கருத்தியல் ரீதியாக எதையேனும் அளக்க வேண்டும் என்றால் பெரியார் எனும் அளவுகோலை கையில் எடுத்துக் கொள்கிறார்கள் தமிழகத்தின் அறிவாளிகள். பெரியார் எனும் அளவுகோல் தமிழகப் பரப்பை சரியாக அளவிடக்கூடியது. அதனை இவர்கள் தங்கள் வசதிக்கேற்ப நீட்டவும் சுருக்கவும் செய்து, தாங்கள் அளப்பதே 'அளப்பு' என நிறுவ முயற்சிக்கிறார்கள். அங்கே இங்கே என அளவிட்டுவிட்டு கடைசியாக குஷ்புவின் 'கற்பை' ஆழ, அகலத்தில் அளவிடவும் பெரியார் எனும் அளவுகோலையே கையில் எடுத்தார்கள்.

Periyarகற்பு பற்றி பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? குடும்பம் பற்றி பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? கணவன்-மனைவி உறவு பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? என 'திடுக்' கேள்விகளைக் கேட்கிறார்கள் புதுப் பெரியாரிஸ்ட்டுகளும் போலி முற்போக்காளர்களும். அவர்கள் அளப்பதை பார்க்கும்போது, மழலையர் பள்ளிக்குச் சென்று திரும்பிய குழந்தை தனது பெற்றோரைப் பார்த்து உனக்கு ஆனா, ஆவன்னா தெரியுமா? ஏ,பி,சி,டி தெரியுமா? என்று கேட்குமே, அதுபோன்ற குழந்தைத்தனம்தான் தெரிகிறது. பெரியார் எப்போது எதைப் பற்றிச் சொன்னார் என்பதை அப்போதைய காலகட்டத்திலேயே அறிந்தவர்களுக்குக்கூட இந்த புதுப் பெரியார் குழந்தைகள் பாடம் நடத்துவது நகைச்சுவை மிக்கதாக இருக்கிறது. திடுமென பெரியாரைப் படித்துவிட்டு, அது தெரியுமா இது தெரியுமா என்று கேட்பதன் மூலம் தங்கள் கையிருப்பு இன்னதென அவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். அது மட்டுமின்றி, நடிகைகளின் 'கற்பு'க்கு கவசமாக பெரியாரை முன்னிறுத்தும் பேதைமைச் செயலையும் மேற்கொள்கிறார்கள்.

ஆணின் ஒழுக்கநெறிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், பெண்கள் மட்டுமே 'விதிக்கப்பட்ட' ஒழுக்கநெறிகளுடன் வாழவேண்டும் என்றிருந்த சமூகத்தின்மீது சம்மட்டி அடி கொடுத்தவர் பெரியார். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றால் பெண்களுக்கும் அந்த சுதந்திரம் வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். இப்படிச் சொன்னதன் அர்த்தம் என்ன? ஆண் சரியாக இருந்தால் பெண்ணும் சரியாக இருப்பாள் என்பதுதான். அவன் எல்லை மீறினால், அவளும் மீறுவாள என்பதுதான். இதைத்தான் தனக்கேயுரிய துணிவுடனும் வெளிப்படையுடனும், 'கணவனைத் தவிர மற்ற ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள பெண்களுக்கு உரிமை வேண்டும்' என்பதாகப் பெரியார் சொன்னார். பெண் தன்னைத்தானே தீர்மானித்துக் கொள்ளும் திறனுடையவளாக மாறவேண்டும் என்பதுதான் தன் உட்பொருள். அப்போதுதான் ஆணைப் போல் பெண்ணும் வலிமைமிக்க பாலினமாக சமுதாயத்தில் விளங்க முடியும் என்பது பெரியாரின் முடிவு. 

