Che gueveraகியூபாவில் சன் மார்டின் அதிபராக பதவியேற்ற போது பிடல் காஸ்ட்ரோ இயேசு சபையினர் நடத்திய உயர்நிலை பள்ளியில் கல்வி கற்க சேர்ந்தார். 1944 ல் உயர்நிலை பள்ளி அளவிலான கியூபாவின் சிறந்த விளையாட்டு வீரராக காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டார். தன்னம்பிக்கையும், இலட்சிய உறுதியும் மிக்க காஸ்ட்ரோ பள்ளிப் படிப்பை முடித்து 1945ல் ஹவானா பல்கலைகழகத்தில் பயில துவங்கினார். மாணவப் பருவத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ ஏப்ரல் 8, 1948ல் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியில் கலந்துகொண்டார்.

கியூபாவில் சன் மார்டின் ஆட்சியின் முதற் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அமைந்தாலும் பின்னர் நிழல் உலக தாதாக்களின் குழப்பங்கள் அதிகமாகவும் இருந்தது. இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்ட நிழல் உலகம் சார்ந்தவர்கள் ஹவானாவில் நேசனல் விடுதியில் இரகசிய கூட்டம் நடத்தி படுகொலைகளுக்கு திட்டமிட்டது வாடிக்கையானது. தொடர்ந்து நடந்த தேர்தலில் 1948 அக்டோபர் மாதம் கார்லோஸ் ப்ரியோ சொக்கரஸ் வெற்றி பெற்று அதிபரானார். பாடிஸ்டா லஸ் வில்லாஸ் பகுதியிலிருந்து கியூபாவின் செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

******

யுத்தத்தின் காரணமாக ஸ்பெயினிலிருந்து மருத்துவர் ஜுயன் கொன்சலெஸ் அகுலர் குடும்பத்தினர் 3 குழந்தைகளுடன் அர்ஜெண்டினாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஏர்னெஸ்டோவின் அண்டை வீட்டில் குடியிருந்தனர். ஏர்னெஸ்டோ வீட்டிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பள்ளியில் ஏர்னெஸ்டோவும் அந்த 3 குழந்தைகளும் சேர்ந்து படித்து வந்தனர். இரு குடும்பத்தினருக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தது. மருத்துவர் ஜுயனும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்துகொண்ட ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டு யுத்த அனுபவங்கள் ஏர்னெஸ்டோவுக்குள் விடுதலைக்கான விதையை சிறுவயதில் விதைத்திருந்தது.

பெற்றோர் அரசியல் சூழல் பற்றிய கருத்துக்களை இளம் ஏர்னெஸ்டோவுடன் பகிர்ந்து வந்தனர். ஏர்னெஸ்டோவை பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் இளையோர் அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்தனர் அவரது பெற்றோர். மனான அசியன் அர்ஜெண்டினா என்ற இந்த இயக்கத்தின் கிளையை அந்த பகுதியில் நிறுவியது ஏர்னெஸ்டோவின் தந்தையார். அப்போது ஏர்னெஸ்டோவுக்கு வயது பதினொன்று. அர்ஜெண்டினாவில் நாஜிகள் ஊடுருவலை தடுக்க கூட்டங்கள், நிதிசேகரிப்பு என பலவிதமான நடவடிக்கைகளில் ஏர்னெஸ்டோ பங்கெடுத்தார். அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் பிரதிபலிப்பு ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. தனது 16 வயதில் பாப்லோ நெருடாவின் கவிதைகளால் கவரப்பட்டார் ஏர்னெஸ்டோ. இளம் வயதிலேயே கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" படித்திருந்தார் ஏர்னெஸ்டோ.

***
சொல்!
ரோஜா நிர்வாணமானதா
இல்லை அது தான் அதன் ஒரே ஆடையா?

மரங்கள் ஏன் மறைக்கின்றன
வேரின் மகிமையை?

யார் கேட்கிறார்கள்
களவாடிய வாகனத்தின் வருத்தத்தை?

உலகில் துக்கம் மிகுந்தது எது
மழையில் நனைந்தபடி நிற்கிற புகைவண்டியை விட?

- பாப்லோ நெருடா

***

ஏர்னெஸ்டோவின் தந்தையருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டது. ஒருமுறை அந்த பெண்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகம் செய்தார் தந்தையார், இது ஏர்னெஸ்டோவையும் அவரது தாயரையும் எரிச்சலடைய வைத்தது. அது விசயமாக ஏர்னெஸ்டோ மிகவும் கோபமடைந்திருந்தார். அந்த பெண்ணின் பெயரை கேட்டாலே அவரை கோபம் கொள்ள வைத்தது. இந்த நிகழ்வுகள் ஏர்னெஸ்டோவை அவரது தாயாருகடன் மிகவும் நெருக்கமடைய வைத்தது.

