கூத்துப்பட்டறைக்கு நாடகக் கலையைக் கற்பதற்காக மட்டுமே சென்றேன். ஆனால் எனக்கு இயற்கை ஒரு வரம் அளித்தது. முழுநேர நடிகராக பாஸ்கர் அண்ணன் என்பவர் இருக்கிறார். பத்தாண்டுகளுக்கு மேலாகக் கூத்துப்பட்டறையில் இயங்கி வருகிறார்.
நானும் முழுநேரக் கலைஞராக மூன்று ஆண்டு காலம் மட்டுமே இயங்கினேன். பாஸ்கர் அண்ணன் என்னோடு தம்பி, தம்பி" என்று அன்பாகப் பழகக் கூடியவர். திறமை ஒருவனிடம் இருப்பதை அறிந்தால் ஊக்குவிக்கும் தன்மை கொண்டவர்.
ந.முத்துசாமி ஐயாவுக்கும், அவர் குடும்பத்திற்கும், மிகவும் நெருக்கமாகவும், செல்லப்பிள்ளையாகவும் இருப்பவர். நான் கூத்துப்பட்டறைக்கு சென்ற நாள் முதல், "ஒருநாளாவது முத்துசாமி ஐயா வீட்டுக்குள் செல்ல மாட்டோமா? அவரிடம் பேச மாட்டோமா?" என்று ஏங்கியதுண்டு. அரங்கம் மூன்றாம் மாடியில் இருந்ததால், வீட்டை கடந்து தான் அரங்கிற்கு செல்வேன். வீட்டை எட்டிப் பார்ப்பேன், "ஐயாவை பார்க்க முடிமோ?" என்று. ஏன் அவரை காணத் துடித்தேன் என்று தெரியவில்லை.
ஒருநாள் மேலே அரங்கிற்கு செல்லும்போது, வீட்டினுள் ஐயா டிவி பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
உள்ளே செல்லலாமா, வேண்டாமா என்று தயங்கியபடி, வேகமாகச் சென்று பதட்டத்துடன் அவர் காலில் விழுந்தேன். வணக்கம் வைத்தேன்.
“நான் ஈரோட்டில் இருந்து வருகிறேன், ஐயா," என்றேன். சில வார்த்தைகள் பேசினேன். அவர் கண் இமைகளை மூடாமல் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார், ஆனால் எதுவும் பேசவில்லை.
“நாம் இவ்வளவு பேசுறோம், ஆனால் எதுவுமே பேச மாட்டேங்கிறாரே! ஒருவேளை காது கேட்காதா?" என்று ஏமாற்றத்தோடு வெளியே வந்தேன். 
(ஆசான் ந.முத்துசாமியுடன் அவரது சீடர் சதீஷ் குமார்)
ஐயாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கூத்துப்பட்டறையின் முழுநேரக் கலைஞர் சந்தோஷ் அண்ணன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நன்றாகக் கவனித்துக் கொள்வார்.
ஒருநாள் பாஸ்கர் அண்ணனுடன் வீட்டுற்குள் சென்றேன். முத்துசாமி ஐயாவின் மனைவி குஞ்சலி அம்மாள், வோடா, கண்ணு," என்று பாஸ்கர் அண்ணனை அழைத்தார்.
“யார் இது?" என்று என்னை பார்த்து பாஸ்கர் அண்ணனிடம் கேட்டார்.
“நம்ம தம்பிதான், ம்மா! ஃபுல் டைம் ஆக்டரா ஜாயின் பண்ணி யிருக்கான். ரொம்ப நல்ல பையம்மா," என்று சான்றளித்தார் பாஸ்கர் அண்ணன்.
குஞ்சலி அம்மாவின் தோள் மீது கைபோட்டு முதுகை நீவினார் பாஸ்கர் அண்ணன், "அப்பாடா!" என்றார், அம்மா.
"அம்மா, சார் எங்கம்மா? தூங்குறாரா?" என்று அவர் கேட்டார். உள்ளறையில் இருந்து ஒரு குரல் கேட்டது.
“பாஸ்கர், வாயா உள்ள," என்றார் ஐயா.
பாஸ்கர் அண்ணன் உள்ளே சென்றதும், ஐயா, "முதுகு கொஞ்சம் தடவியா?" என்றார்.
"மூச்சு விட முடியலையா? ரொம்ப சிரமமா இருக்கு," என்று குழந்தைபோல் சொன்னார்.
அப்போதுதான் நான் அவர் பேசியதை பார்த்தேன். கதவின் வெளியில் நின்றபடி இருந்தேன். பாஸ்கர் அண்ணன் வோடா, தம்பி!" என்று அழைத்தார்.
"உட்கார்," என்றதும், ஐயாவின் படுக்கை மெத்தையிலேயே உட்கார்ந்தேன்.
என்னை ஐயாவிடம் அறிமுகப்படுத்தினார். சமையலறையில் இருந்து அம்மா, போஸ்கர், இங்க வாடா, கண்ணு," என்று அழைத்தார்.
தேம்பி, ஐயாவுக்கு முதுகு கொஞ்சம் தடவி விடு. இதோ வந்துடறேன்," என்று உள்ளே சென்றுவிட்டார்.
எனக்கோ பதட்டம். ஐயாவின் முதுகின் பின் கை வைத்தேன். ஒருவித புத்துணர்ச்சி. அவருக்கோ, “யாருடா இது? புதுசா இருக்கு," என்று குழந்தை முழிப்பது போல முழித்தார்.
அம்மாவும், பாஸ்கர் அண்ணனும் உள்ளே வந்தார்கள். அம்மா, சைகையால், "ஏதாவது நினைச்சுக்க போறான்டா, கண்ணு! வேணாம்டா," என்றார்.
அதற்கு பாஸ்கர் அண்ணன், “நம்ம தம்பிதான் மா! அதெல்லாம் எதுவும் நினைக்க மாட்டான். ரொம்ப நல்ல பையம்மா," என்று மீண்டும் சான்றளித்தார்.
சந்தோஷ் அண்ணனைப் பற்றி பாஸ்கர் அண்ணன் கேட்டார், “சந்தோஷ் எங்கம்மா?"
"ஊருக்கு போயிருக்கான், கண்ணு. இன்னும் வரல," என்றார். "நீ இன்னைக்கு நைட்டு இங்கேயே படுத்துக்குறியாடா, கண்ணு?" என்று அம்மா கேட்டதும், “சரிமா, நானும் தம்பியுமே கூடப் படுத்துக்குறோம்," என்று பாஸ்கர் அண்ணன் சொன்னார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மௌனமாக அனைத்தையும் கண்கள் வழியாக உள்வாங்கிக் கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக மூன்று நான்கு நாள்கள் நானும் பாஸ்கர் அண்ணனும் ஐயாவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நடுசாமத்தில் மூச்சுத் திணறல் ஐயாவுக்கு அதிகமாக இருந்ததால் இரவில் எழுப்புவார். பின்பு பாஸ்கர் அண்ணன் ஒருநாள் இரவு, “தம்பி, நான் வெளியே போறேன். நீ பார்த்துக்கோடா ஐயாவை," என்று சொன்னார். எனக்கு பயமாக இருந்தது, எப்படி கையாளப் போகிறோம் என்று. “சரி," என்றேன்.
