கண. குறிஞ்சி - உங்களது பெற்றோர் குடும்பப் பின்னணி குறித்துச் சுருக்கமாகக் கூறுங்கள்:
பிரபா கல்விமணி - திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்தில் உள்ள சௌந்தரபாண்டியபுரம் நான் பிறந்து வளர்ந்த கிராமம். பாலையா பிரமு தம்பதியரின் பத்தாவது குழந்தை நான். இராதாபுரம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், சுகப்பிரசவம். ஆனால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இராதாபுரம் கல்யாணி அம்மன் பெயர் வைப்பதாக வேண்டிக் கொண்டதன் அடிப்படையில் கல்யாணி என்ற பெயர் எனக்கு வைக்கப்பட்டது. அப்போது எனக்கு இரண்டு அக்காளும் நாலு அண்ணன்களும் இருந்தனர். கடைக்குட்டியான நான் அனைவருக்கும் செல்லப் பிள்ளை; அப்பாவுக்கு அருகில் உள்ள சமூகரங்கபுரத்தில் தலையாரி வேலை. அப்போது மாதம் ரூபாய் 18 சம்பளம். பூர்வீகச் சொத்து சொற்பமே; குத்தகை விவசாயம்; குடும்பமோ மிகவும் வறுமையான சூழ்நிலைதான். நான் பிறப்பதற்கு முன்பே என்னுடைய மூத்த அக்காள் தாயம்மாளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் கன்னியாகுமரியில் வாழ்ந்து வந்தார். மூத்த அண்ணன் ஆறுமுகம் கன்னியாகுமரியில் ஒரு பலசரக்குக் கடையில் வேலை பார்த்து வந்தார். அடுத்த அண்ணன் மகராசன், மாடசாமி ஆகியோர் குத்தகை விவசாயம் மற்றும் கூலி வேலை. அடுத்த அக்காள் பிரேமா வீட்டு வேலை. நானும் எனக்கு அடுத்த மூத்த அண்ணன் கணபதியும் உள்ளூரில் உள்ள தூய ஞானப்பிரகாசியார் தொடக்கப் பள்ளியில் படித்து வந்தோம்.பள்ளி மற்றும் கல்லூரி வாழ்வு.
உள்ளூரில் ஐந்தாம் வகுப்பை முடித்த பின்பு அருகில் உள்ள கள்ளிகுளத்தில் உள்ள தூய ஞானப்பிரகாசியார். நடுநிலைப் பள்ளியில் நானும் என் அண்ணனும் எட்டாவது வகுப்பு முடித்துவிட்டு கள்ளிகுளத்தில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் நான் ஒன்பதாவது வகுப்பிலும் அண்ணன் கணபதி பத்தாம் வகுப்பிலும் படித்து வந்தோம். அண்ணன் பத்தாவது வகுப்பில் தேர்ச்சியாகவில்லை. அதில் பள்ளி நிர்வாகம் பாரபட்சமாக நடந்து கொண்டது இந்தக் காரணத்தினால் நான் பத்தாம் வகுப்பை என் அப்பா தலையாரி வேலை பார்த்து வந்த சமூகரங்கபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தேன். அண்ணன் கணபதி படிப்பை நிறுத்திவிட்டு விவசாய வேலைக்கு வந்து விட்டார். 11ஆம் வகுப்பு பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு 1963இல் எழுதி தேர்ச்சி பெற்றேன். பின்பு கல்லூரிப் படிப்பை மதுரையில் உள்ள எனது அக்காள் பிரேமா- தங்கப்பன் வீட்டில் தங்கி அமெரிக்கன் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பை 1967 இல் முடித்தேன். கும்பகோணத்தில் ஒரு வருடம் தனிப்பயிற்சி மையத்தில் வேலை: அடுத்து அப்போதைய இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் கல்லூரியில் ஓராண்டு விளக்குனர் (Demonstrator) பணி. அடுத்து 1969 லிருந்து அரசுக் கல்லூரியில் இயற்பியல் துறையில் விளக்குனர் பணி பின்பு 1974&76 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டம் மேற்படிப்பும் 1985&86 இல் எம். பில் படிப்பை முடித்தேன். அடிப்படையில் புரிந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டேன். கடினமாக உழைப்பேன். வகுப்பில் முதல் மூன்று இடங்களில் இருப்பேன். பள்ளி படிப்பு எல்லாம் தமிழ் வழி. கல்லூரி கல்வி எல்லாம் ஆங்கில வழி. அப்போதெல்லாம் அப்படித்தான் இருந்தது.
பேராசிரியர் பணியும் போராட்டங்களும்.
. பட்ட மேற்படிப்பை முடித்த நான் விழுப்புரம் அரசுக் கல்லூரியில் 1976 இல் பணியில் சேர்ந்தேன். அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தில் சேர்ந்து அனைத்துப் போராட்டங்களிலும் ஆர்வமுடன் பங்கேற்றேன். அப்போதுதான் அங்கு பி. எஸ். என். எல் மத்திய அரசு நிறுவனத்தில் சங்கப் பொறுப்பாளராக இருந்த தோழர் அபிமன்யூ, தோழர் சீனிவாசன் ஆகியோர் தொடர்பு மற்றும் நகரத்தில் உள்ள அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களின் தொடர்பு கிடைத்தது. தொடர்ந்து 1981-&ல் இருந்து 1997இல் விருப்ப ஓய்வு பெறும் வரை திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றினேன். ஆசிரியர்களின் எல்லா போராட்டங்களிலும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளேன். மாணவர்களின் நியாயமான போராட்டங்கள் அனைத்திற்கும் நேரடியாக ஆதரவு அளித்து வந்துள்ளேன். தோழமைச் சங்கங்களின் போராட்டங்களுக்கும் கல்லூரி ஆசிரியர் சங்கம் மூலம் ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளேன். குறிப்பாக திண்டிவனத்தில் பள்ளித் திறப்புக் குழு, நகரக் கல்வி மேம்பாட்டு குழு போன்ற அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்து செயல்பட்டதோடு போராட்டங்களிலும் பங்கேற்று உள்ளேன்.
புரட்சிப் பண்பாட்டு இயக்கம், அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக கூறவும்.
