இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு, இலங்கையில் தமிழ் பகுதிக்கு ராஜீவ் காந்தி, ‘இந்திய அமைதிப் படை’ என்ற பெயரில் அனுப்பி வைத்த ராணுவம் நடத்திய அத்துமீறல்கள், போர்க் குற்றங்களை நேரில் சென்று ஆய்வு நடத்தி, 1989 ஆம் ஆண்டு மே மாதம் அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:

இந்திய அமைதிப்படையினரால் பல சமயங்களில் பல சாதாரண பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இந்திய அமைதிப் படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாட்டிக் கொண்டு இறந்துள்ளதாக இந்திய அமைதிப்படை விளக்கம் தருகிறது. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏற்படும் மோதலில், இந்திய அமைதிப் படை வீரர்கள் பலியானால், அதற்குப் பழிவாங்க, சாதாரண பொது மக்களை அமைதிப் படையினர் கொல்வதாகப் பல தகவல்கள் வந்துள்ளன.

இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஒன்று 1988 ஆகஸ்ட் 18 அன்று நடந்துள்ளது. ஜேம்ஸ் அந்தோனி ஜோசப் அருமநாதன் என்ற 49 வயது ஆசிரியர், அந்தோணிப்பிள்ளை புருனோ கிறிஸ்டி என்ற 32 வயது பொறியாளர், எஸ்.எஸ். பசுபதிப் பிள்ளை என்ற வயதான பெரியவர் ஆகிய மூவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயத்தின் முன் வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு 40 நிமிட நேரம் முன்பு, கச்சேரி - நல்லூர் சாலையிலுள்ள ஒரு கோவில் அருகே, இந்திய அமைதிப் படையினர் கையெறி குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அதற்குப் பழி வாங்கவே மேற்காணும் கொலைகள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. காலை சுமார் 9.50 மணி அளவில், யாழ்ப்பாண செயலகத்தில் இருந்து யாழ்ப்பாண மருத்துவமனைக்குச் செல்லும் சாலை யில் சென்றுக் கொண்டிருந்த இந்திய அமைதிப்படை வாகனத்திலிருந்து, சிப்பாய்கள் எதிர்ப்பட்டவர்களை யெல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொண்டே சென்றதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக் கின்றனர். அச்சமயத்தில் ஜேம்ஸ் அந்தோனியும், அந்தோனிப் பிள்ளை கிறிஸ்டியும் தேவாலயக் கதவு அருகில் பேசிக் கொண்டிருந்ததாகச் சாட்சிகள் கூறு கின்றனர். அவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே இறந்துவிட்டனர். அவர்கள் உதவிக்கு விரைந்த ஒருவர், அவர்கள் தலையில் சுடப்பட்டு உடனே இறந்து விட்டதைக் கண்டார். என்.என்.பசுபதிப் பிள்ளை 25 அடிகள் தள்ளி இதே போன்ற நிலையில் சுடப்பட்டு இறந்துவிட்டார். அவர்களது உடல்கள் யாழ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அன்றே பிரேதப் பரிசோதனையும் செய்யப்பட்டது.

அந்தோனிப்பிள்ளை, குண்டுக் காயத்தில் ஏற்பட்ட அதீத ரத்தப் போக்காலும், அதிர்ச்சியாலும் இறந்த தாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இறந்துபோன மூவரும் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு இறந்துள்ளதைத் தாங்கள் ஒப்புக் கொள்வதாக அவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர் என்று ஒரு ஆவணத்தை இந்திய அமைதிப்படை யினர், பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் வெளி யிட்டதாக ஒரு உறவினர் கூறினார். அவர்கள் மூவரும், இந்திய அமைதிப் படைக்கும், தமிழீழ விடுதலைப் புலி களுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் நடுவே மாட்டிக்கொண்டு இறந்ததாக இந்திய அதி காரிகள் கூறியதாகச் சாட்சிகளில் ஒருவர் கூறினார்.

