"வ.உ.சி.யின் வீரஞ்செறிந்த தியாக வாழ்வுக்கு உருவகமாகக் கப்பலும், செக்கும் அமைந்து விட்டன. ஆனால், உண்மையில், பன்முகத்தன்மை வாய்ந்த அவருடைய வாழ்க்கை இவ்வுருவகங்களுக்கு அப்பாற்பட்டும் விரிந்து நிற்கின்றது" (ப.17, வ.உ.சி.யின் சிவஞானபோத உரை, ப.ஆ. ஆ.இரா. வேங்கடாசலபதி) என்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுவதிலிருந்து வ.உ.சி. ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல் ஓட்டியவர், இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றதற்காகச் செக்கிழுத்தவர் என்பதோடு வ.உ.சி.யின் வாழ்வைச் சுருக்குவது வரலாற்றுப் பிழையாகிவிடும். இதனையெல்லாம் கடந்து இறையியல், தத்துவம், மெய்ஞ்ஞானம் எனத் தன் அறிவை விரிவுசெய்து கொண்டவர் வ.உ.சி. இவர் சைவமரபினர் என்பதால் சைவ சமயக் கருத்துக்கள் அவருள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

சட்டம் பயின்று வழக்குரைஞராகப் பணியாற்றினாலும், விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருட்டிணானந்தர், திலகர், பாரதியார், அரவிந்தர், சுவாமி வள்ளிநாயகம் ஆகியோருடன் இருந்த தொடர்பு வ.உ.சி.யின் மன உலகில் தாக்கத்தை ஏற்படுத்தின. கைவல்லிய நவநீதம், ஞானவாசிட்டம், சிவஞானபோதம், திருக்குறள், திருமந்திரம், நல்லாப்பிள்ளை பாரதம், பகவத்கீதை, திருவிளையாடல் புராணம், இராமாயணம், ஷேம்ஸ் ஆலனின் ஆன்மிக நூல்களான அகமே புறம், மனம் போல வாழ்வு ஆகிய நூல்களின்வழி இறையியல் குறித்தும் மெய்ஞ்ஞானம் குறித்தும் ஆழமான அறிவைப் பெற்றிருந்தார். "கைவல்லியம் எனும் கருத்துயர்நூலும்/ விசாரசாகரமும் வேறொரு சிலவும்/ விசாரம் புரிந்து மெய்ப்பொருள்கண்டு/ துன்பமும் இன்பமும் துணையெனக் காணும்/ நன்பதம் தெரிந்தேன்; நன்கதில் நின்றிலேன்." (ப.39, வ.உ.சி. சுயசரிதை) என்று வ.உ.சியின் சுயசரிதையிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இதனூடாக வ.உ.சி. அடைந்த மெய்ஞ்ஞானத்தை அகப் பார்வையாகக் காண முயல்வது இக்கட்டுரையின் நோக்கம்.

மெய்ஞ்ஞானம் என்பதைச் சமயத்திற்குள் அடக்கிப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. மெய்ஞ்ஞானம் என்பதற்கு 'உண்மையறிவு' (True knowledge) என்றும் 'விடுதலை பெற்ற மனம்' என்றும் பொருள். ஒருவருடைய மனத்துணிவிற்கும், போலித்தனமற்ற தன்மைக்கும் அவர்பெற்ற மெய்ஞ்ஞானமும் ஒரு காரணமாகும். வ.உ.சி.யின் மிக விரிவான மனவியல் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்கவர் ஷேம்ஸ் ஆலன். அவருடைய 'அகமே புறம்' என்ற நூலின் மொழிபெயர்ப்பில், "`ஒருவனது வாழ்க்கையின் கேடுகள் அவனது மனத்தின் கேடுகளே. அவற்றின் நிவர்த்தி அகத்திலிருந்து கிரமமாக உண்டாக வேண்டுமேயன்றிப் புறத்திலிருந்து திடீரென்று செய்து கொள்ளத் தக்கதன்று. நாள்தோறும், நாழிகைதோறும், மாசற்ற நினைப்பை நினைத்தற்கும், குற்றத்துள்ளும் கலக்கத்துள்ளும் விழக் கூடிய சந்தர்ப்பங்களில் குற்றமும் கலக்கமுமற்ற நிலைமைகளைக் கொள்வதற்கும் மனத்தைப் பழக்க வேண்டும். கருங்கல்லில் வேலை செய்கிற பொறுமையுள்ள சிற்பியைப்போன்று, சரியாக வாழ்க்கையை அடையக் கோருகிற மனிதன், தனது மனமாகிய கருங்கல்லிலிருந்து மிகவும் அருமையான கனவுகளின் இலட்சியத்தை அடையும்வரையில் ஒவ்வொருநாளும் சிறிதுசிறிதாக வேலை செய்து வர வேண்டும்” (பக். 33,34 ஷேம்ஸ் ஆலன், அகமே புறம், மொ.பெ. வ.உ.சி. 1916) என்ற ஷேம்ஸ் ஆலனின் கருத்துகளின் அடிப்படையில் வ.உ.சி.யின் மனப்பயிற்சியைப் புரிந்து கொள்ள முடியும். மொழிபெயர்ப்பு நூலாக இருப்பினும், ஷேம்ஸ் ஆலனின் கருத்துகளை வ.உ.சி. தன்னுள் முழுமையாகக் கரைத்துக் கொண்டதாகக் காண முடிகின்றது. மனம் குறித்த பார்வையில்வ.உ.சி. வேறுபடுவதற்குக் காரணமாகப் பின்வரும் கருத்துகளைப் பார்க்கலாம்.