விழுப்புரம் அரசுக் கல்லூரியில் பணியாற்றியபோது 1976-1980 களில் அனைத்து இடதுசாரி இயக்கத் தோழர்களுடன் தொடர்பு கிடைத்தது. இளம் வயதிலிருந்து கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, திமுக ஆதரவு நிலையிலிருந்து வந்த எனக்குத் தேசிய இனப் பிரச்சனையில் அதிக ஈடுபாடு இருந்தது. இதில் இந்திய பொதுவுடமைக் கட்சிகள் சரியான நிலைபாடு எடுக்கவில்லை என்பது எனது கருத்து. இதனால் தேசிய இனப் பிரச்சனையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் இடதுசாரி இயக்கங்களோடு இணைந்து செயல்பட விரும்பினேன். அதனை மாணவர்கள் மத்தியிலும் ஆர்வமுள்ள இளைஞர்கள் மத்தியிலும் எடுத்துச் செல்ல முயற்சித்தேன். ஞானசூரியன், த. பாலு, அண்ணாதுரை, அன்பாதவன், இரவி கார்த்திகேயன் போன்றோர் அடங்கிய குழு உருவானது. அதன் தொடர்ச்சியாகப் பேராசிரியர் பழமலை தலைமையிலான "நெம்புகோல்" உருவானது இதில் பேராசிரியர் சே. கோச்சடை, அ. மார்க்ஸ் கோ. கேசவன் அப்போது புதுவையில் பணியாற்றி வந்த ரவிக்குமார் மற்றும் கோ. சுகுமாரன் நெய்வேலியில் பணியாற்றி வந்த சி. துரைக்கண்ணு இப்படிப் பலருடைய தொடர்பு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக 1982-83 இல் மாநில அளவில் புரட்சிப் பண்பாட்டு இயக்கம், அகில இந்திய அளவில் "அனைத்திந்திய புரட்சிப் பண்பாட்டு இயக்கங்களின் கூட்டமைப்பு" ஆகியவற்றில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில்தான் அப்போதைய அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும் தற்போதைய புதுமலர் ஆசிரியருமான கண. குறிஞ்சி அவர்களின் தொடர்பும் கிடைத்தது. சென்னையில் இல. கோவிந்தசாமி இப்படி எல்லோருடனும் பணியாற்றும் பெரும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றேன். இதன் தொடர்ச்சியாக 1985இல் சென்னையில் சாதியும் வர்க்கமும் என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்கம் எனப் பல மாநிலங்களில் இருந்து எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எல்லாம் கலந்து கொண்டு மேலான பங்களிப்பை அளித்தனர். புரட்சிகர எழுத்தாளர் வரவரராவ், கே. வி. ரமண ரெட்டி, கத்தார் போன்றோரெல்லாம் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆந்திரா உள்ளிட்டு வட மாநில அரசுகளின் அடக்குமுறைகளைக் கண்டித்து வரவரராவ் கத்தாருடன் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டோம். செந்தாரகை என்னும் மாத இதழ் புரட்சிப் பண்பாட்டு இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டது. அதன் மூலம் இளம் படைப்பாளிகள் பலர் ஊக்குவிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற பகுதிகளில் நக்சல்பாரி இயக்கத்தின் மீது காவல்துறையினர் நடத்திய கடும் தாக்குதல்களைக் கண்டித்து பிரச்சார இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல ஜனநாயக சக்திகளோடு நல்ல தொடர்பு ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் எஸ். வி. ஆர் போன்ற தோழர்களின் நட்புக் கிடைத்தது. அப்போதும் மத்திய அரசு கொண்டு வந்த தடா சட்டத்தைக் கண்டித்துப் பேராசிரியர் தீரன் தலைமையில் டி. எஸ். எஸ். மணி போன்ற தோழர்கள் இணைந்து அடக்குமுறைச் சட்ட எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் தமிழகமெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். எல்லாப் பணிகளையும் சரியான முறையில் இப்போது என்னால் நினைவு கூற முடியவில்லை.
மக்கள் பாடகர் கத்தார் குறித்து உங்கள் பதிவுகள்.
புரட்சிப் பண்பாட்டு இயக்கம் மூலமாக ஆந்திராவில் அப்போது செயல்பட்டு வந்த ஜனநாட்டிய மண்டலி என்ற அமைப்பின் தொடர்பு கிடைத்தது. அப்போதுதான் எழுத்தாளர் வரவரராவ், கேவிஆர் போன்றவர்களோடு புரட்சிப் பாடகர் கத்தார் அவர்களின் தொடர்பும் கிடைத்தது. கலைஞர்களுக்கே உரித்தான வெகுமக்கள் மத்தியில் நிகழ்ச்சி நடத்துவதில் மிகவும் விருப்பமாக இருப்பார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பிருந்தே மேடையில் தான் பங்கேற்கப் போகும் நிகழ்ச்சியைப் பற்றியே சிந்திப்பார்; திட்டமிடுவார். சுற்றுப்பயணங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழுவினருடன் சேர்ந்து பயிற்சி மேற்கொள்வார். அதையெல்லாம் நாம் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் இரயில் பயணத்தையே அதிகம் விரும்புவார். இரயில் பயணத்தில் கிடைக்கும் கழிவறை வசதி பேருந்தில் கிடையாது என்பதை குறிப்பிடுவார். போகும் இடங்களில் எல்லாம் தோழர்கள் வீட்டில் சமைத்த உணவையே அதிகம் விரும்பிச் சாப்பிடுவார். எல்லோரிடமும் தோழமையுடன் அன்புடனும் பழகுவார். எந்த ஒரு கிராமத்திலும் குடிசைகளில் தங்குவதையே பெரிதும் விரும்புவார். ஆடம்பரமான விடுதிகளில் தங்குவதை விரும்ப மாட்டார். எப்போதும் மக்களோடு மக்களாகவே இருக்க, பழக விரும்புவார்.
ஆசிரியர் சங்கங்களில் உங்களது அனுபவங்கள்.
விழுப்புரத்தில் 1976 இல் பணிக்கு வந்த போதுதான் ஆசிரியர் இயக்கங்களில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டமே அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு உந்து சக்தியாக விளங்கியது. அவர்கள்தான் பல போராட்டங்களை முன்னெடுப்பார்கள். அதேபோல் அனைத்திந்திய அளவில் இடதுசாரி இயக்கங்களின் தலைமையிலான ஆசிரியர் போராட்டங்கள் எல்லோருக்கும் ஓர் உந்து சக்தியாக விளங்கியது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடத்திய போராட்டங்களில் ஆசிரியர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். அந்தப் போராட்டங்களின் மூலம் அப்போது எங்களுக்குப் பணிப் பாதுகாப்புக் கிடைத்தது. அதன் காரணமாகவே எங்களால் கல்வி நிறுவனங்களிலும் பொதுத் தளத்திலும் பணியாற்ற முடிந்தது. இந்தப் போராட்டங்களில் எல்லாம் கல்வி நலன், மாணவர் நலன் என்று வரும்போது ஆசிரியர் இயக்கங்களின் அணுகுமுறையில் நான் சில முரண்பாடுகளை எதிர்கொண்டேன். எடுத்துக் காட்டாகச் சில ஆசிரியர்கள் வகுப்பிற்கு நேரத்திற்கு வருவதில்லை; தங்கள் ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்வதற்கு அக்கறை எடுத்துக் கொள்வதில்லை ; சில கல்லூரி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் விதிகளை மீறி வீட்டில் தனிப்பயிற்சி மேற்கொள்வதை ஆசிரியர் இயக்கங்கள் கண்டு கொள்வதில்லை. இது போன்று தனிப்பயிற்சி எடுப்பது ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனுக்கு எதிராக இருப்பதோடு மட்டுமல்லாமல், அடிப்படையில் கற்பித்தல், கற்றல் முறைக்குத் தீங்கு விளைவிப்பதாகும். இதனை எதிர்த்துத் திண்டிவனம், நெய்வேலி, தஞ்சாவூர் பகுதிகளில் தனிப்பயிற்சி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தியுள்ளோம். அது போல் பயிற்று மொழி பிரச்சனையில் பெரும்பாலும் யாரும் அதிக கவனம் எடுத்துக் கொள்வதில்லை. அதன் விளைவு இன்று ஆங்கில மோகத்தின் காரணமாகத் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகி வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தனியார் மயம் வணிகமயக் கொள்கையால் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இன்று தமிழகத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் பாதுகாப்பற்ற முறையில் கொத்தடிமைகளாகப் பணியாற்ற வேண்டிய அவல நிலை உள்ளது. அவர்களிடம் பயிலும் மாணவர்கள் எவ்வாறு சுதந்திர காற்றை சுவாசிக்கக் கற்பிக்கப்படுவார்கள் என்பது கேள்விக்குறியே. ஆனால் இதனை எல்லாம் கணக்கில் கொண்டு பேராசிரியர் முனைவர் வீ. அரசு, ப. சிவக்குமார், இரா. முரளி, கண. குறிஞ்சி, உமா மகேஸ்வரி போன்றவர்கள் மக்கள் கல்விக் கூட்டியக்கம் எனும் அமைப்பைத் தொடங்கி இருப்பது கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
நீங்கள் தொடங்கிய திண்டிவனம் நகரக் கல்வி மேம்பாட்டுக் குழுவின் செயல்பாடுகள் மற்றும் அதன் எதிர்வினைகள்.
