சாதிகள் இருக்கும்வரை தமிழ்த்தேசிய இன உருவாக்கம் முழுமையடையாது! தேசிய இனம் என்பது வரலாற்றின் விளைபொருள். ஓர்மை உணர்வுடைய தமிழ்த்தேசிய இனமாக உருவெடுத்தால்தான் விடுதலை நோக்கி நகர முடியும். அதுவரை இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் அமையாது!

வருண-சாதி முறையை எதிர்த்து எத்தனையோ மகான்களும், மகாத்மாக்களும் கடந்த 2000 ஆண்டுகளாகப் போராடி இருக்கிறார்கள். ஆனால், சனாதனத்தின் மேலாண்மையைச் சாதிகளின் பேரால் நிகழ்த்தப்பட்ட வன்மங்களைத் தடுக்க முடியவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை மாகாணத்தில் சாதி ஒடுக்கு முறைகளை எதிர்த்து அயோத்திதாசப் பண்டிதர் உள்ளிட்டோர் ஆதிதிராவிடர் என்ற அடையாளத்தை உயர்த்திப் பிடித்தனர். பார்ப்பனியத்தை எதிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசிய தலைவர்கள் இணைந்து ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுத்தார்கள். அதில்தான் பார்ப்பனர்-அல்லாதோர் இயக்கம் பிறந்தது. அதுதான் திராவிட இயக்கம் என்று பெயர் பெற்றது.

அன்றைய சூழலை டி.எம். நாயர் விவரிக்கும் போது நமக்குக் குடல் பதறுகிறது. 1930 களில் ஒடுக்குமுறை வடிவம் எப்படி இருந்தது என்பதை அண்ணல் அம்பேத்கர் விவரித்திருக்கிறார். கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில், தென்தமிழ்நாட்டின் பகுதிகளில், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிலுமே ஒடுக்குமுறை வடிவங்கள் எப்படி இருந்தன என்று படிக்கும்போது வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் ஒடுக்கப்பட்ட, சூத்திர சாதி, வேறு சில சமூகங்களும் அடைந்த கொடுமைகளைக் கற்பனை எண்ணிப் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில்தான் 1920களில் திராவிட இயக்கம் தன் வரலாற்றுப் பங்களிப்பைச் செய்தது. திராவிடம் என்ற சொல் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அது பற்றி கவலை இல்லை. ஆனால் எவ்வளவு பெரிய காரியங்களை அது செய்து முடித்தது என்பதை வரலாற்றின் ஏடுகளில் படித்து விட்டுத்தான் ஒருவர் பேச வேண்டும்.

50 ஆண்டுகளில் எதையோ இழந்து விட்டதாகச் சிலர் பேசுகிறார்கள். எதை இழந்தார்கள்? நூறு ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஒடுக்கப்பட்ட மற்றும் சூத்திர சாதிகளுக்கு என்ன இருந்தது?.. திராவிட இயக்கம் என்பது கலைஞர் கருணாநிதி அவர்களின் குடும்பமோ அல்லது அம்மையார் செயலலிதா அவர்களின் கட்சியோ அல்ல. அவை தேர்தல் கட்சிகள். ஆனாலும் திராவிட இயக்கத்தின் கடந்த கால இலக்குகளை ஓரளவுக்கு நிறைவு செய்ய இக்கட்சிகள் முயற்சித்து இருக்கின்றன.

திராவிட இயக்கம் என்ற உடனேயே நஞ்சை கக்குகிறவர்கள் ஏதும் அறியாதவர்கள். சென்ற நூற்றாண்டில் இங்கு இருந்த நிலை என்னவென்று அறிய மாட்டார்கள். அந்த ஒடுக்குமுறைகளை மாற்ற திராவிட இயக்கம் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறது. சில சாதி மோதல்களைக் குறிப்பிட்டு இதெல்லாம் நடந்தது என்பார்கள், அவை நடந்தவை என்பது உண்மைதான். ஆனால் சாதிய ஒடுக்குமுறைகளையும் பார்ப்பனியத்தையும் திராவிட இயக்கம் எதிர்கொண்ட விதத்தைக் கண்டு அண்ணல் அம்பேத்கர் பேரன்பு கொண்டார். 1950களில்கூட, ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெயரைச் சொல்லி குஷ்டரோகிகளும் குறிப்பிட்ட சாதிகளும் உள்ளே வரக்கூடாது என்று வாசலில் பலகை வைத்திருக்கக் கூடிய உணவு விடுதிகள் நாடு முழுவதும் இருந்தன. அந்த விடுதிக்காரர்களுடன் திராவிட இயக்கத்தவர்கள் மோதியதை நேரிலும் பார்த்திருக்கிறேன்; பெரியவர்கள் சொல்லவும் கேட்டிருக்கிறேன். வன்முறையின் மூலம் பல கதவுகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் திறக்கப்பட்டன. இயக்கமாகவும் செயல்பட்டார்கள்; அடிதடியிலும் இறங்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சூத்திர சாதி மக்களுக்காகத் திராவிட இயக்கத்தவர் நின்றதை நாம் கண்ணாலேயே பார்த்திருக்கிறோம்.