voc letter copy copy

(வ.உ.சி.யின் கையெழுத்து)

“ஒவ்வொரு பலஹீனமும் பலமும், சுத்தமும் அசுத்தமும் அவனால் உண்டானவையே; மற்றொருவனால் உண்டானவையல்ல. ஆகவே, அவைகளை மாற்றக்கூடியவன் அவனே; மற்றொருவனல்லன். அவனது நிலைமையும்அவன் தேடிக் கொண்டதே; மற்றொருவன் தேடியதன்று. அவனது துன்பமும் இன்பமும் அகத்திலிருந்தே வெளிவந்தவை. அவன் எங்ஙனம் நினைக்கிறானோ அங்ஙனமே இருக்கிறான்; அவன் எங்ஙனம் நினைத்து வருகிறானோ அங்ஙனமே இருந்து கொண்டிருக்கிறான்.” (ப.51, ஷேம்ஸ் ஆலன், மனம்போலவாழ்வு. மொ.பெ. வ.உ.சி. 1916 ) என்ற ஷேம்ஸ் ஆலனின் கருத்துகளை மிக ஆழமாக வ.உ.சி. மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு மனிதனின் துன்பமும் இன்பமும் அகத்திலிருந்து தோன்றியவை என்ற கருத்து, விதிக்கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கும் என்று நம்பி, வாழ்வை இழந்த மக்களைக் கண்டு வ.உ.சி. மனம் வெதும்பி, அவர்களின் மன அடிமைத்தனமே எல்லாவற்றுக்கும் காரணம் என்றெண்ணி மக்களுக்கு மனவிடுதலையை அறிவுறுத்துகிறார். ஷேம்ஸ் ஆலனின் கருத்தை வ.உ.சி.யும் மன விடுதலைக்கான கைவிளக்காகக் கொண்டார் என்பது தெளிவாகிறது.

வ.உ.சி. தன்மனத்தை மெல்லமெல்ல செம்மையாக்கி, மெய்ஞ்ஞான நிலைக்குக் கொண்டு செல்கிறார். ஒழுக்கமற்ற மெய்ஞ்ஞானம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்த வ.உ.சி, “மெய்ப்பொருளை அடைய முயலும் மாணவனும் தவறுகளால் தளராது, கஷ்டங்களால் பலமடைந்து, சரியான நினைப்புகளை நினைத்துக் கொண்டும், சரியானசெயல்களைச் செய்து கொண்டும் வர வேண்டும். ஒழுக்கத்தைக் கைக்கொண்டபொழுது அவன் மனம் மெய்ஞ்ஞானத்தில் விரிவுறுகின்றது. அம் மெய்ஞ்ஞானமே அவன் ஷேமமாக அமரத்தக்க நிலை” (ப.39, ஷேம்ஸ்ஆலன், அகமே புறம், மொ.பெ. வ.உ.சி. 1916) என்ற ஷேம்ஸ் ஆலனின் ஆழமான கருத்தை அழகாக மொழிபெயர்ப்பு செய்ததிலிருந்து, வ.உ.சி.யின் மனவோட்டத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

மூலநூலை, முழுதுமாக உள்வாங்கிக் கொண்டவனால் மட்டுமே, முழுமையான மொழிபெயர்ப்பைச் சாத்தியமாக்க இயலும். வ.உ.சி. சட்டம் படித்தவர். அவருடைய ஆங்கிலப் புலமைக்குப் பல சட்டநூல்களை மொழிபெயர்ப்பு செய்திருக்கலாம். பல வரலாற்று நூல்களை மொழிபெயர்ப்பு செய்திருக்கலாம். ஆனால் மனத்தைச்செம்மையாக்கும் நூல்களை ஏன் மொழிபெயர்க்க வேண்டும்? மேற்குறிப்பிட்ட ஷேம்ஸ் ஆலனின் மூன்று நூல்களும் மனவிடுதலை பெறுவதற்கான நூல்கள். மெய்ஞ்ஞானத்தை விதைக்கும் நூல்கள். இந்நூல்களைச் சிறையிலிருந்தவாறே மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். கொந்தளிப்பான சூழலில் வ.உ.சி.யை மிக ஆழமாகப் பாதித்த நூல்களாக மேற்கண்ட நூல்களைக் கூறலாம். மேலைநாட்டு நூல்கள் மட்டுமே வ.உ.சி.யைப் பாதித்ததா என்றால் இல்லை. அவர் கருத்தூன்றிப் படித்த திருக்குறளும் அவருடைய மெய்ஞ்ஞான நிலைக்குத் துணைநின்றது.

