கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், அண்மையில் தமது அமைச்சகத்தின் சார்பில் நூறு நாள் வேலைத் திட்டம் ஒன்றை அறிவித்தார். அதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யலாமா என்ற முன்மொழிவு மட்டுமே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, விவாதமாக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, சன் தொலைக்காட்சி கல்வி ஆலோசனை நிகழ்வு நேரலை ஒன்றில், பேராசிரியர் அய். இளங்கோவன் அவர்கள் அளித்த விரிவான விளக்கத்தை, "தலித் முரசு' வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.

பேராசிரியர் அய்.இளங்கோவன்பத்தாம் வகுப்பு கல்வித் தேர்வை அரசுத் தேர்வாக இல்லாமல் ரத்து செய்யலாமா என்று அரசு ஆலோசனை செய்து வருகிறது. அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

அண்மையில் மத்திய அரசினுடைய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில் தங்களுடைய அமைச்சகத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தில், பத்தாம் வகுப்புத் தேர்வை – பொதுத் தேர்வை ரத்து செய்வதற்காக ஒரு முன்மொழிவை வைத்திருக்கிறார். அதற்காக சொல்லக்கூடிய காரணம், முதலாவதாக, கல்விச் சீர்திருத்தத்தினுடைய தேவையின் அடிப்படையில்தான் நாங்கள் செய்கிறோம். இரண்டாவது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்கச் செய்கிறோம். மூன்றாவது, ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய பத்தாம் வகுப்பு மாணவர் அதே பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேருவதற்கு இந்தப் பொதுத் தேர்வு தேவையில்லை. அவர் களுடைய பள்ளித் தேர்வின் அடிப்படையிலேயே அவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்த மூன்று காரணங்களின் அடிப்படையில்தான் நாங்கள் பொதுத் தேர்வை ரத்து செய்யலாம் என்று ஆலோசித்திருக்கிறோம். இதை மாநில அரசின், கல்வியாளர் களுடைய கருத்தை கேட்டுக் கொண்டு செய்யப் போகிறோம் என்று சொல்லி இருக் கிறார். அவர் சொன்ன அறிவிப்பில் சீர்திருத்தம் என்பதும், மன அழுத்தம் என்பதும், ஒரு பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர் அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்வதற்குத் தடையில்லை என்று சொல்வதும் சரி அல்ல என்பது, மிகப் பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்து.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்வதென்பது சீர்திருத்தம் ஆகாது. சீர்திருத்தத்திற்குப் பல தேவைகள் இருக்கின்றன. அது, தொடக்கத்திலே ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை செய்ய வேண்டிய கட்டமைப்பு வசதி, பாடத்திட்ட சீர்திருத்தம் என்பவை. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் சொல்கின்ற கல்விச் சீர்திருத்தம் என்பது சீர்திருத்தமே அன்று. சீர்திருத்தம் எப்படி இருக்க வேண்டும் என்றால், இன்றைக்கு இருக்கக்கூடிய கல்வி முறை மக்களுக்குப் பயன்படுகிறதா? மாணவர் களுக்குத் தேவையான அறிவைத் தருகின்றதா? அவர்கள் அறிவு பெறுகின்றார்களா? இந்த அறிவு சமூகக் கண்ணோட்டத்தோடு – சமூக மாற்றத்திற்கும், இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கும் பயன்படக் கூடியதாக இருக்கிறதா? என்பதை ஆலோசிப்பதும், அதற்கு ஏற்ப செயல் திட்டத்தை வகுப்பதும், பாடத் திட்டங்களை வகுப்பதும்; கல்வி முறையை சீர்திருத்தி, கட்டமைப்புகளை மேம்படுத்தி, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து, நூலகங்களை உருவாக்குவதுமேயாகும். இதையொட்டிய தேர்வு முறை என்று சொன்னால், அது சரியான சீர்திருத்தமாக இருக்குமே ஒழிய, மற்றவை சீர்திருத்தமாகாது.

இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முறையை ரத்து செய்யலாமா என்று நினைப்பதுகூட, சீர்திருத்தும் அடிப்படையில்தானே?