1986-இல் திண்டிவனத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையின் போது சட்ட விரோதமாகப் பண வசூல் நடைபெற்றது. இதனால் ஏழை எளிய பெற்றோர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அதுவரை அரசுப் பள்ளியே இல்லாத திண்டிவனத்தில் ஓர் அரசுப் பள்ளியின் தேவை உணரப்பட்டது. இதற்காக மருத்துவர் இராமதாஸ் அவர்களின் தலைமையில் ஒரு பள்ளித் திறப்புக் குழு உருவானது. அதன் செயலாளர் வழக்கறிஞர் த. பவணந்தி, பொருளாளர் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரசன்ன வெங்கடாஜலபதி. இதில் கல்வியில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சி மற்றும் சாதியைச் சேர்ந்த நகரப் பிரமுகர்கள் 14 பேர் உறுப்பினர்கள். நகர மக்கள் சார்பில் ரூபாய் 22, 500 கல்வித்துறைக்கு கட்டிய பின்பு திண்டிவனத்தில் உள்ள முருங்கப்பாக்கம் நகராட்சி நடுநிலைப்பள்ளியை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தத் திண்டிவனம் நகாராட்சியின் நகர மன்றத் தீர்மானம் தேவைப்பட்டது. அப்போதைய நகர மன்றத் தலைவரும் ஒன்றுபட்ட தென்னாற்க்காடு மாவட்ட அதிமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி. ஹிராசந்த் அதனை எதிர்த்தார். இந்த சமயத்தில்தான் நகர மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கப் பிரமுகர்களைக் கொண்ட ஓர் அமைப்புத் தேவைப்பட்டது. அந்த அடிப்படையில் பகுத்தறிவாளர் கழகத் தலைவரும் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி வந்தவருமான வ. சு. சம்பந்தம் அவர்களின் தலைமையில் நகரக் கல்வி மேம்பாட்டு குழு தோற்றுவிக்கப்பட்டது. தொடர் போராட்டத்தில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் 14 பேர் மற்றும் பள்ளித் திறப்புக் குழு உறுப்பினரும், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் என். வி. நடராஜன் ஆதரவோடு நகர மன்றத்தில், நகர மன்றத் தலைவர் எதிர்ப்பையும் மீறித் தீர்மானம் வெகுமக்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. பின்பு அந்த அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி முன்னாள் முந்தைய அதிமுக ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்த சி. வி. சண்முகம் அவர்களின் முயற்சியால் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. நகரக் கல்வி மேம்பாட்டு குழு, கல்விக் பிரச்சனை மட்டுமல்லாது மனித உரிமை பிரச்சனைகள், மற்றும் திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட பிள்ளையார் கோவில் எதிர்ப்பு என பல்வேறு தளங்களிலும் அதன் பணி விரிவடைந்தது பேராசிரியர்கள் ப. சிவகுமார், மு. திருமாவளவன் போன்றோர் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் விளைவாக 1989-இல் தமிழக அளவில் மக்கள் கல்வி இயக்கம் உருவானது.
1994 இல் திண்டிவனம் நகர மற்றும் ஊரகக் கல்வி மேம்பாட்டு கழகம்
1996 இல் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
2000 இல் திண்டிவனம் மத நல்லிணக்கக் குழு,
2000 இல் திண்டிவனம், ரோஷணையில் தாய்த் தமிழ்ப் பள்ளி
2007 இல் பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை
போன்ற பல அமைப்புகள் தோன்றுவதற்கு இது காரணமாயிற்று.
புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் மாநில அளவில் இணைந்து செயல்பட்டு வந்த பேராசிரியர் கோச்சடை, எழுத்தாளர் ரவிக்குமார், புதுக்கோட்டை கு. தர்மலிங்கம் கும்பகோணம் பொதியவெற்பன், நெடுவாக்கோட்டை ராஜேந்திரன், விழுப்புரம் பேராசிரியர் த. பழமலை மற்றும் இரவி கார்த்திகேயன், அண்ணாதுரை, புதுச்சேரி கோ. சுகுமாரன், ஈரோடு கண. குறிஞ்சி மற்றும் கோ. கேசவன் ஒத்துழைப்புடன் இணைந்து செயல்பட்டு வந்தோம்.
தொடர்ந்து தடா எதிர்ப்பு அடக்குமுறைச் சட்ட எதிர்ப்பு இயக்கம், 2000 இல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு போன்ற இயக்கங்களில் திண்டிவனம் சார்பில் பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டியது. இதனால் காவல்துறை மற்றும் கல்வித்துறை தொடுத்த பல பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அவற்றையெல்லாம் வெகு மக்கள் ஆதரவோடும் வழக்கறிஞர்கள் பொ. இரத்தினம், சத்தியச்சந்திரன், அப்போதைய மூத்த வழக்கறிஞர் கே. சந்துரு போன்றோரின் ஆதரவோடும் எதிர்கொள்ள முடிந்தது. இன்றளவும் இந்த அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
மக்கள் கல்வி இயக்கத்தின் தோற்றம்/ அதன் சாதனைகள்.
. புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலில் தொடர்ந்து மக்கள் கல்வி இயக்கம் என்ற ஓர் அமைப்பைப் பேராசிரியர் அ. மார்க்ஸ், சே. கோச்சடை, நெடுவாக்கோட்டை இராஜேந்திரன், புதுக்கோட்டை கு. தருமலிங்கம் ஆகியோர் கூடி விவாதித்துத் தொடங்கினோம். அதன் சார்பில்
(1) மக்கள் கல்வி இயக்கம் ஏன்?
(2) இசுலாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்
(3) பயிற்று மொழி தமிழா ? ஆங்கிலமா?
(4) பெண் கல்வி
(5) அம்பேத்கரின் போர்க் குரல்
(6) வரலாறும் மதவாதமும்
(7) மண்டல் குழு அறிக்கையும் இட ஒதுக்கீட்டின் அவசியமும்
ஆகிய குறு நூல்களை, குறைந்த பக்கங்களுடன், மலிவு விலையில் வெளியிட்டு விரிவான பிரச்சாரங்களை மேற்கொண்டோம். மக்கள் கல்வி இயக்கமும் கல்வி பிரச்சனைகளோடு மனித உரிமைப் பிரச்சினைகளிலும் பங்கேற்று வந்தது. தமிழ் வழிக் கல்வி மாநாடு, தனிப் பயிற்சி எதிர்ப்பு மாநாடு , தலித் ஆதரவாளர்கள் மாநாடு எனப் பல மாநாடுகளைப் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்தியுள்ளோம். அது போல் அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் பரவலாக பிரச்சாரம் மேற்கொண்டோம்.
சமச்சீர்க் கல்விக்கான போராட்டங்கள்.
இதில் திண்டிவனம் பகுதிகளுளிலும், மாவட்டம் மற்றும் மாநில அளவிலும் நடைபெற்ற போராட்டங்களில் பங்கு பெற்றதோடு எழுத்தாளர் பூவிழியன் அவர்களோடு இணைந்து சமச்சீர் கல்வி 80 நாள் போராட்டப் பதிவுகள் என்ற நூலினை வெளியிட்டோம். சமச்சீர் கல்விப் போராட்டம் தொடர்பாக வெளிவந்த நாளிதழ்ச் செய்திகளை தொகுத்து மக்கள் கல்வி இயக்க வெளியீடாகக் கொண்டுவரப்பட்டது.
தொடக்கத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தீர்களா? பிறகு நீட் தேர்வுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்ந்ததின் பரிணாமம்:
நீட் எதிர்ப்பு இயக்கத்தில் தொடக்கத்தில் பதின்மப் பள்ளிகள் உள்ளிட்டு அனைத்து வணிகக் கல்வி நிறுவனங்களும் பங்கேற்றனர். அப்போது அனைவரும் முன்வைத்த வாதங்கள் நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது என்பதும்தான். ஆனால் அதற்கு முந்தைய பத்து ஆண்டுகளின் சராசரியைப்பார்த்தால் அரசு பள்ளியிலிருந்து மருத்துவக் கல்விக்குத் தேர்வானவர்கள் 1. 2 % மட்டுமே ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 4 % தேர்வு ஆகி இருந்தனர். அதாவது ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 70% மாணவர்களில் மிகக்குறைந்த விழுக்காடு மாணவர்களுக்கே மருத்துவப் படிப்பில் இடங்கள் கிடைத்து வந்தது. அனைத்து இடங்களையும் 30% ஆக உள்ள தனியார் பள்ளி மாணவர்களே பெற்று வந்தனர்.
