(நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் சாய்பாபாவின் மறைவுக்குப் பிறகு அவரது ஒரே மகள் மஞ்சீரா புதுமலர் இதழில் எழுதும் கடிதம்)

அன்புள்ள அப்பா,

 "அன்புள்ள அப்பா" என்றுதான் எப்பொழுதும் எனது கடிதங்களைத் தொடங்குவது வழக்கம். மேலும் விடைபெறுகிறேன் (Goodbye) என்று முடிவில் ஒரு போதும் நான் எழுதியதில்லை. அது உண்மையாகவே நமது இறுதி விடைபெறுதலாக முடிந்துவிடக்கூடும் என்ற அச்சம் எனக்கு எப்பொழுதும் உண்டு. உங்களுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை என்னால் எழுத இயலாது என்பதுதான் இன்றைய நிலவரமாக இருந்தாலும், விடைபெறுகிறேன் என நான் மீண்டும் சொல்ல மாட்டேன். காந்தி நினைவு மருத்துவமனையில் பார்மால்டிஹைடு திரவத்தில் உங்கள் உடல் மூழ்கிக் கிடக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகள் இளம் மருத்துவர்களுக்குக் கற்பிப்பதற்காக அது பயன்படுத்தப் படும். உயிரற்ற, உணர்வற்ற உங்களது உறைந்த உடல் ஒரு சிறு பெட்டிக்குள் ஓய்வு எடுத்துக் கொண்டு, பாதுகாப்புத் திரவத்தில் மெதுவாகக் கரைந்து கொண்டிருப்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. உங்களது பேரறிவினை ஆன்மா எனவும், உணர்வு எனவும் சிலர் குறிப்பிடலாம். மின்துடிப்புகளின் சிக்கலான ஊடறுப்புகள் நியூரான்கள் வழியாக நம்மை வரையறுக்கும் அத்தருணத்தில் நீங்கள் - அக்டோபர் பன்னிரெண்டாம் நாள் (2024) மாலை - எங்களை விட்டுப் பிரிந்தீர்கள்.

 அப்பா! எங்களோடு ஏன் நீங்கள் இருக்க முடியாமல் போய் விட்டது? உங்களிடம் எது தவறாகப் போய் விட்டது எனவும், கடும் வயிற்று வலியால் நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள் எனவும், உங்களுக்கு என்ன சிகிச்சை தீர்மானிக்கப் பட்டுள்ளது எனவும் நீங்கள் மருத்துவர்களை விசாரித்துக் கொண்டிருந்த பொழுது, உங்களது தீர்மானமான முடிவுகள் குறித்துப் பதினோராம் நாள் இரவு கடைசியாகப் பேசினீர்கள். மருத்துவர்கள் செயற்கை மூச்சுக் கருவியை உங்களுக்குப் பொருத்துவதற்கு முன்னால், நான் விரைவில் குணமாகி விடுவேன் எனவும், நாளை நாம் பேசலாம் எனவும், நாம் இருவரும் சேர்ந்து படிக்கவுள்ள புத்தகம் குறித்து விவாதிக்க நான் ஆயத்தமாக இருக்க வேண்டும் எனவும் நீங்கள் நம்பிக்கையோடு என்னிடம் கூறினீர்கள். அடுத்த நாள் உங்கள் உடல்நிலை மிகவும் ஆபத்தாக மாறிவிடும் என மருத்துவர்கள் எங்களிடம் சொன்ன பொழுதும், அதை நான் நம்ப விரும்பவில்லை. ஏனெனில் உங்களது நம்பிக்கை, எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

 அப்பா! எதையும் நீங்கள் எதிர்கொள்வீர்கள் என நான் நம்பினேன். (தத்துவார்த்த ரீதியாக இத்தகைய கோட்பாட்டை நாம் இருவரும் ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும்கூட) எதையும் சாதிக்கும் மாமனிதராகத்தான் நீங்கள் எனக்கு இருந்தீர்கள். நமது குடும்பத்திற்கு அழிக்க முடியாத ஆதரவுத் தூணாக நீங்கள் விளங்கினீர்கள். உங்களது இதயத்துடிப்பு நின்று விட்டது எனவும், இதயச்செயல் தூண்டல் (CPR - Cardiopulmonary Resuscitation) மூலம் உங்களைக் காப்பதற்கு மருத்துவர்கள் முயல்கின்றனர் எனவும் அவர்கள் கூறிய பொழுதுதான் நான் மனமுடைந்து போனேன். உங்களைக் கவனிக்கும் மருத்துவர்களின் சிவந்த கண்களையும், நடுங்கும் கைகளையும் பார்த்த பிறகு வரப்போகும் தீயசெய்திக் குறிப்பு ஒன்று என்னுள் புலனாகியது. உனது அப்பா மீண்டும் வருவார், நம்மை விட்டு அவர் எங்கும் செல்ல மாட்டார், அவரது வாழ்வு இப்பொழுது மீண்டும் தொடங்கி விட்டது என அம்மாவும் நம்பிக்கையோடு என்னிடம் கூறினார்.