பாஸ்கர் அண்ணன், "அம்மாவிடமும், தம்பி சார, பாத்துக்குவாமா" என்றார். அம்மா, “சரி டா, கண்ணு," என்று சொன்னார். குழந்தையை வளர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது போல் இருந்தது. தினமும் ஐயாவுடன் உட்காருகிறேன். ஐயா கட்டில் மீது, பக்கத்தில் இன்னொரு கட்டலில் அம்மா, கீழே நான் என்று இரவு உறங்குவோம். ஒத்திகை நேரத்தில் அரங்கிற்குச் சென்று விடுவேன், மற்ற நேரங்களில் ஐயாவுடன் வீட்டில் இருப்பேன்.
நடு சாமத்தில் ஐயாவுக்கு தினமும் முடியாமல் போகும். “சந்தோஷ், சந்தோஷ்," என்று அழைப்பார். "அய்யா தோ, வந்துட்டேன் ஐயா," என்று தண்ணீர் கொடுத்து, முதுகை நீவி விடுவேன். என் பெயர் சதீஷ் ஐயா என்று சொல்வேன். “சரி, சரி," என்பார். பாஸ்கர் அண்ணன், நான் பார்த்துக் கொள்வேன் என்று என்னை நம்பி வேலை காரணமாக அவர் வரவில்லை. சந்தோஷ் அண்ணனும் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால், அவரும் வரவில்லை.
மௌனமே எனது மொழியாக ஆனது. தினமும் ஐயாவுடனே எனது நாட்கள் தொடர்ந்தது. பெரும் பாக்கியமாக எண்ணிக் கொண்டேன்.
காலையில் நேரமாக எழுந்து கொள்வார். நான் ஏழு மணி வரை தூங்குவேன். அம்மாவும் நேரமாக எழுந்து கொள்வர். ஐயாவிற்கு காபி போட்டு கொண்டு வந்து தருவார். குடும்பத்தோடு நானும் ஓர் ஆளானேன். குழந்தையை வளர்ப்பதற்கான பொறுப்பு கூடியது. ஐயாவுடன் அதிக நேரம் செலவழித்தேன்.
83 வயதிலும், ஐயாவுக்கும் அம்மாவுக்கும் இருந்த காதல் அவ்வளவு அழகாக இருந்தது. அப்போது நான் நினைத்துக் கொண்டேன். சிறு வயதிலும் பருவத்திலும் நமக்கு வந்த காதல் எல்லாம் எல்லாம் அர்த்தமில்லாதது என்று.
ஐயாவின் பலம் குஞ்சலி அம்மாதான். ஓராண்டு முழுக்க ஐயாவுடன் இருந்தேன்.
வடபழனியில் இருக்கும் சூர்யா மருத்துவமனைக்கு நான், அம்மா, ஐயா மூவரும் ஆட்டோவில் செல்வோம்.
ஒரு நாள் இரவு, அதே போல் நடுசாமத்தில் ஐயாவுக்கு மூச்சு அடைப்பு வந்துவிட்டது. “சதீஷ்! சதீஷ்!" என்று அழுத்தி அழைத்தார்.
"ஐயா!" என்று எழுந்து ஓடினேன். “வந்துட்டேன், ஐயா!" என் கண்ணில் தண்ணீர் முட்டி நின்றது. என் பெயரை உச்சரித்ததும் சிலிர்த்துப் போனேன். மூச்சை இழுத்து, விட முயற்சித்தார். முதுகைத் தடவிக்கொண்டே இருந்தேன். சில நேரங்களில், அதைத் தொடர்ந்தால் தூங்கி விடுவார்.
ஒரு வாசகனாக இருந்து, இலக்கியவாதியாக மாறி, எழுத்தாளனாக வளர்ந்து, தன் எழுத்தின் மூலம் நடிகர்களை உருவாக்கி மேலும் ஓர் அமைப்பைத் தொடங்கி பலருக்கு வாய்ப்பளித்து வாழவைத்த இந்த ஆளுமை, இப்போது உடல் நலக்குறைவால் சிரமப்படுகிறார் என்று நினைக்கும் போதெல்லாம், என் கண்களில் தானாக நீர் தளும்பும்.
அவர் ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, நான் சென்றால், ஸ்பூனில் எடுத்து "இந்தாயா, சாப்பிடு!" என்று கையில் தருவார். வாங்கி சாப்பிடுவேன். அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் உணர்வைத் தொடுவதாகவே இருக்கும்.
எப்படி குழந்தைடேன் இருக்கும்போது நேரம் போவதே தெரியாதோ, அது போலவே அவருடன் இருக்கும்போதும் சுவாரசியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். ஐயாவை எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது.
தினமும் இரவு எட்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு, சுவரைப் பிடித்துக்கொண்டு அவர் அறைக்குச் சென்று விடுவார்.
நான் மேலே சென்று உணவருந்தி விட்டு வரும் வரை காத்திருப்பார். நான் வந்ததும் “வாங்க!" என்று சிரித்தபடி அழைப்பார்.
நான் பாண்ட்ஸ் பவுடரை முதுகில் கொட்டி, முழுவதும் தடவி விடுவேன். முகத்திலும் பூசி, அழகு பார்ப்பேன். கால், தொடை இரண்டையும் கை வைத்து மசாஜ் செய்யும்போது, "ரொம்ப நல்லா இருக்குயா, சதீஷ் எங்கையா கத்துக்கிட்ட?" என்பார்.
“நானே சும்மா பண்றேன், ஐயா!" என்றதும், “சரி, சரியா!" என்று சிரிப்பார்.
இப்படி என்னுள் வேறொன்றை உணர்ந்தேன். ஐந்து வயது முதல், என் அப்பா அம்மாவை பிரிந்து தான் வாழ்ந்து வந்தேன். இப்படி ஒரு தொடு உணர்வை, அவர்களிடமும், தாத்தாபாட்டி யிடமும் உணர முடியவில்லை. ஏங்கிக் கிடந்தேன்.
