பன்னெடுங்காலப் பயிர்கள்
‘சத்து தானியங்கள்’ என்று அழைக்கப்படும் சிறுதானியங்கள் பன்னெடுங்காலமாக நம் மண்ணில் விளைவிக்கப்பட்டு வருவதற்கு ஏராளமான இலக்கியச் சான்றுகள் உள்ளன.
உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்த ஒரு நாளில், புல்வேளூர் என்ற சிற்றூருக்கு வந்தார் ஔவையார். விருந்தினர் வந்தால் ஓடி ஒளிந்து கொள்ளும் மக்களுள்ள அவ்வூரில், பூதன் என்பவன், ஔவையை அழைத்து, அப்போதுதான் வடித்த வரகரிசிச் சோற்றைப் பரிமாறி, மொர மொரவென்று புளித்த மோரை ஊற்றி, ஆவி பறக்கும் கத்தரிக்காய் வதக்கலையும் வைத்து விருந்தோம்பினார். பசியாறிய ஔவை, பூதனைப் புகழ்ந்து பாடிய வெண்பா தமிழ் இலக்கியத்தில் இன்னும் நிலைத்திருக்கிறது.
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமு ரெனவே புளித்த மோரும்-தரமுடனே
பல்வேளூர்ப்பூதன் புகழ்ந்து பரிந்திட்ட சோறு
எல்லா உலகும் பெறும்”.
ஔவையால் பாடப்பட்ட வரகு, குறைந்தது 3000 ஆண்டுகளாக இந்தியாவில் பயிரிடப்படும் சிறுதானியங்களில் ஒன்று.
தினைப்புனம் காத்த குறிஞ்சி நில வள்ளியை, முருகன் காதல் மணம் புரிந்தான் என்பது வழக்காறு. தினைப்புனம் காவல் காக்கத் தலைவி, தோழி இருவரையும் செவிலி அனுப்பிவைக்கும் வழக்கம் உண்டு என்பதை பத்துப்பாட்டின் அங்கமான கபிலரின் குறிஞ்சிப் பாட்டு காட்டுகிறது.
“..துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்
நல்கோள் சிறுதினைப் படுபுள் ஓப்பி
எல்பட வருதியர் எனநீ விடுத்தலின்..” (குறிஞ்சிப்பாட்டு : 37-39)
வரகு, தினை தவிர, சோளம், கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, நாட்டுக் கம்பு, பனிவரகு, காடைக்கண்ணி என எண்ணற்ற சிறுதானியங்கள் நம் மண்ணில் காலம் காலமாக விளைவிக்கப்பட்டு வந்தன.
ஏன் வழக்கொழிந்தன?
பசுமைப் புரட்சிக்குப் பிறகு, இந்திய விவசாயத்தின் முகம் மாறியது. மோட்டார் பாசனத்தையும் பணப்பயிர்களையும் அரசு பெருமளவு ஊக்குவித்ததாலும் பொது விநியோகத் திட்டத்திற்காக நெல்லும் கோதுமையும் மட்டுமே விவசா- யிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதாலும், மக்களின் வேளாண் முறையும் உணவுப் பழக்கமும் மாறி, கடந்த அரை நூற்றாண்டில், கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுதானியங்கள் வழக்கொழிந்தன.
குறிப்பாக 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நம் மானாவாரிப் பகுதிகளை பி.டி.பருத்தியும் மக்காச் சோளமும் ஆக்கிரமிக்கத் தொடங்கி, சிறுதானியங்கள் நம் மண்ணிலிருந்து நீக்கப்பட்டன.
சிறுதானியப் பரப்பு
2010-&11 நிலவரப்படி, 1980களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் பயிரிடும் பரப்பு 71.17 சதவீதமும், சிறுதானிய உற்பத்தி 67.91 சதவீதமும் குறைந்துள்ளன.
