பல நாட்களுக்கு முன்பே
பத்திரிகை நிருபர் ஒருவர்
சில கேள்விகளைச்
சிறப்பாக என்னிடம் கேட்ட போது;

Fidel Castroஉலகில் நீங்கள் பார்க்க விரும்புகிற
தலைவர்கள் யார்? என்று
ஒரு கேள்வியை வைத்தார் -
நான் பதில் அளித்தேன்.

நான் பார்க்க விரும்பிய;
எனக்குப் பயிற்சி அளித்த தலைவர்கள்;
பகுத்தறிவுப் படிப்பளித்த
தலைவர்கள் பெரியாரும் அண்ணாவும்

கர்ம வீரர் காமராஜரும்,
செங்கொடிச் சிங்கம் ஜீவானந்தமும்
நாட்டுத் தலைவர்கள் -
நல்வழி காட்டும் தலைவர்கள் என்றேன்.

உயிரோடிருக்கும்
உலகத் தலைவர்கள் வரிசையில்
உங்களைக் கவர்ந்த ஒருவரின்
பெயரைக் கூறுக என்றார்;

உயிரோடிருப்பவர் மட்டுமல்ல;
என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள
ஒரு தலைவர் உண்டு;
அவர்தான் பிடல் காஸ்ட்ரோ என்றேன்.

இளம்பிராயத்திலேயே அவர்
எழுச்சி முரசு! புரட்சிக் கனல்!
இனங்கண்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டும்
மூளைக்குச் சொந்தக்காரர்!

இருளில் சர்வாதிகாரியாகவும்,
வெளிச்சத்தில் ஜனநாயகவாதியாகவும்
இரட்டை வேட அரசியல் நடத்திய
‘பாடிஸ்டா’ எனும் பசுத்தோல் வேங்கை;

அந்த விலங்கின் வேஷத்தைக்
கலைக்கத் துணிந்து; அதற்கோர்
அணியைத் தயாரித்துப்
போரிட்டுத் தோல்வியுற்று; சிறைப்பட்டு;

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதுதான்
‘‘வரலாறு என்னை
விடுதலை செய்யும்’’ எனும்

வைர வரிகளைச்
சரித்திரப் புத்தகத்தில்
வையம் புகழ், சித்திரமாகப்
பதிய வைத்தார்; காஸ்ட்ரோ!

பாடிஸ்டா ஆட்சியில் பிடலுக்குப்
பதினைந்தாண்டுச் சிறை என்றதும்-
பற்றி யெரிந்த மக்களின்
புரட்சி நெருப்புக்கு
ஈடுகொடுக்க முடியாமல்
இரண்டே ஆண்டுகளில்
சிறைக் கதவு திறந்தது,
சிங்கம் வெளியே வந்தது -

அந்தச்
சிங்கத்துக்கோர் சிறுத்தை
துணை சேர்ந்தது;
அதன் பெயர்தான் சேகுவேரா!
தங்கத் தம்பியாம் ரால் காஸ்ட்ரோவையும்,
தம்பி போன்ற சேகுவேராவையும்,
அங்கம் வகிக்கச் செய்து
ஆர்த்தெழுந்து போரிட்டு முன்னேறவே;
பங்கமுற்ற பாடிஸ்டா
பயந்து நடுங்கி – இனி

Che Gueveraகியூபா மக்களிடம் தன்
சேட்டைகள் செல்லாதென்று
நீயும் வா என்று ஆணவத்தையும்
அழைத்துக் கொண்டு;

நாட்டை விட்டே ஓடி விட்டான்;
நல்லாட்சி மலர வழி விட்டு!
கேட்டைக் களைந்தெறிந்த காஸ்ட்ரோ;
தலைமை வழி காட்டியானார்!

கடமையும் பொறுப்பும் வந்தவுடன்
கடந்த காலத்தை மறந்து விடாமல்;

சோதனைகளைச் சந்தித்து மறைந்த
ஜோஷ் மார்ட்டியின் தலைமைக்கும்,

சாதனைகள் புரிந்து மறைந்த
சிபாசின் வழிகாட்டுதலுக்கும்,

மதிப்பும் மரியாதையும் அளித்திட
மறக்காத மாவீரர்தான் பிடல் காஸ்ட்ரோ!

‘கியூபா’
சின்னஞ் சிறிய நாடு
ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட
அழகிய தேன் கூடு!

தேன் கூடென்று
ஏன் சொல்கிறேன் தெரியுமா?
தெரியாமல் அமெரிக்கா
கை வைக்கும் போதெல்லாம்
கொட்டி விடும் தேனீக்கள்
கியூபாவின் மக்கள் - அந்தக்
கூடு காக்கும் காவல்காரர்தான்
பிடல் காஸ்ட்ரோ!

