“பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை மனிதர்கள் தான் ஏற்றுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அதை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டும் (அறங்காவலர்குழு) அங்கீகரித்து உள்ளது. மகர ஜோதி ஏற்றப்படும் பிரச்சினையில் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையில் தேவஸ்வம் போர்டு தலையிட விரும்பவில்லை. மனிதர் களால்தான் மகர ஜோதி ஏற்றப்படு கிறது என்று பிரச்சாரம் செய்யவும் தேவஸ்வம் போர்டு விரும்பவில்லை”(தினந்தந்தி பிப்.1)

- என்று திருவாங்கூர் ‘தேவஸ்வம் போர்டு’ கூட்டத்துக்குப் பிறகு அதன் தலைவர் எம். இராஜ கோபால் நாயர் செய்தியாளர்களிடம் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். மக்களிடம் உண்மையை விளக்கி அவர்களைத் திருத்த வேண்டும் என்பது இவர்களின் நோக்கமல்ல; மாறாக கேரள உயர்நீதிமன்றம் இது பற்றிய உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கண்டிப்பாக ஆணையிட்டதால், உண்மைகளை கூற வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த அச்சுதானந்தன் தலைமையில் இடதுசாரி அணியின் ஆட்சி நடக்கிறது. உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்றும், மக்களின் நம்பிக்கையில் தங்களது ஆட்சி குறுக்கிடாது என்றும், இது குறித்து எந்த விசாரணையும் தமது ஆட்சி நடத்தாது என்றும் அச்சுதானந்தன் கூறிவிட்டார்.

மூடநம்பிக்கைகளில் மக்களை மூழ்க வைத்து அவர்களை சுரண்டுவதற்கு துணை போவது தான் கேரளாவின் ‘மார்க்சியம்’ போலும். பேய், பில்லி, சூன்யம் என்பதுகூட மக்களின் நம்பிக்கைதான். அதற்காக மக்களின் நம்பிக்கை யில் தலையிட மாட்டோம் என்ற கூறி இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் நிகழும் மனித விரோதச் செயல்களை ஒரு அரசு வேடிக்கை பார்க்க முடியுமா என்று கேட்கிறோம்.

பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று பக்தர்கள் நம்புகிறார்கள் என்று அலகாபாத் நீதிமன்றம் கூறிய தீர்ப்புக்கும், கேரள மார்க்சிஸ்ட் முதல்வரின் கருத்துக்கும் எந்த வேறுபாடும் இருக்க முடியாது.

‘மகர ஜோதி புனித நட்சத்திரமல்ல; அது மனிதர்களால் ஏற்றப்படும் தீ’ என்ற உண்மையை வெளிக்கொண்டு வர 103 அய்யப்ப பக்தர்கள் மரணமடைய வேண்டியிருக்கிறது.

“கடவுள் சக்தி என்று ஒன்றுமில்லை; அது மக்களிடமிருந்து காசைப் பறிக்க நாங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒரு நிறுவனம்” என்று அறங்காவலர் குழு கூறும் காலம் ஒன்று வரத்தான் போகிறது. அந்தக் காலம் வருவதற்கு இன்னும் எத்தனை மனித உயிர்கள் பலியாக வேண்டுமோ தெரியவில்லை.

இந்த மோசடிகளை மக்களிடம் எடுத்துக் கூறி பகுத்தறிவைப் பரப்புவதற்கு பெரியார் இயக் கத்தைத் தவிர,வேறு எந்த ‘புரட்சிகர முற்போக்கு’ அமைப்புகளும் முன் வருவதில்லையே! பகுத்தறிவைக் கூடப் பரப்ப வேண்டாம்; மூடத்தனத்துக்கு துணைப் போகாமலாவது இருக்கக் கூடாதா?தனது வறுமைக்கும், சாதி இழிவுக்கும், கடவுளும் மதமும் காரணம் என்று நம்பிக் கொண்டு துன்ப துயரங்களுக்கு விரதங்களையும், பரிகாரங்களையும், தரிசனங்களையும் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிற மனிதர்களிடம், எப்படி புரட்சியையும் சமூக மாற்றத்தையும் கொண்டு வர முடியும்?  பெரியார் இயக்கம் நீண்டகாலமாக  கேட்கும் இந்தக் கேள்வியையே மீண்டும் கேட்கிறோம்!

Pin It