2022-&23 இல், தமிழ்நாட்டில் 9.238 லட்சம் ஹெக்டேர் பரப்பில், 36.310 இலட்சம் மெட்ரிக் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக அரசு தெரிவிக்கிறது. இதில் ஏறத்தாழ 30 லட்சம் மெட்ரிக் டன் மக்காச் சோளம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதைக் கழித்து விட்டால், வெறும் 6 இலட்சம் ஹெக்டேர் மட்டுமே வரகு, தினை, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதற்கு நேர் எதிராக, வழக்கமாக தமிழகத்தில் ஏறத்தாழ 21 இலட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
கடந்த 2022-23 தரவுகளின்படி மாநில அளவில் சிறுதானிய உற்பத்தி விவரம் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.![]()
ஆனால், வழக்கொழிந்து வந்த சிறுதானியங்கள், நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்களின் முயற்சியால், மீண்டும் மக்களின் கவனத்தைப் பெறத் தொடங்கியுள்ளன.
ஏன் வேண்டும் சிறுதானியங்கள்?
சிறுதானியங்கள் ஊட்டச் சத்து மிகுந்தவை. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. காலநிலை மாற்றத்தைத் தாக்குப் பிடிக்கும் வல்லமை கொண்டவை. வளம் குறைந்த மண்ணாக இருந்தாலும், குறைவான மழைப் பொழிவு இருந்தாலும் வளரக் கூடியவை. சிறுதானியப் பயிர்களுக்கு வேதி உரங்களோ, பூச்சிக் கொல்லிகளோ அவசியமில்லை. தமிழ்நாட்டில் பரவலாகப் பயிரிடப்படும் மானாவாரிப் பயிர்களான பி.டி.பருத்தி மற்றும் மக்காச் சோளம் ஆகியவற்றைக் காட்டிலும் குறைந்த இடுபொருள் செலவுடன், சிறுதானியங்களைப் பயிர் செய்ய முடியும். இவற்றைப் பராமரிக்க அதிகம் மெனக்கெடவும் தேவையில்லை. எனவே, மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இவை வரப்பிரசாதமாக விளங்குகின்றன என்றால் அது மிகையில்லை.
சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துகள்
அரிசி, கோதுமையைக் காட்டிலும் சிறுதானியங்களில் பல்வேறு நுண்ணூட்டச் சத்துகள் அதிகமுள்ளன. உடல்நலனைப் பாதுகாப்பதில் இந்த நுண்ணூட்டச் சத்துகளின் பங்கு அளப்பரியது. முக்கிய சிறுதானியங்களிலுள்ள ஊட்டச் சத்துகள் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.![]()
சிறுதானிய உற்பத்தி: முன்னிலை வகிக்கும் மூன்று மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சிறுதானியங்கள் உற்பத்தி நடைபெற்றாலும், குறிப்பிட்ட சில சிறுதானியங்கள், சில மாவட்டங்களில் மட்டும் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. 2019-20 தரவுகளின் படி, இதன் விவரம் பின்வருமாறு:
சோளம்
(1) தர்மபுரி
(2) சேலம்
(3) திருச்சி
கம்பு
(1) கள்ளக்குறிச்சி
(2) விழுப்புரம்
(3) தூத்துக்குடி
கேழ்வரகு
(1) கிருஷ்ணகிரி
(2) தர்மபுரி
(3) சேலம்
வரகு
(1) கடலூர்
(2) பெரம்பலூர்
(3) கள்ளக்குறிச்சி
சாமை
(1) திருவண்ணாமலை
(2) தர்மபுரி
(3) திருப்பத்தூர்
தினை
(1) விழுப்புரம்
(2) சேலம்
(3) நாமக்கல்
சிறுதானியங்கள்: சில சவால்கள்
அண்மைக் காலமாகச் சிறுதானியங்கள் மக்களின் கவனத்தைப் பெற்றாலும், அவற்றின் மதிப்புச் சங்கிலியில் சவால்களும் இல்லாமல் இல்லை.
மானாவாரிப் பகுதிகளில், உணவுப் பயிர்கள் பெருமளவு குறைந்துள்ளதால், தினை, குதிரைவாலி, நாட்டுக்கம்பு போன்ற சிறுதானியங்களில் பறவைத் தாக்குதல் அதிகமாக உள்ளது. இது விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்துகிறது. பரவலாகச் சிறுதானியங்களைப் பயிரிடும் போது இந்தப் பாதிப்பைக் குறைக்கலாம் (வரகு, இருங்குச் சோளம் போன்ற சிறுதானியங்களில் பறவைத் தாக்குதல் பிரச்னை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது).