 ஆனால் எங்களது விலை மதிப்பற்ற நம்பிக்கைகள் மற்றும் சிறிய விருப்பங்களைக் காட்டிலும் நடப்பு என்பது மிகவும் கொடூரமாக இருந்தது. இரவு 8.36 மணிக்கு நீங்கள் மரணமடைந்து விட்டீர்கள் என மருத்துவர்கள் அறிவித்த பொழுது, என் மீதும் அம்மாவின் மீதும் முழு உலகமும் கவிழ்ந்து விழுந்து எங்களை நசுக்கியது. அந்தக் கணத்திற்குப் பிறகு வரலாற்றை அழித்து விட்டு, கால இயந்திரம் ஒன்றைப் பெற நான் விரும்பினேன். அந்தக்கால இயந்திரத்தின் மூலம் எங்களுடன் நீங்கள் இருக்கும் அந்த அரிய தருணத்திற்குப் போக நான் மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால், இந்திய அரசோடும், நீதித் துறையோடும் 10 ஆண்டுகள் நாங்கள் நடத்திய கடுமையான போராட்டத்திற்குப் பிறகுதான் இறுதியாக நாம் மூவரும் ஒன்று சேர்ந்தோம். ஆனால் ஏழு மாதங்கள் கூட நீடிக்காத வகையில் அந்த வசந்த காலம் முடிந்து விட்டது.

 அப்பா! அவர்கள் கொடிய 'அண்டா' சிறை யிலிருந்து என்றுமே உங்களை விடுவிக்க மாட்டார்கள் என மிக நீண்ட காலம் நான் பயந்து கொண்டிருந்தேன். அந்தச் சிறை, உறுதியாக ஒரு மரணப்பொறியாகவே எனக்குத் தோன்றியது. முழுமையாகத் தனிமையில் தள்ளி உளவியல் ரீதியாகச் சித்திரவதை செய்து மக்களைச் சிதைக்கும் காலனியப் பாரம்பரியமாக அது இருந்தது. சிறைக்குள்ளேயே உங்களைக் கொன்று விடுவது என்பது அவர்களது விருப்பமாகவும், உண்மையான நோக்கமாகவும் இருந்ததாகத்தான் அந்த சமயத்தில் நான் உணர்ந்தேன். இருப்பினும், நீங்கள் வெளியே வந்தது குறித்து நான் மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் எனக்குத் தந்தையாக மட்டும் இருக்கவில்லை நீங்கள் எனது மிகச் சிறந்த நண்பராகவும் இருந்தீர்கள். வேறு எவரையும் விட உங்களை நான் மிகவும் மதித்தேன். தனது குழந்தைகளைப் பேணும் வேறு எந்தவொரு பெற்றோரையும் விட நீங்கள் என்னோடு மிகவும் நெருக்கமாக இருந்தீர்கள். மேலும் எனது சுயத்தை உருவாக்கிக் கொள்ளும் வகையில் நீங்கள் என் மீது தாக்கத்தைச் செலுத்தினீர்கள். வாழ்வு குறித்த எனது சிந்தனை, கொள்கை மற்றும் எனது கண்"ணாட்டம் ஆகியவை, நீங்கள் சொல்லிய, நம்பிக்கை வைத்த, உறுதியாகப் பற்றிநின்றவற்றிலிருந்துதான் நான் நிறையக் கற்றுக் கொண்டேன்.

ஆனால் நீங்கள் இல்லாத இப்பொழுது எனது ஆன்மாவில் ஒருதுளை விழுந்து விட்டதாக உணர்கிறேன். நான் ஒவ்வொன்றையும் செயற்கையாகச் செய்து கொண்டிருப்பதாகவும், எனக்கும் நடப்புக்கும் இடையே ஓர் அடர்த்தியான மூடுபனி இருப்பது போலவும் உணர்கிறேன். இருப்பினும் இதை நான் ஒப்புக் கொள்ளவும் விரும்பவில்லை.

