முல்லைப் பெரியாறு - கூடங்குளம் பிரச்சினைகள் தமிழகத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகிறார்கள். கேரளாவின் அடாவடித்தனத்தைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான். ஆனால், திருடனையும், பொருளைப் பறிகொடுத்தவனையும் ‘சமமாக உட்கார்ந்து’ சமரசம் பேசச் சொல்கிறது இந்திய அரசு!

முல்லைப் பெரியாறு துரோகம்

முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் போடுகிறது - கேரள ஆட்சி. இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கை. தட்டிக் கேட்க கடமைப்பட்டுள்ள இந்திய அரசு, கண்டிக்கவில்லை. மாறாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக முதல்வர் வெளியிட்ட விளம்பரத்தில் எடுத்துக்காட்டியதை ‘அரசியலாக்குவதாக’ உச்சநீதிமன்றம் கண்டிக்கிறது. இது என்ன நியாயம்?

• முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கு கேரளா தயாராகி வருகிறது. அதற்கான வெடி பொருள்கள் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அணையை உடைப்பதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கி, அதற்கு அமெரிக்க தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் அணையின் பாதுகாப்புக்கு கேரள போலீசாரையே நிறுத்தினால், எப்படி அவர்கள் பாதுகாப்பை வழங்குவார்கள்? எனவேதான் மத்திய பாதுகாப்புப் படையை அங்கே நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது. இந்திய அரசு, இந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டாமா? இது இந்திய அரசின் இரண்டாவது துரோகம்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அணை உடைந்தால் - கேரளாவுக்கு ஆபத்து என்று கூக்குரலிடுவது உண்மை யானால், கேரள அரசு அணையை உடைப்பதாலும் ஆபத்து ஏற்படும் தானே!

• அணையின் நீரைப் பயன்படுத்த 999 ஆண்டுகளுக்கான உரிமை, தமிழ்நாட்டுக்கு இருக்கும்போது, அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவது உடன்பாட்டுக்கு எதிரான செயல் என்பதை சுட்டிக்காட்டி கேரள அரசின் அத்துமீறலைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் இந்திய அரசுக்குத்தான். ஆனால், வாய்மூடி மவுனம் சாதிக்கிறது; ஒரு கண்டனம்கூட வரவில்லை.

• சென்னையில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ‘கேரள அரசுக்கு திடீரென அணை உடைந்துவிடும் என்று அச்சம் வந்துவிடவில்லை; அங்கே வரவிருக்கும் இடைத்தேர்தல் அச்சம் தான்’ என்று பேசினார். முல்லைப் பெரியாறு அணை அடங்கியுள்ள பிரவம் - சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது; தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மயிரிழையில் ஊசலாடும் கேரள காங்கிரஸ் ஆட்சிக்கு, இந்த இடைத் தேர்தல் வெற்றி மிகவும் முக்கியத்துவமானதாகும்.

ப. சிதம்பரத்தின் மனம்திறந்த இந்த பேச்சுக்கு கேரள முதல்வர் மற்றும் மத்திய மலையாள அமைச்சர் வயலார் ரவி ஆகியோரிடமிருந்து கண்டனங்கள் வரவே, தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவரே தமிழ்நாட்டின் நியாயத்தைப் பேசவிடாமல், முடக்கிப் போடுகிறது, இந்திய அரசு!

கேரளாவில் தொழிலாளர்களாக கூலி வேலை பார்த்த தமிழர்களை அடித்து விரட்டுகின்றனர்மலையாளிகள். இதையும் தட்டிக் கேட்கவில்லை இந்திய அரசு. அதன் காரணமாகத்தான், தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே எதிர்வினைகள் நடக்கின்றன. ஆனால் தமிழர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மலையாளிகளைத் தாக்குவதைவிட தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு செல்லும் 13 வழிப்பாதைகளை அடைத்து; அத்தியாவசியப் பொருள்களை முடக்குவதன் மூலம் கேரளாவுக்கு எச்சரிக்கைவிடுப்பதே சரியான எதிர்வினையாக இருக்க முடியும். மறுமலர்ச்சி தி.மு.க. முன்னெடுக்கும் இந்த நியாயமான போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகமும் பங்கேற்கிறது. ஆனாலும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய கடமையை கைகழுவிவிட்டு,தமிழர்-கேரள மோதல்களை கூர்தீட்டிவிட்டு, ஆடுகள் மோதலில் ரத்தம் குடிக்கும் நரிகளைப் போல் ‘ஒருமைப்பாடு’, ‘தேசபக்தி’ பேசிக் கொண்டு உரிமைகளைத் தடுத்து நிறுத்தும் முதன்மை எதிரி இந்திய அரசு தான்.

கூடங்குளத்தில் துரோகம்

தமிழ்நாட்டு மக்கள் மீது மேற்கு வங்க மாநிலமும், கேரளாவும் ஏற்க மறுத்த அணுமின் திட்டத்தை உலக நாடுகள் பலவும் ஆபத்தானது என்று கருதும் ஒரு திட்டத்தை திணிக்கிறது இந்திய அரசு!

