பெரியார் இயக்கத்துக்காக உழைத்து உள்ளூர் மட்டத்தில் போராடி சாதனைகள் புரிந்த எத்தனையோ சுயமரியாதை வீரர்கள் அடையாள மின்றி புதைந்து போய்விட்டார்கள். அவர்களின் இறுதிக்கால வாழ்க்கை இரத்தக் கண்ணீர் வரவழைக் கிறது. மாற்றுப் பண்பாட்டை நோக்கி பயணித்து எதிர் நீச்சலில் வாழும் பெரியாரியலாளர்களுக்கு சோகமான இறுதிக் காலங்கள் நிகழ்ந்து விடாமல் அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் உன்னத முயற்சி தான் “கருந்திணை”.  அந்த அமைப்பு பற்றி  வெளிவந்த வெளியீட்டில் திருமங்கலக்குடி கோவிந்தராசன் என்ற கறுப்பு ‘மெழுகுவர்த்தி’யின் தொண்டுகள் விவரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியை வாசகர் களுடன் கனத்த இதயத்துடன் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பகிர்ந்து கொள்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி)

புரோகிதர் மானியம் ஒழிப்பு

ஒரு கிராமத்தில் ஒரு சலவைத் தொழிலாளரின் மகன் தானும் சலவைத் தொழிலையே மேற்கொண்டால் அந்த மகனுக்கு கிராம விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு நெல் மானியமாக வழங்கப்படும். அதுபோல் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளரின் மகன் தானும் செருப்புத் தைத்தால்தான் அந்தக் குடும்பத்துக்கு நெல் மானியம் வழங்கப்படும். ஆனால் ஒரு பார்ப்பானின் மகன் கோயிலில் மணி அடித்தாலும் அடிக்காவிட்டாலும் கலெக்டர் ஆனாலும், மந்திரி ஆனாலும் அந்த பார்ப்பனக் குடும்பத்திற்கு மட்டும் எந்த வேலையும் செய்யாமல் மானியம் வழங்கப்பட் டிருக்கிறது. அதை எதிர்த்துப் போராடி வென்றவர் தோழர் கோவிந்தராசன்.

பெரியார் சாலை

திருமங்கலக்குடி, வளைய வட்டம், சாத்தனூர் ஆகிய மூன்று கிராம பஞ்சாயத்துக்களை இணைக்கும் வகையில் தற்போது ஒரு தார்ச் சாலை போகிறது. அது அந்தக் காலத்தில் வெறும் இரண்டு அடி அகலம் கொண்ட வரப்பாக மட்டுமே இருந்திருக்கிறது. அதை 20 அடி அகலமுள்ள சாலையாக மாற்ற வேண்டுமானால் அந்த வரப்புகள் அமைந்துள்ள கோவில்களின் மடங்களின் அனுமதி வாங்க வேண்டும். மடாதிபதிகள் அனுமதிக்க மறுத்தனர். அப்பகுதியிலுள்ள பார்ப்பனர்களும் படையாச்சி களும் ஒன்று  சேர்ந்து கொண்டு சாலை வசதி கேட்டவர்களை எதிர்த்தனர். கோவிந்தராசன் தலைமையில் ஆயிரக்கணக்கான தோழர்கள் கையில் கடப்பாரை, சம்மட்டி, மண்வெட்டிகளுடன் புறப்பட்டு கோயில் நிலங்களின் வரப்புகளை உடைத்தெறிந்து 20 அடி அகல கப்பிச் சாலையை ஒரே வீச்சில் உருவாக்கினர். இதற்காக உயர்நீதிமன்றத்தில் பல தோழர்கள் வழக்குகளைச் சந்தித்தனர். இறுதியில் வென்றனர். அந்த சாலை இப்போது தார்சாலையாக மாற்றப்பட்டு பெரியார் சாலை என்ற பெயரிலும் இருக்கிறது.

தோழர் கோவிந்தராசன் அவர்களைப் பற்றியும் திராவிடர் இயக்க வரலாற்றையும் அவருடன் நேரில் பேசிய ஒரு நாளில் கிடைத்த செய்திகளில் ஒரு சில மட்டுமே இவை.மேலும் பல்வேறு தகவல்கள் தேடி பெ.தி.க.வின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களும் மீண்டும் ஒரு முறை அவரை நேரில் சந்தித்து உரையாடி வந்தனர். ஓராண்டுக்குப் பிறகு கடந்த ஜூலை 26 ஆம் நாள் தோழர்களுடன் அவரைச் சந்திக்க திருமங்கலக்குடிக்கு சென்றோம். அவரை வைத்து பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். அவரது அனுபவங்கள் இளம் தலைமுறைக்குப் பாடங்களாக வேண்டும் என்ற நோக்கில் அவரிடம் அனுமதி பெறச் சென்றோம். மிகப் பெரும் அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவர் இந்த 2009 ஆம் ஆண்டு பொங்கல் அன்று மறைந்து விட்டார் என்ற செய்தி எங்களைத் தாக்கியது. எங்களது குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதைப் போன்ற ஆழ்ந்த வருத்தத்தை அனைவரும் உணர்ந்தோம். ஒரு பெரும் ஏமாற்றம் என்ற அளவில் இருந்தோம். அதன் பிறகு அவரது மகளும் மருமகனும் சொன்ன செய்திகள்தான் எங்களுக்கு கண்ணீரை வரவழைத்தன.