முன்பு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தனியார் பள்ளிகளில் முதலாம் ஆண்டு பாடங்களை நடத்தாமல் முதல் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டுக்கான பாடங்களை நடத்தி வந்தார்கள். எனவே தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்து எழுதும் தேர்வினை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஓர் ஆண்டு மட்டுமே படித்து எழுதும் நிலை. இந்தக் கல்வி மோசடியால்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் தேர்வாகவில்லை.
நீட் தேர்வில் இரண்டு ஆண்டுகள் பாடங்களிலிருந்தும் சம அளவில் கேள்விகள் கேட்கப்படும் போது, அதிலும் குறிப்பாகத் தேர்வு தமிழிலும் எழுதும் வாய்ப்பு உள்ளதால் சிறப்பாக எழுதி அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு தேர்வாகும் வாய்ப்புக் கூடும் என்று கருதினேன். ஆகையால்தான் நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தேன்.
ஆனால் அரசுப் பள்ளிகளிலும் முதல் ஆண்டுப் பாடங்களை நடத்தாமல் அக்கறையின்றி இருந்துள்ளார்கள். நான் எதிர்பார்த்தபடி நீட் தேர்வில் அவர்கள் வெற்றி பெற இயலவில்லை. மேலும் நீட் தேர்வில் ஒன்றுக்கு மேற்பட்டு 3 முறை திரும்ப தேர்வு எழுதும் வாய்ப்பு உள்ளதால் வசதி படைத்தோர் அதனைப் பயன்படுத்திப் சிறப்புப் பயிற்சி பெற்று தேர்வாகிறார்கள். எதிர்பார்த்தபடி நீட் தேர்வு நடைமுறையில் மீண்டும் ஏழை எளிய மாணவர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் நீதிபதி கலையரசன் குழு பரிந்துரை வந்த பின்பு இப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7. 5% உள் ஒதுக்கீடு கிடைத்தமையால் வருடத்துக்கு 400&க்கும் மேல் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்கிறார்கள். தற்போதைய நிதித்துறை செயலாளரும் முன்னாள் கல்வித்துறை செயலாளருமான உதயச்சந்திரன் அவர்கள் எடுத்த முயற்சியினால் முதல் ஆண்டு பொதுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த மதிப்பெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது கிடையாது.
தமிழகத்தின் முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் பலர் கல்வி வணிகர்களாக உள்ள நிலையில், இப்போதும் தொடர்ந்து ஏழைஎளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அக்கறை உள்ளவர்கள் விரிவாக விவாதிக்க வேண்டும்.
உடனடித் தீர்வாக உயர்கல்விச் சேர்க்கையில் விகிதாச்சாரப் பகிர்வு முறையைச் செயல்படுத்தலாம்.
அதன்படிக்கு
1) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 55 %
2) அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 15 %
3) பதின்மப் பள்ளி மாணவர்களுக்கு 25 %
4) சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு 4. 5%
5) ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு 0. 5 %.
என விகிதாச்சாரப் பகிர்வு அளிக்கப்பட்டு அதில் தற்போதைய இட ஒதுக்கீட்டுமுறை பின்பற்றப்பட வேண்டும். கூடுதலாக கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
தாய்த் தமிழ்ப் பள்ளியைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தும் நீங்கள் அதன் வெற்றி எப்படி சாத்தியமானது என்பது குறித்துத் தெளிவுபடுத்தவும்:
முதலில் தாய்த் தமிழ்ப் பள்ளியை நான் நடத்தவில்லை; திண்டிவனம் நகர மற்றும் ஊரகக் கல்வி மேம்பாட்டுக் கழகம் என்னும் கல்வி அறக்கட்டளைதான் பள்ளியை நடத்திவருகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
திண்டிவனத்தில் 1986-இல் இருந்து தொடர்ந்து கல்விக்காக நடைபெற்ற வெகுசன போராட்டங்களின் தொடர்ச்சியாகவே மேற்படி அறக்கட்டளை 1994 இல் தோற்றுவிக்கப்பட்டது. தினமணி நாளிதழில் திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளியைப் பற்றிய செய்தியைப் பார்த்து உந்துதல் பெற்று இப்பள்ளியை 01. -08-. 2000 இல் தொடங்கினோம். மொட்டு, மலர் வகுப்புகளில் 21 குழந்தைகள், 1 ஆசிரியர், ஒரு தாயம்மாளுடன் பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது மழலையர் பிரிவில் 44 மாணவர்களும், 1 முதல் 8 ஆம் வகுப்புகளில் 216 மாணவர்கள் என மொத்தம் 260 குழந்தைகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்ளிட்டு 11 ஆசிரியர்கள் மற்றும் 9 பணியாளர்களுடன் பள்ளி செவ்வனே செயல்பட்டு வருகிறது.
பள்ளியின் வெற்றிக்கான காரணங்கள் என சொல்ல வேண்டுமெனில், (அ) பள்ளிக்கு ஒரு வெகுசனச் சார்பு உள்ளது அல்லது வெகுசன அடிப்படை உள்ளது என்று கூறலாம். (ஆ) அடுத்ததாக திண்டிவனத்தில் ஏழை எளிய தலித் மக்கள் வாழும் பகுதியில் பள்ளி அமைந்துள்ளதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழில் பயிலச் சேர்க்கத் தயங்குவதில்லை, (இ) ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணியின் காரணமாக தரமான கல்வி வழங்கப்படுகிறது. பக்கத்தில் உள்ள ஆங்கில வழிப் பள்ளியில் பயின்று வரும் 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர்களைப் பெற்றோர்கள்' தாய்த் தமிழ்ப் பள்ளியின் தரமான கல்வி பற்றி தெரிந்து இப்பள்ளியில் வந்து சேர்க்கிறார்கள், (ஈ) அனைத்து மாணவர்களுக்கும் இலவயக் கல்வி, தரமான மதிய உணவு, மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மழலைகளுக்குக் காலையில் சத்து மாவுக் கூழ், மாலையில் முளைகட்டிய பயிறு வகை என கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது, (உ) தரமான இலவயக் கல்வியுடன் வெகுமக்கள் மத்தியில் வெளிப்படையாக வரவு செலவுக் கணக்குகளைத் துண்டறிக்கையாக அச்சடித்து விநியோகித்தல் போன்ற காரணங்களால் பள்ளிக்கு விரும்பி வந்து நிறையப் பேர் நன்கொடை வழங்குகிறார்கள், (ஊ) பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வெகுமக்கள் குறிப்பாக பெற்றோர்களின் கருத்தை அறிந்து தேவையான மாற்றங்களை செய்து வருகிறோம், (எ) வகுப்பறைத் தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் பள்ளியில் மிகவும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையோடும் பயின்று வருகிறார்கள், (ஏ) ஓய்வு பெற்ற நல்ல ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கு அடிக்கடி தேவையான வழிகாட்டல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன, (ஐ) திண்டிவனம் நகராட்சி எல்லைக்குள் பள்ளிக்காக, பள்ளியைச் சுற்றி 89 சென்ட் நிலம் உள்ளது. தேவையான கட்டட வசதி மற்றும் உள்கட்டமைப்பு, கழிப்பிட வசதி போன்ற அனைத்து வசதிகளும் பள்ளியில் உள்ளதால், பெற்றோர்கள் இப்பள்ளியை அதிகம் விரும்புகிறார்கள் (ஒ) நாங்கள் கட்டணக் கல்வியை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்துள்ளதால், நாங்கள் இலவயக் கல்வியுடன் தரமான மதிய உணவு மற்றும் சீருடைகள் வழங்கிவருகிறோம். இதனை நகர மக்கள் ஆதரவுடன் செய்துவருகிறோம்.
