சென்னை மயிலாப்பூர் ஒரு வழிப்பாதையாக உள்ள லஸ் சாலையின் நடுவே 15 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 80 அடி அகலத்தில் உள்ள இந்த சாலையில் ஏற்கனவே, இரு புறங்களிலும் தலா 12 அடியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது, சாலையின் நடுவே நடைபாதை பூங்கா அமைப்பதால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இத்திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் மார்ச் 6ஆத் தேதி, மண்டல உதவி ஆய்வாளரிடமும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரையும் மார்ச் 8ஆம் தேதி சந்தித்து மனு அளித்தனர்.

இதுகுறித்து, திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் வேழவேந்தன் கூறியதாவது: “பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு லஸ் - ராயப்பேட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளையும் முன்பிருந்ததைப் போல் இரு வழிச்சாலையாக மாற்றுவதாக காவல்துறை தரப்பில் உறுதியளித்தனர். ஆனால், தற்போது, லஸ் சர்ச் சாலையில் நடைபாதை பூங்கா அமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு, நடைபாதை அமைப்பதால் இட நெருக்கடியை காரணம் காட்டி லஸ் - ராயப்பேட்டை, லஸ் சர்ச் உள்ளிட்ட அனைத்து சாலைகளையும் வித்யா மந்திர் பள்ளிக்காக தற்போது இருப்பதை போல், தொடர்ந்து ஒரு வழிப்பாதையாகவே வைத்திருக்க அதிகாரிகள் செய்யும் சதி என்றே தோன்றுகிறது. அருகிலேயே மிகப் பெரிய நாகேஸ்வரராவ் பூங்கா இருக்கும் போது, அதன் அருகிலேயே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதை பூங்கா அமைப்பதற்கான நோக்கம் என்ன? போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கும் இத்திட்டத்தை மாநகராட்சி கைவிடவில்லை என்றால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்” என்று அவர் தெரிவித்தார். சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பிரகாசு, வேலு, ‘எப்.டி.எல்.’ செந்தில் உள்ளிட்ட 15 கழகத் தோழர்கள் உடன் சென்றனர்.

Pin It