சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் கே.ஆர்.வி. நூற்பாலையில், பெரியார் தொழிலாளர் கழகம் துவங்கப் போவதாக துண்டறிக்கை விநியோகித்தவுடன், ஆலையில் பணிபுரிந்த மூன்று தோழர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். பெரியார் தொழிலாளர் கழகத்தில் இணையக் கூடாது என்று மற்ற தொழிலாளர்களும் மிரட்டப்பட்டுள்ளனர். பல்வேறு எதிர்ப்புகளை கடந்து, பெரியார் தொழிலாளர் கழகம் துவங்கப்பட்டுள்ளது.

12.7.2011 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணிக்கு சேலம் மாவட்டம் நங்கவள்ளியில், கே.ஆர்.வி. நூற்பாலை அருகில், பெரியார் தொழிலாளர் கழகம் துவக்க விழா நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தொழிற்சங்கப் பெயர்ப் பலகையை திறந்து வைத்து, கொடியேற்றி வைத்தார். பெரியார் தொழிலாளர் கழக மாநிலத் தலைவர் கோபி இளங்கோவன், மாநில செயலாளர் திருமூர்த்தி, மாநில பொருளாளர் கருப்பண்ணன் மற்றும் மேட்டூர் அனல்மின் நிலைய பெரியார் தொழிலாளர் கழகப் பொறுப்பாளர்கள், கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முதலில் கோ. சிவக்குமார் அனைவரையும் வர வேற்றுப் பேசினார். தலைமை வகித்த கழக மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, நங்கவள்ளியில் பெரியார் தொழிலாளர் கழகம் துவக்க வேண்டிய அவசியம் குறித்துப் பேசினார். அடுத்துப் பேசிய ஜெயக்குமார், “நாங்கள் பணிபுரிந்த தொழிற்சாலையில், பல தொழிற் சங்கங்கள் இருந்தன. அதில் நாங்களும் ஒரு சங்கத்தில் இருந்தோம். மிகக் குறைவான சம்பள ஒப்பந்தம் போடப்பட்டது. அதை நாங்கள் எதிர்த்தபோது, தொழிற்சங்க நிர்வாகிகள் முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்ததை உணர்ந்தோம். தேர்தலில் போட்டியிடாத, யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாத கழகத்தைப் பற்றி அறிந்த நாங்கள் சுமார் 70 பேர் சேர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர்மணியை சந்தித்து, ஆதரவு பெற்று பெரியார் தொழிலாளர் கழகம் துவக்கினோம்” என்று முதன்முதலாக பெரியார் தொழிலாளர் கழகம் துவக்கியதை குறிப்பிட்டார்.

அடுத்ததாக பேசிய பெரியார் தொழிலாளர் கழக மாநில பொருளாளர் கருப்பண்ணன், “பெரும்பாலான தொழிற்சங்கங்கள், தொழிற் சங்கம் நடத்தவில்லை, சங்கத் தொழில் நடத்துகிறார்கள். மற்ற தொழிற்சங்க நிர்வாகிகள், போராட்டம் வேண்டாம், நீதிமன்றம் செல்ல வேண்டாம் என்று கூறி, தொழிலாளர்களின் போராட்டத்தை மழுங்கடிக்கவே செய்தனர். அதேபோல மற்ற தொழிற்சங்கங்களை பொருத்தவரை முதலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், அந்த தொழிலைப் பற்றியே அறிந்திருக்காத ஒரு தலைவர் எங்கோ இருந்து வருவார். ஆனால் நாம் தான் முதன்முதலாக அந்தந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களே, முதலாளிகளிடம் பேசும் நிலையை உருவாக்கியிருக்கிறோம்” என்று பெரியார் தொழிலாளர் கழகத்திற்கும், மற்ற தொழிலாளர் கழகத்திற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டிப் பேசினார்.

பெரியார் தொழிலாளர் கழக மாநிலத் தலைவர் கோபி இளங்கோவன், “ஒருவர் முறையான காரணம் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்படும்போது, நாம் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கலாம். தொழிலாளர்கள் சட்டம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், அதற்குள் அவசரப்பட்டு, முதலாளிகளிடம் பணிந்து போய் விடுகிறார்கள். எனவே தொழிலாளர்கள் பயப்படாமல் உரிமைகளுக்காக போராட வேண்டும். உங்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சட்டரீதியாக வென்றெடுக்க நாங்கள் துணையாக இருப்போம். பெரியார் திராவிடர் கழகம் ஆதரவாக இருக்கும்” என்று பேசினார்.