முத்துசாமி ஐயாவும் குஞ்சலி அம்மாவும் என்மீது கொண்ட காதலும், நான் அவர்கள் மீது கொண்ட காதலும் எதற்கும் ஈடாகாது. இப்போதும் என்னால் இவர்களைப் பற்றி எழுத முடியவில்லை. ஏதோ நெஞ்சை அழுத்துவது போல் உள்ளது. எழுதி, எழுதி கிழித்து போட்டு, மீண்டும் எழுதிக் கொண்டே இருக்கிறேன். வேறுவிதமான, அழுத்தமான உணர்வை என்னுள் புகுத்திவிட்டு சென்று விட்டனர் இருவரும்.
முத்துசாமி ஐயா, அதிகமாகப் பேச மாட்டார். நான் அவரிடம் நெருங்கி இருந்தாலும், தொந்தரவு செய்யக்கூடாது என்று நான் எதுவும் கேட்டதில்லை.
மெத்தையில் படுத்தபடி, விரல்களைத் தலையில் வைத்து சொரிந்தபடி, ஏதோ பழைய நினைவுகளை எல்லாம் ஓட்டிக்கொண்டு இருப்பாரோ, என்று யோசிப்பேன். ஐயாவுக்கு இருந்த மூச்சுத் திணறல் பிரச்சினை, அவரை சித்திரவதை செய்தது. அதிகமாக நடு இரவில்தான், ஐயாவின் தூக்கம் போய்விடும். முதுகை தடவி விட்டால், ஓரளவுக்குக் குறையும். கத்துவார், "என்னையா இது? இப்படியிருக்குதேயா?" என்று.
அம்மா, காலை 6:00 மணியிலிருந்து இரவு 1:00 மணி வரை உழைப்பார். வாசல் பெருக்குவது, உணவு சமைப்பது அத்தனை வேலையுமே அம்மாதான் செய்வார். அதனால், அம்மா அசதியில் தூங்கி விடுவார்.
ஒரு நாள் காலை, நன்றாக உறங்கிக்கொண்டிருந்தேன். அம்மா ஐயாவுக்கு காபி கொண்டு வந்து கதவை திறந்ததும் விழித்துக் கொண்டேன், ஆனால் கண் மூடியே படுத்து இருந்தேன். “வந்தது வந்தது, காபி வந்தது!" என்று பாட்டு பாடி அம்மாவை வரவேற்றார். “வா குஞ்சலி, உட்காரு," என்று மெத்தையில் அமர வைத்து அம்மாவின் முதுகை தடவி விட்டார்.
“பாவம், புள்ள இராவெல்லாம் தூங்கல, இப்பதான் தூங்கறான், எங்க நீங்க தூங்க விட்டீங்க?" என்றார் அம்மா.
"ஆமா, குஞ்சலி நான் என்ன பண்றது? அது ரொம்ப தொந்தரவா இருக்கு, பாவம் குஞ்சலி அவங்க அம்மா அப்பாவுக்கு எப்போ இவன் சம்பாரிச்சு கொடுத்து நல்லா பாத்துக்குறது. அதெல்லாம் அவர் நல்லா வருவாரு, குஞ்சலி. சினிமாவுக்கு எல்லாம் போனாருனா, நல்லா சம்பாதிச்சு பார்த்து பாரு," என்று என்னை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும்.
தான் பெத்த பிள்ளையை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் கூத்து பட்டறையை நிறுவி, பல கலைஞர்களை உருவாக்கி, தன் இரு மகன்களுக்கு மட்டும் தகப்பனாகாமல், அத்தனை கலைஞர்களுக்கும் தகப்பனாகி, அனைவருக்கும் வாழ்வளித்த மகான் முத்துசாமி என்று நினைத்துக் கொண்டேன். தன் கொள்கைக்கு தனது மனைவியையும் உடனாக்கிக் கொண்டார்.
குஞ்சலி அம்மா என்னுடன் சில நாட்களில் இரவு 2 மணி வரை உரையாடுவார். ஆரம்பகாலத்தில் இவர்கள் வளர்ந்திருந்ததிலிருந்து, இவர்களின் நட்பிலிருந்து, காதலிலிருந்து, அரசியலில் இருந்து, கூத்துப்பட்டறை தொடங்கியதிலிருந்து, அத்தனை கதையையும் சொல்லிக் கொண்டிருப்பார்.
ஒரு நாள், நான் ஐயாவிடம், “மாலை நேரத்தில் அடையார் இசை கல்லூரியில் மிருதங்கம் படிக்கலாம் என்று இருக்கிறேன்," என்று சொன்னேன். அவர் "பிரமாதம்! போங்க, முறையாக கத்துக்கோங்க!" என்று உத்வேகப்படுத்தினார்.
அதனால், கல்லூரிக்குச் சென்று அட்மிஷன் போட்டு வந்தேன். பத்து நாட்கள் கழித்து, அம்மா “கண்ணு, அட்மிஷன் போட்ட கல்லூரியிலிருந்து, ஜாயின் செய்ய சொல்லி லெட்டர் வந்திருக்குடா!" என்று சொல்லி, சாமி படத்தில் வைத்திருந்த லெட்டரை எடுத்து என்னிடம் தந்தார். இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டேன். “நல்லா பண்ணுங்க!" என்றார் ஐயா. அதன்பிறகு, தினமும் மாலை 4 மணிக்கு கிளம்பி, இரவு 9 மணிக்கு திரும்பி வருவேன். உள்ளே நுழைந்ததும், ஐயா “வந்துட்டிங்களா? குஞ்சலி, சதீஷ் வந்துட்டாரு!" என்று ஜாலியாகச் சிரிப்பார். ஒரு நாள் இசைக் கல்லூரிக்குப் போகல நாளும் வருத்தப்படுவார். "லீவு போடாதீங்கயா " என்பார்.
பெண்களுக்கு எப்படி மாதம் தினங்களோ, அதுபோல் அம்மா ஐயாவுக்கு ஒரு சில சாங்கியங்கள் செய்வார். அம்மா ஆன்மீகத்தில் மிகவும் பக்தியோடு இருப்பார். சாமி அறையில் தான் அதிகமாக இருப்பார். கடவுளிடம் ஒரு ஸ்டூல் போட்டு அமர்ந்து உரையாடுவார் சில நேரம் அதில் அமர்ந்தபடியே உறங்கியும் விடுவார். அம்மா செய்த அலங்காரத்தை, ஐயா சுவரை பிடித்தப்படி சென்று பார்ப்பார்.
"ரொம்ப நல்லாப் பண்ணியிருக்கே, குஞ்சலி" என்று அம்மாவை மகிழ்ச்சிப்படுத்துவார்.