விதி நம்பிக்கை இந்திய மக்களின் உள்ளத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை முன்னர்ச் சுட்டியிருந்தோம். விதி நம்பிக்கை மக்களை எழுச்சியுறாமல் தடுக்கும் அரணாக இருந்ததை நன்குணர்ந்த வ.உ.சி. தன்னுடைய ‘மெய்யறிவு’ நூலில் பின்வருமாறு எழுதுகிறார்.

“விதிவிதி யென்று ஆழ்கின்றார் வீணாகத் துன்பில்

விதிவிதிக்கத் தம்மையன்றி வேறு - பதியருவன்

உண்டென்று நம்பி ஒருசிலரிங் கன்னாரின்

கண்டறியேன் பேதையரைக் காண்” (கக)

விதியை நம்பியிருப்பவன் பேதையென்று உரைக்கிறார். விதியை நம்புவதே துன்பத்திற்குக் காரணம் என்று வ.உ.சி. வலியுறுத்துகிறார். அவருடைய காலகட்டத்தில் அறியாமை தலைவிரித்தாடிய நிலையில் விதிக்கு எதிராக எழுதியதைப் புரட்சிக் கருத்து என்று கூறுவதில் தவறில்லை.

“மனந்தான் உனக்கு வசப்பட்டு அடங்குந்

தினந்தான் உனக்கு நலன்சேர்நாள்” ( மெய்யறிவு - வ.உசி.-1915 - )

விதியிலிருந்து விடுபட்டு, அலைந்து திரியும் மனத்தைத் தன்வசப்படுத்தும் நாள்தான் நலன் உண்டாகும் நாள் என வ.உ.சி. உரைப்பதிலிருந்து, மனத்தைச் செம்மையாக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்தார் என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது. வ.உசி. மெய்ஞ்ஞானத்தை உணர்ந்தவர் என்பதற்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் அ.சுப்பிரமண்யபாரதியின கருத்தைக் கொள்ளலாம்.

“இந்த உத்தமர் (வ.உ.சி.) சர்க்காரால் கொடுக்கப்படும் திவான்பகதூர், ராவ்பகதூர் முதலிய பட்டப்பெயர்களுக்கெல்லாம் ஆசைப்படாதவராயிருந்தார். பதவி வேட்டைக்காரர்களையும், பட்ட வேட்டைக்காரர்களையும் துரும்பென மதித்தார். அதனால் அழுக்கற்ற தூயஉடம்பு தாங்கியவரான மதிப்பிற்குரியவரானார்” (ப.21, அ.சுப்ரமண்ய பாரதி, தமிழ்ப் பெரியார் வ.உ.சி., தொ.ஆ. ஆ.அறிவழகன், அக்டோபர் 2021) பதவியில் அமர்வதற்கான தகுதியும், பட்டங்களைப் பெறுவற்கான திறமையும் பெற்ற வ.உ.சி., அவற்றையெல்லாம் துரும்பென ஒதுக்கித் தள்ளியது அவருடைய மனத்திண்மையை வெளிக்காட்டுகிறது. வசதியான குடும்பத்தில் பிறந்தவர், வசதிகளைத் துறந்தாலும், இறுதிவரையில் தன்கொள்கையிலிருந்து மாறாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ்ந்த மனத்திண்மையை ஆங்கிலேயரும் மதித்தனர்.

வ.உ.சி. எந்தவொரு செயலை எடுத்துக்கொண்டாலும், அதில் தீவிரமாக இயங்கும் தன்மை கொண்டவர். பட்டும்படாமல் செயலாற்றுவது அவரால் முடியாது. தேசபக்தியில் தீவிரமாக ஈடுபட்டதைப் போன்றே, வேதாந்த பக்தியிலும் மிகத்தீவிரமாக ஈடுபட்டார் என்பதை பி.ஸ்ரீ. தான் நேரில் கண்ட காட்சியைக் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

“1905ஆம் ஆண்டில், அதாவது வங்காளப் பிரிவினை நடந்து அரசியல் கிளர்ச்சி ஓங்கியிருந்த அந்த ஆண்டிலே சிறுவனாக இருந்தநான், வக்கீல் சாதுகணபதியின் அலுவலகத்தில் சிதம்பரம் பிள்ளையை முதல்முதல் பார்த்தேன். சிந்தையில் துணிவும், செம்மையும் முகத்திலும் கண்களிலும் குதிக்கொண்டன. அப்போது அங்கே நடந்து கொண்டிருந்த சம்பாஜனையின் பயனாக, தேசபக்தியைக் காட்டிலும் வேதாந்த பக்தியே இவருள்ளத்தைக் கவர்ந்திருப்பதாய் ஊகித்துக் கொண்டேன்.” ( ப.38, பி.ஸ்ரீ., தமிழ்ப் பெரியார் வ.உ.சி., தொ.ஆ. ஆ.அறிவழகன், அக்டோபர் 2021 )

வேதாந்தக் கருத்துகளில் வ.உ.சி.க்கு இருந்த ஈடுபாட்டை பி.ஸ்ரீ.யின் நேரடி வாக்குமூலம் தெளிவுபடுத்துகிறது. போலியான வேதாந்தத்தைப் பேசிக் கொண்டு, திண்ணையில் உட்கார்ந்து நேரத்தைப் போக்கும் புரிதலற்ற வீணர்களைப்போல வ.உ.சி. வாழவில்லை. திலகரை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டாலும், விவேகானந்தரின் வேதாந்தக் கருத்துகள் வ.உ.சி.யின் உள்ளத்தை வலுவாகப் பாதிப்படையச் செய்திருக்கிறது என்பதை பி.ஸ்ரீ. பின்வருமாறு கூறுவதிலிருந்து அறியலாம்.