1950க்கு முன்னால் என்ன சாதிக்கப்பட்டது, அதற்குப் பின்னால் என்ன சாதிக்கப்பட்டது என்று பட்டியலிடுவது நம் நோக்கமல்ல. திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளால் தளர்ச்சி அடைந்திருந்த பார்ப்பனியம் இப்போது இந்துராஷ்டிர படைப்பிற்காக முழு பலத்துடன் எழுந்து நிற்கிறது. அதற்கான அஜெண்டாவை நடைமுறைப்படுத்துவதற்குப் பல்வேறுக் கட்சிகளும் அமைப்புகளும், ஆர்எஸ்எஸ், பாஜகவோடு உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இந்நிலையில்தான், தளர்ச்சி அடைந்திருந்த சாதிய உணர்வு முடுக்கிவிடப்படுகிறது. சாதி வெறியாட்டம் இப்போது வளர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதும் திராவிட இயக்கத்தவர்கள்தாம் இரட்டைக் குவளை முறையை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்து இயக்கமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகுதான், கடந்த 50 ஆண்டுகளுக்குள் ஏதோ இழந்து விட்டதாகவும், இப்போதுதான் இது போன்ற சாதிவெறி தாக்குதல்கள் நடப்பதாகவும், சிலர் பதிவிடுவதைப் பார்க்கிறேன். இவர்கள் அடிப்படையில் சாதிப்பற்றாளர்கள். இந்திய வல்லாதிக்கத்திற்குள் மாநிலத்தில் கங்காணி அமைச்சர் பதவிக்காக ஆளாய்ப் பறக்கிறவர்கள். இவர்களைத் தங்கள் ஆதரவாளர்களாய் வைத்திருக்கிறார்கள்.

இங்குச் சட்டம் போட்டுச் சாதியைத் தடை செய்ய வழியில்லை. ஏனென்றால், இந்திய அரசு அதைச் செய்யாது; அப்படிச் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது. சாதி சமத்துவத்துக்கான திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்திக் கொள்ள முடியும்.

சாதி வெறியைப் போக்க முடியும் என்றால் புத்தர் வென்று இருப்பார்; வள்ளலார் வென்று இருப்பார்; சாதியக் கட்டமைப்பை ஒரேயடியாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கையும் இலக்கும். இந்தியாவுக்குள் இருக்கும் வரை சாதியை ஒழிக்க முடியாது என்பதால்தான் பெரியார் தனிநாடு கோரினார். அதற்குரிய சட்டத்தை இந்தியாவுக்குள் இயற்ற முடியாது; சுதந்திரத் தமிழ்நாட்டில் இயற்ற முடியும் என்று கருதினார்.

1920 லிருந்து நீதிக் கட்சி சென்னை மாகாணத்தில் அதிகாரத்துக்கு வந்த பிறகுதான், பார்ப்பனர் அல்லாதோர் அனைத்துச் சாதியினருக்கும் அரசு பதவிகளும், அதிகார இருக்கைகளும் பங்கிடப்பட்டன. கல்வி வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டன. மிகப் பெரிய மாற்றம் தொடங்கியது.

1927 இல் இனி பெயருக்குப் பின்னால் சாதியைப் போடுவதில்லை என்று சுயமரியாதை இயக்கத்தவர் முடிவு செய்து அதையே ஒரு வாழ்க்கை முறையாக்கினார்கள். சாதியற்று, மதமற்று, இறை நம்பிக்கையற்று, சடங்குகளற்று, ஏற்றத்தாழ்வு பார்க்கும் உளவியல் அற்று, வாழக்கூடிய ஒரு புதிய முறையைப் படைத்தார்கள். இன்று நாம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அது அன்று பெருவீச்சாக வளர்ச்சி அடைந்தது. தமிழ் மாவட்டங்களில் அந்த இயக்கத்தின் குரலுக்குப் பெரிய வலிமை உருவாகி இருந்தது. 1928 இலிருந்து 1938 வரை 10 ஆண்டுகளில் 25 ஆதித் திராவிடர் மாநாடுகளை மாகாண அளவிலும் மாவட்ட அளவில் பெரியார் நடத்தினார். திராவிடர் - ஆதித் திராவிடர் ஓர்மை இலக்கை இம்மாநாடுகள் முன் வைத்தன.