அத்தியூர் விஜயா குறித்த உங்களது பதிவுகள்.
அத்தியூர் விஜயா என்பவர் ஒரு பழங்குடி இருளர் பெண். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அத்தியூர் கிராமத்தில் மாசி-தங்கமா தம்பதியினரின் அன்பு மகள். கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளில் நலிந்த பிரிவினரான இருளர்களை சித்திரவதை செய்து சிறையில் அடைப்பது என்பது காலம் காலமாக நடந்து வரும் ஓர் அநியாயமாகும். அப்படித்தான் புதுச்சேரியில் 1993இல் வெங்கட்டா நகரில் ஒரு திருட்டுச் சம்பவம் நடந்தது. அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்ப்பதற்கு புதுச்சேரி காவல்துறை, தமிழக காவல்துறைத் தனிப்பிரிவு உதவியோடு அத்தியூர் சென்றுள்ளார்கள்; அத்தியூர் விஜயாவை அவர் உறவினர் வீட்டை காண்பிக்க அழைத்துச் செல்லும்போது அவரை ஐந்து காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்தார்கள். இது பத்திரிகை செய்தியானது. செஞ்சி வழக்கறிஞர் செல்வராஜ் தலைமையில் உண்மை அறியும் குழு சென்று ஆய்வு செய்து அறிக்கை வெளியானது. சிபிசிஐடி புலன் விசாரணை நடைபெற்றது. வழக்கில் விஜயா மற்றும் அவரது உறவினர்கள் நன்கு சாட்சியம் அளித்தனர். விசாரணையின் முடிவில் 2006 ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. குற்றம் சுமத்தப்பட்ட ஆறு காவலர்களுக்கும் தண்டனை அளித்து விழுப்புரம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது.
சம்பவம் நடந்த 1993 இல் விஜயா வயது 17. காவல் துறை மற்றும் ஆதிக்க சாதியினரால் பாதிக்கப்பட்ட தன் உறவினர்களை திண்டிவனத்திற்கு அழைத்து வந்து புகார் கொடுக்க அவர்களுக்கு உதவினார். இப்படி 1993 இலிருந்து 96 வரை பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மூலம் பெறப்பட்டது. அதன் பிறகுதான் 1996 இல் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் உருவானது. வழக்கு விசாரணையில் தொடர்ந்து உறுதியாக இருந்து வந்தார். புதுச்சேரி போலீசார் ரூபாய் ஐந்து இலட்சம் வரை கொடுக்க முன்வந்த போதும் அதை ஏற்க மறுத்து நல்ல முறையில் சாட்சியம் அளித்தார். அதனால்தான் ஆறு காவலரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றனர். ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடு போன்றவற்றில் பங்கேற்பதில் ஆர்வமுடன் இருந்தார். பாதிக்கப்பட்ட இருளர்களை அழைத்துக் கொண்டு காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று கேள்வி கேட்பார். பிற பணிகளுக்காக அத்தியூர் செல்லும் போதெல்லாம் நல்ல முறையில் தேனீர் சிற்றுண்டி அளித்து உபசரிப்பார். அவர் 2014 இல் 40&ஆவது வயதில் காலமானது பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.
எழுத்தாளர் முனைவர் து. ரவிக்குமார் ஆலோசனையின் பேரில், வழக்குகளில் இறுதிவரை உறுதியாக நின்று போராடும் இருளர்களுக்கும், பழங்குடியினருக்காகப் பணி செய்துவரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அத்தியூர் விஜயா நினைவு விருது வழங்கப்பட்டு வருகிறது.
நீங்கள் சந்தித்த பிற வழக்குகள் மற்றும் அதன் முடிவுகள்.
1992- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொன்னூர் கிராமத்தில் உள்ள தலித் மக்களின் உரிமைப் போராட்டத்தில் இரு சமூகங்களுக்கு இடையே பகைமை உருவாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் 31 ஆண்டுகள் ஆன பின்பும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
1993 - விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக திண்டிவனத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். 17 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் 2010ல் விடுதலை கிடைத்தது. 1998 இசுலாமியருடன் சேர்ந்து சதி செய்ததாக என்னோடு ஒன்பது பேர் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டோம். விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பின்பு விடுதலை கிடைத்தது.
2000 திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தில் பிள்ளையார் சிலை வைத்ததை முன்னிட்டு திராவிடர் கழக நகரத் தலைவர் கா. மு தாஸ் , மற்றும் ஆசிரியர் மு. கந்தசாமி ஆகியோருடன் சென்று எதிர்ப்புத் தெரிவித்தமைக்காக நான் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். மூவர் மீதும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கில் பின்பு மூவருக்கும் விடுதலை கிடைத்தது.
2002 - திண்டிவனம் பட்டணம் கிராமத்தில் தண்ணீர் பிடிக்கச் சென்ற இடத்தில் இருளர் இனப் பெண் தாக்கப்பட்ட வழக்கில் கட்டப்பஞ்சாயத்திற்கு உடன்படாததால் இருளர் ஒருவரை நான் தாக்கச் சென்றதாகப் பொய் வழக்குப் போட்டனர். இதனைக் கண்டித்து விழுப்புரத்தில் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு வி. சி. க தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடத்தப்பட்டது. இதனையடுத்துப் பொய் வழக்கைக் காவல் துறை திரும்பப் பெற்றது.
2010 - சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றமைக்கு இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இதில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
2011 - திருக்கோயிலூர் தி. கே. மண்டபத்தில் நான்கு இருளர் பெண்கள் காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் மேற்படிப் பெண்களுக்குச் சட்டரீதியாக உதவி செய்தமைக்காக விழுப்புரம் மனித உரிமை ஆர்வலர் பி. வி. ரமேஷ் உடன் நானும் சேர்ந்து பழங்குடி இருளர் ஒருவரைத் தாக்கியதாக எங்கள் இருவர் மீதும் எஸ். சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் 2022 இல் சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
2019 - திண்டிவனம் அருகே உள்ள மயிலம் காவல் நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்ட பழங்குடி இருளர் மோகன் என்பவருக்குப் புகார் எழுத உதவியமைக்காக மோகன், சங்கத்தின் முகாம் தலைவர் பெரியபையன், எழுத்தாளர் முருகப்பன் மற்றும் நான் ஆகிய நால்வரும் மோகன் மனைவி ரோஜாவைத் தாக்கியதாக வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தற்சமயம் திண்டிவனம் நீதித்துறை நடுவர் மன்றம்- 2 இல் நடைபெற்று வருகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கின் பின்னணி.
2000 வாக்கில் கன்னட நடிகர் இராஜ்குமார் வீரப்பன் குழுவினரால் கடத்தப்பட்டார். அப்போது அவருடன் இராஜ்குமார் மனைவியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கடத்தப்பட்டார்கள். இச்சம்பவம் தமிழகம் கர்நாடகா எல்லையிலும் கர்நாடகத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத சூழலில் வீரப்பன் குழுவினரால் ஐயா பழ. நெடுமாறன் தலைமையில், நான், புதுவை கோ. சுகுமாரன், கொளத்தூர் மணி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் நாடு, கர்நாடகா அரசு சார்பில் நாங்கள் வீரப்பன் குழுவினரைச் சந்திக்கச் சென்றோம். வீரப்பன் குழுவினர் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் மனித உரிமைகள் சார்ந்த கோரிக்கைகள் ஆகும்.
அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் இரண்டு முக்கியமானவை. வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட கர்நாடக - தமிழக கூட்டு அதிரடிப்படை செய்த அட்டூழியங்கள் கொடூரமானவை. 100 பேர் போலி மோதலில் கொல்லப்பட்டனர். 60 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் ஊனமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இவை அனைத்தும் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சாமல் கூறிய விவரங்கள் ஆகும். இப்படியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நீதிபதி சதாசிவா தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. நீதிபதி சதாசிவ ஆணைய விசாரணைக்குக் கர்நாடக அதிரடிப்படை காவல் அதிகாரி உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கி இருந்தார். இத்தடையை நீக்கி நீதிபதி சதாசிவ ஆணையம் விசாரணை முடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை. இராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பின்னர் அத்தடை நீக்கப்பட்டு, மாதேஸ்வரன் மலையில் நீதிபதி சதாசிவம் ஆணையம் நான்கு நாட்கள் விசாரணை மேற்கொண்டது. நானும், கோ. சுகுமாரன் இருவரும் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆணையத்தில் சாட்சியம் அளிக்க உதவியாக இருந்தோம். நீதிபதி சதாசிவா ஆணையம் விசாரணை முடித்து அறிக்கை அளித்தது. பின்னர், கர்நாடக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக அல்லாமல், ஓரளவிற்கு நிவாரணம் வழங்கியது.
அடுத்து கர்நாடகா மைசூர் சிறையில் 124 தமிழர்கள் வீரப்பனுக்கு உதவியதாகத் தடாச் சட்டத்தில் சிறையில் இருந்தனர். இதில் 14 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட வேண்டும் என்பது மற்றொரு முக்கிய கோரிக்கை. இராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பின்னால், நீதிபதி கிருஷ்ணப்பா தலைமையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து நான்கு பேர் தவிர அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. நால்வரும் இறந்து போய்விட்டனர். தடாவில் ஒன்பதரை ஆண்டுகள் மைசூர் சிறையில் வாடினர்.
வீரப்பனுடனான உங்களது தனிப்பட்ட அனுபவங்கள் பற்றி விரிவாக குறிப்பிடவும்.
வீரப்பன் குழுவினர் எப்போதும் மிகவும் எச்சரிக்கையோடும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே வாழ்ந்து வந்துள்ளனர் அவர்களுடன் இருந்த மூன்று பேர் மாறன், இனியன், ரமேஷ் ஆகிய மூவரையும் எனக்கு முன்பே தெரியும். அவர்கள் அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் தமிழகம் சார்ந்து தமிழ்த் தேசிய அமைப்புகளில் செயல்பட்டு வந்தவர்கள். காவல் துறையின் அத்துமீறல்கள் மற்றும் அடக்குமுறைகளைக் கண்டித்து நடைபெறும் மாநாடுகள் மற்றும் இயக்கங்களில் சந்தித்துள்ளேன். அவர்களை எந்த நேரமும் காவல்துறையினர் வந்து பிடிக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வோடு வாழ்ந்து வந்தனர். பேச்சுவார்த்தையின் போது கோரிக்கைகளை மிகவும் அக்கறையோடு அணுகினார்கள். அவர்களுக்கு அன்றாடம் உணவுப் பிரச்சனை மிகவும் கடினமானது. அவர்கள் காட்டில் வாழும் மக்களின் ஆதரவோடுதான் தங்களின் தேவைகளை நிறைவேற்றி வந்தனர். அவர்களுக்கு மக்கள் ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து வந்துள்ளனர். அவர்கள் காடுகளில் பயணிக்கும் போது அவர்கள் சென்ற இடங்களில் ஒரு சிறு தடயங்களைக் கூட விட்டுச் செல்ல மாட்டார்கள். அவர்கள் அப்படி விட்டுச் சென்றால் காவல்துறையினர் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க காரணமாகிவிடும். மேலும் வீரப்பனைப் பொருத்தமட்டில், ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதையும் அவர்கள் குறித்த செய்தி வெளிவருவதையும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார். கையில் குறித்த வைத்திருந்த கையடக்கமான ரேடியோ மூலம் அவ்வப்போது செய்திகளைக் கேட்பதில் வீரப்பன் குழுவினர் ஆர்வமாக இருந்தனர். காட்டு வாழ்க்கையை விடுத்து மக்களோடு மக்களாக வாழ வேண்டும். எல்லோரையும் போல் வாழ வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தனர். முறையான பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் அவர்கள் தானாக சரண்டர் ஆகி தமிழக அரசியலில் ஈடுபட்டிருப்பார். அதை தடுப்பதற்காகவே கைது செய்யப்பட்டு, பின் என்கவுன்டர் பெயரில் தமிழ்நாடு காவல் காவல்துறையின் தனிப்படையினர் சுட்டுக் கொன்று விட்டனர். நம்பியவர்கள் காட்டிக்கொடுத்துளனர். நம்பியதில்தான் குறைபாடு. இல்லை என்றால் காட்டில் அவர்களைத் தனிப்படையினர் பிடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது.
தொடக்க காலத்திலிருந்து இன்றைய காலம் வரை உங்களது மனித உரிமைச் செயல்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள்;
எனக்கு இடதுசாரி அரசியல் குறித்து ஈடுபாடு வந்த தொடக்கத்திலேயே எங்கல்ஸ் எழுதிய குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், லெனின் அவர்கள் எழுதிய அரசும் புரட்சியும், முரண்பாடுகள் பற்றி மாவோ எழுதிய நூல் ஆகியவற்றை விரும்பி படித்ததோடு மட்டுமின்றி மாணவர்களோடும், இயக்கத்தில் உள்ள இளைஞர்களோடும், இயக்கத் தோழர்களோடும் விவாதித்துள்ளேன். எனவே அரசு, அரசாங்கம் பற்றி ஓரளவு அடிப்படைப் புரிதல் இருந்தது. அதிலிருந்து அரசு என்பது ஆளும் வர்க்கத்திற்கான ஓர் அடக்குமுறைக் கருவி என்பதில் எனக்கு ஒரு தெளிவு ஏற்பட்டது. இந்த அடிப்படைப் புரிதலில் இருந்துதான் என்னுடைய மனித உரிமைச் செயல்பாடுகள் அமைந்தது. பல்வேறு இயக்கத் தோழர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் செயல்பாட்டாளர்களுடன், ஏற்பட்ட தொடர்பு, உண்மை அறியும் குழுக்களில் பங்கேற்றது என்னுடைய பணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எந்த இயக்க வேலைகளிலும் மனித உரிமை மீறலை உற்றுக் கவனிக்கக் காரணமாயிற்று. புரட்சி பண்பாட்டு இயக்கம் மூலம் கிடைத்த அனுபவங்கள், தொடர்ந்த மனித உரிமைப் பணிகளுக்கு அடித்தளமாக இருந்தது. ஆசிரியர் சங்கங்களின் போராட்டங்களில் பங்கேற்றவை எல்லாம் நல்ல பாடமாக அமைந்தது.
இவற்றோடு நண்பர்களோடு கூட்டு முயற்சியின் விளைவுதான் விழுப்புரம் நெம்புகோல், திண்டிவனம் நகரக் கல்வி மேம்பாட்டுக்குழு, மக்கள் கல்வி இயக்கம், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம் ரோஷணை தாய்த்தமிழ்ப் பள்ளி பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை எனத் தொடரும் பணிகள் ஆகும். இந்த அமைப்புகள் மூலம் சில காரியங்கள் நடைமுறை சாத்தியமாகி உள்ளன. சாத்தியப்பாடு உள்ள கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன்.
இருளர் சமூகத்தோடு உங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் தோற்றம் ஆகியவை பற்றி விரிவாகத் தெரிவிக்கவும்.
