வெள்ளையரை முதன்முதலில் விரட்டுதற்கு
வித்திட்ட தமிழ்நாட்டில், பரங்கியர்க்குக்
கொள்ளைவைக்க வேண்டுமென்ற கட்டப் பொம்முக்
கோன்ஆண்ட நெல்வேலிச் சீமை தன்னில்
பிள்ளையன்று அவனைப்போல் வேண்டு மென்று
பெற்றோர்கள் தவமிருக்க; தமிழர்க் கெல்லாம்
பிள்ளையெனத் தோன்றியவர் இந்தப் பிள்ளை
பேர்சிதம் பரம்பிள்ளை! சைவப்பிள்ளை!

நடக்கின்ற சிறுவயதில் இந்தப் பிள்ளை
நடைவண்டி இழுத்தபிள்ளை! எனினும் வீழ்ந்து
கிடக்கின்ற பாரதத்தாய் நிமிர்ந் தெழுந்து
கீழ்த்திசையில் சுதந்திரமாய்த் தனது காலால்
நடப்பதற்குச் செக்கிழுத்து நடந்த பிள்ளை
நாம்தமிழர் எனும் உணர்வைத் தந்தபிள்ளை!
திடமான திலகர்வழிக் காங்ரஸ் மீது
சிந்தை வைத்துச் சிறைசென்ற வீரப் பிள்ளை!

ஏகாதி பத்தியத்துக் கப்பலுக்கு
எதிர்க்கப்பல் ஓட்டியவர் இந்தப் பிள்ளை!
ஆகாயம் கவிந்துள்ள இந்த மண்ணில்
அவரைப்போல் ஒரு பிள்ளை கிடைப்பதில்லை!
வாகான சுதந்திரத்தைப் பெறுவ தற்கு
வடநாட்டார் பலதியாகம் செய்தபோதும்
ஏகாதி பத்தியத்திற் கெதிர்ப்புக் கூறி
எதிர்க்கப்பல் விட்டவர்கள் வடக்கே இல்லை!

கோவைநகர்ச் சிறைதனிலே கைதி கட்கு
குறள்கூறி அறிவுதந்த பிள்ளை! கம்பன்
பாவைமிக விழைந்தபிள்ளை! ஆங்கி லத்தைப்
படித்துவிட்டுத் தாய்மொழியை மறந்து விட்ட
தேவையில்லாத் தமிழர்களை உமிழ்ந்த பிள்ளை!
தேசபக்தி கொண்ட பிள்ளை! பொருள்தி ரட்ட
நாவைஉப யோகிக்க நினையாப் பிள்ளை!
நறுந்தமிழ்க்கே உபயோகம் செய்த பிள்ளை!

பிள்ளைத்தமிழ் கேட்கையிலே பெற்றோர்க்குப்
பெருகிவரும் பேரின்பம்! ஆனால் இந்தப்
பிள்ளைதமிழ் கேட்கையிலே தேச பக்தி
பெருகியது நாட்டினிலே! இப்பிள்ளை மேல்
பிள்ளைத்தமிழ் நான்பாடப் பலநா ளாகப்
பெருவிருப்பம் கொள்கின்றேன்; ஆனால் இங்கே
வெள்ளைத்தாள் இதற்குமேல் சுமக்கா தென்று
விளைகின்ற என்பாட்டில் ‘தளை’ செய்கின்றேன்.

- கவிஞர் முத்துலிங்கம்

Pin It