நான் நடித்து அவர் பார்த்ததில்லை. ஆனால், ஒரு நாள் கூத்துப் பட்டறையில் “காவிரி" என்ற நாடகம் அரங்கேறியது. அதில் நான் தாளக் கருவிகளை கையாண்டு இசையமைத்தேன். நாடகம் முடிந்ததும், கீழே வந்த ஐயா, நாடக இயக்குனரைப் பாராட்டி “நல்லா டைரக்ட் பண்றாரு" என்றார். ஆனால், நான் யோசித்தேன். “நாம் இசையமைத்தோமே! அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே.. ஒருவேளை ஐயாவுக்கு பிடிக்கலையோ?"
ஒரு வாரம் கழித்து, ஐயா ஒரு நாடகத்துக்கு இசை ரொம்ப முக்கியம் என்று பேசிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக,
"அன்னைக்கு நீங்க பண்ணது ரொம்ப நல்லா இருந்ததுயா " என்று கூறினார்.
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஒரு நாள், “நாம ஹாஸ்பிட்டலுக்கு ஆட்டோலையே போறமே… ஒரு கார் வாங்கலாம் இல்லையா ஐயா?" என்று கேட்டேன்.
அதற்கு ஐயா, "அதெல்லாம் முன்னாடி இருந்துதுயா. முன்னாடி இருந்த டிரஸ்டி வித்து தின்னுபுட்டாங்க!" என்றார்.
ஐயா, கூத்துப்பட்டறையைப் பற்றி பேசும்போது, அதற்காக அவர் எவ்வளவு உழைத்திருக்கிறார், எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் என்பதை உணர முடிந்தது. அம்மாவும் சொல்வார்கள்,
"இங்க கத்துக்கிட்ட ஒரு சில மாணவர்கள் ஐயாவை ஒரு வழி ஆக்கிட்டாங்டா கண்ணு ! அதுலையே ஐயா மனம் நொந்து போயிட்டாருடா கண்ணுன்னாங்க
இருவருக்கும் ஒரே வயதுதான். ஐயா மாதத்தில் பெரியவர், அவ்வளவுதான்.
ஐயாவின் கொள்கைக்காக அத்தனையும் பொறுத்துக் கொண்டு, கடைசிவரை ஐயாவுக்கு பிடித்ததையே செய்து பணிவிடை புரிந்த இரும்பு மனுஷி. நடேஷ் சார் சொல்வார், "எங்க அம்மா ஒரு உழைப்பு பேய்!" என்று. அது உண்மைதான். பெத்த பிள்ளைகள் பிற்காலத்தில் நன்றாக வாழ வேண்டும், அதற்குச் சொத்துச் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், கூத்துப்பட்டறையில் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்காகவே பாடுபட்டார். கூத்துப்பட்டறைக்காகவே வாழ்ந்தார். உறவுகள் இருந்தும் தன் உறவுகளைத் தகர்த்தெறிந்து, தன் மாணவர்களையே உறவென்று நினைத்து வாழ்ந்தார்..
நல்ல நடிகர்களை உருவாக்குவதை விட , நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும் என்று, தனது வாழ்க்கையை முழுவதுமாக இந்த நாடகக் கலைக்காக அர்ப்பணித்தவர் முத்துசாமி ஐயா.
அவர் உழைத்த உழைப்பின் மூலம் பலருக்கும் வாழ்வு கிடைத்திருக்கும்; மேலும் கூத்துப்பட்டறையின் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்க வேண்டும் என்றுதான் பாடுபட்டிருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது.
2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில், ஐயாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. நான் ஊருக்கு செல்லாமல், ஐயாவின் அருகிலேயே இருக்க முடிவெடுத்திருந்தேன். அப்படி இருக்கையில், 2018 அக்டோபர் மாதத்தில், எனது அக்கா மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு தாய்மாமா வர வேண்டும் என்றதால், அக்கா மற்றும் மாமா என்னை அழைத்தார்கள்.
ஐயாவிடம் இதை" சொன்னேன். "ரொம்ப சந்தோஷம் யா. போயிட்டு வாங்க," என்றார்.
அம்மாவிடமும், அய்யாவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, வெளியில் வரும்போது ஐயா என்னை அனுப்பும் போது, ஒரு மாதிரி ஆனார். சந்தோஷம்தான், ஆனால் அவர் மனசுல ஏதோ, நம்ம அப்பா ஊருக்கு போறாரு என்று ஒரு குழந்தை நினைப்பது போல "போயிட்டு வாங்க" என்று சொல்வதைப்போல் இருந்தது. எனக்கு அவர் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு வரலாம் என்று தோன்றியது, ஆனால் முடியவில்லை.
ஊருக்கு வந்து சேர்ந்தேன். விசேஷத்தில் பங்கெடுத்து இரண்டு நாள் கழித்து பாஸ் அண்ணன் கைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. “தம்பி, வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்குது?" என்றார். "தோ சார் பேசணும்னு சொல்றாரு, பேசு" என்றதும் "ஐயா" என்றேன். "எப்போ வரிங்க?" என்றார், “ரெண்டு நாள் தானே, ஆச்சு!", இப்போ, திடீர்னு ஐயா, இப்படி கேட்கிறாரே? என்று நினைத்தேன். “வந்து விடுகிறேன், ஐயா, உடம்பு பார்த்துக்கோங்க!" என்றேன்.
ஒருநாள் கழித்து, பிரசன்னா அண்ணன் போன் செய்து "ஐயா, நம்மள விட்டு போயிட்டாரு" என்று கத்தி அழுதார். என்ன சொல்வது என்று தெரியாமல், மனம் உடைந்தேன். உடனே கிளம்பி, கூத்துப்பட்டறைக்கு சென்று ஐயாவைப் பார்த்தேன். கண்ணாடிப் பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்தார். ஒரு சொட்டு தண்ணீர் கண்ணில் இருந்து வரவில்லை. ஏனோ தெரியவில்லை.
உயிரோடு இருக்கும்போது, அவர் வலியைக் கண்டு கண்ணீர் சிந்தியதாலோ, என்னமோ.. அம்மா, "ஐயா நம்மள விட்டுட்டு போயிட்டாரே டா கண்ணு!" என்று அழுதார். பின்னர், சுடுகாடு சென்று விட்டு, நான் ஈரோடு வந்து மஞ்சள் நீராட்டு விழாவை முடித்துவிட்டு, அப்புறம் மீண்டும் கூத்துப் பட்டறைக்குச் சென்றேன்.
ஐயா படுத்த மெத்தையில் நடேஷ் சார் உட்கார்ந்திருந்தார், நான் அதே போன்று கீழே உட்கார்ந்தேன். கொஞ்ச மாதங்களே, என்னால் அங்கு இருக்க முடிந்தது. ஐயா, நினைவுக்கு வந்து போவதால், என்னால் அங்கு இருக்க முடியவில்லை. அம்மாவை தனியாக விட்டுவிட்டு எப்படி போவது? அம்மாவிடம் எப்படி நான் கூத்துப்பட்டறையை விட்டுப் போகிறேன் என்று சொல்வது என்று மன உளைச்சலில் சிக்கி தவித்தேன். என்னால் முடியவில்லை.