இன்றைக்கு இருக்கக்கூடிய தேர்வு முறை என்பது ஒரு மதிப்பீடு. மாணவர் களை மதிப்பிடுவது. அவர்கள் ஒன்பதாம் வகுப்பை விட்டு பத்தாம் வகுப்பிற்கு வரும்போது என்ன நிலையிலே வந்தார் கள்; பத்தாம் வகுப்பை விட்டுச் செல்லும்போது என்ன நிலையிலே இருக்கிறார்கள்? அவர்கள் எதைக் கற்றுக் கொண்டார்கள்? மனப்பாடங்களைத் தவிர, எதை அறிந்து புரிந்து தன் மனதிலே தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்வதுதான் தேர்வே ஒழிய மதிப்பெண் பெறுவது, மதிப்பெண் பெறுவதற்காகப் போட்டி நடத்துவது தேர்வாகாது. அது சீர்திருத்தம் ஆகாது. சீர்திருத்தம் என்பது தொடக்க நிலையிலிருந்து இறுதி நிலை வரை நடைபெற வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்தால் பாதகங்கள்தான் அதிகமாகும்.

என்ன மாதிரியான பாதகங்கள் வரும் என்று நினைக்கிறீர்கள்?

இன்றைக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு என்பது, எல்லா நிலைகளுக்குமே ஒரு படி நிலையாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கு, இது தேவையான கல்வித் தகுதித் தேர்வு. இரண்டாவது, தொழிற் பயிற்சி. அய்.டி.அய். போன்ற நிறுவனங்களில் சேர்வதற்கு இது அடிப்படைக் கல்வி. மூன்றாவது, பதினோராம் வகுப்பு சேர்வதற்கு இது படிநிலைக் கல்வி. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே மாணவர்கள் இப்பாடப் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டும். எந்த அளவுகோலும் இல்லாமல் எதனடிப்படையில் இப்பாடப் பிரிவு களில் சேர்க்க முடியும்?

ஆனால், அரசாங்கம் சாதாரணமாக ஒரு விஷயத்தை கொண்டு வரமாட்டார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், பத்தாம் வகுப்பு முடித்ததும் நாம் நேரடியாக +2 போகிறோம். அதற்கு முன்னதாக நீங்கள் ஒரு கணக்கு விகிதாச்சாரம் பார்த்தீர்களானால், 4,754 உயர் நிலைக் கல்வி நிலையங்கள் இருக்கின்றன. அதாவது, 5,030 மேனிலைப் பள்ளிகள் இருக்கின்றன. இந்த உயர்நிலைக் கல்விகளில் முடித்துவிட்டு வரக் கூடிய அதாவது, அரசுப் பள்ளிகளில் முடித்து வரக்கூடிய அத்தனைப் பேரும் அதாவது மேனிலைப் பள்ளிகள் 5,030 இருக்கிறதென்றால், அங்கே படிக்கிற மாணவர்களுக்கு அங்கேயே +2 படிக்க வாய்ப்பு கிடைத்து விடும். இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று ஒரு கூற்று இருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இப்பொழுது தமிழகத்தில் 5,030 மேனிலைப் பள்ளிகள் இருக்கின்றன. அந்தப் பள்ளிகளில் படிக்கக் கூடிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்க வாய்ப்பிருப்பதாக ஒப்புக் கொண்டாலும், இப்பொழுது தமிழகத்திலே இருக்கக் கூடிய 4,754 உயர் நிலைப் பள்ளிகளில் படிப்பை முடித்து விட்டு, மாணவர்கள் மேனிலைப் பள்ளியை நோக்கிப் போக வேண்டும். அப்பொழுது எந்தத் தகுதியை வைத்து மேனிலைப் பள்ளிகளில் இவர்களை சேர்த்துக் கொள்ளப் போகிறார்கள்? இரண்டாவது, மேனிலைப் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்கள் அனைவரும் இடஒதுக்கீட்டின்படி சேர்க்கப் படுகின்றார்களா என்றால் இல்லை. +1இல் இடஒதுக்கீடு கண்டிப்பாக வேண்டும்.

ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கக் கூடிய மாணவன் கடைசி வரையில் அதே பள்ளியில் படிப்பதாக வைத்துக் கொண்டால் – கேந்திர வித்யாலயா, நவோதயா பள்ளிக்கூடங்கள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள், சுய நிதிப் பள்ளிகள் இவை எல்லாவற்றிலுமே, ஆறாம் வகுப்பில் சேர்க்கும்போது படித்த பெற்றோர்களுடைய பிள்ளைகள்தான் சேர்க்கப்படுகிறார்கள். பெற்றோர்களுக்கே நேர்காணல் நடத்துகிறார்கள். படித்த பெற்றோர்களுடைய பிள்ளைகள் வசதியாக உள்ள பிள்ளைகளைத்தான் அங்கு சேர்க்கிறார்கள். ஆறாம் வகுப்பில் இடஒதுக்கீடு கிடையாது.

மெட்ரிக்குலேசன் பள்ளிகளானாலும் சரி, நவோதயா பள்ளிகளானாலும் சரி, எந்தப் பள்ளியிலும் இடஒதுக்கீடு கிடையாது. இவர்கள் பிள்ளைகள் எல்லாம் +2 படிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் அடித்தட்டு மக்களாக இருக்கக் கூடிய கல்வி மறுக்கப்பட்ட மக்களும் அரசுப் பள்ளிகளையே நாடிச் செல்கிறார்கள். இந்த அரசுப் பள்ளிகளில் இன்றைக்குகூட அய்ந்தாவது வகுப்பு வரை தேர்வு இல்லை. நடுநிலைப் பள்ளிகளில் எட்டாவது வகுப்பு வரை தேர்வு இல்லை. தேர்வு இல்லை என்று எப்படிச் சொல்கிறேன் என்றால், கட்டாயமாக 90 சதவிகித மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்.

இப்பள்ளிகளில் (மெட்ரிகுலேசன்) +1 ஆறு மாதத்திலேயே நடத்தி முடித்து விடுகிறார்கள். அடுத்த ஆறு மாதம் +2க்கான பயிற்சி வகுப்புகளாக நடத்தி, காலையிலிருந்து மாலை வரை அந்தப் பள்ளியிலே நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும், "பாஸ் பர்சன்டேஜ்' பெற வேண்டும் என்று பயிற்சி கொடுக்கிறார்கள். பெற்றோர்களும் ஒத்துழைக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நான் இருக்கும் வேலூரிலே சனி, ஞாயிறு கூட மெட்ரிகுலேசன் பள்ளிகளில் விடுமுறை விடுவதில்லை. ஆனால் அரசுப் பள்ளிகளிலோ, 200 மாணவர்கள் படிக்கும் நடுநிலைப் பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஒன்று முதல் அய்ந்து வரை பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லை. கட்டமைப்பு வசதி இல்லை.

இப்பொழுது நாம் பேசுவது பொதுத் தேர்வு. ஆனால் மாதா மாதம் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு என்று தேர்வு முறை இருக்கிறது. ஆனால் இந்தத் தேர்வு முறை அரசுப் பள்ளிகளிலே கிடையாது. ஏனென்றால் ஆசிரியர்கள் இல்லை. மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகளிலும் மாதத்திற்கு ஒரு தேர்வு என்பது மட்டுமின்றி, வாரத்திற்கு ஒரு தேர்வு நடத்துகிறார்கள், பயிற்சி கொடுக்கிறார்கள். மாண வர்கள் ஓய்வில்லாமல் படித்து வருகிறார்கள். இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. மாணவர்களைக் காட்டிலும் பெற்றோர்களே தம் பிள்ளைகள் எப்படியாவது முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என அழுத்தம் தருகின்றனர். பொதுத் தேர்வு மட்டுமின்றி, எந்த ஒரு பொதுத் தேர்வும் போட்டித் தேர்வுகளும்கூட மன அழுத்தத்தை உருவாக்குவதில்லை.