பெண்ணுக்கு வகுக்கப்பட்ட ஒழுக்கநெறி ஆணுக்கு ஏன் வகுக்கப்படவில்லை? பெண்ணுக்கு மட்டும் 'கற்பு' எதற்கு? என்பதே அவரது கேள்வி. ஒரு சமுதாயம் ஒழுக்கம் மிக்கதாக இருக்கவேண்டுமென்றால் இருபாலினத்திற்கும் அது பொதுவானதாகத்தானே இருக்கவேண்டும் என அவர் கேட்டார். அதற்காக, அவர் ஒழுக்கமே வேண்டாம் என்றும் பெண்கள் எல்லோரும் திருமணத்திற்கு முன்பு கட்டாயம் உறவு வைத்துக் கொண்டே ஆக வேண்டும் என்றா சொன்னார். 'விதிக்கப்பட்ட' ஒழுக்கத்தைத்தான் அவர் எதிர்த்தாரே தவிர, சமுதாயத்தில் ஒழுக்கம் குறைந்து போக வேண்டும் சீரழிய வேண்டும் என்று அவர் எங்கே சொன்னார்?

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் பரவாயில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ் என்று உரக்கச் சொன்னவர்தானே பெரியார். ஒழுக்கத்திற்கு விளக்கம் கொடுக்க முன்வந்திருக்கும் புதுப் பெரியாரிஸ்ட்டுகள் இவையெல்லாம் பெரியாரின் வார்த்தைகளே இல்லை என்று சொல்லிவிடுவார்களோ!

கடவுள், பக்தி, மூடநம்பிக்கை இவையெல்லாவற்றையும் தகர்த்தவர் பெரியார். அவர்தானே, அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் நுழைய அனுமதி வேண்டும் என்பதற்காகப் போராடினார்? அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதன் மூலமே சூத்திரன் என்ற இழிவைத் துடைத்தெறிய முடியும் எனத் தன் இறுதி மூச்சடங்கும் வரை குரல் கொடுத்தார். கடவுள்தான் எல்லா முன்னேற்றங்களுக்கும் தடை என்றவர், அந்தக் கடவுளை வழிபாடு செய்யும் உரிமை எல்லோருக்கும் வேண்டும் என்று கோரினார் என்றால், அதன் பொருள் என்ன? கடவுள் வழிபாடு என்பது தனது கொள்கைக்கு மாறுபாடான செயல் என்றபோதும் அதனை மேற்கொள்கிறவர்களில் பெரும்பகுதியினரை ஒதுக்கிவைக்கும் ஏற்றத்தாழ்வினை சமுதாயத்தில் அனுமதிக்கமுடியாது என்பதுதான் அவரது நிலைப்பாடு. கடவுள் வழிபாடு கொண்டவர்களின் உரிமைகளை குறிப்பிட்ட சிலர் பறிக்கக்கூடாது என்பதற்காகவே அவர் போராடினார். கற்பு விஷயமும் அப்படித்தானே! அதன் மீது நம்பிக்கை கொண்டு அதன்படி வாழ்கின்ற பெண்கள் மிகுந்திருக்கும் தமிழகத்தில், மேட்டுக்குடி பெண்களில் ஒரு சிலரின் பழக்கவழக்கத்தை மட்டும் வைத்து ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொத்தாம்பொதுவான கருத்தை திணிப்பது எப்படி நியாயமாகும்?

கற்பு குறித்து பேச ஒரு பெண்ணுக்கு உரிமையில்லையா என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் சிலர். பெண் எது பற்றி பேசவும் உரிமையுண்டு. படைப்பாற்றல் மிக்க பெண்கள் தங்கள் உடற்கூறுகளை முன்னிலைப்படுத்திப் பேசுகிறார்கள். அது அவர்களின் உரிமை. அதுபோல கற்பு பற்றி பேசியவரும் தன்னை முன்னிலைப்படுத்தி முழு உண்மையையும் பேசியிருந்தால் அவரது உரிமையை மட்டுமல்ல, அதில் உள்ள உண்மையை துணிச்சலாக வெளிப்படுத்தியதற்கு பாராட்டலாம். அவரோ தனது பார்வையை ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தின்மீதும் திணிக்கும் வன்முறையை மேற்கொண்டார். அதன் எதிர்விளைவுகளை கண்டு பயங்கொண்டார். கண்ணீர்விட்டார். மன்னிப்பு கோரினார். தமிழகத்தைவிட்டுவிட்டு நான் எங்கே போவேன் என்று கதறினார். 

