எங்கள்
பரம்பரை நரம்பில்
பாயும் குருதியில்
ஓயாத் தமிழின்
உணர்வுகள்.
அரும்பும் கனாக்களிலும்
வளர்கின்றன எங்கள்
கரும்புத் தமிழின்
பெருமித மொக்குகள்..
வந்தவருக்கெல்லாம்
வாழ்வுதரும்
எங்கள் மண்ணின்
இதயத் துடிப்பாய் இருப்பது
தமிழ்.
எப்போதும் வெடிக்கத்
தயாராயிருக்கும்
எரிமலைதான் ..
எனினும்
திராவகத்தை ஊற்ற நினைத்தால்
எல்லாம் தீக்கிரைதான்.
வரலாறு சொல்லும்
வரலாறே இதுதான்.
அறிவின்
அத்தனை சாளரங்களையும்
திறந்து வைத்து
உலகைப்பார் என்றது எங்கள் தமிழ்.
ஆங்கிலம்
பக்கத்தில் வந்து அமர்ந்தது.
எங்கள் செல்லங்களுக்கு
உலகம்
உள்ளங்கைகளுக்குள் வந்து
உட்கார்ந்தது.
இதில்
எதற்கு வேண்டும் மூன்றாம் மொழி?
அறுபட்டுப்போன
இந்தியின் வாலை
எதற்குப் பிடித்துத் தொங்கவேண்டும்
எம் தமிழன்?
தேசியக் கல்விக் கொள்கை
எந்தத் தேரைப் பிடித்து
இழுத்துக் கொண்டுவர?
எவரை, எதைச் சுமக்கத்
தூக்க வேண்டும் இந்தப் பல்லக்கை?
இத்தனை ஆண்டுகளில்
எதில் சோடைபோனான் எம்தமிழன்?
எந்தமொழிக்கும்
எதிரியில்லை நாங்கள்.
ஆனால்
எமது மொழிக்கு
புதைகுழி தோண்டினால்
எப்படிப் பொறுக்க முடியும் எங்களால்?
தேவையெனில்
மூன்றாவது மொழியென்ன
முப்பது மொழிகளெனினும் கற்போம்.
எதையும் திணித்தால்
குமுறி வெடிப்போம்.
ஒடுங்காது எங்கள்
புறநானூற்று வீரம்.
பாரதிதாச வேகம்.
தமிழை ஒடுக்கிவிட்டால்
தமிழரை ஒடுக்கிவிடலாம்
என்கிற கணக்கு
எப்போதும் தவறான கணக்கு.
ஏனெனில்
எரிமலைமேல் ஊற்றலாமா திராவகத்தை?
- சென்னிமலை தண்டபாணி