“பிள்ளையின் தேசபக்தி விவேகானந்த வேதாந்தத்தில் வேரூன்றி, திலகரின் அரசியல்ஞானம் என்ற நீர்பாய்ச்சப் பெற்று, ஒரு மதாவேசம் போல்வளர்ந்து விட்டது. அந்தத் தேசிய வெறியினால் தூத்துக்குடியும் திருநெல்வேலியும் கடல் கொந்தளிப்பது போல் கொந்தளிக்கத் தொடங்கி விட்டன.” ( ப.39, பி.ஸ்ரீ. மு.சு. நூல் ) வ.உசி.யின் தேசபக்திப் பின்னணியில் விவேகானந்தரின் வேதாந்தக் கருத்தியல் துணைநின்றதை பி.ஸ்ரீ.யின்கருத்தின் வழிஅறிந்து கொள்ள முடிகிறது. வ.உ.சி.யின் கொந்தளிப்பான செயல்பாட்டிற்கு வேதாந்தக் கருத்தியலே முழுதும் துணைநின்றது என்று சொல்வதற்கில்லை. வரலாறும், சட்டமும் பயின்றதன் காரணமாக, ஒருநாடு, மற்றொரு நாட்டிற்கு அடிமையாக இருப்பது சமூக விஞ்ஞானத்திற்கு எதிரானது என்ற பரந்து விரிந்த வ.உ.சி.யின் அறிவுத்தெளிவு, இந்திய விடுதலை போராட்டத்தில் அவரை வெகுண்டெழச் செய்தது. திலகரின் தலைமையும், வேதாந்தமும் அதற்குத் துணையாக இருந்தது என்பதே சரியான நிலைப்பாடாக இருக்கும்.

வ.உ.சி.யின் மெய்ஞ்ஞான உணர்விற்கு வேதாந்தம் மட்டுமே காரணமாக இருக்கவில்லை. சைவ சித்தாந்தமும் உறுதுணையாக இருந்தது. சைவமரபினராகப் பிறந்தவருக்கு, சைவ சித்தாந்தத்தின் பாதிப்பு இருந்திருக்கிறது. சைவ சித்தாந்தச்சபைகளில் வ.உ.சி. பேசிய உரைகள் இதற்குச் சாட்சியங்களாகும். மேலும், சைவ சித்தாந்த நூலான ‘சிவஞானபோதத்திற்கு’ உரை எழுதியதையும் சான்றாகக் கொள்ளவேண்டும். சமயத் தத்துவங்களை ஆழமாக உள்வாங்கிக் கொண்ட வ.உ.சி., தத்துவங்களைக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தவேண்டும் என்றோ, தத்துவச் சார்புநிலையைக் கைக்கொண்டு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றோ துளியளவும் எண்ணியவரில்லை. சைவசித்தாந்தம், வேதாந்தம் இரண்டையும் நன்கு உணர்ந்த வ.உ.சி. அவற்றின் மூலம் தன்மனத்தைச் செம்மைப்படுத்திக் கொண்டு, தெளிவுபெற்று, தத்துவங்களின் வாயிலாக மெய்ஞ்ஞானம் பெற்று, தான் பெற்ற மெய்ஞ்ஞானத்தைத் திண்ணைப் பேச்சாக முடக்கிக் கொள்ளாமல், இந்திய விடுதலையை முன்னெடுக்கும் கூரியவாளாக மடைமாற்றம் செய்து கொண்டார். தத்துவங்களில் வேறுபாடுகளைக் கண்டு, உயர்வு, தாழ்வைப்பேசாமல் சமய ஒற்றுமையை நிலைநிறுத்தியவர் என்பதை ப. ஜீவானந்தம் கூற்றிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

“வ.உ.சி.யின் தத்துவஞானத்தில், வேதாந்த சித்தாந்தச் சண்டையில்லை. அதில், சாதிமதபேதங் கடந்த சமரஸம் காட்சி அளிக்கிறது. ஆஸ்திக சமயங்களெல்லாம் ஒன்றேயாகி விளங்குகிறது. ஆஸ்திகசமயம், நாஸ்திகசமயம் என்ற வேற்றுமைதாண்டிய நிலையும் காணக் கிடக்கிறது. எனவே, அவருடைய தத்துவ தரிசனம், எண்ணம் முதல்வாதத்தின் மிகமிக உயர்ரகம் எனலாம். ( ப.115, ப. ஜீவானந்தம், தமிழ்ப்பெரியார் வ.உ.சி. தொ.ஆ. ஆ.அறிவழகன் ) வ.உ.சி.யின் தத்துவஞானம் சாதாரணமானது இல்லை. மிகமிக உயர் ரகம் என்று ப. ஜீவானந்தம் கூறியதிலிருந்து, வ.உ.சி.யின் விசாலமான மனமும், பிரிவினை கடந்தசமரச உள்ளமும் தெளிவாகிறது.