இறுதியாக பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை பெற்றுத் தருவதற்கு, அதற்காக முதலாளிகளிடம் வாதிடுவதற்கு ஆலை என்று இருந்தால், அதில் தொழிற்சங்கம் என்று ஒன்று இருக்கத்தான் வேண்டும். ஆனால், தொழிற்சங்கமே இருக்கக் கூடாது என்று கருதுபவர்கள் முதலாளிகள். முடிந்தவரை அதிகமாக சுரண்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள்தான் முதலாளிகள். தொழிலாளர்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்பதற்காக, தொழிலாளர் சட்டங்கள் தெரிந்த, தங்களுக்கு வேண்டிய சிலரை அதிகாரிகள் என்ற பெயரில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதைப் பார்த்து எப்படி ஏமாறாமல் இருப்பது என்பதற்காகத்தான் தொழிற்சங்கங்கள். இந்த தொழிற்சங்கங்கள் எந்த பயங்கர விளைவுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை. அதே சமயத்தில் அவர்கள் நடவடிக்கை தவறாக இருக்குமேயானால், சட்டப்படி உரிமைகளைப் பெற போராடுவார்கள். மாநிலத் தலைவர் பேசும்போது, அடிக்கடி சட்டப்படியான என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதுதான் எல்லோருடைய விருப்பமும். பலாத்காரம் என்பது அவர்களாலும் முடியும். நம்மாலும் முடியும். ஆனால் பலாத்காரம் கூடாது. நியாயமான உரிமைகளை கேட்கிறபோது மிரட்டுவது என்பதும், அடக்குவது என்பதும் கூடாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.

நாங்கள் நல்லவர்களாக இருக்க விரும்புகிறோம். பலாத்காரம் அற்றவர்களாக இருக்க விரும்புகிறோம். அதே சமயத்தில் தொழிலாளர்கள் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம். எப்போதும் பெரியார் இயக்கம் பலாத்காரத்தை விரும்பியதே இல்லை. பலாத்காரம் கூடவே கூடாது என்று தான் பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் சொல்லி வந்தார். எப்போதும் வேண்டாம் என்பதல்ல. இப்போது வேண்டாம் என்றுதான் சொல்லி வந்தார். இப்போது நமக்கு தேவை இல்லை. ஆனால் தேவை வருகிறபோது நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் முடிவு செய்கிறான்.

பொய்யான குற்றச்சாட்டு

பொய்யான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு தோழர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அடிக்கப் போவதாகவும், உதைக்கப் போவதாகவும் சொன்னார்கள். ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது. ஒரு கிழட்டுப் பார்ப்பான் தன் இளம் மனைவியைப் பார்த்து அவனோடு போகிறாய், இவனோடு போகிறாய் என்று சொல்லிக் கொண்டே இருந்தானாம். ஒரு நாள், அட கிழட்டுப் பார்ப்பானே உன் வார்த்தை பலித்து விட்டது என்று சொன்னாளாம். அப்படி நீங்கள் சொல்லி சொல்லி அப்படியே ஆகிவிடக் கூடாது என்றுதான் கருதுகிறோம்.

நம் பக்கம் இருந்து முதலில் பலாத்காரம் தொடங்கக் கூடாது. கொதிநீரும் சுடும், நெருப்பும் சுடும். ஆனால், எரியும் நெருப்பில் கொதிநீரை ஊற்றினால், நெருப்பு அணைந்துவிடும். நம் பலாத்காரம் அப்படித் தான் இருக்க வேண்டும். எரியும் நெருப்பை அணைக்கும் கொதிநீரின் சூடாக நாம் இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்களை எரிக்கும் நெருப்பாக இருக்கக் கூடாது. பலாத்காரத்தை நிறுத்துவதற்காக பலாத்காரம்.

