தமிழ்நாடு மாணவர் கழகப் போராட்டம் வெற்றி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரியான டாக்டர் நல்லினி பொறியியல் கல்லூரியில் வங்கிகள் மூலமாக கல்விக்கடன் பெற்று பொறியியல் படிக்கும் மாணவர்கள் 240 பேர் உள்ளனர். இப்படி வங்கிக்கடன் பெற்ற மாணவர்கள் அனைவரும் எல்.ஐ.சியில் மணி பேக் பாலிசி என்ற பெயரிலான திட்டத்தில் 1.50 இலட்ச ருபாய் பணம்செலுத்த வேண்டும். இத்தொகையை தவணைகளில் கட்டலாம். ஆனால் அவசியம் அனைத்து மாணவர்களும் எல்.ஐ.சி மணி பேக் பாலிசி எடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் மிரட்டியது. அப்படிப் பணம் செலுத்தாவிட்டால் விடுதியி லிருந்து மாணவர்கள் வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டது. முதல் கட்டமாக 100 மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றியது.
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்காக தனியார் கல்லூரிகளில் 32000 ரூபாய்க்குமேல் செலுத்த வேண்டியதில்லை என்றும் அப்படி தனியார் கல்லூரிகள் வசூலித்தால் அக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவுறுத்தி இருந்தும் தாராபுரம் நல்லினி பொறியியல் கல்லூரி அந்த அறிவுறுத்தல்களைக் கண்டுகொள்ளவில்லை. மேலும் கல்லூரி அங்கீகாரம் பெறுவதற்கு உரிய அடிப்படை வசதிகள் எதையுமே நிர்வாகம் மாணவர்களுக்குச் செய்துதரவில்லை. உரிய கல்வித்தகுதி பெற்ற போராசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை.
இவற்றைக் கண்டித்து கடந்த 20.01.11 அன்று தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் இறங்கினர். இதனால் தாரபுரம் - பழனி சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்கு வரத்து தடைபட்டது. ஆர்.டி.ஓ, மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர், கல்லூரி நிர்வாகம் ஆகிய மூன்று தரப்பும் மாணவர்களிடம் போராட்டத்தை நிறுத்தச் சொல்லி மிரட்டினர்.
• டாக்டர் நல்லினி பொறியியல் கல்லூரியில் படிக்க வங்கியில் கல்விக் கடன் பெற்று பொறியியல் பட்டம் படிக்கும் மாணவர்களிடம் 1.50 இலட்ச ரூபாய்க்கு எல்.ஐ.சி பாலிசி கட்டச் சொல்லி மிரட்டும் கல்லூரி நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
• கல்லூரி நிர்வாகமே! அண்ணா பல்கலைக் கழகம் பொறியியல் படிப்புக்காக நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிகமாகக் கல்விக் கொள்ளை அடிக்காதே!
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் (AICTE) தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு நிர்ணயித்துள்ள விதிமுறைகளை மீறிய டாக்டர் நல்லினி பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை ரத்துசெய்!
ஆகிய முழக்கங்களை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. இதே நேரத்தில் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் கோவை பொறுப்பாளர்கள் தோழர் நேரு, சிலம்பரசன் உள்ளிட்ட பல தோழர்கள், நல்லினி பொறியியல் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிய கோவை அண்ணா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் அலுவலகம் முன்பு முற்றுகையிடச் சென்றனர். போராடச் சென்ற மாணவர்களை துணைவேந்தர் கருணாகரன் நேரில் அழைத்துப் பேசி கோரிக்கைகளின் நியாயத்தைப் புரிந்துகொண்டு உடனடியாக நல்லினி பொறியியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக ஆய்வுக் குழுவை அனுப்பி வைத்தார். எனவே சாலை மறியல் கைவிடப்பட்டது.
இரண்டு நாட்கள் கழித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் தலைமையிலான ஆய்வுக் குழு, வருவாய்த் துறை, காவல்துறை, கல்லூரி நிர்வாகம், பெரியார் தி.க, தமிழ்நாடு மாணவர் கழகம் ஆகிய அனைத்துத் தரப்பினரையும் கூட்டி அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முதல் கட்டமாக மாணவர்கள் எல்.ஐ.சி. பாலிசி கட்டத் வேண்டியதில்லை என்றும், அதற்காக விடுதியிலிருந்து வெளியேற்றப் பட்ட மாணவர்களை மீண்டும் விடுதியில் சேர்த்துக்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அடிப்படை வசதிகள் அனைத்தையும் படிப்படியாக விரைவில் செய்து தருவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. தாராபுரம் வழக்கறிஞர் குமார், திருப்பூர் இராவணன், கோபி துரை, பழனி மருதமூர்த்தி, நல்லதம்பி உள்ளிட்ட பெரியார் தி.க தோழர்கள் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.