“வ.உ.சி. மெய்ஞ்ஞானம் பெற்றவர் என்பதை அவருடைய செயல்பாட்டின்மூலம் புரிந்து கொண்டாலும், அவரேதான் ‘மெய்ஞ்ஞானம்' பெற்றதை, “தமிழ்ச் சிவஞான போதச்சூத்திரங்களின் சொற்களையும், எனது சொந்த மெய்ஞ்ஞானத்தையும் ஆதாரமாகக் கொண்டும், சிவஞான போதச் சூத்திரங்களுக்கு ஸ்ரீசிவஞானசுவாமிகள் இயற்றியுள்ள சிற்றுரையின் பிண்டப் பொழிப்புரைகளையும், தமிழகராதியையும் துணையாகக் கொண்டும் இவ்வுரை இயற்றியுள்ளேன்.” (ப.28, இலக்கியப் புரட்சியாளர் வ.உ.சி.யின் சிவஞானபோத உரை, ப.ஆ. செ.திவான், செப்.2008) சிவஞானபோத உரையில் குறிப்பிட்டுள்ளார்.

“மெலிந்த உடம்பொடும் நலிந்தமனமொடும் மெய்ப்பொருள்தொழுது மெய்ப்பொருள்கண்டு மெய்ப் பொருள்ஆகி விளங்கினேன் சிலநாள்” (ப.152, வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு) இதுமட்டும் இல்லாமல் சுயசரிதையிலும் தான் மெய்ஞ்ஞானம் பெற்ற நிலையைப் பதிவுசெய்துள்ளார்.

வ.உ.சி.யின் சொற்பொழிவுகளையும், நூல்களையும் (மெய்யறிவு, மெய்யறம், பாடல்திரட்டு, சுயசரிதை) உற்றுநோக்கினால் அவர்சமயம் சார்ந்த கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் என்பது புலனாகும். அவருள் சமயக்கருத்துகள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தின. சமயக் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு, அதில் உள்ளதை உள்ளவாறே ஏற்றுக்கொள்ளாமல் பாகுபாடுகளை உண்டாக்கும் கருத்துகளை விலக்கி, மக்களின் ஒற்றுமையையும், உயர்வையும் உண்டாக்கும் சமயக்கருத்துகளை ஏற்றுக்கொண்டதே வ.உ.சி.யின் மெய்ஞ்ஞானம். இக்கருத்தை வ.உ.சி. சிவஞானபோத உரையில் இடம்பெற்ற சிவஞானபோத வரலாற்றுப் பகுதியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

“சிவஞானபோதச் சிற்றுரையால் யான்கண்டஉண்மை: இவ்வுலகத்தின் கண்தோன்றி நிலவுகின்ற சமயங்கள்பல. அவற்றுள், கடவுள் இல்லை யென்று சொல்லும் சமயம் ஒன்று. அதனை நாஸ்திகசமயம் என்பார் ஆன்றோர். மற்றைய சமயங்களெல்லாம் கடவுள்உண்டென்று சொல்பவைகளே. அவற்றை ஆஸ்திக சமயம் என்பர்ஆன்றோர். நாஸ்திக சமயத்தினர் அண்டங்களின் அமைப்பும், ஒவ்வோர் அண்டத்திலும் சிருஷ்டி, சம்ஹாரம் ஒழுங்காகநிகழ்ந்து வருதலும் இயற்கையின் சக்தியால் என்று சொல்லுகின்றனர். ஆஸ்திக சமயத்தினர்களோ அவைகளெல்லாம் ஒழுங்காகநிகழ்ந்து வருதல் கடவுள்சக்தியால் என்று சொல்லுகின்றனர். நாஸ்திகரது இயற்கையைத்தான் ஆஸ்திகர்கடவுளென்று கூறுகின்றனரென்று நாஸ்திகரும், ஆஸ்திகரது கடவுளைத்தான் நாஸ்திகர் இயற்கையென்று கூறுகின்றனரென்று ஆஸ்திகரும் கொள்வரேல், இவ்விருசமயங்களுள்ளும் வேற்றுமையில்லை ( ப.47, இலக்கியப் புரட்சியாளர் வ.உ.சி.யின் சிவஞானபோதஉரை, ப.ஆ. செ.திவான்­2008 ) என்ற வ.உசி.யின் உள்ஆழத்தை நுட்பமாகப் பார்க்க வேண்டும். அவர்தம் மெய்ஞ்ஞானத்தை ஆத்திகத்திலிருந்து மட்டும் பெறவில்லை.