எனது குடும்பத்திலும், அம்மா, அப்பா எத்தனை காலம்தான் இப்படியே நாடகம் நாடகம்ன்னு இருக்க போற. வேற பொழப்ப பாத்து சம்பாதிக்கிற வழிய பாரு, இப்படி பல அழுத்தத்திற்குள் மாட்டிக் கொண்டேன். பின்னர், அம்மாவிடமும், நடேஷ் சாரிடமும் ஊருக்கு போய், இரண்டு நாட்களில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தவன்தான். எனது கைபேசியில் இருந்து சிம் கார்டை கழட்டி விட்டேன். எனது அப்பா, அம்மா, மும்பையில் தான் ஒரு 40 ஆண்டு காலமாகத் தமிழர்கள் வாழும் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடம் சென்று விட்டேன். ஒரு மாதம் இருந்தேன்.
ஒரு மாதம் கழித்து, மீண்டும் நான் சென்னைக்கு ஒருவரிடம் உதவி இயக்குனராகச் சேர்வதற்காக இரயிலில் வந்து கொண்டிருந்தேன். அப்போது, கூத்துப்பட்டறையில் ஒரு அண்ணனுக்குத் தற்செயலாக அழைத்தேன். "அவர் குஞ்சலி அம்மா தவறிட்டாங்க, சதீஷ்" என்றார். என்ன சொல்வதென்று புரியாமல் “சரிங்கண்ணா" என்று நேராக கூத்துப்பட்டறைக்குச் சென்றேன். அனைவரும் என்னையே பார்த்தார்கள். நடேஷ் சார், “யார் இது?" என்று உற்று பார்த்து, சதீசு, "அம்மா நம்மள விட்டுட்டு போயிடுச்சி டா" என்று அழுதார். உள்ள போய் பார்த்ததும், ஒரு சொட்டு கண்ணீர் கூட கண்ணில் இருந்து வரவில்லை. பின்னர், சுடுகாட்டிற்குச் சென்று வந்தேன். என்ன செய்வதென்று அறியாமல், நடேஷ் சாருக்குப் போன் செய்தேன், அவர் போனை எடுத்து, "டேய், நீ பயங்கரமான குழப்பத்துல இருக்க, உனக்கு திறமை இருக்கு, ஏதாவது பண்ணுடா" என்றார். நான் கூத்துப்பட்டறை செல்லவில்லை, காரணம் என்னால் ஐய்யாவின் இழப்பில் இருந்தே மீள முடியவில்லை, அம்மாவும் இப்போது இல்லை!
இப்போது எப்போதாவது நான் கூத்துப்பட்டறைக்கு சென்றாலும், கீழே வீட்டில் உறங்கினால், கனவில் ஐயாவும் அம்மாவும் வருவார்கள். அவர்களின் நினைவாகவே இருக்கும். பின்னர், உதவி இயக்குனராகச் செல்லலாம் என்று இருந்ததையும் , விட்டுவிட்டேன்.
ஈரோட்டிற்கு வந்தேன். திடீரென்று முடிவு எடுத்ததுதான் இந்த ஈரோடு நாடகக் கொட்டகை.
குஞ்சலி அம்மா, சிறு வயதிலேயே தன் பெற்றோர்களை இழந்துட்டாங்க. அவங்க பாட்டிதான் அவங்கள வளர்த்தாங்க. முத்துசாமி ஐயாவும் அம்மாவும் உறவுக்காரர்கள், மேலும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.
ஒரு நாள், வெளிநாட்டிலிருந்து அம்மாவை பெண் பார்க்கச் சிலர் வந்தனர். அந்த நேரத்தில், ஐயா வீட்டிற்குள் செல்ல, அம்மா ஒரு மூலையில் சோகமாக அமர்ந்திருந்துருக்காங்க.
"ஏன் இப்படி சோகமா உட்காந்திருக்க குஞ்சலி ?" என்று ஐயா கேட்டார்.
அம்மா மெதுவாக, "ஒன்னும் இல்லை, முத்துசாமி. இந்த கல்யாணத்துல எனக்கு உடன்பாடே இல்லை. ஆனா வீட்டில் என் கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் நடந்துட்டுயிருக்கு என்றாங்க.
அதை கேட்டதும், ஐயா ஆச்சரியத்துடன், "என்ன? கல்யாணமா? நானில்ல உன்னை கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருந்தேன்!" என்று கூறியிருக்கிறார்.
அந்த வார்த்தைகளை கேட்டதும், அம்மாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. அப்படித்தான், ஐயா தனது காதலை அம்மாவிடம் வெளிப்படுத்தினார். இந்தச் சம்பவம், காலப்போக்கில் சமூகத்தில் காதலர்களின் நிலைமையை கவனித்தபோது, அல்லது டிவியில் ஓடும் சில காதல் காட்சிகளைப் பார்த்தபோது, இவர்கள் காதல் போல அல்ல என்று தோன்றும்.
பின்னர், அம்மாவுக்கு சென்னையில் அரசு அலுவலகத்தில் டைப் ரைட்டராக வேலை கிடைத்தது. சென்னையில் தன் உறவினர் வீட்டில் தங்கி, அம்மா அந்த வேலைக்குச் சென்று வந்தார்.
முத்துசாமி ஐயா, அம்மா எங்கு இருக்கிறார் என்று அறிந்து, அவருக்கு கடிதம் எழுதி வந்தார். இறுதியில், நேரில் சந்திக்கச் சென்னை வந்தார் ஐயா.
பேரறிஞர் அண்ணா இருக்கும்போது, இருவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயல் ஆற்றினர். மேலும், இந்தித் திணிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதன் பின், பாவேந்தர் பாரதிதாசன் முன்னிலையில், ஐயா வெள்ளை வேட்டி, சட்டையில், அம்மா கருப்புப் புடவையுடன், மணமுடித்து இணைந்தனர்.
