புலவர் கலியபெருமாள் மறைவுற்று 16 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்த ஆண்டு அவரின் நூறாவது அகவையாண்டு. புலவர் கலியபெருமாள் அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் தமிழ்த் தேச விடுதலைப் போராட்டத்தின் முன்னோடித் தலைமைகள் என்று நாம் ஏற்றுக்கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் அவர்களிலிருந்து மட்டுமே தொடங்கிடவில்லை. அதற்கு ஏறத்தாழ 85 ஆண்டுக் கால வளர்ச்சி இருக்கிறது.
1938 தான் முதன் முதலில் தமிழ்நாடு தமிழருக்கே! _ என்கிற முழக்கம் மறைமலை அடிகள் தலைமையில் சோமசுந்தர பாரதியார், பெரியார் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்ட மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த முழக்கத்தை 1940, 44, 45 ஆகிய காலங்களில் தொடர்ந்து பெரியார் வலியுறுத்தி வந்தார்.. திராவிட நாடு என்கிற பெயரில் அன்றைய சென்னைத் தலைமாநிலத்தை (மாகாணத்தை) அடையாளப்படுத்தி அவர் திராவிட நாடு முழக்கத்தை இடையில் வலியுறுத்தினார்.. 1956 மொழிவழி மாநிலங்களின் பிரிவுக்குப் பிறகு இனி, திராவிட நாடு என்பது சரியில்லை என்று அறிவித்ததோடு, அன்று முதல் தமிழ்நாடு தமிழருக்கே என்று வலியுறுத்தி இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தார்.
வடநாட்டான் கடை மறியல், இந்தியக் கொடி எரிப்பு, தமிழ்நாடு நீங்கலாக இந்தியப் பட எரிப்பு என்ற வகையில் எல்லாம் எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். தமிழ்நாடு விடுதலை அரசியலில் இது ஒரு வழித்தடமாக இருந்தது.
இன்னொருபுறம்.. 1895 -ஆம் ஆண்டில் தமிழன் - என்று அனைவரும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கி இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்டு எண்ணற்ற அடித்தட்டு மக்களின் தலைவர்கள் சாதி ஒழிப்பு அரசியலை முன்னெடுத்து வலுவாகச் செயல்பட்டனர்.. இருப்பினும் அப்போராட்டத்தைத் தமிழ்த் தேச விடுதலை அரசியலோடோ, வகுப்பு (வர்க்க) ஒழிப்பு அரசியலோடோ இணைத்து அவர்கள் முன்னெடுக்கவில்லை.
அதேபோல் 1925-இல் தொடங்கப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தமிழ்நாடு விடுதலை அரசியலை முதன்மையாக முன்னெடுத்திடவில்லை.. தொடக்கத்தில், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னாட்சி அதிகாரம் அமைக்கப்படும் என்கிற முழக்கத்தை இடையிடையே வைத்திருந்தாலும் அதையும் சில காலத்தில் கைவிட்டு விட்டனர்.
தொடர்ந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சிய இலெனினிய வழியினர்களும் தேச விடுதலைக் கருத்துகளையும் சாதி ஒழிப்புக் கருத்துகளையும் முதன்மை நிலையில் வலியுறுத்திடவில்லை..
இன்னொருபுறம்.. மறைமலை அடிகள் வழியில் பாவாணரைத் தொடர்ந்து, 1959-இல் தொடங்கப்பட்ட தென்மொழி இயக்கம் தமிழ்நாடு விடுதலை அரசியலை மிக வலுவாக எடுத்துப் பரப்பல் செய்துவந்தது.. அரசியல் வரலாற்றில் தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தி மூன்று மாநாடுகளை நடத்தி இருந்தார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவர் முன்னெடுத்தத் தமிழ்நாட்டு விடுதலை அரசியல் திட்டம் என்பது, சாதி ஒழிப்பு, வகுப்பு (வர்க்க) ஒழிப்பு போன்றவை கருத்தாகக் கொண்டிருந்ததே அல்லாமல் அவற்றை இணைத்தத் திட்டமாக முன்மொழியப்படவில்லை..
இந்தக் கால நிலையில்... சிறைக்குள் இருந்த சூழலில் புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் உள்ளிட்டோர் தேசிய இனங்களின் விடுதலை குறித்து நிறைய ஆய்வு செய்தனர். அந்த ஆய்வுக்கு அவர்களுக்குத் தூண்டலாகத் தமிழீழ விடுதலைப் போராட்டம் இருந்தது என்றால் தென்மொழி இயக்கத்தின் தமிழ்நாடு விடுதலை அரசியல் கருத்தளவில் துணையாக இருந்தது.
இந்த நிலையில்தான் சிறையில் இருந்து விடுதலையாகி வெளிவந்த புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் உள்ளிட்டோர் பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஐயா ஆனைமுத்து, சாலை இளந்திரையன், எசு. என். நாகராசன், எசு. வி. இராசதுரை, வெங்காலூர் குணா உள்ளிட்ட பலரையும் சந்தித்துத் தமிழ்த் தேச அரசியல் விடுதலைக்கான முன்னெடுப்பை வலுவாக அறிவிக்கத் தொடங்கினர்.