அரசாங்கம் என்ன முடிவு எடுக்கப் போகின்றது என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நேரத்தில், நாம் இன்னொன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். பல்வேறு கல்வி அமைப்புகள் மாநிலக் கல்வி வாரியம், மத்தியக் கல்வி வாரியம், சி.பி.எஸ்.சி., நவோதயா, மத்திய கல்வி முறையில் இரண்டு கல்வி முறைகள் என உள்ளன. இவ்வளவு பிரிவுகள் இருக்கக்கூடிய சூழலில் அரசு கொண்டு வரும் மாற்றத்தால் பாதிப்பு ஏற்படுமா?

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதன் மூலம் நாங்கள் சீர்திருத்தம் செய்யப் போகிறோம் என்று சொல்லக்கூடிய இந்த அமைச்சகம் – உண்மையான சீர்திருத்தத்தை மேற்கொள்வதாயின், ஒரே மாதிரியான பாடத் திட்டம், சமச்சீர் கல்வி என்பது இந்தியா முழுமைக்கும் கொண்டு வர வேண்டும். அதற்கு இந்த அரசுக்கு மனதில் திண்மை வேண்டும். ஏனென்றால் சி.பி.எஸ்.சி. முறை, அய்.எஸ்.சி. முறை, மெட்ரிகுலேசன் முறை, ஸ்டேட் போர்டு முறை என்று பல முறைகளை வைத்துக் கொண்டு, கல்வி முறையிலே ஏற்றத் தாழ்வுகளை களைவதுதான் சீர்திருத்தமாக இருக்க முடியும். ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வரவேண்டும்.

பள்ளிக் கூடங்களிலே பார்த்தீர்களேயானால் நவோதயா பள்ளிக் கூடங்கள், கேந்திர வித்தியாலயா, அரசுப் பள்ளிக் கூடங்கள், பஞ்சாயத்து பள்ளிக் கூடங்கள், கள்ளர் சீர்திருத்தத்துறை பள்ளிக் கூடங்கள், ஆதி திராவிடர் நலத்துறை நடத்தக்கூடிய பள்ளிக் கூடங்கள், வனத்துறை நடத்தக்கூடிய பள்ளிக் கூடங்கள் என்று பலவகைகளைப் பிரித்து, எல்லா பள்ளிக் கூடங்களிலும், இன்று அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும் கூட போதிய ஆசிரியர் நியமனம் இன்றி, வகுப்பறைகளின்றி இன்னும் சொல்லப்போனால் கரும்பலகைகளின்றி நடைபெறுகின்றன. நீங்க தொடக்கப் பள்ளிகளை எல்லாம் பார்த்தீர்கள் என்றால் கரும்பலகைகளே கிடையாது. கரும்பலகைகள் இருந்தால் அங்கு ஆசிரியர்கள் கிடையாது. கரும்பலகைகளும், ஆசிரியர்களும் இருந்தால் அங்கு கூரைகள் கிடையாது. இதைப் பற்றி எல்லாம் அரசாங்கம் கவலைப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் நினைக்கிறார்கள். இந்த அடிப்படைத் தேவைகளை செய்து தராமல் சீர்திருத்தம் என்ற பெயரில் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வோம் என்பது சீர்கேட்டின் தொடக்கம்.

அந்த மாதிரி விஷயங்களை செய்யக் கூடிய சீர்திருத்தங்களைத்தான் நீங்கள் சீர்திருத்தம் என்று சொல்கிறீர்களா?

அதுதான் உண்மையான கல்விச் சீர்திருத்தத்திற்கு வித்திடக்கூடிய அடிப்படை. உழாமல், விதைக்காமல், செப்பனிடாமல் அறுவடை செய்வேன் என்பது சீர்திருத்தமாகுமா? தொடங்காமலே, நடக்காமலே முடிவு என்பது எப்படிச் சீர்திருத்தமாகும்?

மாணவர்களிடையே "மனநிலை பாதிப்பை' களைவதுகூட ஒரு சீர்திருத்தம் தானே! அரசு நினைப்பது தவறில்லையே?