அம்மாவைத் தனது பாட்டி வளர்த்ததால் ரொம்ப ஆச்சாரமாக வளர்ந்துள்ளார். அம்மா பள்ளிக்குச் சென்று வந்ததும், அவரது துணிமணிகளை மூலையில் கழட்டிப் போட்டு, அங்கேயே குளித்துவிட்டு, தனது ஆடையை குச்சியால் எடுத்துத் தள்ளிவிட்டு, வேறு துணியை அணிந்து விட்டு வருவார். அப்படி அம்மா ஆச்சாரமாக வளர்ந்ததால், அம்மாவிற்கு அதுவே பழகிப்போய் வாழ்க்கையாகி விட்டது. முத்துசாமி அய்யாவும் அம்மாவும் விரும்பும் போது, ஐயா நிறைய சிறுகதைகள் எழுதி எழுதி, அம்மாவிடம் தருவார். அம்மாதான் சரிபார்த்து, எப்படி இருக்கிறது என்று கூறுவார். முத்துசாமி அய்யாவின் முதல் வாசகர் அம்மாதான். அவரது எழுத்துக்களைத் தட்டச்சு செய்வதும், அம்மாதான். இரவு நேரத்தில் தூக்கம் வரவில்லை என்றால் ஐயா புத்தகத்தை எடுத்து வைத்து அம்மா படிப்பதுண்டு. ஆன்மீகத்தில் மிக ஈடுபாடு உள்ளவராக அம்மா இருப்பார். அதை நான் பார்க்கும் போது, நான் உள்வாங்கியது அது ஒரு வகை ஒழுங்காகவும், மனிதனுக்கான பயத்தை ஏற்படுத்துவதாகவும், சுத்தத்தை கடைபிடித்தல் என்பதாகவும் உணர முடிந்தது. உலகத்தில் மனிதர்கள் வெவ்வேறு விதமான மதங்கள், இனங்கள் என்று பிரிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முத்துசாமி ஐயா பிறப்பில் பிராமணராக இருந்தாலும், அவர் எழுத்தையும் செயல்பாட்டையும் பார்க்கும்போது, அவர் ஒரு பெரியாரிஸ்ட் ஆகவும், கம்யூனிஸ்ட் ஆகவும், மொத்தமாக சொன்னால், முற்போக்கு சிந்தனையாளராகவும் தான் வாழ்ந்திருக்கிறார். அறிவியலும் ஆன்மீகமும், விஞ்ஞானமும், அவர் எழுத்தில் இருந்ததை என்னால் உணர முடிந்தது. நம் தமிழ்நாட்டுப் பாரம்பரியமான தெருக்கூத்தை முத்துசாமி ஐயா ஒரு "Total Theatre Art Form" ஆகப் பார்த்தார். மக்கள் தெருக்கூத்தைப் பார்த்து பழக்கப்பட்டதால், அதன் வாயிலாகவே தான் சொல்ல வரும் கருத்தினைப் புகுத்தி, மக்களுக்குப் புதிய நாடக வடிவத்தைத் தந்தார். அதுமட்டுமல்லாமல் தான் உருவாக்கும் நடிகர்கள் வார்த்தைகள் உசேரிப்பிலும் நன்றாக பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக நாடக வசனங்களை மிகவும் அற்புதமான வடிவத்தில் எழுதியிருப்பார். " கடலிலே ஒரு உரல், உருளுது: பெறளுது : தத்தளிக்குது: தாளம் போடுது " என்பதைப் போல.
தனது மனைவி தனக்காக எவ்வளவோ தியாகம் செய்து, வாழ்ந்து கொண்டிருக்கிறாள்; அவளுக்காக நாம் இது கூடச் செய்யவில்லை என்றால் என்ன என்றுதான், அம்மாவின் ஆன்மீகத்திலும், சாங்கியங்களிலும், சடங்குகளிலும் பங்கு கொள்வார் என்பதையும் உணர்ந்தேன். அனைத்தையும் அவர் ஒரு தியேட்டராகப் பார்க்கிறார், ஒரு நல்ல ரசனையாளனாகப் பார்க்கிறார். முட்டாள்தனத்தைத் தவிர்த்து, அதில் உள்ள அழகியல் அம்சங்களை எடுத்து, தனது எழுத்திலும், தனது நாடக ஆக்கத்திலும், நடிகர்களுக்குக் கொடுக்கும் பயிற்சியிலும் புகுத்தி, புதிய உருவம் தந்து புரட்சி செய்திருக்கிறார். அவர் எழுதிய நாடகங்கள்ள நான், “காலம் காலமாக", நாற்காலி காரர்," "அப்பாவும் பிள்ளையும்," கருவேல மரம்," "உந்திச்சுழி" போன்ற நாடகங்களை இயக்கியுள்ளேன். சில நாடகங்களை படித்துள்ளேன். ஈரோடு, எனக்கு 15 ஆண்டுகால பழக்கமாக இருந்தாலும், நான் தந்தை பெரியாரைப் பற்றி முழுவதுமாக படிக்கவில்லை. ஈரோடு நாடகக் கொட்டகை தொடங்கிய பின்பு, சிலர் தந்தை பெரியார் எழுதியதையும்,சொன்னதையும் பற்றி நண்பர்களின் மூலம் கேட்டறிந்திருக்கிறேன். முத்துசாமி ஐயாவின் எழுத்தில் பெரியாரையும் காண முடிந்தது. 50 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த உலகம் எப்படி இருக்கும், நூறு வருடங்களுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்று பெரியார் எழுதியதாகவும், ஒருவர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதேபோல, முத்துசாமி ஐயாவின் நாடக எழுத்தைப் படிக்கும் போதும் உணர முடிகிறது. தற்போது, ஈரோடு நாடகக் கொட்டகையின் தயாரிப்பில் நான் இயக்கி நிகழ்த்திக் கொண்டிருக்கும் நாடகம், முத்துசாமி ஐயா எழுதிய "உந்திச்சுழி" இந்நாடகத்தில் ஒரு வசனம்: "இங்கு என்ன கேட்டுக்கிட்டு என்னையோ, உன்னை கேட்டுக்கிட்டு உன்னையோ யாரும் பெற்று எடுக்கல!" என்று சுவாரசியமாக எழுதி இருப்பார்.
அவரது எழுத்தில் ஒரு நவீன ஓவியத்தைப் பார்க்க முடிகிறது. இன்று ஏனோ நவீன நாடகங்களுக்கு அதிக வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஒரு மேடம் நாடகம் நிகழ்த்த என்னை அழைத்த போது, “சதீஷ், நாடகத்தில் ஏதும் அரசியல் இருக்காதுல்ல?" என்று கேட்டார். நான், "அதெல்லாம் இருக்காது, மேடம்," என்றேன். சமூகப் பிரச்சனையையும், இம்மக்கள் படும் அவல நிலையையும் தனது எழுத்தில் கொண்டு வந்தார், முத்துசாமி ஐயா. அது அரசியல் அல்ல! இந்த சமூகத்தின் மீதும், மக்கள் மீதும் கொண்ட பற்றும், அக்கறையும்தான்.
கூத்துப்பட்டறையில் நடிகர்களுக்கு, மூன்று வேளை சாப்பாடு ருசியாக இருக்கும். சாப்பாடு, சாம்பார், ரசம்,பொறியல்,மோர், ஊறுகாய், அப்பளம் என்று அனைத்தும் இருக்கும்.
