மீண்டும் மீண்டும் அடிபட்டுக் கொண்டிருக்கும்  கேட்க நாதியற்ற இனம் இந்தத் தமிழினம். இந்த இனத்தில் பிறந்த எவரும் கடந்த கால மற்றும் தற்போதைய‌ நிகழ்வுகளைக் கண்டு மனம் கலங்காமல் இல்லை. ஆனாலும் அதையும் தாண்டி தங்கள் சுயநலத்திற்காக பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக பல லட்ச மக்கள் கொல்லப்பட்டபோதும் ஏன் என்று கேட்கவில்லை. தமிழகமே வீதிக்கு வந்து போராடியும் அவர்கள் செவிசாய்க்கவில்லை.

கர்நாடகாவில் கூட தமிழீழ மக்களுக்காக போராட்டங்கள், கூட்டங்கள் நடத்தத் தடையில்லை. ஆனால் தாய்த் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் அனுமதியில்லை. அதையும் மீறி யாரவது போராட முன்வந்தால் அதிலும் சிக்கல். 100 தலைவர்கள் 1000 இரண்டாம் கட்டத் தலைவர்கள். பாவம் இந்த உணர்வாளர்கள்.... ஆனால் இவர்கள் கொள்கை ஒன்றுதான். தமிழீழத்தைப் பெறுவது, தமிழருக்காகப் போராடுவது. ஆனால் இவர்கள் எல்லாரும் இணைந்து போராட வேண்டும் என்று ஒரு தமிழன் நினைத்தால் அது கனவாகவே இருக்கிறது.

பத்திரிக்கையாளர்கள் வேறுவிதம். தமிழினப் படுகொலையை வைத்து கோடிக்கணக்கில் வருமானம். அதிலும் ஆதரவுப் பத்திரிக்கைகள் தாங்கள் சார்ந்துள்ள அரசியலுக்குட்பட்டு அவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் எழுதியது (சில உண்மையான பத்திரிக்கைகளை தவிர). இங்கு தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் தமிழனுக்காகப் போராட முடியாது. இதற்கு சரியான உதாரணம் பல. அவற்றுள் ஒன்று அண்மையில் நடந்தது. வழக்கறிஞர்கள் சார்பிலும் மற்றும் பல அமைப்புகள் சார்பிலும் மதுரை, பெங்களுரூ, புதுதில்லியில் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் எலின் சாண்டர் (இவர் பற்றிய தகவல்களுக்கு இணைப்பை பார்க்கவும்) இனப்படுகொலையைப் பற்றி பேச அழைக்கப்பட்டிருந்தார். முதலில் இந்தியா வர அனுமதி அளித்த இந்திய அரசாங்கம் 10.09.09 அன்று எதற்காக வருகிறார் என அறிந்து அவசரகாலப் பிரகடனமாக அனுமதி மறுத்திருக்கிறது. ஈழத்திலும் அனுமதியில்லை இங்கும் அனுமதியில்லை. இங்கு வாய்க்கு வேலி அங்கு முள்வேலி. மிகப் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

இதற்கான ஆதாரங்கள் இத்துடன் இணைக்கபட்டிருக்கின்றன.

 

 

 

- தமிழ்முரசு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

 

Pin It