மனநிலை அழுத்தம் என்பது வேண்டுமானால் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலே விடுமுறை இல்லாமல் நூற்றுக் நூறு எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தால், அதுவும் குறிப்பாகப் பெற்றோர்களின், ஆசிரியர்களின் கண்டிப்பால், வற்புறுத்தலால் வரலாம். எல்லா மாணவர்களுக்கும் மன அழுத்தம் வரும் என்பது உண்மையன்று.

பேராசிரியர் அய்.இளங்கோவன்

அது விதிவிலக்கு தானே! எல்லா மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் அப்படி நடத்துவது இல்லையே?

இன்று இருக்கக்கூடிய ஏறக்குறைய 5,030 மேனிலைப் பள்ளிகளில் 1,863 பள்ளிகள், சுயநிதியால் நடத்தக்கூடிய நிறுவனங்கள் – இவை எல்லாம் மேனிலைப் பள்ளி. அதேபோல 1,768 சுயநிதி மெட்ரிகுலேசன் பள்ளிகள் இருக்கின்றன. இங்குதான் மன அழுத்தத்திற்கான வாய்ப்பிருக்கிறதேயொழிய அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரையில், பஞ்சாயத்து பள்ளிகளைப் பொருத்தவரையில், மன அழுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சந்தைப் பொருளாதாரத்தை உள்வாங்கிக் கொண்டு நானா, நீயா என முண்டியடிக்கும் சில மாணவர்களுக்கு வேண்டுமானால் மன அழுத்தம் இருக்கலாம்.

மேற்கொண்டு படிப்பதற்கு ஆண்டுகளை குறைத்துக் கொண்டால் என்ன? அதாவது +2 படிக்கிறார்கள் இல்லையா?

தேர்வு எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாமா என்றும், இரண்டாவது "ஆப்ஷனல்' முறை என்றும், அதாவது மாணவர்கள் தேர்வு எழுதலாமா? எழுதக்கூடாதா என்ற முடிவை மாணவர்களுக்கே விட்டுவிடலாம் என சொல்லப்படுகிறது. இந்த "ஆப்ஷனல்' முறை என்பதே ஆபத்தானது. ஏனென்றால், கிராமப்புற மாணவர்களுக்கு கட்டமைப்பு வசதி இல்லாமல், சொல்லித் தர ஆசிரியர்கள் இல்லாமல் படிப்பு வசதி இல்லாத பெரும்பாலான மாணவர்கள், பொதுத் தேர்வு தேவையில்லை என்றுதான் இருந்து விடுவார்கள்.

மாணவர்கள் பாதியிலேயே பள்ளியை விட்டு விலகுவது தொடர்பாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். சென்னை மாநகராட்சியில் பல பள்ளிகளையே மூடியிருக்கிறார்கள். இந்த ஆண்டு 30 தொடக்க / நடுநிலைப் பள்ளிகளிலும் போதிய மாணவர்கள் இல்லாமையால் மூடியிருக்கிறார்கள். அதனால் "டிராப் அவுட்' என்று சொல்வோமானால், இன்னும் வரும் அய்ந்து ஆண்டுக் காலத்தில் அரசு நடத்தக்கூடிய பள்ளிகளை மூடுவதற்கான ஆபத்து இருக்கிறது. அதையெல் லாம் கருத்தில் கொண்டு அந்நிலையை மாற்ற சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் அரசினுடைய தலையாய கடமையாக இருக்க முடியும். இரண்டாவது, தேர்வு எண்ணிக்கைகளை குறைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

நமக்கு இரண்டு வேறுபாடுகள் தெரிய வேண்டும். ஒன்று பொதுத் தேர்வு, பத்தாம் வகுப்பிலே நடத்தக்கூடிய பொதுத் தேர்வு. இரண்டாவது பள்ளிகளிலேயே நடத்தக்கூடிய அரையாண்டுத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, மாதாந்திர தேர்வுகளை குறைத்துக் கொள்ளலாம்; ஆனால் பொதுத் தேர்விலே எதையுமே குறைக்க முடியாது. அய்ந்து பாடங்களில் தேர்வு என்றால், நீங்க அய்ந்து தேர்வையும் எழுதித்தான் ஆக வேண்டும். அப்படி இருந்தால்தான் தேர்வில் பங்கு கொள்வதற்கு நம்பிக்கை வரும்.