பெரியார் கழகம் என்றாலே, தொழிலாளர்கள் கழகம் தான். கழகத் தோழர்கள் எல்லோரும் தொழிலாளர்கள்தான். உழைப்பாளிகளை மட்டுமே வைத்திருக்கும் கட்சி நம்முடையது. நமக்கு எதற்காக தனியாக தொழிலாளர் கழகம்? ஒரு குறிப்பிட்ட ஆலையின் சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, இயங்குகிற தொழிலாளர்களுக்காக, பெயருக்காக தனியாக தொழிலாளர் கழகம் அமைக்கப்படுகிறது. ஏற்கனவே இருந்த சமுதாய அமைப்பு, உழைக்கும் மக்களுக்கு, கல்வி கொடுக்கவில்லை. கல்வி பெற்றாலும், வேலை வாய்ப்பு தரவில்லை. அதற்காக போராடியதுதான் பெரியார் இயக்கம். உழைக்கும் மக்களுக்கு கல்வி உரிமை வேண்டும். கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு வேண்டும். வேலை வாய்ப்புகள் வேண்டும். அதில் இட ஒதுக்கீடு கொடு என்பதுதான். பெரியார் இயக்கத்தின் தொடக்கம். ஆக உழைக்கும் தொழிலாளியாக இருக்கும் மக்கள் உரிமைக்காகத்தான் பெரியார் இயக்கமே தொடங்குகிறது. அதன் ஒரு பிரிவாகத் தான் தொழிலாளர் அமைப்பாக நாம் சில இடங்களில் தொடங்கி வைத்திருக்கிறோம்.

கோபி அருகில் ஒரு தொழிற்சாலை முன்பு தொழிற்சங்கங்களின் பெயர்ப் பலகைகளை வைக்கக் கூடாது என தடை ஆணை வாங்கி வைத்திருந்தார்கள். நமது கழகத்தின் முயற்சியால் முதன்முதலாக பெயர் பலகை வைக்க முடிந்தது. தடை உத்தரவு இருக்கிறதே என்று மற்ற சங்கங்கள் எல்லாம் பெயர்ப் பலகை வைக்காமலேயே இயங்கி வந்தன. தவறான உத்தரவு என்றால் போராடி அதை முறியடிக்க வேண்டும். தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, போராடாமல் இருக்கக் கூடாது.

துண்டறிக்கை வழங்கியதற்கே ‘சஸ்பெண்ட்’ என்று சொன்னார்கள். இது முதலாளிக்கு தெரிந்து நடக்கிறதோ? தெரியாமல் நடக்கிறதோ? தெரியவில்லை! ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகள் என்று பழமொழி ஒன்று சொல்வார்கள். அப்படி முதலாளிக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக, சில அதிகாரிகள் செய்திருக்கக் கூடும். இது கடைசியாக முதலாளிக்குதான் இடையூறாக போய்ச் சேரும். அநீதிக்கு எதிரான எதிர்ப்புகள் மெல்ல மெல்லத் தான் சேரும். அது ஒட்டுமொத்தமாக சேருகிறபோது, இப்படிப்பட்ட அதிகாரிகளின் தவறால் ஆலைகளுக்கேகூட இடையூறாக அமையும். தொழிலாளர்கள் வேறு வேலைக்கு போய் விடுவார்கள். முதல் போட்ட முதலாளிக்குத்தான் நட்டம். நட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆலை நன்றாக செயல்பட்டால்தான், தொழிலாளர்களும் நன்றாக இருப்பார்கள். ஆனால் அதிகாரிகள் எதைச் செய்தாலும் அதற்கு முதலாளிகள் ஆதரவாக இருக்கக் கூடாது.

சங்கம் அமைப்பதற்கான உரிமையை அரசியல் சட்டமே கொடுக்கிறது. அதற்கு பெரியார் திராவிடர் கழகம் ஆதரவாக இருக்கும்” என்று பேசிய கொளத்தூர் மணி, தொழிலாளர்களுக்கும் ஒன்றைச் சொன்னார்... “நீங்கள் உங்கள் ஆலைகளில் ஆற்றுகிற பணியை உண்மையாகவும், அக்கறையோடும், நிறைவாகவும் செய்யுங்கள். அதற்கான உரிய ஊதியம் கிடைக்கவில்லை என்றாலோ, வேண்டுமென்றே உங்களுக்கு இடையூறு இழைக்கப்படுகிறது என்றாலோ, அப்போது அதை உரிய வகையில் சந்திப்போம். எங்களைப் போன்றோர் துணை நிற்போம். சட்டம் எப்போதும் துணை நிற்கிறது. எதிர்வரும் காலத்தில் நாம் இணைந்து பணியாற்றுவோம். ஆலை நிர்வாகத்தின் பணிகளுக்கு ஒத்துழைப்போம். உரிமைகளுக்குப் போராடுவோம்” என்று கூறினார்.

Pin It