Kushbooஅவர் தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்பதில் நமக்கும் உடன்பாடில்லை. ஆனால், பெரியாரைத் திடுமென முன்னிறுத்தும் அறிவு மேதைகள், "அவரையா வெளியேறச் சொல்வது? கோகோ கோலாவையும் பெப்சியையும்தானே வெளியேறச் சொல்ல வேண்டும்" என்கிறார்கள். கோக்கும் பெப்சியும் வெளியேற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், பெரியார் எனும் அளவுகோலை கையில் எடுத்தவர்கள், அவரது 'மரண சாசனம்' எனப்படும் கடைசிப் பேருரையில்கூட வடவர் ஆதிக்கம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பதை வசதியாக மறைத்துவிட்டார்களே அது ஏன்? "உன்மொழி வேறு. என் மொழி வேறு. உன்உடை வேறு, என் உடை வேறு. உன் உணவு வேறு, என் உணவு வேறு. உன் பழக்க வழக்கம் வேறு. உனக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? நீ உன் நாட்டுக்குப் போ" என்றுதானே பெரியார் சொன்னார். இதை ஏன் எந்த அறிவு மேதையும் குறிப்பிடவில்லை. பெரியார் எனும் அளவுகோலை தங்கள் வசதிக்கேற்ப நீட்டியும் சுருக்கியும் அளப்பதன் மர்மம் என்ன?

இவையெல்லாம் போகட்டும். பெரியார் ஏன் பெரியார் எனப்பட்டார். எத்தனையோ சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். ஆனால், தனது கருத்துக்களை செயல்படுத்த இயக்கம் கண்டு தனது உயிர்மூச்சு அடங்கும்வரை அதனை வழிநடத்தியவர் பெரியார். தனது கருத்துக்களை முதலில் தன்னிலிருந்து செயல்படுத்தத் தொடங்குவார். அடுத்து, தன் குடும்பத்திலிருந்து செயல்படுத்துவார். அது நாகம்மையாராக இருந்தாலும் மணியம்மையாராக இருந்தாலும் அவர்களையும் தன் கருத்துக்களை ஏற்கச் செய்து அதனை கடைப்பிடிக்கச் செய்வார். அதன்பிறகுதான் அதனை தன் தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் நடைமுறைக்குக் கொண்டு வருவார். பெரியாரை முழுமையாக படிததவர்கள் இதனை அறிவார்கள், தான் சொல்வதை தன்னிலிருந்தும் தன் குடும்பத்திலிருந்தும் தொடங்குவதால்தான் அவர் பெரியார் என நிலைப்பெற்றார்.

'கற்பு'க்கு பெரியாரை கவசமாக்குகிறவர்கள் இதையும்கூட மறந்துவிட்டார்கள். கருத்துரிமை எல்லோருக்கும் உண்டு. அதுவும் திடீர் பெரியாரிஸ்ட்டுகளாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களுக்கு நிறையவே உரிமை உண்டு. அவர்களும் (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்) தங்களை முதன்மைப்படுத்தி, திருமணத்திற்கு முன்பே உறவு என்பதில் தங்கள் அனுபவக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கலாம். அதனையடுத்து, தங்கள் குடும்பத்தில் உள்ள திருமணமாகாத பெண்களின் அந்த அனுபவம் குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கலாம். குறைந்தபட்சம், இப்படியொரு அதிமுக்கியமான கருத்துக் கணிப்பை வெளியிட்ட இந்தியா டுடே நிறுவனத்தாரிடம், "நீங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் கருத்து சொல்லியிருக்கிறார்களா?" என்றாவது கேட்டிருக்கலாம். திடீர் பெரியாரிஸ்ட்டுகள் இதில் எதையுமே செய்யாமல் விட்டது ஏன் என்பதுதான் புரியவில்லை. 

- கோவி.லெனின்