அத்தியூர் விஜயா வழக்கில் (1993) உண்மை அறியும் குழுவில் தொடங்கியதுதான் இருளர் சமூகத்துடனான தொடர்பு. அக்குழுவில் சகோதரி லூசினா அவர்களும் இடம் பெற்றிருந்தார். அடுத்தடுத்து இருளர்களின் பாதிப்புகள் அத்தியூர் விஜயா மூலம் எங்களுக்குத் தெரியவந்தது. அவர்கள் உறவினர்களின் பாதிப்புகளை அறிந்து நண்பர்கள் மூலம் களைய முற்படும்போது நண்பர்கள் ஆலோசனை மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் ஆலோசனையின் பேரில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் 1996 இல் தொடங்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சிவ. ராஜேந்திரன் மூலம்தான் எஸ். சி/எஸ். டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் விதிகள் தெரிய வந்தது. நெய்வேலியில் பணியாற்றிய பொறியாளர் சி. துரைக்கண்ணு , புதுச்சேரியில் பணியாற்றிய துரை. ரவிக்குமார், கோ. சுகுமாரன் மற்றும் விழுப்புரம் நெம்புகோல் தோழர்கள் ஆகியோர் துணையோடு பாதிக்கப்பட்ட இருளர்களை மையமாகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வந்தோம். பழங்குடி இருளர் சமூகத்தில் பிறந்த சிறுவலை மு. நாகராஜன் ஆசிரியர் ஜெயபாலன், தொட்டித்தோப்பு சு. ஆறுமுகம் , பாரதி நகர் ஆதிமூலம், மாணவர் பருவத்தில் அறிமுகமான ஆசிரியர் பொன். மாரி, 1987 இல் அறிமுகமான அருட்தந்தை அ. ரபேல்ராஜ் எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ஆட்சிப் பணியில் இருந்த கிறிஸ்துதாஸ் காந்தி, ப. சிவகாமி போன்றோரின் நட்பு, ஆதரவு , ஆலோசனைகள், கூட்டு முயற்சி தொடர் போராட்டங்கள் இவையே இன்றைய பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்.
தொடக்கத்தில் ஊடகவியலாளர் ஆகவும் தற்போது திரைப்பட இயக்குனராகவும் உள்ள த. செ. ஞானவேல் அவர்களின் நட்பு 2007 இல் கிடைத்தது. அவர் மூலம் நடிகர் சூர்யா அவர்களின் அகரம் கல்வி அறக்கட்டளை, சக்தி மசாலாவின் சக்தி தேவி அறக்கட்டளை இதுபோன்று இன்னும் ராமராஜ் காட்டன் போன்ற பலருடைய தொடர்பு கிடைத்தது. அவர்கள் மூலம் கிடைத்த நன்கொடை திண்டிவனம் ரோசனை தாய்த் தமிழ் பள்ளியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து, தயாரித்த ஜெய்பீம் திரைப்படம் வெளியானது. பழங்குடி இருளர் மக்களின் அவலங்களை உலக அளவில் எடுத்து சென்றுள்ளது. தற்போது இருளர்களின் கோரிக்கைகள் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் நன்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தமிழக அரசும் சாதிச் சான்று மனைப்பட்டா நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பசுமை வீடு கட்டும் திட்டம் போன்ற கோரிக்கைகளை ஓரளவு நிறைவேற்றி வருகிறது. சங்கமும் புது உத்வேகம் பெற்றுள்ளது.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் தற்போதைய வளர்ச்சி:
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 20 க்கும் மேற்பட்ட வட்டங்களில் மொத்தம் 5000&க்கு மேல் உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக உள்ளது. அண்மையில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் காலூன்றி உள்ளது. காவல் துறை மற்றும் சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் இயக்கமாகவும் சாதிச்சான்று மனைப்பட்டா, வீட்டுமனை ஆகியவைகளை பெற்றுத்தரும் இயக்கமாக வளர்ந்துள்ளது. நேர்மையான காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் நன்னம்பிக்கை பெற்றுள்ள ஒரு இயக்கமாக உள்ளது. 1993 இல் அத்தியூர் விஜயா வழக்கை எடுத்த போது இருந்த நிலையை ஒப்பிடும் போது தற்சமயம் ஒரு பாதுகாப்பு உள்ளது. இந்த மாவட்டங்களில் இவர்கள் மீது காவல் துறை போடும் பொய் வழக்குகள் குறைந்துள்ளது. அதேபோல் சாதி அடக்குமுறைகளும் குறைந்துள்ளது.
பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளையின் செயல்பாடுகள்:
சங்கம் முறையாக 1996 தொடங்கப்பட்டது. 1999 இல் மேற்கொண்ட கள ஆய்வு இருளர்கள் மத்தியில் எழுத்தறிவு 12% ஆக இருந்தது. கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 1999 லிருந்து 2 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு கோடைக்காலப் பயிற்சி நடத்தினோம். 2007 பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தலா ரூபாய் 5000/- வீதம் அறக்கட்டளை உறுப்பினர்களிடம் நன்கொடை பெற்று அனந்தபுரத்தில் 28 செண்டு மனை வாங்கியுள்ளோம். அங்கு விரைவில் மாணவர்கள் தங்கிப் பயில விடுதி கட்டவுள்ளோம். ஜெய்பீம் திரைப்படம் தயாரித்த நடிகர் சூர்யா அறக்கட்டளைக்கு ரூபாய் ஒரு கோடி நன்கொடை வழங்கியுள்ளார்கள். அந்தத் தொகையில் இரண்டு விடுதிகள் கட்ட முடியும். திண்டிவனம் ரோஷணை தாய்த்தமிழ் பள்ளியில் ஒரு விடுதி கட்டப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் அதில் 50 இருளர் மாணவர்கள் தங்கிப் பயில உள்ளனர். புனித அன்னாள் சபை, கிளாரட் சபை, அகரம் கல்வி அறக்கட்டளை ஒத்துழைப்பு மற்றும் ஆதரவோடு 100&க்கும் மேற்பட்டோர் பட்டப்படிப்பை படித்துள்ளனர். பழங்குடியினர் கல்வி உரிமை மாநாடு நடத்தவுள்ளோம்.
பழங்குடி மக்கள் செயல்பாட்டாளர் சகோதரி லூசினா குறித்த உங்கள் கருத்துக்கள்
திண்டிவனம் நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு செயல்பாடுகள் குறித்துத் தெரிந்து 1990 களில் திண்டிவனம் பகுதிக்கு வருகை தந்தார்கள். 1993 அத்தியூர் வழக்கு தொடர்பான உண்மைஅறியும் குழுவில் ஆர்வத்துடன் பங்கேற்றார். தொடர்ந்து 1996 இல் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் தோற்றுவிக்க முக்கியப் பங்காற்றியவர்.
விளிம்பு நிலை மக்களின் கல்வியில் அதிக அக்கறை உள்ளவர். இதுவரையிலும் பழங்குடி இருளர் மாணவர்களுக்கு 20 க்கும் மேற்பட்ட கோடைக்காலப் பயிற்சி முகாம்களை முன்னின்று நடத்தியவர். 50&க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உருவாக காரணமானவர். தற்சமயம் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 6 வட்டங்களுக்கு ஒருங்கிணைப்பாளராகச் சிறந்த முறையில் அர்ப்பணிப்புடன் தனது 77வது வயதிலும் ஓய்வின்றி உழைத்து வருகிறார்.
தோழர் தொல். திருமாவளவனுடன் உங்களது அனுபவங்கள்
1989இல் மக்கள் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது. தலித்துகள் பிரச்சனைகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுவது எனத் தீர்மானித்தோம். இதன் தொடர்ச்சியாக 1992 இல் பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்கச் செய்தோம். 1995 இல் புதுச்சேரியில் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற தடா எதிர்ப்பு மாநாட்டில் அவர் பங்கேற்றார். தொடர்ந்து பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் அனைத்து மாநாடுகளில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். திண்டிவனம் ரோஷணை தாய்த்தமிழ்ப் பள்ளியில் 2014&இல், தனது தந்தையின் நினைவாக ரூபாய் 3. 5 இலட்சம் செலவில் ஒரு வகுப்பறை கட்டிக்கொடுத்துள்ளார். 2007 இல் எனக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி ரூபாய் 50, 000/- பரிசுத்தொகையும் வழங்கி என்னை ஊக்குவித்துள்ளார்.
