தமிழ்நாடு நாள் குறித்த பதிவில் அரசியல் மாற்றத்தில் அக்கறையுள்ள அன்புக்குரிய தோழர் ஒருவர் கீழுள்ளவாறு எழுதியிருந்தார்.. அவருக்கும் அவர் போன்ற கருத்துடையவர்களுக்குமாக இது எழுதப் பெறுகிறது :

"எல்லாச் சாதிகளும் கலந்த கலவைதான் இன்றைய சமூகம். இதில் தமிழன் என்று யாரைப் பிரிப்பீர்கள். தமிழன்தான் தமிழனுக்கு எதிரி. நீங்கள் சேரியில் வசிக்கவில்லை அதனால் அந்த மக்களின் துயர் உங்களுக்குத் தெரியவில்லை. தமிழன் என்பதை விடவும் மனிதன் என்பதே சிறந்தது. தமிழ் இனம், தமிழ்த் தேசியம், தமிழ்க்கொடி இவை யாவும் பாசிசத் தன்மை கொண்டது. அண்ணல் அம்பேத்கர் வழியே எங்கள் வழி. அதுவே எங்கள் நெறி." என்று அவர் எழுதியிருந்தார்..

அவரின் கருத்துக்களுக்கான சில விளக்கங்களைப் பார்ப்போம்..

"இந்த இந்தியாவை எவ்வாறு என் தாயகமாகக் கருத முடியும்? நாய்கள், பூனைகளைவிட நாங்கள் தாழ்வாக நடத்தப்படுகிறோம். தன்மானம் உள்ள எந்தத் தீண்டப்படாதவன் இந்தியாவைத் தன் தாயநாடாக் கருதுவான்? இந்தியா - எங்களுக்கு அளித்த உதவி - இன்னல்களையும், இழிவுகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். ஆகவே தெரிந்தோ, தெரியாமலோ இந்தியப்பற்று எங்களுக்கு இல்லை என்றால், அதற்கு நாங்கள் அல்லர் பொறுப்பு; இந்தியாவே ஆகும். என்னை இரண்டகன் என்றால் அதற்கும் நான் அல்லன் பொறுப்பு; இந்தியாவே ஆகும்." - என்றவர் அம்பேத்கர்..

பார்ப்பனியத்தையும், முதலாளியத்தையும் வீழ்த்தாமல் அடித்தட்டு மக்கள் விடுதலை பெற முடியாது..

அரசியல் அதிகாரத்தைப் பெறாமல் சாதியை ஒழிக்க முடியாது..

என்றெல்லாம் முழங்கியவர் அண்ணல்..

அரசியல் அதிகாரத்தைப் பெறுவது என்பது இக்காலத்தில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துவிடுவதால் பெறப்படுவதன்று..

தன்னாலேயே அவ்வாறு செய்ய முடியவில்லை எனத் தன் அமைச்சர் பொறுப்பையே துறந்தவர் அவர்..

இந்திய அரசியல் சட்டத்தால் சாதி ஒழியப் போவதுமில்லை.. சமூக மாற்றத்தை நிறைவேற்றவும் முடியாது என இந்திய அரசியல் சட்டம் கொளுத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு கொளுத்துவதற்கான முதல் ஆளாகத் தான் நான் இருப்பேன் என்றும் நாடாளுமன்றத்திலேயே பேசினார் அம்பேத்கர்..

தான் சாகும் போது இந்துவாகச் சாகமாட்டேன் எனத் தன் மறைவுக்கு முன்பாக இந்து மதத்திலிருந்து முழுமையாக வெளியேறினார்..

மதமாற்றம்தான் சமூக மாற்றத்திற்கு வழி என்றும், சாதி ஒழிப்புக்குத் தீர்வு என்றும் அம்பேத்கர் இறுதிப்படுத்தவில்லை..

இந்த நிலையில்.. அம்பேத்கர் வழியே எங்கள் வழி என்போர் எவரும்..

தாங்கள் இந்தியன் இல்லை என்றோ, இந்து இல்லை என்றோ பதிவு செய்திடுவதில்லை?

பார்ப்பனியத்தையும் முதலாளியத்தையும் எவ்வகை இணக்கத்திற்கும் இடம் தராமல் எதிர்த்து நிற்பதுமில்லை?