மேலும், நெல்லைப் பதப்படுத்தி அரிசியாக்கும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட இயந்திரங்கள் உள்ளன. ஆனால், சிறுதானியங்களுக்கு இத்தகைய இயந்திரங்களின் தொழில்நுட்பம் தொடக்கநிலையிலேயே உள்ளது.
நகர்ப்புறங்களிலும் நடுத்தர வர்க்கத்தினரும் சிறுதானியங்களை பயன்படுத்தினாலும், பெரும்பாலும் கிராமப்புறங்களிலும் எளியமக்களிடமும் சிறுதானியம் இன்னும் சென்று சேரவில்லை.
முக்கியமாக, சிறுதானியங்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கவலை. அது கிடைத்தால், ஏராளமான விவசாயிகள் சிறுதானியங்களுக்கு மாறுவார்கள் என்பது அனுபவப் பாடம்.
வழிகாட்டும் சத்தீஸ்கர்
வழக்கமாக, சோளம், கம்பு, கேழ்வரகு ஆகிய பயிர்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிறது. பிற சிறுதானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படுவதில்லை. ஆனால், சத்தீஸ்கரில், வரகு, சாமை ஆகிய சிறுதானியங்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டதால், கடந்த சில வருடங்களில் இந்தச் சிறுதானியங்களின் உற்பத்தி பன்மடங்கு பெருகியுள்ளது. மேலும், அங்கே சிறுதானிய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.9000/- ஊக்கத்தொகையும் கிடைக்கிறது.
தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?
சிறுதானிய இயக்கத்திற்கென, 2023-&24 நிதியாண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு 65 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ‘உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு: சத்து தானியங்கள்’ திட்டத்தை 15 மாவட்டங்களில் செயல்படுத்த 30.20 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நியாய விலைக் கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இவையெல்லாம் வரவேற்கத் தக்க முன்னெடுப்புகள் என்றாலும், தமிழ்நாடு அரசு, சிறுதானியங்களைப் பரவலாக்கத் தரமான விதைகள் வழங்குதல், பயிர்ப்பாதுகாப்புக்கான சரியான வழிகாட்டல், சிறுதானியப் பயிர்களில் களையெடுக்கும் கருவி மற்றும் அறுவடைக்கான கருவிகளை வழங்குதல், ஏராளமான சிறுதானியப் பதப்படுத்தும் மையங்களை அமைத்தல், சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் மகளிர் மற்றும் உழவர் குழுக்களை ஊக்குவித்தல், மதிப்புக் கூட்டல் பயிற்சிகள் வழங்குதல் போன்ற இன்னும் பல முயற்சிகளை வலுவாகவும் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, சத்தீஸ்கரைப் போல, ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயித்துள்ள சிறுதானியங்கள் தவிர, வரகு, சாமை போன்ற பிற சிறுதானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிப்பது குறித்து தமிழ்நாடு அரசு தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும். அப்படிச் செய்தால், சிறுதானிய உற்பத்திப் பரப்பு கணிசமாக உயரும்.
ஆனால், கொள்முதல் செய்யும் சிறுதானியங்களை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். முறையாகப் பதப்படுத்தப்பட்ட சிறுதானியங்களை நியாய விலைக்கடைகள், மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி போன்றவற்றில் வாரத்திற்கு ஒருமுறையாவது வழங்கலாம். அரசு மாணவர் விடுதிகளில் பயன்படுத்தலாம். இன்னும் பல செயல்பாடுகளை முன்னெடுக்கலாம். உயரதிகாரிகள், முன்னோடி சிறுதானிய விவசாயிகள், சிவில் சமூகம் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்து, மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு, தொடர்ந்து செயல்பட்டால், சிறுதானிய இயக்கம் தமிழ்நாட்டில் ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அரசியல் உறுதி இருந்தால், கூடுதல் நிதிக்கு என்ன செய்வது போன்ற கேள்விகள் எழாது. தமிழ்நாடு அரசு நினைத்தால் சாதிக்க முடியும்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. - (குறள் 595)
- க. சரவணன்