1988 டிசம்பர் 18 தேதியிட்ட பம்பாய் பத்திரிகை யான சண்டே அப்சர்வர் பத்திரிகை இவ்வாறு கூறு கிறது: “1987 நவம்பர் 21 அன்று இந்திய அமைதிப் படையைச் சார்ந்த ஒருவர், திருகோணமலையில், தெருவில் போய்க் கொண்டிருந்த 7 பேரைத் திடீ ரென்று கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றுள்ளார். மேலும் 4 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது மைத்துனர் அதற்கு முந்தைய நாள் தேடுதல் வேட்டையின்போது கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர் இப்பாதகச் செயலைப் புரிந்துள்ளார். இதற்காக அவர் மீது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது.”

1983-க்கும், 1987 ஜூலைக்கும் இடையே சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பிறகு “மாயமாய்” மறைந்தவர்களின் எண்ணிக்கை 685 என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் கணக்கிட்டுள்ளது. இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்திற்குப் பிறகு 84 பேர் “மாயமாய்” மறைந்துள்ளனர்.

1988 ஜூனுக்கு பின்னர் 72 பேர் “மாயமாய்” மறைந்துள்ளனர். இதில் 31 பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் அ ல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இந்திய அமைதிப்படை யினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இது தவிர சிறீலங்கா இராணுவத்தால் 19 பேரும், போலீசாரால் 12 பேரும், எஸ்.டி.எப். ஆல் 4 பேரும், போலீஸ் என்று சந்தேகிக்கப்படுகிற, ஆனால் சாதாரண உடையில் வந்தவர்களால் ஒருவரும்

தூக்கிச் செல்லப்பட்டு பின்னர் ‘மாயமாய்’ மறைந் துள்ளனர். மேலும் 5 பேரை சிறீலங்கா போலீசும் மற்றும் இராணுவமும் கூட்டாகக் கைது செய்து அழைத்துச் சென்றதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர். அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனது சொந்த முயற்சியால், 1987 இல் ‘மாயமாய்’ மறைந்துபோன 4 பேரையும், 1988 இல் ‘மாயமாய்’ மறைந்துபோன 2 பேரையும் தேடிக் கண்டுபிடித்துள்ளது. இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். ஒப்பந்தத்திற்கு முன்பு 5 பேரும் பின்னர் ஒருவரும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

சிறீலங்காவின் அனைத்துப் பகுதியிலும் “மாயமாய்” மறைந்துபோன பலர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதற்கும், அதன் விளைவாக சிலர் இறந்துள்ளதற்கும், சிலரது உடல்கள் இரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கும் சான்றுகள் உள்ளன.

தெற்கில் இவ்வாறு “மாயமாய்” மறைந்து போனவர்களைப் பற்றித் தங்களுக்கு எதுவும் தெரி யாது என்று அங்கு முகாமிட்டிருக்கும் சிறீலங்கா இராணுவம் சாதித்து வருகிறது. இதில் சிலர் பற்றி சிறீலங்கா செய்திப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு உள்ளன. ஒரு உதாரணம் பார்ப்போம்:

1988 மே 22 ஆம் தேதி கணேமுல்ல போலீசால் கைது செய்யப்பட்ட கே.டி.சிறிபாலா ரணசிங்கயும், டபிள்யு.எ.கருணாரத்னேயும் “மாயமாய்” மறைந்து விட்டனர் என்று 1988 ஜூன் 11 தேதியிட்ட கொழும்புப் பத்திரிகையான ‘ஐலண்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. அது மேலும் கூறுகிறது: அவர்களின் உறவினர்கள் போலீஸ் நிலையம் சென்று விசாரித்ததற்கு, கைதிகளைப் பார்க்க அனுமதிக்காத போலீஸ், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்று கூறியது. உறவினர் நீதிமன்றம் சென்று விசாரித்தனர். அக் கைதிகள் ஜாமீனில் விடப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. ஆனால், அதில் ஜாமீன் கொடுத்ததாகக் கூறப்பட்டவர் அந்த முகவரியில் வசிக்கவே இல்லை. இது குறித்து கணேமுல்ல போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் செய்துள்ளனர். அதை விசாரிப்பதாகக் கூறியதைத் தவிர வேறு நடவடிக்கை எதுவும் அவர்கள் எடுத்ததாகத் தெரியவில்லை.