அவர் மறைவுக்கு முன்பு எனக்கு எந்த மதச் சடங்கும் செய்யக் கூடாது என்றும் கழகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அவரது மருமகன் கும்பகோணத்தில் தி.க.வின் அறக் கட்டளையின் பொறுப்பில் உள்ள பெரியார் மாளிகைக்குச் சென்று அதன் பொறுப்பாளரிடம் செய்தி தெரிவித் திருக்கிறார். தலைமைக்கும் ஃபேக்ஸ் அனுப்பியுள்ளார். நீங்கள் வந்தால் தான் உடலை எடுப்போம் எனக் கூறி யுள்ளார். அந்த தி.க. பொறுப்பாளரோ தானும் வரவில்லை; எந்த முறையான பதிலும் சொல்லாமல் காலையிலிருந்து மாலை வரை அலுவலகத்திலேயே காத்துக் கிடக்க வைத்து விட்டு தனி ஆளாகவே திருப்பி அனுப்பியுள்ளார். தி.க. தலைமையிலிருந்தும் யாரும் வரவில்லை. அதனால் அடிமட்டத் தோழர்களும் வரவில்லை.

இயக்கம், இயக்கம், இயக்கம் என வாழ் நாளெல்லாம் உழைத்த அந்த போராளி - கும்ப கோணத்தில் இருந்த வசதியான தன் சொந்த வீட்டை விற்று, நிலபுலன்களை விற்று இயக்கப் பணியாற்றிய அந்தக் கடமைவீரர் - சாதி, மத பேத மற்ற சமுதாயத்தை உருவாக்க போராட்டம், காவல்துறை, நீதிமன்றம், சிறைச்சாலை என சுழன்று சுழன்று கடமையாற்றிய அந்த கருஞ்சட்டைத் தோழர் - தன் மகளிடம் பெரியார் புத்தகங்களையும், கூட்டங்களில் தான் எடுத்த குறிப்புகளையும், நைந்து போன தாள்களையும் சொத்தாகக் கொடுத்துவிட்டு, துணைவியாரையும் அனாதையாக விட்டுவிட்டு இயக்கத் தோழர்கள் எவருமே இல்லாமல் இறுதிப் பயணத்தை முடித்துள்ளார் தோழர் கோவிந்தராசன்.

மறுபடியும் அவருக்கு படத்திறப்பு விழா நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தி.க. அலுவலகத்திற்குச் சென்றுள்ளார் அவரது மருமகன். தலைவர் வீரமணிக்கு 5000 ரூபாய் வழிச் செலவு தர வேண்டும். மண்டப வாடகை, உணவு செலவு, அறை செலவு எல்லாம் சேர்ந்து 20 ஆயிரம் ரூபாய் கொண்டு வாருங்கள் நடத்தலாம் என்றார்களாம். அடுத்த வேளைக் கஞ்சிக்கு நாளெல்லாம் நெசவு நெய்ய வேண்டும் என்ற அன்றாடங்காய்ச்சி வாழ்க்கை வாழும் அவரது மகளுக்கு இது நடக்காத காரியம். தந்தையின் கடைசி ஆசையை விருப்பத்தை நிறைவேற்ற இயலாத தன் நிலையை நொந்து அவர் கண் கலங்கியபோது தோழர்கள் அனைவரும் கண்ணீர்விட்டு அழுதே விட்டோம். அவரது துணைவியாரும் எந்த ஆதரவும் இல்லாமல் எந்த பொருளாதார வரவும் இல்லாமல் வறுமையில் உள்ளார். காதும் சரியாகக் கேட்கவில்லை. மருமகன் வீட்டில் எத்தனை நாள் நிம்மதியாக வாழ முடியும்?

இவர் ஒருவரைப் பற்றித்தான் நமக்கு ஓரளவாவது தெரிந்தது. இன்னும் இதுபோல் பல தோழர்கள், போராளிகள் கவனிக்கப்படாமல் புதைந்து கிடக்கின்றனர். இளமையில் துடிப்புடன் கொள்கைப் பணியாற்றி விட்டு அளப்பரிய செயல்களைச் செய்துவிட்டு முதுமையில் வறுமையில் தன் அடையாளங்களை இழந்து கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு சாதிக்காரனிடமும் சொந்தக்காரனிடமும் மானங் கெட்டு சமரசம் செய்து கொள்ளும் கட்டாயத்தோடு இறுதிக் காலத்தை வேதனையுடன் கடத்தும் தோழர்கள் பலரை நாம் அறிவோம். அப்படிப் பட்டவர் களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். சாதியற்ற சமுதாயத்தை அவர்களால் காண முடியா விட்டாலும் சாதி கடந்த ஒரு குழுவினரோடு கொள்கைகளைப் பேசி பெரியாரியலை சாவிலும் நடைமுறைப்படுத்தும் வகையில் தமது கடைசி காலத்தை அவர்கள் அனுபவிக்க வேண்டும். அவர்களது பணிகள் நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் பாடங்களாக வேண்டும். அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அவரவரது சக்திக்கு ஏற்றபடி மீண்டும் சமுதாயப் பணிக்கு அவர்களை பயன்படுத்த வேண்டும்.

எளிய தோழர்களின் உழைப்பை மதிக்காத தி.க. தலைமையை விமர்சித்து நேரத்தை வீணாக்குவதைவிட ஏதாவது சிறிய அளவிலாவது நமது செயல்பாட்டைத் தொடங்க வேண்டும் என விரும்புகிறோம்.

(நிறைவு)

Pin It