மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தமிழகத்தில் பள்ளிக்  கல்வித் துறைக்கான நிதியை ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்துள்ளது. அதில் புதிதாக பள்ளிகளை திறப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும், அனுமதி அளிக்காமலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் 2019-20ஆம் ஆண்டிற்கான திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான வாரிய கூட்டம் கடந்த மே மாதம் 16ஆம் தேதி  நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்  தமிழகத்தின் சார்பில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கலந்துகொண்டுள்ளார். அப்போது, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, ஆலோசனை வழங்குவதற்கு 14417 என்ற கட்டணமில்லா எண்  செயல்படுத்தப்படுவது, கல்வித்  தகவல் மேலாண்மை மூலம் மாணவர்கள், பள்ளிகள் குறித்த புள்ளி விவரங்கள் பெறப்பட்டு, 2019-20ஆம் கல்வியாண்டில் ‘ஸ்மார்ட் கார்டு’ மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதையும் எடுத்துரைத்துள்ளார்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச்  சட்டத்தின் படி 33 சதவீத நடுநிலைப்  பள்ளிகளில் பாடத்திற்கான ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளனர்.  பள்ளி மேலாண்மைக் குழு அனைத்துப் பள்ளிகளிலும் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளித்து பள்ளியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை வழங்க  வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றிற்கு ரூ. 3 ஆயிரத்து 171 கோடியே 23 லட்சத்து 42 ஆயிரம் ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்துள்ளது. மாநில அரசு தனது பங்குத் தொகையாக ரூ. 1,114 கோடியே 48 லட்சம் செலுத்த வேண்டும். 

தொடக்க, நடுநிலை மற்றும் உயர்  நிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு  பராமரிப்பு மானியம் வழங்குவ தற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதியதாக  5 உண்டு உறைவிடப் பள்ளிகள்  துவக்குவதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. புதியதாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Pin It