அதேபோல யாழ்ப்பாண மாவட்டத்தில் “மாயமாய்” மறைந்து போனவர்களைப் பற்றிக் கேட்டால், அங்கு இருக்கும் இந்திய அமைதிப்படை தனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்து வருகிறது. இதற்கும் ஒரு உதாரணம் பார்ப்போம்:

1987 டிசம்பர் 31 அன்று மாலை சுமார் 4.30 அளவில் உள்ளூர் நூலகத்திற்குச் சென்றுக் கொண்டிருந்த, 23 வயதான, சுன்னாகத்தைச் சார்ந்த துரையப்பா ஜெயராஜசிங்கம் என்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரது நெருங்கிய உறவினர் நடந்த சம்பவத்தை இவ்வாறு விவரிக்கிறார்:

“15 நிமிடத்திற்குள்ளாகவே எனக்குத் தகவல் வந்தது. துரையப்பா ‘மூன்று நட்சத்திரக் குழுவைச் சர்ந்தவர்கள். இந்திய அமைதிப் படையினர் ஆகி யோரால் கைது செய்யப்பட்டு, ஒரு அமைதிப்படை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுவிட்டதாகத் தகவல் வந்தது. உடனே நான் சுன்னாகம் அமைதிப் படை முகாமிற்கு விரைந்து சென்று விசாரித்தேன். துரையப்பா அங்கு அழைத்துவரப்பட வில்லை யென்றும், ஊரடங்கு நேரம் நெருங்கிவிட்டதால் (ஆறு மணிக்கு ஊரடங்கு - அப்பொழுது 5.15) மறுநாள் வருமாறு கூறிவிட்டனர்.

நான் வீடு வந்து சேர்ந்த பிறகு, சுமார் ஆறரை மணி அளவில் இரு இந்திய அமைதிப்படை வாகனங்கள் என் வீட்டுக்கே வந்து நின்ற.ன ‘மூன்று நட்சத்திரக்’ குழுவைச் சேர்ந்த நால்வரும் (சாதாரண உடையில்) சில அமைதிப் படையினரும் என் வீட்டிற்குள் வேகமாக நுழைந்து வீட்டைச் சோதனையிடப் போவதாகக் கூறினார்கள். நானும் அனுமதித்தேன். குற்றம்சாட்டும்படியான எந்தப் பொருளும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. வீட்டைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டதுதான் மிச்சம்... பின்னர் அவர்கள் துரையப்பாவை, ஒரு வாகனத்திலிருந்து அழைத்து வந்தனர். அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்தன. மேல் சட்டை இல்லை. அவரது பின்புறத்தில் சப்பாத்துக் களின் அடையாளம் காணப்பட்டதை நான் கவனித்தேன்.

கட்டிலில் இருந்த ஒரு பலகையை உருவி, துரையப்பாவை என் கண் முன்னாலேயே அடிக்க ஆரம்பித்தனர். இரத்தம் சொட்டி அவர் கீழே விழுந்தார். இந்தப் பூசைகள் ஒரு மணி நேரம் தொடர்ந்தது. துரையப்பா, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவரா என்று சில அமைதிப் படை சிப்பாய்கள் அக்கம்பக்கம் விசாரித்தனர். அவர்கள் துரையப்பா எந்த இயக்கத்தையும் சார்ந்தவர் அல்ல என்று கூறினர். நான் முழு நேரமும் அமைதிப்படை அதிகாரிகளிடம் அழுது கொண்டும் கெஞ்சிக் கொண்டும் இருந்தேன்.

