தோழர்களே, தாய்மார்களே,

இன்று பொதுவாகவே உலகம் முழுவதும் ஒரு தொல்லை இருக்கிறது. அந்தத் தொல்லை பல்வேறு உருவங்களில் காட்சியளிக்கின்றது. அந்தத் தொல்லை என்னவென்றால், மனித சமுதாயத்தில் உடையவன் - இல்லாதவன் என்ற தொல்லை. இந்தத் தொல்லை உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது. மனிதன் இயற்கையாகவே ஆசை குடிகொண்டுள்ள ஜீவன். அதன் பயனாகத்தான் உலகில் உடையவன்-இல்லாதவன் என்கின்ற இரண்டுவித நிலைமைகள் உண்டாகிவிட்டன. இந்த நிலைமைகளை மதமும் கடவுளும் பாதுகாத்து வருகின்றன. அதற்கு ஏற்ப அரசாங்கமும் அமைந்துவிடுகிறது.

ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரையில் உடையவன் - இல்லாதவன் என்கின்ற கவலையோடு மற்றொரு கவலையும் சேர்ந்துகொண்டது. அதுதான் சமுதாயத்தில் மேலான சாதி, கீழான சாதி என்று பாகுபடுத்தப்பட்டுள்ள தொல்லை. இந்தத் தொல்லை உலகில் வேறெங்கும் இல்லாத தொல்லை. இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. நம் மக்களிடம் குடிகொண்டுள்ள முட்டாள் தனத்தினாலும் மானமற்ற தன்மையினாலும் இந்தத் தொல்லை நீண்டநாட்களாக நம்மடையே இருந்துவருகிறது. உடையவன்-இல்லாதவன் என்ற தொல்லையை ஒழிக்க உலகில் போராட்டம் நடந்தபடியே உள்ளது. அதைக் காக்க சட்டம், வெடிகுண்டு, ஆகாயக் கப்பல், அணுகுண்டு ஆகிய அனைத்தும் உண்டு.

ஆனால், மேல்சாதி-கீழ்சாதி என்ற குறை அஸ்திவாரம் இல்லாமலேயே வளர்ந்தது. நம் மக்களின் முட்டாள்தனமும், மானமற்ற தன்மையும் சேர்ந்து தான் அதை வளர்த்து நம் சாட்டில் நிலைநிறுத்தி வைத்துள்ளன. அதை நீக்க நாம் முயல வேண்டும். உடையவன்-இல்லாதவன் என்ற தொல்லை நீங்க உலகில் கிளர்ச்சிகள் நடந்தபடியே உள்ளன. தொழிலாளர்கள் கிளர்ச்சி, விவசாயிகள் கிளர்ச்சி ஆகிய கிளர்ச்சிகளெல்லாம் முதலாளித்துவம் நிலைக்க உபயோகப்படுகின்றனவே ஒழிய அடிப்படையை மாற்றியமைக்கவில்லை. நம் நாட்டிலுள்ள மேல்சாதி-கீழ்சாதிக் கொடுமை அஸ்திவாரம் இல்லாததும் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதுமாக இருப்பதால் கிளர்ச்சிகள் செய்ய முடியாதபடி தந்திரமாக அமைந்துள்ளது. இங்கு சாதித்தொல்லைகளை ஒழிக்கப் பாடுபட வேண்டியது தான் முதல் தேவை என்பது என் கருத்து.

முதலாளி-தொழிலாளி என்கிற பிரச்சினை எங்கிருந்து வந்தது? மூடநம்பிக்கையிலிருந்து வந்ததல்ல. அந்தப் பிரச்சினை ஆதாரத்தோடு தான் உள்ளது. எப்படி இருக்கிறான் முதலாளி? சட்டத்தின்படி இருக்கிறான். அரசாங்கத்தின் பாதுகாப்பின்படி இருக்கிறான். அரசாங்கத்தின் சலுகையால் தான் அவன் முதலாளியாக வாழ முடிகிறது. ஆகையால், முதலாளி கூடாது என்றால் அவனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் மீது திரும்ப வேண்டும். முதலாளி மீது பாய்வதால் பலன் ஏதுமில்லை. முதலாளி மீது போராட்டம் துவக்கி, தொழிற் சங்கங்கள் இந்த அய்ம்பது வருட காலமாகச் சாதித்தது என்ன?

- (பொன்மலையில், 27-9-1953இல் சொற்பொழிவு

- ‘விடுதலை’ 3-10-1953)

Pin It