தெற்கு சூடான் நாட்டின் விடுதலைக்கும் தமிழ் ஈழ விடுதலைக்கும் உள்ள ஒற்றுமைகளை சென்னையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மய்யம் கடந்த 16.7.2011 அன்று நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய பலரும் சுட்டிக் காட்டினர். சூடான் நாட்டுக்கும் தெற்கு சூடானுக்கும் இடையே உருவாகியுள்ள போர் நிறுத்த சமரச உடன்பாட்டில் அடங்கியுள்ள அம்சங்கள் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் தயாரித்து வழங்கிய தன்னாட்சி சபைக்கான உடன்பாடுகளைப் போலவே இருப்பதை தோழர் தியாகு சுட்டிக்காட்டினார். சூடான் நாட்டைப் போல் அப்போதே, இலங்கை அரசும், இந்த உடன்படிக்கையை ஏற்றிருக்குமானால் இவ்வளவு கொடூரமான முள்ளி வாய்க்கால் இனப்படுகொலையை தவிர்த்திருக்க முடியும் என்றார் அவர்.

தெற்கு சூடான் மக்கள் மீது சூடான் நடத்திய இனப்படுகொலைகள் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்ததுபோல் தமிழ் ஈழத்தில் நடந்த இனப் படுகொலைகளுக்கு பதில் சொல்லும் காலம் வந்தே தீரும். இனப்படுகொலைக்கான பதில் தமிழ் ஈழ விடுதலையாகவே இருக்க முடியும். இதே கருத்தைத்தான் அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வில் பங்கேற்றுப் பேசிய சூடான் விடுதலை இயக்க அமெரிக்கப் பிரதிநிதியும் பேசினார். தெற்கு சூடான் விடுதலைக்கு அந்நாட்டிலுள்ள எண்ணெய்  வளம் மட்டுமே ஒரே காரணம் என்று கூற முடியாது. அதுவும் ஒரு காரணியாக இருக்கலாம். தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டமாகவே அதைப் பார்க்க வேண்டும். ஈழ விடுதலையை இந்தியா பெற்றுத்தரும் என்று, நாம் ஒரு போதும் நம்பக் கூடாது. ஈழத் தமிழர்களின் தேசிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை சர்வதேச அரங்கில் நகர்த்த வேண்டும்.

சூடானில் நடந்ததைப் போல வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களிடையேயும் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வலியுறுத்துவோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு தற்போது வழங்கி வரும் அடையாள அட்டைகள் அத்தகைய வாக்கெடுப்புக்கு பயன்படும். ஒரு தேசத்துக்கான விடுதலைப் போராட்டம் சர்வதேச அரங்கில் இடதுசாரிகள் ஆதரவு பெற்றுள்ளதா? அல்லது முதலாளித்துவ அரசுகளின் ஆதரவு பெற்றுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. விடுதலை பெற்ற பல தென் அமெரிக்க நாடுகள், சோஷலிச நாடுகளின் ஆதரவோடுதான் விடுதலை பெற்றன என்று கூறிட முடியாது என்ற கருத்துகளை தோழர் தியாகு முன் வைத்தார்.

இனப்படுகொலைகளை நடத்திய இராஜபக்சேயை போர்க் குற்றவாளியாக தண்டிக்க வேண்டும் என்ற முழக்கம், ஈழ விடுதலையை திசை திருப்புவதாகிவிடும் என்றும், எனவே இராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்ற முழக்கத்துக்கு பதிலாக ஈழ விடுதலையையே முன்னிறுத்த வேண்டும் என்று மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் கூறினார். இராஜபக்சே இனப் படுகொலை செய்தவர் என்ற கருத்தை ஆயுதமாக்கித்தான் தமிழ் ஈழ விடுதலையை முன்னெடுக்க முடியும் என்று திருமுருகன் முன் வைத்த கருத்துக்கு பதிலளித்து, அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தைச் சார்ந்த மகேசு, ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி உள்ளிட்டோர் பேசினர்.

சென்னை பல்கலைக்கழக பேரா சிரியர் மணிவண்ணன் பேசுகையில்: ஈழத்தில் கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் என்ற மூன்று அழித்தொழிப்புகள் நடந்துள்ளன. தமிழர்களின் கலாச்சார நகரமான யாழ்ப்பணமும், கிளிநொச்சியும் அழிக்கப்பட்டது. கலாச்சாரப் படுகொலையாகும். தமிழர்களின் அடையாளத் தோடு கட்டமைக்கப்பட்ட நகரமான கிளிநொச்சி இன்று அடையாளமிழந்து கிடக்கிறது. அமைதி வழியில் போரில்லாமல் கிடைக்கும் சுதந்திரத்தைத்தான் காந்தியைப்போல் நாமும் விரும்புகிறோம். நேர்மையான அமைதியான சுதந்திரத்தின் குரலை ராணுவத்தால் அடக்கும்போதுதான், அங்கே அமைதி விடை பெறுகிறது. ஈழத் தமிழர்களுக்கான இறையாண்மையை தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான மக்கள் கருத்தை உருவாக்க வேண்டும். மக்கள் கருத்துக்கு முன் எந்த அரசியல் கட்சியும் பணிந்தாக வேண்டும். தமிழகத்தில் கடந்த ஆட்சி தேர்தலில் சந்தித்த தோல்வியும், இந்த ஆட்சி சட்டமன்றத்தில் இலங்கையில் பொருளாதாரத் தடையை வலியுறுத்தி நிறைவேற்றிய தீர்மானமும் மக்கள் சக்திக்குக் கிடைத்த வெற்றிதான் என்று குறிப்பிட்டார்.

கருத்தரங்கில் மனித நேய மக்கள் கட்சியைச் சார்ந்த அஸ்லம் பாஷா, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் உ. தனியரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ந. நஞ்சப்பன், புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் க. கிருட்டிணசாமி ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றிய தீர்மானத்தை சட்டமன்றத் தீர்மானமாக நின்றுவிடாமல், அதை தமிழக மக்கள் குரலாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் விடுதலைக்கான இயக்கத்தை முன்னெடுப்பதில் காவல்துறையின் தடைகள் இருக்காது என்ற கருத்தையும் முன் வைத்தனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை மய்யத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி தலைமையேற்று உரையாற்றி, கருத்தரங்க நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். வழக்கறிஞர் பாண்டிமாதேவி வரவேற்புரையாற்ற, பெரியார் திராவிடர் கழக தென்சென்னை மாவட்ட தலைவர் தபசி குமரன் நன்றி கூறினார். பாவாணர் நூலக அரங்கம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

கருத்தரங்கின் தொடக்கத்தில் ஈழப் போரில் கணவர்களை இழந்த பெண்களின் அவலங்களை விளக்கும் ‘யாழினி என்ற 30 நிமிடப் படம் திரையிடப்பட்டது. ஆஸ்திரேலிய வாழ் தமிழர் ராஜ் தயாரித்து ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படம் கண்களை ஈரமாக்கியது. உலகப் போரில் இட்லர் நடத்திய படுகொலைகளை விளக்கும் ஏராளமான படங்கள் இப்போது வரை வந்து கொண்டே இருப்பதுபோல் தமிழர் இனப் படுகொலைகளை பல்வேறு கோணங்களில் சித்தரிக்கும் ஏராளமான படங்கள் வரவேண்டும் என்று படத் தயாரிப்பாளரும், இயக்குநரும் தங்களது அறிமுக உரையில் குறிப்பிட்டனர்.

Pin It