்போது வால்மீகி இராமாயணம் என்பது கி.மு. 400 இல் எழுதி முடிக்கப்பட் டிருப்பதற்குத்தான் ஆதாரங்கள் உள்ளன. 700 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் மனிதர்களே இல்லை என்று அப்போதே சொல்லியிருக்கிறேன்” என்று கூறினார். மக்களுக்கு அறிவியல் மனப்பான்மையை உண்டாக்க வேண்டும் என்று  அரசியல் சட்டம் சொல்கிறது. எனவே இந்த அரசு பின்வாங்கியதன் மூலம் அரசியல் சட்டத்துக்கு எதிராக அறிவியலை தூக்கி குப்பையில் வீசி விட்டதாகத் தான் பொருள் என்று ‘பிரண்ட்லைன்’ பத்திரிகையின் கட்டுரையாளர் எழுதுகிறார்.

இராமர் பாலம் பற்றி ஆய்வு செய்வதற்கு ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.சால் அழைத்து வரப்பட்டார். அவர் பெயர் டாக்டர் புனிஷ்த்னேஜா. விஞ்ஞான ஆய்வு மய்யத்தின் மூத்த செயலாளராகப் பணியாற்றியவர் என்றெல்லாம். வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் இவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில்அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் இவர் இது சம்பந்த மாக எந்தப் படிப்பையும் படிக்காத, ஒரு பித்த லாட்டக்காரர் என்று தெரிந்து, அவரை அடுத்த மாதம், விசுவ இந்து பரிசத் அமைப்பில் இருந்து நீக்கிவிடுகிறார்கள். இவர்தான் ஆரம்பத்தில் இராமர் பாலம் என்ற பிரச்சினையைத் துவக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(நிறைவு)

Pin It