 “நான் சாவதற்குக் கடுமையாக மறுக்கிறேன்" என உங்களது கவிதையில்  குறிப்பிட்டீர்கள். நீண்ட பத்து  ஆண்டுகளாக உங்களது உடல் சிதைவுற்று வந்த போதிலும் இறப்பதற்கு நீங்கள் மறுத்தீர்கள். நீங்கள் சிறையிலிருந்து வெளியே வந்த பொழுது உங்கள் உடல், வலிகளால் துளைக்கப் பட்டிருந்தாலும் நீங்கள்  சிரித்துக் கொண்டும், வெகு இயல்பாகப் பேசிக் கொண்டும் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள்  வியந்தனர். உங்கள் திசுக்கள் அழுகிக் கொண்டிருந்தன, உங்கள் உறுப்புக்கள் அரிதாகத் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனால் வாழ்வு குறித்தான  உங்களது  பேரார்வம், மக்கள்  மீதான அன்பு, அதிகாரத்தின் முன் மண்டியிடாத உங்கள் வைராக்கியம் ஆகியவைதான் நரகச்சிறையிலிருந்த உங்களை எங்களிடம் - உங்களை உயிருக்குயிராக நேசித்தவர்களிடம் - கொண்டு வந்து சேர்த்தது. நீங்கள் எங்களோடும், இந்த நாடு மற்றும் உலகம் முழுவதுமிருந்த நண்பர்களோடும், தோழர்களோடும் இங்கே சிறிய காலமே இருந்தாலும், அது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒரு சிறிய சிறைக்கூடத்தில் அடைந்து கிடக்க வேண்டியவர் அல்ல. உலகம் முழுவதற்கும் உரியவர் நீங்கள்.

 உங்களது பித்தப்பையை வெளியே எடுத்துப் பார்த்த பொழுது, உங்களது உறுப்பிலும், அதன் இணைப்புத் திசுக்களிலும் கடுமையான நோய்த்தொற்று இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். வழக்கமாக நோய்த்தொற்று அவ்வளவு மோசமாக இருக்காது. ஏனெனில் மக்கள் தங்களுக்கு ஏற்படும் வலியை உணர்ந்து, அதைச் சோதனை செய்து பிறகு குணப்படுத்திக் கொள்வார்கள். 2017 ஆம் ஆண்டிலேயே நீங்கள் அந்த வலியை உணர்ந்தீர்கள். எனவே அதே ஆண்டு மார்ச்சு மாதத்தில் ஓர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மார்ச்சு ஏழாம் நாள் நீங்கள் கேட்சிரோலிக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினீர்கள். அபாயகரமான அந்த நாளில்தான் எவ்வகைக் குற்றமும் இழைக்காத போதும், உரிய சான்றுகள் இல்லாத பொழுதும் சட்டப்புறம்பான செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் (ஊபா சட்டத்தின் கீழ்) நீங்கள் ஒரு குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டீர்கள்.

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விடுவோம் என்ற முழு நம்பிக்கையோடு நீங்கள் அங்கு சென்றீர்கள். எனவே என்னையும், அம்மாவையும் எந்தவொரு மிக மோசமான செய்திக்கும் நீங்கள் தயார் படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, இது குறித்து நாங்கள் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளைக் கூட நீங்கள் குறிப்பிடவில்லை. அந்தத் தீர்ப்பு மரண தண்டனைக்கு இணையானதாக இருந்தது. அன்றிலிருந்து எட்டு ஆண்டுகளாக இந்த நோய் உங்களது வயிற்றில் தொற்றிக் கொண்டது. இது மெதுவாக ஆனால் வலியோடு உங்களது உறுப்புக்களைத் தின்று கொண்டிருந்தது. சட்டத்தின் அடிப்படையில் மிக உச்சபட்சமான தண்டனையாகிய ஆயுள் தண்டனையைத்தான் தர முடிந்தது எனவும், இல்லையேல் இதை விடக் கொடிய தண்டனையை உங்களுக்குக் கொடுத்திருப்பேன் எனவும் அந்த நீதிபதி குறிப்பிட்டார். ஆனால் அப்பா! அந்த நீதிமான் குறிப்பிட்ட இரண்டு தண்டனைகளையும் இறுதியாக உங்களுக்குத் தரவில்லையா? கொடூரமான அண்டா சிறையில் உங்களது குறுகிய வாழ்நாளை நீங்கள் கழிக்க நேர்ந்தது. இறுதியாக நீங்கள் வெளியே வந்த பொழுது, மருத்துவ சிகிச்சை இல்லாமை, இழிவான மற்றும் திட்டமிட்ட புறக்கணிப்பு ஆகியவற்றின் காரணமாக இத்தகைய கொடிய சீரழிவு ஏற்பட்டு விட்டது. மேலும் சாராம்சத்தில் இது ஒரு மரண தண்டனையாகவும் ஆகி விட்டது.