இந்திய அரசியல் சட்டம் அடித்தட்டு மக்களுக்கான முழுமையான விடிவைத் தேடித் தராது என்கிற நிலையில், அம்பேத்கர் போராடிய அளவில்கூட அவரின் பின்பற்றாளர்கள் போராடுவதில்லை..

இதில்.. அம்பேத்கர் வழிதான் எங்கள் வழி என்பது எது?

தமிழ்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதி மக்களையே ஒரே அணியில் திரட்ட இயலுவதில்லை. பள்ளர், பறையர், அருந்ததியர் முரண்பாடுகளை இணைக்கத் திட்டமில்லாதவர்கள் இந்தியா முழுக்க உள்ள பட்டியலின மக்களையெல்லாம் ஒரே முழக்கத்தில் திரட்ட முடியுமா?

புத்த வழிபாட்டுக்காக, மூடநம்பிக்கைகளுக்காக ஒன்று சேருகிற பல மாநிலங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி ஒழிப்புப் போராட்டத்திற்காக ஒன்று சேர இயலாது..

இந்தியா முழுக்க ஒரே சமூக நிலை இல்லை.. வேறுபட்ட தன்மைகளில், சூழல்களில் அடக்குமுறைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர்.. எனவே ஒரே காரணிக்காக இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்டோர் அனைவரும் ஒரே நேரத்தில் அணி திரண்டுவிட முடியாது என்பதை விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர். அடித்தட்டு மக்களை எப்படி அணி சேர்ப்பது என்றும், அம்பேத்கர்வழி என்ன என்பதையும், அவரின் கருத்துகள் மட்டுமே சாதி ஒழிப்புக்கு போதுமானவையா, சமூக மாற்றத்திற்குப் போதுமானவையா என விளங்கிக் கொள்ள வேண்டும்..

காஷ்மீரில், நாகாலாந்தில், மிசோரம்த்தில், திரிபுராவில், மணிப்பூரில் - எனப் பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் எனும் பிரிவு மிகக் குறைவாகவோ, இல்லாமலோ இருப்பதை உணர வேண்டும்..

தமிழர் அல்லது தமிழ்த் தேசியம் என்பதான அணி திரட்டல்கள் சாதி ஒழிப்பு நோக்கத்தோடு, வகுப்பு(வர்க்க) ஒழிப்பு இலக்கோடு இருக்க வேண்டும் என்பதே நம்முடைய வலியுறுத்தல்..

அப்படியான நிலையில், தமிழ்த் தேசியம் என்பதே பாசிசம் என்றால் பறையர் என்பது கூட அருந்ததியருக்குப் பாசிசமாகவே தோன்றுவதாகக் கூறலாம்..

அரசியலை, சமூகவியலை, பொருளியலை முழுமையாக ஆய்வு செய்து சாதி ஒழிப்போடான, வகுப்பு (வர்க்க) ஒழிப்போடான பொதுமைக் சமூகத்தைப் படைக்கும் நோக்கத்திலேயே தமிழ்த் தேச உரிமைப் போராட்ட அரசியலை நாம் முன்னெடுக்கிறோம்.. அந்த நிலைகளில் பல கட்டங்களைக் கடந்தும் வந்திருக்கிறோம்..

அம்பேத் கரியக் கருத்தாளர்களிடமும், பெரியாரியக் கருத்தாளர்களிடமும், மார்க்சியக் கருத்தாளர்களிடம் வெளிப்படையான கலந்தாய்வுகள் தேவை..

இந்த மூன்று அரசியல் நிலைப்பாட்டாளர்களிடமும் இணக்கம் தேவை.. இந்த மூன்று நிலைப்பாட்டாளர்களுமே சமூக மாற்றத்தின் மீது அக்கறையுடையவர்கள் என்கிற நிலையில் ஆழ்ந்த கலந்தாய்வுகளும், அடுத்தக் கட்ட நகர்வுக்கு நடந்தாக வேண்டும்..

ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்பது ஆண்டைகளுக்கே வலு சேர்த்திடும் என விளங்கிக் கொள்ள வேண்டும்..

- பொழிலன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.