சுமார் மூன்றரை மணி அளவில் இந்திய அமைதிப் படையினர் அவரை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

1988 ஜனவரி 2 அன்று அவரது உறவினர்கள் சுன்னாகம், மருதனாமடம், கொக்குவில் அமைதிப் படை முகாம்களில் விசாரித்தனர். கொக்குவில் முகாமில் இருந்த ஒரு அமைதிப் படை அதிகாரி, இந்தியில் ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்து துரையப்பாவை அவர்கள் சுன்னாகம் முகாமில் சந்திக்கலாம் என்று கூறினார். சுன்னாகத்தில் என்ன நடந்தது என்பதை அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றனர்.

“அக்கடிதத்தை கொடுத்தவுடன் துரையப்பா அன்று மதியம் 3 மணி அல்லது மறுநாள் காலை விடுவிக்கப்படுவார் என்று ஒரு அதிகாரி கூறினார். துரையப்பாவின் உதடுகளிலும், வாயிலும் காயங்கள் இருந்ததைக் கண்டேன்; குதிகாலிலும் சில வெட்டுகள் இருந்தன.”

துரையப்பாவை அவர்கள் கடைசியாக உயிருடன் பார்த்தது அப்பொழுதுதான், சுன்னாகம் முகாமில், துரையப்பாவுடன் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட கைதி ஒருவர் துரையப்பா விற்கு என்ன நேர்ந்தது என்பதை அவரது உறவினரிடம் கூறினார். சாப்பிடுவதற்குக்கூடக் கைகளை அசைக்க முடியாத நிலையில் இருந்த துரையப்பாவை, ஜனவரி 2 ஆம் தேதி மதியம் சுமார் 2.30 மணியளவில், சில ‘மூன்று நட்சத்திர’க் குழுவினரும், 4 அமைதிப் படையினரும் ஒரு ஜீப்பில் எடுத்துச் சென்றதாகவும், அவர் பின்னர் முகாமிற்குத் திரும்பவில்லை என்றும் அந்தச் சக கைதி கூறினார்.

துரையப்பாவைக் கண்டுபிடிக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஜனவரி 2 காலையில் கூறியபடி, துரையப்பா விடுவிக்கப்பட லாம் என்ற நம்பிக்கையில் சுன்னாகம் முகாமிற்கு மாலை மூன்றரை மணியளவில் சென்ற, அவரது உறவினர்கள் அதுபற்றி இவ்வாறு கூறுகின்றனர்:

“சில அதிகாரிகள் காலையில் இருந்து வராததால், மறுநாள் காலை வரும்படி அங்கு கூறப்பட்டது. மறுநாள் காலை 9 மணிக்கு நான் அங்குச் சென்றேன். உள்ளே சென்ற சென்ட்ரி 10 நிமிடம் கழித்து வந்து, துரையப்பா இரவில் தப்பி ஓடி விட்டதாகவும், அமைதிப் படை முகாமிற்கு

10 நாட்களுக்குள் அவன் வந்துவிட வேண்டும் என்று அவனிடம் கூறுமாறும் கூறினார். நான் அவனது கூற்றை நம்பவில்லை என்று கூறிவிட்டு, அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்...... அன்றே... ஈமச் சடங்குகளையும் செய்தேன்....

என் வீட்டருகே வசிக்கும் ஒருவர் மல்லாகம் முகாமிற்கு, எனது வீட்டில் நடக்கும் ஈமச் செய்தி பற்றி தெரிவித்தார். உடனே மல்லாகம் முகாம் அதி காரிகள் சுன்னாகம் முகாமிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, துரையப்பா உயிருடன் வேறு ஏதோ ஒரு முகாமில் இருப்பதாகவும், நான் அனைத்து ஆவணங்களுடன் ஜனவரி 4 அன்று காலை 9 மணிக்கு சுன்னாகம் முகாமிற்கு வந்து, சேர வேண்டும் என்று எனக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். அச்செய்தியுடன் என் அண்டை வீட்டுக்காரர் வந்தார். என்னைத் தேற்றிய உறவினர்கள், ஈமச் சடங்கை நிறுத்தி விடுமாறு கூறினர்.