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்தும் சட்டங்கள் வகுக்கப்பட்டன; பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை 1920 _க்கு பிறகு அனைவரும் சாதியைப் புறக்கணித்து விடவில்லை. சாதிகளுக்கானக் கட்சிகளை நடத்தினாலும் கூட தங்கள் பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்ள மாட்டார்கள். இது பல்வேறு சமூகங்களிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. வேறுபாடு குறைந்தது,

ஆனாலும் சாதிய ஒடுக்குமுறைகளும் பாரபட்சமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. புதிதாகத் தோன்றிய திராவிட இயக்கம் எல்லோரையும் அப்படியே கட்டுப்படுத்தி சர்வாதிகாரமாகத் தன் வழிக்குக் கொண்டு வந்து விட முடியாது. ஆனால் அது பேசிய சமூக சனநாயகம் எல்லா கட்சிகளையும் தொட்டது; எல்லா சமூகங்களையும் தொட்டது. அக்ரகாரத்திலிருந்து மொட்டை அடிக்கப்பட்டு வெள்ளைப் புடவைச் சுற்றி ஒதுக்கி வைக்கப்பட்ட விதவைப் பெண்களும்கூட தங்களுக்கான, தாங்கள் நடத்தப்பட்ட விதத்தில் ஒரு மாற்றத்தைப் பெற்றார்கள். ஆங்கிலேயர் ஆட்சி இதற்குப் பேருதவியாக இருந்தது. அது எந்த மாகாணத்திலும், எந்த காலத்திலும் பார்த்திராத ஒரு சமூக மாற்றம் சென்னை மாகாணத்தில் உருவானது.

திராவிடத் தேர்தல் கட்சிகளின் மீது நாம் காணக்கூடிய குறைபாடு என்ன? அடிப்படை திராவிடக் கொள்கையிலிருந்து சரிந்து போனார்கள் என்பதுதான். இவர்களிடம் இருக்கக்கூடிய பிழைகளை, குறைகளை மறைக்கத் தேவையில்லை. இவர்களிடம் குறைகள் இருப்பதால்தான் இந்தத் தேர்தல் கட்சிகளை அந்தந்தக் கட்சிக்காரர்களைப் போல அனைவரும் ஆதரித்துவிடுவதில்லை. திராவிட இயக்கங்களில் உள்ளவர்கள்கூட பலர் சாதி முறையைப் பேணுகிறவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான். இது ஒரு சரிவு.

ஆனாலும், கடந்த காலத்தில் திராவிட இயக்கம் ஏன் தோன்றியது? அன்றைய சூழ்நிலை என்ன? அதை மாற்றியமைக்க திராவிட இயக்கங்களும், அதிகாரத்திற்கு வந்த கட்சிகளும் என்ன பங்காற்றி இருக்கின்றன என்பதை அறியாதவர்கள்தான் திராவிட இயக்கத்தைக் குறை கூறுவார்கள். இந்தியாவில் பிற மாநிலங்களைவிட பல்வேறு நிலைகளில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதற்குக் காரணம் இந்த கட்சிகள்தாம். ஆனால் இலஞ்சமும் ஊழலும் இந்திய சனநாயகத்தில் பிற கட்சிகளைப் போலவே இக்கட்சிகளிலும் மலிந்து இருக்கின்றன என்பதும் உண்மைதான்.

ஆனாலும் பிற வட மாநில தேசியக் கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் அதிகாரம் செலுத்திய திராவிடக் கட்சிகளுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. சமூகநீதி என்பது தமிழ்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட அருந்ததியர்களுக்கு மூன்றரை சதவீதம் உள் ஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது இச்சமூகங்களை மேல் நோக்கி வளர்த்தெடுத்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களை உயர்த்தி இருக்கிறது.

இந்நிலையில்தான் திடீரென்று நிலைமை தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்று சங் பரிவார் அமைப்புகளும், ஆர்.எசு.எசும், பாஜகவும், துணை அமைப்புகளும் இந்து ராஷ்டிர உருவாக்கப் பணியில் களமிறங்கி நிற்கின்றன. தமிழ்நாட்டில் பல கட்சிகள் அவர்களோடு உறவாகி இருக்கின்றன, பலர் நேரடி முகவர்களாகவும், மறைமுக முகவர்களாகவும் மாறி இருக்கிறார்கள்.

எந்த இனமும் அதற்குள் இருக்கக்கூடிய சமூக மேல் _ கீழ் பிரிவுகளை ஒழித்துத் கட்டி, ஓர்மையைப் பெற்றால்தான் அது தேசியம் என்ற நிலையைப் பெறும்.. தேசியம் என்பதன் உருவாக்கத்தின் வரலாற்றைப் படித்தவர்களுக்கு அது புரியும். இந்நிலையில் திடீரென்று "குடிவழித் தேசியம்". என்றும், இங்குள்ள சாதிகளின் ஒருங்கிணைப்பே தமிழ்த்தேசியம் என்றும் பேசுவது வியப்பாக இருக்கிறது. அடிப்படையில் தேசியம் என்பது என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் இதற்குப் பொருள்.