நாத்திகத்திலிருந்தும் பெற்றார் என்பதை அவருடைய கருத்தின்வழியே அறிந்துகொள்ளமுடிகிறது. கடவுள் உலகத்தைப் படைத்துக் காப்பவன் என்பதுகடவுள் ஏற்பாளர்களின்வாதம். இயற்கையே காரணம்என்பது கடவுள் மறுப்பாளர்களின் வாதம். இருசாராரின் கருத்துகளையும் நடுநின்று அலசி ஆய்ந்து பார்த்து ஏற்பனவற்றை ஏற்றுவ.உ.சி.யின் செம்மையான மனப்பக்குவத்தை உளம்கொள்ள வேண்டும். இதுமட்டுமின்றிக் கடவுள்ஏற்பாளர்களில் சைவம், வைணவம் உள்ளிட்ட பலபிரிவினர்கள் தத்தம்சமயத்திற்கு உயர்வு சேர்க்கும் கருத்துகளையும் இறைநெறிகளாகக் கட்டமைத்தனர் என்பதை,

“இவ்வுலகத்திலுள்ள ஆஸ்திக சமயத்தார்களெல்லாம் தத்தம் சமயக்கடவுள் சர்வசக்தியும், சர்வஞானமும், சர்வவியாபகமும் வாய்த்தவரென்று ஒப்புக்கொண்டும், ஒவ்வோர் ஆஸ்திகசமயத்தினரும், தத்தம்சமயமே மெய்யான அல்லது உயர்ந்த கடவுளென்றும், மற்றைய சமயங்களெல்லாம் பொய்யான அல்லது தாழ்ந்த சமயமென்றும், மற்றைய சமயக்கடவுளெல்லாம் பொய்யான அல்லது தாழ்ந்தகடவுளென்றும் கூறிவேறுபடுகின்றனர். சர்வசக்தியும், சர்வஞானமும், சர்வவியாபகமும் உள்ள பொருள் ஒன்றுதான் இருக்கமுடியுமே யன்றி, ஒன்றற்குமேல் இருக்கமுடியாதென்பது அறிவுடைய ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ளத்தக்க உண்மை ( ப.47, வ.உ.சி. மேலது ) என்பதை வ.உ.சி. துணிவோடு பதிவு செய்திருக்கிறார். சமயங்களில் உள்ள ‘ஒருமைநிலையை’ உணர்ந்து கொண்டதே வ.உ.சி.யின் மெய்ஞ்ஞானம் என்று உறுதிப்படக்கூறலாம். அதேநேரத்தில், அக்கட்டமைப்பைக் கண்மூடித்தனமாக எதிர்க்காமல், அவற்றில் உள்ள நேர், எதிர்க்கருத்துகளை உள்வாங்கி, மக்கள் நலனிற்கு உகந்தவற்றைக் கொண்டும், மக்கள் நலனிற்குத் தீங்கிழைப்பதனை விலக்கவும் செய்தார். அதேபோல, நாத்திகர்களின் வாதங்களில் உள்ளடங்கிய நேர்/எதிர்க் கருத்துகளை உள்வாங்கி மக்களின் வளர்ச்சிக்கான கருத்தை ஏற்றுக் கொண்டதும், வ.உ.சி.யின் தனிச்சிறப்பான பண்பாகும்.

நாத்திகம், ஆத்திகம் என்ற எதிரெதிர் நிலைகளில், ஒன்றைப் பற்றிக்கொண்டு, பற்றிக்கொண்ட காரணத்தால், அதில் உள்ள முரண்களை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டிலிருந்து விலகி, இரண்டிலும் உள்ள நேர்/எதிர் கருத்துகளை அலசி ஆராய்ந்து பார்த்து நீதியை ஏற்றும், அநீதியைப் புறந்தள்ளியும் சார்பற்றநிலையில் நிற்பது வ.உ.சி.யின் தனித்தன்மை.

“புதுமைநாட்டமும் மக்கள்நலமும் மனத்தில்கொண்ட வ.உ.சி. கடுஞ்சைவத்தைக் கடுமையாக எதிர்கொண்டிருக்கிறார். இருப்பினும், ஒருஎல்லைக்குட்பட்ட அவருடைய சீர்திருத்த எண்ணங்கள். வேதாந்தத்தோடு (வைதீகம்) சித்தாந்தத்தைச் சமரசம் காண வைத்துள்ளன என்பதை சி.சு. மணிதம் ஆய்வுரையில் நுட்பமாக விளக்கியுள்ளார். ஆனால், அதேவேளையில் சித்தாந்திகளால் கடுமையாக மறுக்கப்பட்ட நாத்திகக்கொள்கையினையும் அணைத்துச் செல்ல வ.உ.சி. முயன்றிருக்கிறார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது”. ( ப.26, வ.உ.சி.யின் சிவஞானபோத உரை என்ற நூலில் வ.உ.சி.யும் சைவ சித்தாந்தமும் என்றதலைப்பில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. ) வ.உசி.யின் மெய்ஞ்ஞானத்தை இந்நிலையிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். மேற்கூறிய ஆத்திகம் அல்லது நாத்திகத்தில் ஏதேனும் ஒன்றைக் கைக்கொண்டு, ஒருசாரார்பக்கம் நின்றால், வாழ்க்கை வசதிகளும், புகழும் கிடைத்திருக்கும். ஆனால், சில கருத்துகளோடு முரண்பாடு ஏற்பட்டால், அதனை வெளிப்படுத்தமுடியாமல் சமரசம்செய்துகொண்டு, அதற்கான நியாயங்களைச் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியிருக்கும் என்பதை வ.உ.சி. தெளிவாக உணர்ந்திருந்தார்.