ஆஸ்துமாவின் தாக்கத்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களாலும் ஏர்னெஸ்டோ ஒரு சராசரி மாணவனாகவே திகழ்ந்தார். மனிதவியல் மற்றும் தத்துவ பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றார் ஏர்னெஸ்டோ. ராகத்திற்கும் தாளத்திற்குமுள்ள வேறுபாடு தெரியாதவராகவே வளர்ந்தார். நடனமாடவோ இசைக்கருவிகளை மீட்டவோ தெரியாதவராக இருந்தார்.

Che and Motorcycleசிறுவயதிலேயே பரந்த மனதுடன் அவர் வாழ்ந்த கொர்டொபா வாழ் ஏழைகளுக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளியை அகற்றவும், அடக்குமுறைகளையும் அநீதியையும் எதிர்க்க கடுமையாக முயன்றார். லத்தீன் அமெரிக்காவின் பிற பகுதிகளைப்போல அங்கு புறக்கணிக்கப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தோரும் தகரத்தையும், அட்டை பெட்டிகளையும் அடைத்த வீட்டில் வாழ்ந்தனர். கால்களை இழந்த ஒருவர் அந்த பகுதியில் நாய்கள் இழுக்கிற வண்டியில் பொருட்களை வைத்து விற்று வந்தார். அவரது வீட்டிலிருந்து வீதிக்கு வரும் வழியில் ஒரு பள்ளத்தில் வண்டியை இழுக்க நாய்கள் சிரமப்படுவது வழக்கம். அந்த மனிதர் அவ்வேளைகளில் நாய்களை அடித்து துன்புறுத்தி நடைபாதையில் வண்டியை செலுத்துவார், இது அந்த பகுதி மக்களை எரிச்சலடையை செய்த அன்றாட நிகழ்வு. ஒரு நாள், அந்த பகுதி குழந்தைகள் அந்த மனிதர் மீது கற்களை வீசினார்கள். ஏர்னெஸ்டோவும் அவரது நண்பரும் அந்த காட்சியை கண்டு, குழந்தைகளிடம் தாக்குதலை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால் நன்றி சொல்வதற்கு பதிலாக அந்த மனிதர் ஏர்னெஸ்டோவை வசைபாடி அவர் மீது பணக்காரர்கள் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்தார். இந்த நிகழ்வு தன்னை தாக்குகிற ஏழை குழந்தைகள் எதிரிகளல்ல மாறாக தன்னை பாதுகாக்க முயல்கிற பணக்கார குழந்தைகளே என்ற ஒரு அரிய பாடத்தை கற்றுத் தந்தது.

பொறியியல் படிக்க திட்டமிட்டதை மாற்றி 1947 ல் புயெனெஸ் எயர்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில், தொழுநோய் பற்றி சிறப்பு பாடமாக படித்தார் ஏர்னெஸ்டோ. கல்லூரியில் செயல்பட்ட புரட்சிகர மாணவர் இயக்கத்தில் ஏர்னெஸ்டோ பங்கெடுக்கவில்லை. படித்தவாறு ஒரு மருத்துவமனையில் பகுதி நேர வேலையும் செய்துவந்தார். கல்லூரியில் படித்து வந்த காலங்களில் தனக்கு பிடித்தமான ரக்பி விளையாட்டு விளையாடுவதில் அதிகமான நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாட்டு அவருக்கு உடல் வலுவையும் திட்டமிடும் கலையையும் உருவாக்கியது. இருந்தாலும் ஆஸ்துமா கொடுத்த தொந்தரவால் விளையாட்டு களத்திலிருந்து அடிக்கடி வெளியேறி தனக்குத்தானே ஊசி மருந்தை செலுத்துவது ஏர்னெஸ்டோவுக்கு பழக்கம். விடுமுறை நாட்களில் ஏர்னெஸ்டோ மோட்டார் சைக்கிள் பயணங்கள் போவது வழக்கம்.

ஏர்னெஸ்டோவின் நண்பர் ஆல்பர்டோ கிரானடோ, அர்ஜெண்டினா, கொர்டொபாவில் மருந்துக்கடை வைத்திருந்தார். இருவருமாக ஒரு விடுமுறைநாளில் சந்தித்தபோது லத்தீன் அமெரிக்கா முதல் வட அமெரிக்கா வரையிலான மோட்டார் சைக்கிள் பயணத்தை திட்டமிட்டனர். பயண திட்டத்தின் படி ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து 1 வருட விடுப்பில் டிசம்பர் திங்கள் 1951 இல் பொதெரோசாII என பெயரிடபட்ட நோர்டன் 500சிசி மோட்டர் சைக்கிளில் பயணம் கிளம்பினர்.

(வரலாறு வளரும்)

-திரு

Pin It