மேலும் அரங்கில் ஏசி, ரூமில் ஏசி, வைஃபை இணைப்பு என அனைத்து வசதிகளும் இருக்கின்றன. இவை அனைத்தும் கூத்துப்பட்டறைக்கு கிடைக்க, இந்த மனிதன் எத்தனை பேரைச் சந்தித்திருப்பார்? எங்கெங்கு அவர் அலைந்திருப்பார்? என்றெல்லாம் நினைத்திருக்கிறேன்.
கூத்துப்பட்டறை நடிகர்களுக்கு பாக்கெட் மணியாக மாதம் நாலாயிரம் ரூபாய் கொடுக்கப்படும். அவர்கள் கையெழுத்திட்டுச் சம்பளம் பெறுவார்கள். நான் கையெழுத்திட்டுச் சம்பளம் பெற்ற முதலிடம் கூத்துப்பட்டறையில்தான். நாலாயிரத்தை நாற்பதாயிரமாக எண்ணிக் கொண்டு சந்தோஷமாக இருப்பேன். என் உடை உடமைகளை வைத்திருக்கும் பெட்டி ஒன்று நான் வைத்திருந்தேன். அரங்கின் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் கடைசியில் ஒரு பெஞ்ச் இருக்கும். அந்த இடம் மிகவும் பிடித்ததால், அந்த பெஞ்சின் கீழே என் பெட்டியை வைத்து, என் துணிகளை வைத்திருந்தேன். யாரிடமும் நான் அதிகம் பேச மாட்டேன். மௌனமாகவே இருப்பேன். அங்கு நடக்கும் ஒவ்வொன்றும் புதிதாக இருந்தது. அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு வாழ்ந்தேன்.
ஐயாவுக்கும் அம்மாவுக்கும் நடேஷ் சாரை பற்றிய கவலை தான் அதிகம். ஒரு நாள், நடேஷ் சார் "எப்பா, உனக்கு ஒரு சூப் வச்சி தரேன்" என்று சமையல் அறைக்கு சென்று ஐயாவுக்கு சூப் வைத்தார். அதை என்னிடத்தில் கொடுத்து, "அப்பாட்டப் போய் குடுடா" என்றார். நான் போகும்போது அதை நுகர்ந்தேன்
ஒரே சாம்பார் தூள் வாடை, ஐயாவிடம் தந்ததும், அவர் அதை வாங்கி குடித்தார். எந்த ஒரு முகச் சுழிப்பும் இல்லாமல் பாதி டம்ளர் குடித்ததும், நான் "போதும் ஐயா" என்றதும் என்னிடத்தில் கொடுத்தார். நான் அதைக் குடித்தேன், ஒரே சாம்பார் பொடி வாடை காட்டமாக இருந்தது. உப்பு அதிகம், எப்படி இதை ஐயா குடித்திருப்பார்? என்று நினைத்தேன், பின்பு தான் தெரிந்தது, ஆசையாக நடேஷ் சார் செய்து கொடுத்திருக்கிறார் என்பதால்.
ஒரு நாள் இரவு, ஐயாவுக்கும் நடேஷ் சாருக்கும் பயங்கரமான சண்டை ஏற்பட்டது. டிவி ரிமோட் எல்லாம் உடைந்தது. பின்பு, நான் ஐயாவை உள் அறைக்கு அழைத்து வந்தேன். உள்ளே வந்ததும், “பாவம் யா அவன்! அவனுக்கு எந்த அங்கீகாரமும் இல்லாததாலதான், இப்படி இருக்கான்" என்று கவலை அடைந்தார். காலை எழுந்ததும், நடேஷ் சார் அறையில் இருந்து வெளியில் வந்தார். முத்துசாமி ஐயா "குட் மார்னிங் டா கண்ணு , நைட்டு ரொம்ப சத்தம் போட்டுட்டடா கண்ணு" என்றார். "அம்மாவை ரொம்ப திட்டிட்ட, சாரிப்பா" என்றார். “சரி, விடுடா கண்ணு" என்று ஐயா சேவிங் செய்யத் தொடங்கினார். தினமும் தனது தாடியை சேவிங் செய்து அழகாக வைத்துக் கொள்வார்.
2018 இல், நடேஷ் சார் என்னை வைத்து முத்துசாமி ஐயா எழுதிய “காலம் காலமாக" நாடகத்தைத் தனிநபர் நாடகமாக நடிக்க வைக்கத் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது, முத்துசாமி ஐயாவிடம் " நான் நடிக்கப் போகிறேன், நடேஷ் சார் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன் ஐயா " என்று சொன்னேன். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். "ரொம்ப நல்லா பண்ணுவான் யா நடேஷ் ?" என்றார். நான், காலம் காலமாக நாடகப் பிரதியை ஐயாவிடம் படித்துக் காட்டினேன். முடிந்ததும், "புல்லா ஆர்டிபிஷியலா இருக்குயா" என்றார். நான் அதற்கு பதில் தேடி, "ஏன் ஐயா அப்படி சொன்னார்?" என்று தேடினேன்.
பின்பு ஒருநாள், பிரளயன் சார் அவருடைய புத்தகம் ஒன்று வெளியிடுவதற்காக முத்துசாமி ஐயாவிடம் முன்னுரை கொடுக்கச் சொல்லி , கூத்துப்பட்டறையில் கேட்டிருந்தார். நான் ஐயாவிடம் சொன்னேன்,"ஒரு பேப்பர், பேனா கொண்டு வாங்க" என்று கூறினார். அவர் மெத்தையில் படுத்தபடி கண்ணை மூடிக் கொண்டு தலையை சொரிந்து கொண்டே சொல்லத் தொடங்கினார். "பிரளயன், என்னை அறிவதற்கு முன்பே நான் அவரை அறிவேன்" என்று சொல்லத் தொடங்கினார், அவர் ஒவ்வொரு வார்த்தையையும் தேடித்தேடி சொன்ன விதம் அற்புதமாக இருந்தது, அவ்வார்த்தைகளை ஐயா எனக்கு எழுத வாய்ப்பளித்ததால், நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஐயாவிடமும், குஞ்சலி அம்மாவிடமும், நடேஷ் சாரிடமும் நிறையக் கற்றுக் கொண்டேன். அங்கு நாடகக் கலையை மட்டும் கற்கவில்லை, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். எத்தனையோ தியாகிகள், வீரர்களை பற்றி படித்திருந்தாலும், ஒரு துணைவியார் குஞ்சலி அம்மையார். தியாகியுடன் வாழ்ந்ததின் மூலமாய் ஒட்டுமொத்தத் தியாகிகள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று உணர முடிந்தது.