பெயருக்கு பின்னால் சாதியைப் போட்டுக் கொண்டால் உனக்கு என்ன பிரச்சனை? என்கிறார்கள். சாதி நல்லது என்கிறார்கள்; அது நல்ல சொல் என்கிறார்கள். இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற அத்தனை முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சாதிய உணர்வுகள் இப்போது புத்துருவாக்கம் செய்யப்படுகின்றன. சனாதனம் உயர்த்திப் பிடிக்கப்படும் இன்றைய நிலையில் சூத்திர சாதிகள் சாதி உணர்வூட்டப்படுகின்றன. சாதி உணர்வு ஊட்டப்படுகிறவர்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது புரியாமல் இருக்கலாம். சாதி உணர்வானது இப்போது புதுப்பிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் சாதி மோதல்கள் நடந்திருக்கின்றன. ஆனால் வடிவமைக்கப்பட்ட ஆணவக் கொலைகள் போன்ற புது வடிவங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. இப்போது சாதியவாதிகள் அது தங்கள் பெருமையைப் பறைசாற்றுவதாகக் கருதுகிறார்கள்.

கடந்த காலத்தில் சாதி ஒழிப்பு பற்றிப் பேசி அதற்கான உளவியலைத் தோற்றுவித்த தந்தை பெரியார் போன்றவர்களை இழிவுபடுத்தும் போக்கு இந்துராஷ்டிர உருவாக்கத் தளத்திலிருந்துதான் எழுந்தது.பெரியாரை அவதூறு செய்ய எவரும் சான்றுகள் காட்ட வேண்டுமே என்று கவலைப்படுவதில்லை. சாதிகளை மறுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவ்வளவு காழ்ப்புணர்வு அவர் மீது இருக்கிறது.

சாதி என்ற சொல் வெறுக்கப்பட்டதால் அதைக் குடி என்று மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். சாதி என்பது எவ்வளவு துன்பங்களை இந்தத் தமிழ் சமூகத்திற்கு வழங்கி வந்திருக்கிறது என்பதை வரலாற்றின் ஏடுகளில் பார்த்தால் புரியும். இந்நிலையில் சாதிக்குக் குடி என்று பெயர் மாற்றி அதைத் தொடரச் செய்வது என்பது ஒரு சமூகக் குற்றம்.

இப்போதும் நாம் கூறுவது இதுதான்: சாதி என்பது ஒரு கட்டத்தில் கைவிடப்பட வேண்டும். சனநாயக நாட்டில் உயர்ந்த சாதி _ தாழ்ந்த சாதி என்று இருக்க முடியாது; இருக்கக் கூடாது. சமத்துவம் பேணப்பட்டால் தான் அது ஒரு சனநாயக நாடு ஆகும். இந்நிலையில்தான் சுயசாதிப் பெருமை பேசுகிறவர்களைச் சாடுகிறோம். சாதிய அடையாளம் கோருகிறவர்களைச் சாடுகிறோம். இந்த நிலையிலாவது சாதியைக் கைவிடுங்கள் என்று வேண்டுகிறோம்.

இன்றைய சமூகம் கெட்டுப் போனதோடு போகட்டும். எதிர்காலச் சமூகத்தையும் பாழ்படுத்தி சீழ் பிடித்தச் சமூகமாக மாற்றி விடுவார்களோ என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. சாதிப் பெருமை பேசுகிறவர்கள், சாதி அடையாளம் தேடுகிறவர்கள் இவர்களை விட்டு விலகி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

சாதிய அடையாளங்கள் இருக்கும்வரை அதன் ஒடுக்குமுறையும் வேறுபாடுகளும் தொடரும். அந்தச் சமூகம் ஒரு தேசிய இனமாக உருமாற முடியாது. ஒரு தேசிய இனம் என்பது சாதிகளின் தொகுப்பு அல்ல.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் கடந்த காலத்தில் கோட்பாடுகளை நன்கு கற்றிருந்த புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் உள்ளிட்ட தமிழ்த்தேசியர்கள் சாதியை எதிர்த்தார்கள். பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஆனைமுத்து போன்றோர் எதிர்த்தார்கள். இப்போதும் நாம் எதிர்க்கிறோம். இக் கருத்தை ஏற்காதவர்கள், சாதிதான் எங்களுக்கு முக்கியம் என்று கருதுகிறவர்கள் இப்போதும் அப்படியே கருதிவிட்டுப் போகட்டும். இத்தகைய போக்கு நீண்ட நாள் நீடிக்காது. தமிழ்ச் சமூகம் ஓர்மையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

- பேராசிரியர் த.செயராமன்

Pin It