 எனக்கு நிறைய வருத்தங்கள் உள்ளன. நாம் இருவரும் இணைந்து போதுமான அளவு நேரத்தைக் கழிக்க இயலவில்லை. வழக்கமான கேலிப்பேச்சு இல்லாமலும், நாம் விரும்பும் எல்லாப் புத்தகங்களைப் படிக்க முடியாமலும் போய் விட்டது. நீங்கள் உங்களது முனைவர் பட்ட ஆய்வைச் சுருக்கிப் புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டிருந்தீர்கள். தொடர்ந்து கட்டுரைகள் எழுதவும், புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆவலாக இருந்தீர்கள். பல இடங்களுக்குப் பயணம் செல்லவும், பல்வேறுபட்ட இடங்களில் புதிய உணவுகளை உட்கொள்ளவும் நீங்கள் விரும்பினீர்கள். ஆனால் விடுதலையான ஏழு மாதங்களில் பெரும்பாலும் மருத்துவ மனையிலேயே நீங்கள் இருக்க நேர்ந்தது. உடம்பு தேறுவதற்கு உங்களாலான அனைத்து முயற்சிகளையும் நீங்கள் செய்தீர்கள்.

கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றின் செயல்திறனை மேம்படுத்த உங்களது உணவினைக் கட்டுப்படுத்தி வந்தீர்கள். உடைந்த உங்களது இடதுகை மீண்டும் சற்றே வலிமை பெற இயன்முறை மருத்துவப் பயிற்சிகளை நாள்தோறும் செய்து வந்தீர்கள். அதிலும் குறிப்பாக நடைமுறை பற்றிய புரிதலால், அவநம்பிக்கை எனும் கடலில் நான் மூழ்கியிருந்த சமயத்தில், வாழ்வதில் உங்களுக்கு இருந்த தீவிர ஈடுபாட்டையும், நீங்கள் கனவு கண்ட எதிர்காலத்திற்காக நீங்கள் தொடர்ந்து வேலை செய்ததையும் பார்த்து உண்மையாகவே நான் உத்வேகம் அடைந்தேன்.

கருத்துக்கள் நிரம்பிய, என்றுமே திறக்க முடியாத பண்டோரா குடுவை உங்களிடம் உள்ளது. (யாரும் கண்டறியாத துன்பங்கள் நிரம்பிய பண்டோரா என்பவளது பெட்டி. இது கிரேக்கப் புராணத்தில் வரும் கதை - மொழிபெயர்ப்பாளர்)

 prof saibaba with his family

(மகள் மஞ்சீரா, சாய்பாபா அவர்களின் துணைவியார் வசந்தகுமாரி மற்றும் சாய்பாபாவின் தாயார் சூரியவதி)

உங்களது சிறை அனுபவங்களை எழுத விரும்பினீர்கள். அதேபோல் மேலும் கவிதைகளையும், கதைகளையும் எழுத விழைந்தீர்கள். அப்பா! எதிர்காலம் குறித்த உங்களது கனவுகளும், தணியாத நம்பிக்கைகளும் பிறரை எளிதில் தொற்றக்கூடியவை.

 பழங்குடி மக்கள் எளிதில் அணுகத்தக்க வகையில் ஒரு பல்கலைக் கழகம் தொடங்கப்பட வேண்டும் எனும் உங்களது உறுதியைச் சிறையில் இருந்த எல்லாச் சமயங்களிலும் வலியுறுத்திக் கொண்டே இருந்தீர்கள். எவ்விதக் காரணமுமின்றிச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த பழங்குடி இளைஞர்களிடம் படிப்பதற்கும், அவர்களுக்கான பெயரை உருவாக்கிக் கொள்வதற்கும், அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், அவர்களது வீடுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான பெருவிருப்பம் அவர்களிடம் கனன்று கொண்டிருந்தது. தங்களது இயற்கைச் செல்வங்களைச் சுரண்டுவதற்காகத் தங்களது வாழ்விடத்திலிருந்து நகரங்களுக்கு இழுத்துச் செல்லப்படாமல், இடம் பெயராமல் தங்களது சொந்த வீடுகளிலும், தங்களது சொந்த இடத்திலும் தங்கிப் படிப்பதற்காக ஓரிடத்தைப் பெற அவர்களுக்கு முழுத் தகுதியும் உண்டு.