சிலருக்கு, கூத்துப்பட்டறையின் மீது விமர்சனம் இருந்தாலும், முத்துசாமி ஐயாவின் மீது விமர்சனம் இருந்தாலும், அங்குள்ளவர்கள் மீது விமர்சனம் இருந்தாலும், விமர்சனத்தை எல்லாம் கடந்து, மரணத்தைக் கடந்து, தன்னை விமர்சித்த, தன் கலைஞர்களும், சகப் பயணிகளும் மீண்டும் கூத்துப்பட்டறைக்கு வந்தாலும், அதனை ஏற்று, மீண்டும் அவர்களுக்கு வாழ்வளித்து, வாழ்வாதரத்தை அளித்து, இன்னும் பல பேருக்குக் கூத்துப்பட்டறை வாழ வழி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு அமைப்பை முன்நின்று இயக்குவது எவ்வளவு சிரமம் என்பதை அவர் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.
வள்ளலாரை வெவ்வேறு மாதிரியாக விமர்சித்தாலும், இன்று வரை அற்புதமாக வடலூரில், வள்ளலார் இராமலிங்க அடிகளார் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் சொல்வார்கள், வள்ளலார்தான் சன்மார்க்க சங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று. அது போலதான் எனக்கு ஓர் அமைப்பை இயக்கத் தகுதி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் ஆறு ஆண்டுகள் கடந்து, ஈரோடு நாடகக் கொட்டகை சென்று கொண்டிருக்கிறது. கடவுள் ஒருவரே, அவர் உருவமற்றவர், எனினும் அவர் உருவமுள்ள எல்லா பொருள்களிலும் நிறைந்து இருக்கிறார் என்று பத்தாம் வகுப்பில் படித்தது நினைவுக்கு வருகிறது. முத்துசாமி ஐயா தான் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று நம்பிக்கை கொண்டேன். நம்பிக்கை இல்லாத விஷயத்தில் ஈடுபடுவது நல்லதும் இல்ல, பயனும் இல்ல. அது கடவுள் நம்பிக்கையைப் போல உணராமலேயே ஊட்டி வந்ததாக இருந்தாலும் சரி, நம்பிக்கை வேண்டும் என்று அவர் எழுதிய காலம் காலமாக என்னும் நாடகத்தில் சொன்னது போல, நம்பிக்கையோடு நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
2019 அக்டோபர் 24, ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று, ஈரோடு நாடகக் கொட்டகை தொடங்கினோம். நவம்பர் மாதம், திருவண்ணாமலையில் கீதபாரதி கலைக்கூடத்தில் காலம் காலமாக நாடகத்தை நிகழ்த்துவதற்காக 20 கலைஞர்கள் சென்றோம். அப்போது அங்கிருந்த கலைக்கூடத்தின் இயக்குனர் பாரதி அண்ணன், 20 கலைஞர்களுக்கும் பட்ட சாதங்களை தந்தார். எல்லாருக்கும் பகிர்ந்து விட்டு, கடைசியில் ஒரு பொட்டலத்தை நான் எடுத்து விரித்த போது, இலைக்குக் கீழிருந்த நியூஸ் பேப்பரில் ஐயாவும் அம்மாவும் காட்சியளித்து ஆசீர்வதித்தது வியப்பாகவும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சிடேனும் இருந்தது. கண்ணீர் தழும்பி நான் அதை பார்த்தேன். "நீ நல்லபடியா செய்வ டா கண்ணு, எங்க ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு" என்று இருவரும் சொன்னது போல உணர்ந்தேன். இரு பெரும் தத்துவவாதிகளான குருட்ஜிஃப் மற்றும் "ஜ.கிருஷ்ணமூர்த்தி இருவரையும் முத்துசாமி ஐயா பின்பற்றியிருக்கிறார் என்று சீனியர்ஸ் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல, உலகமெல்லாம் கூத்துப்பட்டறை பற்றி அறிந்தும், முத்துசாமி ஐயாவைப் பின்பற்றியும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கூத்துப்பட்டறையின் மூலம், பலருக்கும் வாழ்வளித்த, முத்துசாமி ஐயாவுக்கு, தமிழக அரசு ஏதேனும் மரியாதை செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
என்னை முழு நேரக் கலைஞராகக் கண்டெடுத்தவர் என் குரு, முத்துசாமி ஐயாவின் மகன், நடேஷ் சார் தான். நான் எழுதிப் பழக்கமில்லை இதுவே முதன்முறை, எழுத வேண்டும் என்று தோன்றுகிறது, குறுகிய பக்கத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதால் சிலவற்றை மட்டுமே எழுதியிருக்கிறேன். இன்னும் முத்துசாமி ஐயாவைப் பற்றி ஆழமாகவும், குஞ்சலி அம்மாவைப் பற்றியும், நடேஷ் சாரைப் பற்றியும் நாவலாகவோ நாடகமாகவோ கொண்டு வருவேன்.
என்னை, முத்துசாமி ஐயாவைப் பற்றி எழுத" சொல்லி எனக்கு வாய்ப்பளித்த, எங்களுக்கு எப்பொழுதும் பக்க பலமாக இருக்கும் புதுமலர் இதழின் ஆசிரியர் கண. குறிஞ்சி ஐயாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஸ்கர் அண்ணன் தன் பெற்றோரை நினைத்து அழுதிருப்பாரோ இல்லையோ எனத் தெரியவில்லை, ஆனால் முத்துசாமி ஐயாவைப் பற்றியும் குஞ்சலி அம்மாவைப் பற்றியும் பேசும்போதெல்லாம் பாஸ்கர் அண்ணன் அழுது அழுகுணர்ச்சியோடு பேசுவார். ஐயா என்னுள் இன்னும் ஆழமாய் செல்வதற்குக் காரணமாய் இருந்த பாஸ்கர் அண்ணனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
முத்துசாமி ஐயாவால் கிடைத்த இந்த வாழ்வு, வாழும் வரை அவரையும் உடன் அழைத்துச் செல்லலாம் என்றுதான் அவரது சிலையை வைத்து, முத்துசாமி ஐயா நினைவரங்கமாக ஈரோடு நாடகக் கொட்டகை 5 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நாடகக்களமாக (Children's Theatre) இயங்கி வருகிறது.
என்னுள் மட்டும் முத்துசாமி ஐயா வாழவில்லை, அவர் உருவாக்கிய அத்துணை மாணவர்களுக்குள்ளும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
- வே. சதீஷ்குமார் (ந.முத்துசாமி அவர்களின் நெருங்கிய சீடர். ஈரோடு நாடகக் கொட்டகை நிறுவனர். நடிகர் மற்றும் இயக்குநர்)