"ஆப்ஷனல்' என்ற ஒரு வார்த்தையை எதைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துகிறார்கள்?

"ஆப்ஷனல்' என்பது நன்றாகப் படிக்கக்கூடிய, ஏற்கனவே படித்த பெற்றோர்களின் பிள்ளைகள் தேர்வினை ஏற்றுக் கொள்வார்கள். கல்வி கற்காத பெற்றோர்களின் பிள்ளை களும், பெற்றோர்களும், அடித்தட்டு மக்களும் தேர்வு தேவையில்லை என்றுதான் எண்ணுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. தேர்வின் பயன்கள், மதிப்பீட்டின் முறைகள், கல்வியைத் தொடரத் தேவையான அளவுகோல், போட்டி என்பதெல்லாம் படிப்பறிவற்ற, முதல் தலைமுறை மாணவர்களுக்குத் தெரியாத ஒன்று. படிப்பது கடினம், போட்டிப் போட முடியாது என்ற மனநிலையில் உள்ள இவர்கள் தேர்வு வேண்டாம் என்றே சொல்வார்கள்.

அதாவது நீங்கள், பெற்றோர்களும் தேவையில்லை என்றுதான் எண்ணுகிறார்கள் என்கிறீர்கள்?

பெற்றோர்களுக்கு அதைப் பற்றி அக்கறை இல்லை என்று சொல்வேன். படிப்பறிவு இல்லாத பெற்றோர்கள். குறிப்பாக விவரமறியாத பெற்றோர்கள் – எம்புள்ள படிக்கல, அங்க வாத்தியார் இல்ல, அங்க சரியா சொல்லித் தரல, அவன் என்ன பண்ணுவான்? படிச்சது போதும் என்றே முடிவு செய்வார்கள். தேர்வு தேவையில்லை என்று சொல்லக்கூடிய மாணவர்கள் எல்லாம் "டிராப்அவுட்' கணக்கிலேயே வந்துவிடுவார்கள். படித்த பெற்றோர்கள், கல்வியினுடைய நலனை நன்கு உணர்ந்தவர்கள், போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறக்கூடிய சமூகத்தினர் அனைவரும் இந்தத் தேர்வை ஏற்றுக் கொள்வார்கள்.

ஒரு கட்டத்தில் எனக்கெல்லாம் குலக்கல்விமுறையே திரும்ப வந்துவிடுமோ என்ற பயம் வருகிறது. ஏனென்றால் படித்தவன் படித்துக் கொண்டே இருப்பான். வேலை கிடைத்தவன் வேலைக்குப் போய்க் கொண்டே இருப்பான். வேலையில்லாமல் இருப்பவன், ஏர் ஓட்டுபவன், விவசாயம் செய்பவன், கூலித் தொழிலாளி எல்லாம் கூலி தொழிலாளியாகவேதான் இருப்பான். பத்தாவது வகுப்பு தேர்வு உண்டு என்று சொன்னால்தான், அவன் தன்னை கடின உழைப்புக்கு ஆட்படுத்திக் கொண்டு, தன் வருத்தத்தையெல்லாம் ஏற்றுக் கொண்டு தேர்வெழுத வருவான். தேர்வே இல்லையென்றால் சான்றிதழ் கொடுக்கப் போகிறார்கள்; சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு போய் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பல ஆண்டுகள் கோயிலுக்கு போய்க் கொண்டிருப்பது போல் போய் கொண்டிருக்கப் போகிறார்கள். தேர்வினை ஏற்றுக் கொண்டவர்கள் வேலைவாய்ப்புப் போட்டித் தேர்விலும் கலந்து கொண்டு வேலைக்குப் போவார்கள். தேர்வு வேண்டா மென்பவர்கள் வேலை கேட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நடையாய் நடக்கப் போகிறார்கள்.

அடுத்த இதழில் நிறைவடையும்