நல்வாழ்வுச் சட்டங்கள் பலவும் - மக்கள்
நலம் பெருக்கும் சாதனைகள் பலவும்
இல்வாழ்வையும் துறந்து
இலட்சியத்துக்காக வாழ்ந்திடும்
காஸ்ட்ரோவின்
புகழ்மிகு வரலாற்றின்
பொன்னேடுகளாய்ப்
புதிய புதிய பக்கங்களாய்ப்
புரண்டு கொண்டேயிருக்கின்றன.

உலகின் சர்க்கரைக் கிண்ணம்
எனப் பேசுமளவுக்குக்
கரும்பு வயல்களைக் கொண்ட
கியூபாவில்
சர்க்கரை வாங்குவதையே
நிறுத்திப் பொருளாதாரச்
சரிவு ஏற்படுத்த அமெரிக்கா
ஆயத்தமான போது;
சீனாவும், சோவியத்தும்தான்
சிநேக நாடுகளாய்க்
காஸ்ட்ரோவுக்கு கை கொடுத்த
கதை உலகறியும்!

‘‘வாழை தென்னை மரங்களை
வலிமைமிகு துதிக்கையால்
யானை முறித்துப் போட்டு விடும்
அந்த
யானை போன்றதே அமெரிக்கா’’ என்றனர்.
அதற்கு காஸ்ட்ரோ
அஞ்சி நடுங்கவில்லை.

வாழை மரம்,
தென்னை மரங்களை; யானை,
வாயிலே போட்டுக்
கொள்ளலாம் எளிதாக!
ஆனால் அங்குசத்தை
யானை விழுங்க முடியுமா?
அங்குசந்தான் கியூபா;
அமெரிக்க யானைக்கு!

இந்தியா என்றைக்குமே
கியூபாவின்
இணை பிரியாத் தோழனாகவே
இருந்து வருகிறது-
இனியும் அப்படியே
இருக்கும் - இதற்கு
எங்கள் கழக ஒத்துழைப்பு
எப்போதும் நிலைக்கும்.

இருபது ஆண்டின் முன்னே
இந்தக் கியூபா நாடு
இறுகிய பொருளாதாரத்
தடையால் இன்னலுற்ற போது
இரண்டு கப்பல்களில்
இன்றியமையாப் பொருள்களை
இந்தியா அனுப்பி வைத்து,
நட்புக்கு இலக்கணமாகவும்
நாடுகளிடையே வளர வேண்டிய
நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாகவும்;
நலிவுற்றவரை நசுக்க முனையும்
ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலாகவும்;
அமைந்ததை அகில உலகமே அறியும்-
அதையெண்ணி இன்றைக்கும் மகிழும்!

வெள்ளி விழா ஐ.நா. சபைக்கு
நடந்த போது - பல
நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில்
முப்பத்திரண்டு வயது நிரம்பிய
சிவப்பு நட்சத்திரமாக
முதுபெரும் தலைவர்களால்
பாராட்டப் பெற்றவர் பிடல் காஸ்ட்ரோ

முதற்கட்டமாக
ஸ்பெயின் நாட்டின் காலனி கியூபா-
அடுத்த கட்டம்
அமெரிக்காவின் காலுக்கு அணியாக
ஆகவேண்டும் கியூபா என்று
ஆதிக்கபுரியினர் முனைந்த போது;
அதுதான் முடியாது;
அந்தக் காலையே முடமாக்குவோமென்று-
மக்களைத் திரட்டினார் காஸ்ட்ரோ-

மலைப்புற்ற ஏகாதிபத்தியவாதிகள்;
பின்னங்கால் பிடறியில் இடிபட
ஓடினர் என்றால்; அது
பிடல்காஸ்ட்ரோவின் உறுதிக்கும் - அவரைப்
பின்பற்றும் மக்களின்
மகத்தான சக்திக்கும்;
பின்பலமாய் மார்க்சின்
தத்துவம் இருப்பதற்கும்-
அடையாளம் என்பதை
இந்த அவையோரும் அறிவீர்
அடியேனும் அறிவேன்-

நம் கொடியின் நிறத்திலும் சிவப்பு-
நம் குருதியின் நிறமும் சிவப்பு-
கொள்கையிலும் மாறுபாடில்லை
என்பதில் ஓர் உவப்பு!
கொண்டாடுகிறோம் கியூபா தினம்
என்பதால் பெருங்களிப்பு!

சமதர்மம் சமத்துவத்தைப் பரவச் செய்து;
ஜனநாயகத்தை வளரச் செய்வதே
இந்நாளின் நோக்கம்!

எஃகு உள்ளமும்
இலட்சிய தாகமும்
இழிவுகளைப் போக்கும்-
ஏழைபாழைகள் ஒன்றுபட்டால்
புரட்சி மலர் பூக்கும்!

வாழ்க கியூபா!
வாழ்க பிடல் காஸ்ட்ரோ!

Pin It