அணுகுண்டு தயாரிப்புக்கான மூலப் பொருள்களைப் பெறவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஆபத்தான ஒரு திட்டத்தை தமிழர்கள் மீது திணிக்கிறது இந்திய அரசு. இந்திய தேசியத்தின் அதிகார மய்யத்தை ஆட்டிப் படைக்கும் பார்ப்பன பனியா, பன்னாட்டு கும்பலுக்கு தங்கள் வலிமையை வெளிக்காட்டுவதற்கு ‘அணுகுண்டு’கள் தேவைப்படுகின்றன. அணுமின் ஆய்வுத் துறையில் “அவாள்கள்”தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால், அணுமின் திட்டங்களில் எந்தப் பார்ப்பானும் வேலைக்கு வரமாட்டான். எனவே தான் பார்ப்பன ஏடுகளும் இந்துத்துவ பார்ப்பன சக்திகளும் பூணூல்களை உருவிக் கொண்டு கூடங்குளம் திட்டத்தை வலிமையாக ஆதரிக்கின்றன. அமெரிக்கா விலிருந்து பணம் வாங்கிக் கொண்டு போராடுவதாகக் கொச்சைப்படுத்துகிறார்கள். கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் அமெரிக்கப் பின்னணியில் நடக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுவாரா? அவரால் கூற முடியுமா? அமெரிக்காவிடம் இந்திய ‘இறையாண்மை’யை அடகுவைத்து அணுசக்தி ஒப்பந்தம் போட்டவர், மன்மோகன் சிங் தானே?

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்காமல், அமெரிக்காவிலிருந்தே அறிவித்த அதே மன்மோகன்சிங் தான்,இப்போது கூடங்குளம் மின் திட்டம் விரைவில் செயல்படத் தொடங்கும் என்று ரஷ்யாவிலிருந்து அறிவிக்கிறார். - தமிழக மக்கள் உயிர்வாழ்வுரிமையை அன்னிய தேசத்துக்கு அடகு வைப்பது யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்!

சோவியத் ரஷ்யாவில் செர்னோபில் அணுஉலை பாதுகாப்பானது என்றுதான் ரஷ்ய விஞ்ஞானிகள் கூறினார்கள். அமெரிக்காவின் 3 மைல் தீவு அணுஉலை பாதுகாப்பானது தான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி வந்தார்கள். இந்த அணுஉலைகள் ஆபத்தானவை என்று இந்த விஞ்ஞானிகள் கூறியது உண்டா? அதேபோல்தான் கூடங்குளம் அணுமின் திட்டம் பாதுகாப்பானது என்று இங்கே விஞ்ஞானிகள் சிலர் பேசி வருகிறார்கள்; எதிர்ப்பாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடுகிறார்கள்.

“தேவையில்லாத கேள்விகள்”, “நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள்” என்ற போர்வைக்குள் பதுங்கும்போது, மக்களின் அச்சமும் சந்தேகங்களும் மேலும் வலிமை பெற்று வருகின்றனவே! இவைதான் மக்களின் அச்சத்தைப் போக்கும் வழிமுறைகளா? தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு தரப்படும் மரியாதையா? - கூடங்குளம் பார்வையில் தமிழர்களுக்கு நேரடியாகவே பகைவனாக நிற்கிறது - இந்திய அரசு.

ஈழத் தமிழர் பிரச்சினையில் துரோகம்

இது தவிர ஈழத்தில் தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்கு சிங்களத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டியது இந்திய அரசு தான். “கூடிப் பேசினால் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்” என்று ‘உபதேசம்’ செய்யும் இதே மன்மோகன்-சோனியா ஆட்சிதான் ஈழத்தில் நார்வே மேற்கொண்ட சமரச முயற்சிகளை எதிர்த்தது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தீர்வுகள் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்கு அத்தனை சதிகளையும் செய்து குழி பறித்தது.

“சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவே முக்கிய காரணம்” என்று அண்மையில் நார்வே அரசாங்கமே வெளியிட்ட “அமைதியின் பகடைகள்” (ஞயறளே டிக ஞநயஉந) என்ற 208 பக்க அறிக்கை குற்றம்சாட்டுகிறது. சமாதான முயற்சியில் இந்தியாவின் ஒத்துழைப்பை நார்வே பலமுறை கோரியபோதும் அதை நிராகரித்துவிட்டு இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கி போரைத் தூண்டிவிட்டது, இந்திய அரசு.

• முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு அய்.நா.வில் இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது, இந்திய அரசு.

• அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன், நியமித்த குழு, இலங்கையின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்திய பிறகும், அது பற்றி வாய் திறக்காமல், கண்டனம் தெரிவிக்காமல், மேலும் மேலும், இலங்கை அரசுக்கு உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருப்பது இந்திய அரசு.

- இலங்கையின் படுகொலைகளை நியாயப்படுத்தி

- நார்வே சமரச முயற்சிகளுக்கு குழி பறித்து

- அய்.நா.வில் சிங்களத்தின் ‘இனப் படுகொலை’யை மறைக்க தீவிரம் காட்டி

தமிழர்களின் உணர்வுகளை அழித்து, துரோகம் செய்தது இந்திய அரசு.

இந்திய துரோகங்களை அம்பலப்படுத்துவோம்; இந்திய தேசிய ஆட்சி, பார்ப்பன-பனியா-பன்னாட்டு ஆதிக்க நலன் காக்கும் ஆட்சியே என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம். பெரியார் கூறுகிறார்:

“நாம் எதற்காக - ஏன் இன்னொரு நாட்டுக்குள் இருக்க வேண்டும்? கூட்டாட்சி இது என்று சொல்லப்படுகிறது. கூட்டாட்சியினால், என்ன சவுகரியம் நமக்கு? கூட்டு என்றால் அதன் தத்துவமே இரு பங்காளிகளுக்கும் சம பங்கு என்று அர்த்தம். அப்படியா நாம் இன்று டெல்லிக்காரனிடம் இருக்கிறோம். நாம் பங்காளியாக இருக்கிறோமா? அடிமையாக இருக்கிறோமா?” (விடுதலை, 20.1.1959)

Pin It