“மறுநாள் சென்றேன். எல்லா ஆவணங்களையும் நான் பிரதி எடுத்து வைத்திருந்தேன். மூல ஆவணங்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்ட அவர்கள், துரையப்பா வந்தால் இங்கு கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என்று கூறி என்னைப் போகச் சொல்லிவிட்டனர். நான் அழுது கொண்டே திரும்பினேன். ஆவணங்களைப் பிடுங்க இவ்வாறு அவர்கள் நாடகமாடியுள்ளனர்.”

துரையப்பா ஒரு போதும் திரும்பவில்லை. “மாயமாய்” மறைந்துவிட்டார். குற்றம் சுமத்தப்படாமலும், வழக்குத் தொடரப்படாமலும் ஒருவரைக் காவலில் வைக்க அதிகாரம் வழங்கிய அவசரகால விதிமுறைகள், சிறிலங்காவில் 1983 மே 18 முதல், 1989 ஜனவரி 11 வரை அமுலில் இருந்தது. பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் உடல்களை அப்புறப்படுத்தும் அதிகாரத்தை, கீழ்நிலையிலுள்ள அதிகாரிகளுக்கும் விரிவுபடுத்தும் சட்ட விதிமுறை, 1988 நவம்பரில் அமுலுக்கு வந்தது. ஜே.வி.பி.யால் விடுவிக்கப்பட்ட வேலை நிறுத்த அழைப்புகளை (வேலை நிறுத்தத்தில் ஈடுபடாவிடில் கொன்றுவிடுவோம் என ஜே.வி.பி. மிரட்டி இருந்தது) எதிர்கொள்ள, இத்தகைய மிரட்டல்கள் செய்தால் அதற்கு மரணதண்டனை என்று அரசு அறிவித்தது.

1989 ஜனவரியில் அவசரநிலை விலக்கப்பட்டது. இதை அம்னஸ்டி, இன்டர் நேஷனல் வரவேற்றது. ஆனால் 1988 டிசம்பரில், இராணுவத்தின் கடந்தகால மீறல்களுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. மனித உரிமை மீறல்கள் செய்தாலும் தாங்கள் பாதுகாக்கப்படுவோம் என்ற நம்பிக்கையை இராணுவத்திற்கு அளிக்கும் இந்த மசோதா. மேலும் மனித உரிமை மீறல்களுக்கு வழிசெய்யும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் நம்புகிறது.

இராணுவ அமைச்சகத்தின் அனுமதியின்பேரில், போலீஸ் ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி.யின் உத்தரவின்பேரில் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் அப்புறப்படுத்தும் சட்ட விதிமுறையை 1988 ஜூலையில் அரசு கொண்டு வந்தது. 1988 நவம்பரில் உதவி சூப்பிரின்ட்டன்ட் அளவிற்கு இந்த அதிகாரம் கொடுக்கப் பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களையும், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களையும் கண்டவுடன் சுட ஆணை பிறப்பித்தது. 1971 இல் இதே போன்ற அதிகாரத்தை, சிறீமாவோ பண்டாரநாயகாவின் அரசு இராணுவத்திற்கு அளித்திருந்தது. இரண்டு முறையும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இதற்கு தனது கவலையைத் தெரிவித்திருக்கிறது. மனித உரிமைகளை மீறினாலும் தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கையை இராணுவத்திற்கு ஊட்டுவது, சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை அதிகப்படுத்தும் என்று அம்னஸ்டி அஞ்சுகிறது.

நிறைவு

Pin It