‘ஆராலும் என்னைஅமட்டஒண்ணாது’ என்ற என்னுடைய கட்டுரையில் (தொகுப்பாசிரியர்ஆ.அறிவழகன், ஆராலும் என்னைஅமட்ட ஒண்ணாது, 2021) வ.உ.சி.யின் மனஉறுதிக்குத் திருமூலரின் திருமந்திரமே காரணம் எனஎழுதியிருந்தேன். ச.தமிழ்ச்செல்வன் இக்கருத்தை மறுத்து, தாமரை இதழில் எழுதியிருந்தார். வ.உ.சி.யின் மனஉறுதிக்குத் திருமூலரின் திருமந்திரமும் துணைநின்றிருக்கிறது என்றுகருத இடமிருக்கிறது. சைவ மரபினராகப் பிறந்ததால் சைவசித்தாந்தம் இயல்பாகவே அவர்மனத்தை ஊடுருவிமெய்ஞ்ஞானபாய்ச்சலுக்குத் துணையாக இருந்திருக்கும். சைவக்குடும்பத்தில் பிறந்தது மட்டுமன்றி, சைவசித்தாந்த நூல்களைக் கற்றும், சைவசித்தாந்தசபைகளில் சொற்பொழிவாற்றியதையும் (திருமந்திரநகர் சைவ சித்தாந்த சபையின் இருபத்திரண்டாவது வருடபூர்த்திக்கொண்ட மகாசபை அக்கிராசனாதிபதி ஸ்ரீமான் பொ.பாண்டித்துரைத்தேவரவர்களை (1905) வாழ்த்திவழுத்திய ஆசிரியப்பா) சிவஞானபோதத்திற்கு உரை எழுதியும் சான்றாகக் கொண்டு பார்க்கும்போது, வ.உசி.யின் மெய்ஞ்ஞானப்பார்வையைத் தெளியமுடியும். திருமூலரின் திருமந்திரமும் வ.உ.சி.யை ஆழமாகப்பாதித்தது என்பதற்கு, தைமாதம் 1936-ல் ‘ஊழியன்’ இதழில் வ.உ.சி. எழுதிய ‘கடவுளைக்காண்டல்’ என்ற கட்டுரை (ப.91, வ.உ.சி.யின் சிவஞானபோத உரை ப.ஆ. ஆ.இரா. வேங்கடாசலபதி, 2022 ) சான்று.

இக்கட்டுரையில் உலகத்திற்கும் கடவுளுக்கும் இடையிலான தொடர்பைக் கூறும் திருமந்திரப்பாடலைக் குறிப்பிட்டு;

மரத்தை மறைத்தது மாமத யானை;

மரத்துள் மறைந்தது மாமத யானை;

பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்;

பரத்துள் மறைந்தது பார்முதற் பூதமே. ( 2264 )

கடவுளுக்கும், உலகத்திற்குமுள்ள தொடர்பை விளக்குகிறார். கடவுள், ஞானம் என்பதற்கு, திருவள்ளுவரின் கருத்தின் துணைகொண்டு, “(இவ்வுலகத்திலுள்ள) எந்தப் பொருள் எந்தவடிவோடு தோன்றினாலும் அப்பொருளின்கண் (அப்பொருளுக்கு ஆதாரமாயுள்ள) மெய்ப்பொருளைப் பார்ப்பதே கடவுளின் வடிவேயென்பதும், ஒவ்வொன்றிற்கும் ஆதாரமாயுள்ளது கடவுளேயென்பதும் வெளிப்படை. ஆதலால் யான் உலகப் பொருள்களுக் கெல்லாம் ஆதாரமாயுள்ள மெய்ப்பொருளை என் அறிவால் அறிகின்றேன்; உலகப்பொருள்களையெல்லாம் கடவுளின்வடிவாக என் கண்ணால் காண்கின்றேன்; என் மனத்தால் நினைக்கின்றேன்; என் வாக்கால் சொல்கின்றேன். நண்பர்களே! என்னைப்போலவே நீங்கள் ஒவ்வொருவரும் கடவுளை உங்கள் அறிவால் அறியலாம்; கடவுள்வடிவை உங்கள்கண்ணால் காணலாம்; உங்கள் மனத்தால் நினைக்கலாம்; உங்கள் வாக்கால் சொல்லலாம்” என்ற இடத்தைச் சென்றடைந்தார். இதற்குமேலும் ஒருபடிமேலே சென்று அறிவாளிகள் தான் கடவுள் என்றநிலைக்குச் செல்கிறார். கைவல்யம், ஞானவாசிட்டம், சிவஞானபோதம், திருக்குறள், திருமந்திரம், ஷேம்ஸ்ஆலன் (மேல்நாட்டு மெய்ஞ்ஞானி) என மிக நீண்டதூரம் இறையியல் நெறிகளையும், மெய்ஞ்ஞானத்தையும் உள்வாங்கியவராகிய வ.உ.சி. கடவுள் குறித்துப்பின் வருமாறு கூறுகிறார்:

“யான் என்று நினைக்கும் அறிவணுக்கள் பல நினைப்பை விடுத்தபின் அவ்வறிவணுக்கள் ஒன்றேயாம். அவ்வுண்மைபற்றியே திருமூலரும் “சீவனெனச் சிவனென்ன வேறில்லை; சீவனார் சிவனாரை யறிகிலர்; சீவனார் சிவனாரையறிந்தபின்; சீவனார் சிவனாயிட்டிருப்பரே” என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆதலால், உயிர்கள் வெவ்வேறாய்ப் பலவாயிருப்பினும், அவை, கடவுளையுணர்ந்தபின் கடவுளோடு ஐக்கியமாய் கடவுளேயாகி நிற்கும்” ( ப.25, வ.உ.சி. ‘உலகமும் கடவுளும்’ கட்டுரை, துன்பத்தின் கற்பனை, தொ.ஆ. செ. திவான், ஷனவரி 1999 ).

வ.உ.சி.யின் வாழ்க்கையைச் சிறைக்குச்செல்வதற்கு முன், சிறையிலிருந்தது, சிறையிலிருந்து விடுதலையான பின்பு என மூன்றாகப் பிரிக்கலாம். 1908 ஆம் ஆண்டு திருநெல்வேலி எழுச்சியை முன்னின்றுநடத்திய போது இருந்த வ.உ.சி., தன் எதிர்ப்புணர்வை மடைமாற்றம் செய்து கொண்டாரே ஒழிய, அதிலிருந்து பின் வாங்கவில்லை. ஆங்கிலேய எதிர்ப்பின் காரணமாகத் தன்பொருளாதாரத்தை இழந்த வ.உ.சி., இறுதியாகத் தமிழ்நூல்களைப் பதிப்பிப்பதோடு சமயப் பணியிலும் ஈடுபட்டாலும், உண்மைநெறியிலிருந்து சற்றும் விலகவில்லை. சமயங்கள் குறித்த கருத்துகளை நன்கு அறிந்தவராக இருப்பினும், தன்சொந்த வசதி கருதி, எந்தவொரு சமயத்தையும் தூக்கிப் பிடிக்காமல், சமயங்களின் ஊடாகத் தான் அடைந்த மெய்ஞ்ஞானத்திலிருந்து, தான் கண்டஉண்மையை வெடிப்புறக்கூறினார்.

தனக்குப் பொருளாதாரப் பிரச்சனை இருந்தும், அதன் பொருட்டுச் சாய்வு இல்லாமல், ஒருநெறியில் நின்றதே வ.உ.சி.யின் சிறப்பு. எந்த வொன்றின் மீதும் எதிர்பார்ப்போ, தத்தளிப்போ இல்லாமல் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். வெறும் நூல்களை மட்டும் கற்று, வாழ்க்கையை எதிர்கொண்டவரல்லர். ஆங்கிலேயர் அலறும் வண்ணம் மிகப் பெரியபோராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய துணிச்சல் மனம் கொண்டவருக்கு, தத்தளிப்பு எண்ணம் வருவதற்கு வாய்ப்புக் குறைவு. களப்போராளியாக இருந்தவருக்கு, தான் எதிர்கொண்ட அனுபவத்தின் கனம் தெரிந்திருக்கும். புத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எழுதுபவர்களுக்கும், களப்போராளியாக இருந்துகொண்டு எழுதுபவர்கள் கருத்துகளுக்கும் வேறுபாடு இருக்கும்.வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவராதலால், தன்திறமையான வாதங்கள் மூலம் ஆங்கிலேயரையே அலறவைத்தவருடைய சிந்தனையில் மேகமூட்டம் இருந்திருக்காது. எவ்வுயிரிடத்தும் அன்பாயிரு! எல்லோரும் ஓர்குலம் என்பதே வ.உ.சி.யின் கொள்கை என்ற (திரு.வி.க. வின் கருத்தை மேற்கோள் காட்டி) உண்மையில் இதுவே வ.உ.சி.யின் சமய நெறி என்ற ஆ. சிவசுப்பிரமணியனாரின் (காக்கைச் சிறகினிலே, நவம்பர் இதழ்) கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்கண்ட சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, கட்டுரையின் முடிவாக “மக்களின் அறியாமையை நீக்கி, அடிமை உணர்வை விலக்கி, அலைபாயும் மனதைச் செம்மையாக்கி, ஒழுக்க நெறியை மேற்கொள்ள வைப்பதே வ.உ.சி.யின் மெய்ஞ்ஞானம்.

 
Pin It