1984 பெண்ணாடம் மாநாடு தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனைக்குரிய மாநாடாக அமைந்தது.. தொடர்ந்து அதே ஆண்டில் மீன்சுருட்டியில் நடைபெற்ற சாதி ஒழிப்புக் கருத்தரங்கமும் முதன்மை பெற்றது.
தமிழ்த் தேச விடுதலையையும், சாதி ஒழிப்பையும் வர்க்க ஒழிப்பையும் இணைத்த அரசியலை முன்வைத்து தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி, வரலாற்றில் முதன் முதலில் தொடங்கப்பட்டது. அதற்கான முன்னோடிகளாகப் புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் உள்ளிட்ட பல தோழர்கள் இருந்தனர்.
அவர்களின் தலைமையில் இயங்கிய தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி முன்னணியாகத் தமிழக மக்கள் விடுதலை முன்னணியையும் கட்டியது. தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியுடன் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தலைமையிலான உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், ஐயா ஆனைமுத்து அவர்களின் தலைமையிலான பெரியார் சமவுரிமைக் கழகம், சாலை இளந்திரையன் தலைமையிலான அறிவியக்கப் பேரவை, எசு என் நாகராசன் உள்ளிட்டவர்களின் பொறுப்பிலான மார்க்சிய இலெனினிய நடுவச் சீரமைப்புக் குழு ஆகியவற்றை இணைத்த முன்னணியாகவும் செயல்பட்டனர்..
அது செயல்படத் தொடங்கிய காலக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் வலுவாக நடந்து கொண்டிருந்த நேரம்.. எனவே, தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை வலுவாக முன்னெடுப்பதே தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உண்மையான ஆதரவாக இருக்க முடியும் என்பதைத் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியும், தமிழக மக்கள் விடுதலை முன்னணியும் வலுவாக முன்னெடுத்துப் பரப்பல் செய்தது.. தமிழ்நாடு விடுதலைப் படையின்வழிச் சில தாக்குதல் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன..
இந்திய அமைதிப்படை எனும் பெயரில் அப்போது இலங்கைக்குச் சென்ற இந்திய வெறிப்படை செய்த அட்டூழியங்களைக் கண்டித்து மருதையாற்றுப் பாலம் குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிர நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டுத் தேசிய அரசியல் வலுப்பட்டு வந்தது.. இந்தச் சூழலில் தோழர் தமிழரசன் உள்ளிட்ட தோழர்கள் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட கொடும் நிகழ்வுகள் நடந்தன.. இருந்தும் தமிழ்நாடு விடுதலைப் படையும், தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியும் தொடர்ந்து இயங்கி வந்தது..
இன்றைய அளவில்.. குறிப்பாக 2009 முள்ளிவாய்க்கால் பேரிழப்புக்குப் பிறகு தமிழ்த் தேசிய அரசியலில் பல குழப்பங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ் ஈழத் தேசியத்திற்கான முயற்சி என்பது ஒன்றாகவும், தமிழ்நாட்டுத் தேசியத்திற்கான முயற்சி மற்றொன்றாகவும் கருதப்படாமல் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக் கொண்டதும்.. தமிழீழத் தேச விடுதலையே தமிழ்நாட்டுத் தமிழர்களின் கடமை போலவும் பல இயக்கங்களாலும் கருதப்படவும் பரப்பப்படவும் செய்யப்பட்டன..
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடியவர்கள் தமிழ்ஈழத் தேசிய இனத்தைச் சார்ந்தவர்களே..
தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடியவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழ்த் தேசிய இனத்தவர்களே..
இவர்கள் ஒவ்வொருவரும் மற்ற தேசிய இனத்திற்கு ஆதரவாளர்களேயன்றி அதற்காகப் போராட வேண்டியவர்களாக இருக்க இயலாது..
அதாவது..
தமிழ் ஈழத்தின் விடுதலைப் போராட்டத்திற்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆதரவாளர்களே அன்றி.. அவர்களே போராட்டக்காரர்களாக இருக்க முடியாது..
எப்படித் தமிழ்நாட்டின் தேசிய விடுதலைக்குத் தமிழ் ஈழத் தமிழர்கள் போராட்டக்காரர்களாக இருக்க முடியாதோ அப்படியே தமிழ் ஈழத் தேசியத்தின் விடுதலைக்குத் தமிழ்நாட்டு தமிழர்கள் போராட்டக்காரர்களாக இருக்க முடியாது..
இந்த அரசியலின் புரிதலின்மையே.. தமிழீழத்தின் விடுதலையைச் சொல்லிச் சொல்லி.. அதுவே தங்களின் விடுதலைப் போராட்ட இலக்கு போல பேசி பேசி.. தமிழ்நாட்டில் மயக்குபவர்களும் மயங்குபவர்களும் இருக்கின்றனர்..
இத்தகைய குழப்பங்களிலிருந்து விடுபட தமிழ்நாட்டுத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க நமக்குப் புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் உள்ளிட்டோர் தேவைப்படுகின்றனர்..
அந்த வகையில் புலவர் கலியபெருமான் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுவழி அவர்களின் அரசியலைப் பயில்வோம்.. முன்னெடுப்போம்!
- பொழிலன்
(கடந்த 14.5.23 அன்று சீர்காழியில் நடைபெற்ற புலவர் கலியபெருமாள் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தோழர் பொழிலன் உரை..)