23-02-2019 இல் இருளர் மக்களுக்குச் சாதிச் சான்று, மனைப் பட்டா கேட்டு விழுப்புரத்தில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதனை அடுத்துதான் கீழ்சிவிறி கிராமம் தென்னேரியில் இருளர் மக்களுக்கு 80-க்கும் மேற்பட்ட மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் அருட்தந்தை ரபேல்ராஜ் உதவியுடன் தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டம் செம்மையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஈழப் போராட்டத்தில் உங்களது பங்களிப்பு
திண்டிவனம் பகுதி மற்றும் ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டோம். தமிழீழ விடுதலை தமிழீழ விடுதலை ஆதரவாளர் கூட்டமைப்பில் பங்கேற்றுள்ளேன். திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி பகுதிகளில் பரவலான பிரச்சாரம் மேற்கொள்ள என்னால் இயன்ற பணிகளை செய்துள்ளேன்.
தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மாமங்கலம் வங்கி வழக்கில் பேராசிரியர்களான சௌந்தரபாண்டியன், பாலசுப்பிரமணியன் என்ற பாலு மற்றும் அருட்தந்தை சூசைமாணிக்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடன் இணைந்து வழக்கு நிதி திரட்டி நீதிமன்றத்தில் அவர்கள் விடுதலை பெறுவதற்கு மாயவரம் வழக்கறிஞர் இராமதாஸ் மூலம் முயற்சி செய்து, அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தோம்.
புரட்சிப் பண்பாட்டு இயக்கம் சார்பில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக நூல் வெளியிட்டு மாநிலம் முழுமைக்கும் பிரச்சாரம் மேற்கொண்டோம். வேலூரில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு மாநாட்டில் பங்கேற்றமைக்கு அப்போதைய பா. ம. க தலைவர் பேராசிரியர் தீரன் அவர்களோடு என்னையும் கைது செய்து பின்பு விடுதலை செய்தனர்.
அகரம் கல்வி அறக்கட்டளையில் உங்களது பங்களிப்பு
2010 இல் நடிகர் சூர்யா அவர்களால் அகரம் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டபோது பல ஆலோசகர்களில் நானும் ஒருவனாக த. செ. ஞானவேல் அவர்கள் பரிந்துரைத்ததின் பேரில் செயல்பட்டு வருகிறேன். அதன் செயல்பாடுகள் அனைத்தும் விளிம்பு நிலை மாணவர்கள் நலன் கருதியே திட்டமிடப்படுகிறது. அகரம் கல்வி அறக்கட்டளையின் சொத்து, அதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தன்னார்வலர்கள்தான். எல்லோருடனும் கலந்து பேசி சனநாயக முறையில் நல்ல முடிவுகளை எடுக்கிறார்கள். எனது பங்கேற்பு என்பது சேர்க்கையின் போது நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வது மட்டுமே. எனக்கு மிகவும் பிடித்தது முதல் தலைமுறை ஏழை எளிய மாணவர்கள் பயின்று வரும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுதான். தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் உச்சத்திற்கு வருவார்கள் என்பதற்கு அகரம் கல்வி அறக்கட்டளை ஒரு நற்சான்றாகும். கல்வி அளிப்பதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து அவர்கள் நல்ல பணியில் சேர்வதற்கும் வழி காட்டுகிறார்கள். பின்பு அவர்கள் சமூக மேம்பாட்டில் அக்கறை உள்ள ஒரு நல்ல குடிமகனாக மாற்றுவதிலும் சாதனை படைத்து வருகிறார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் குறித்த உங்களது அணுகுமுறை:
பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பு, பெண்ணடிமைக்கு எதிரான கருத்துகள் போன்ற அவருடைய பகுத்தறிவு கருத்துக்களில் முழு உடன்பாடு உண்டு. பெரியாருடைய கருத்தியல்தான் இன்றளவும் மதவாதத்திற்கு எதிரான ஒரு பேராயுதமாக உள்ளது. அவருடைய பகுத்தறிவு கருத்துக்களைத் தொடர்ந்து பரப்புவதுதான் நம்மை ஆர். எஸ். எஸ் அபாயத்திலிருந்து பாதுகாக்கும்.
த. செ. ஞானவேல் அவர்களுக்கு நீங்கள் அளித்த பேட்டி ஒன்றில் “தமிழ்த் தேசிய அரசியலின் மீது எப்போதும் அதிக ஈடுபாடு உள்ளவன் நான்” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கவும்:
இந்தியா என்பது ஒரு தேசம் அல்ல; இது பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு ஆகும்: நடைமுறையில் இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ளது. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு என்பது தேசிய இனங்களின் கூட்டமைப்பாக இருக்க வேண்டும்.
சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இந்தியாவில் ஒன்றிய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை ஒவ்வொன்றாகத் தனதாக்கிக் கொள்கிறது. அதாவது தேசிய இனங்களை தொடர்ந்து ஒடுக்கி வருகிறது. கல்வி மருத்துவம் போன்றவற்றில் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோய்க்கொண்டு இருக்கின்றன. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்வதை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. அந்தந்த தேசிய இன மக்களுக்கு அனைத்து உரிமைகளும் இருந்தால்தான் அவர்கள் சுயமாக திட்டமிட்டு மேம்பாடு அடைய முடியும்.
உங்களது எதிர்காலத் திட்டங்கள் பற்றித் தெளிவுபடுத்துக:
(1) விளிம்பு நிலை மக்களுக்கான பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் தொடர்ந்து மக்களைச் சார்ந்து செயலாற்றுவதற்கு தேவையான அரசியல் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பழங்குடி மக்களின் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும்.
(2) பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை, பழங்குடியினரில் விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். இதற்குத் தேவையான கல்வியாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் இச்சமூகத்திலிருந்து உருவாக்கப்பட வேண்டும்.
(3) திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளி தொடர்ந்து விளிம்பு நிலை மக்களுக்கானதோர் பள்ளியாகவும் மாநில அளவில் முன்மாதிரியானதொரு பள்ளியாகவும் வளர்ச்சி பெற வேண்டும். இதற்குத் தேவையான திட்டங்களைக் கல்வியாளர்கள் மற்றும் நகர மக்களின் ஆதரவோடு குறிப்பாக ரோஷணைப் பகுதி மக்கள் பங்கேற்புடனும் பழங்குடி சமூகத்தின் ஒத்துழைப்புடனும் மேற்கொள்ள வேண்டும்.
(4) மாநில அளவில் மக்கள் கல்வி இயக்கப் பணிகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாகத் தமிழ் வழிக் கல்வியின்&அதாவது தாய் மொழியில் பயில்வதின்&அவசியத்தை விரிவாக அடித்தட்டு மக்களிடம் பிரச்சாரமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
(5) கல்வியில் வணிகமயமாதலுக்கு எதிராகவும், ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலன் சார்ந்தும், ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு குறித்தும், கல்வியில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராக தேசிய நலன் சார்ந்ததும் செயல்பட வேண்டும்.
(6) கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவதின் அவசியத்தையும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்தும் பரவலாகப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.. இதற்கான ஆதரவு அரசியல் இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
(7) இந்தியாவில் தொடர்ந்து சனநாயகம் நிலைத்திட அடிப்படை வாத அரசியலுக்கு எதிராகவும் சர்வதேச மனித உரிமை பிரகடனங்களைப் பாதுகாக்கும் வகையிலும் தொடர்புகளை வளர்த்தெடுக்க வேண்டும்.