 நீங்கள் வாழ்வதற்கே விரும்பினீர்கள் என்பதை நான் நன்கறிவேன். நீங்கள் ஒரு போராளி. வாழ்வதற்கான அளவற்ற உங்களது பேராவலை உங்களது கண்களிலும், நீங்கள் பேசும் குரலைக் கேட்கும் பொழுதும் நான் உணர்ந்திருக்கிறேன். அப்பா! எனது இந்த எழுத்தைப் படிக்கும் பிறர், உங்களை எப்பொழுதும் மறக்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன். தொற்றிக் கொள்ளும் உங்களது வசீகரப் புன்னகை, துன்பத்தை எதிர்த்தெழும் தளராத பண்பு, பொறுமையான உங்கள் உரையாடல்கள் ஆகிய இவற்றையும் அவர்கள் மறக்க மாட்டார்கள். உங்களது கனவுகள் அனைத்தையும், உங்களது பெரும் உற்சாகத்தையும் நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம் எனவும் நான் நம்புகிறேன். இத்தகைய உற்சாகத்தை இப்பொழுது நாங்கள் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் வெகுவிரைவில் எங்களை முன்னெடுத்துச் சென்றீர்கள். ஆயினும் உங்கள் கனவுகள் என்றும் வாழும். உள்ளீடற்ற மரணத்தைப் போன்ற ஒன்று உங்களது சாரத்தை எங்களிடமிருந்து பறித்திட முடியாது.

 விடைபெறுதலோடு இந்தக் கடிதத்தை முடிக்க விரும்புகிறேன். ஆனால் அதை என்னால் செய்ய இயலாது. உங்கள் மரணத்தை, உண்மையாகவே நீங்கள் இங்கு இல்லை என்பதை, ஒப்புக் கொள்ள எவ்வளவு காலம் ஆகும் என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும் ஒரு விடை பெறுதலை என்னால் எழுத இயலாது. எவ்வகையிலும் தப்பிக்கவே முடியாத மற்றொரு அண்டா சிறையில் நீங்கள் எங்களிடமிருந்து விலகி இருக்கிறீர்கள் என எண்ணித் தொடர்ந்து உங்களுக்கு நான் கடிதம் எழுதிக் கொண்டே இருப்பேன்.

நம் இருவரது இதயங்களுக்கும் நெருக்கமான பய்ஸ் (FAIZ) கவிஞரின் ஒரு கவிதையை இறுதியாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

கைவிலங்குகளோடு கடைவீதியில் நாம் நடப்போம்.

ஈரவிழிகளும் ஓய்வற்ற ஆன்மாவும்
போதுமானவை அல்ல.
மறைக்கப்பட்ட அன்பைப் பேணியதற்காக
குற்றம் சாட்டுவது போதுமானதாக இல்லை.
கைவிலங்குகளோடு கடைவீதியில்
நாம் நடப்போம்.

கையில் வாசனைப்பொருளை தெளித்துக் கொண்டு
மெய்மறந்து ஆடியபடி செல்வோம்.
தலையில் குப்பையோடும்,
ஆடையில் இரத்தத்தோடும்
நாம் நடப்போம்.
நான் நேசிக்கும் நகர்
காத்திருக்கும் போது
நாம் நடப்போம்.

நகரின் தலைவர்
பொதுமக்கள் கூட்டம்
பொய்க்குற்றச்சாட்டின் அம்பு
பழிபோடும் கல்
துன்பத்தின் காலை
தோல்வியின் நாள்
என்னை அன்றி
யார் இவர்களுக்கு நண்பர்?

நேசமிகு நகரில்
யாரே கறையற்றவர்?
கொலையாளிகள் அல்லது
தூக்கிலிடுவோரின் கரத்தை
தீர்மானிப்போர் யார்?
இதயத்தின் பயணத்திற்கு ஆயத்தமாகு!
காயமான இதயத்தோடு செல்!
கொல்லப்படவே நான் செல்கிறேன்.

தமிழில்: கண.குறிஞ்சி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.