மாணவர் நலனையும் நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 18.7.2011 இல் தெளிவாக தீர்ப்பு வழங்கிய பிறகு, மீண்டும் உச்சநீதிமன்றம் போகப் போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது இந்த அரசின் வீண் பிடிவாதத்தையே காட்டுகிறது.

பெரியார் தொடங்கி வைத்த சமூகநீதிக் கல்வி உரிமை தமிழக வரலாற்றுச் சூழலில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையோடு, பிணைந்து நிற்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா மறந்துவிடக் கூடாது. இன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்தி கொள்ளை அடிப்பவர்கள் பார்ப்பன அணியாகவும், சமச்சீர்க் கல்வி உரிமை கோரும் வெகு மக்கள் பார்ப்பனரல்லாதார் அணி என்ற உணர்வுடனேயே இந்தப் பிரச்சினையை பெரியார் தந்த வெளிசசத்தில் பார்த்து வருகிறார்கள். அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த மிக முக்கிய உயிரோட்டமான பிரச்சினை குறித்து, எதையும் சொல்லாமல், அதிகாரத்துக்கு வந்தபிறகு அத்திட்டத்தில் கை வைப்பது வாக்களித்த மக்களுக்கு இழைத்த துரோகமாகிவிடும் என்பதை தமிழக முதல்வருக்கு சுட்டிக் காட்டுகிறோம்.

இராஜகோபாலாச்சாரியர் குலக் கல்வித் திட்டத்தை தனது கட்சியை கலந்து ஆலோசிக்காமலே கொண்டு வந்தார். இராமானுசரும், சங்கரரும் எவரைக் கேட்டு தங்கள் கருத்துகளைப் பரப்பினர் என்று ஆணவத்தோடு கேட்டார். அதற்குப் பிறகு ஆச்சாரியார், அரசியலிலிருந்தே அகற்றப்பட்டதுதான் வரலாறு. அன்று - ஆச்சாரியார் பின்னால் பார்ப்பனர்கள் மட்டுமே நின்றார்கள். 57 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 19.7.2011 அன்றுதான், அதாவது உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த அதே நாளில் ‘இந்து’ நாளேடு ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தை தவறு என்று ஒப்புக் கொண்டு எழுதியுள்ளது. இதுதான் வரலாற்றுத் திருப்பம்.

ஈழத் தமிழர் ஆதரவு, இடஒதுக்கீடு, சமச்சீர் கல்வி என்று எந்தப் பிரச்சினையானாலும் அதன் மய்யமான நீரோட்டம் சமத்துவம் என்பதுதான். சமத்துவம் மறுக்கப்படுவதை ஈழத் தமிழர் பிரச்சினையில் மட்டும் எதிர்த்து விட்டு, கல்விப் பிரச்சினையில் மாறாக செயல்படுவது, பச்சை முரண்பாடே ஆகும்.
பார்ப்பனர்களின் தவறான வழிகாட்டுதல்களிலிருந்து தமிழக முதல்வர் விலகி நிற்க வேண்டும். இல்லையேல் தமிழினத்தின் நம்பகத் தன்மையை இழந்துவிடுவார் என்ற உண்மையை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Pin It