கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப் பட்ட குழு பரிந்துரைக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்காலக் கல்வியைச் சீர்குலைத்து, நாட்டின் பல்வேறு மொழி வழித் தேசிய இனங்களின் மொழிகளைச் சிதைத்து, பண்பாட்டைக் குலைத்து, சமூக வாழ்வியல் நிலைப் பாட்டில் இந்திய மக்களை 2000 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி அழைத்துச் செல்கிற மிக மோசமான கூறுகளைக் கொண்டிருக்கிறது. என்றாலும், தமிழ் நாட்டைப் போலப் பிற மாநிலங்களில் மிகப் பெரிய எதிர்ப்புகள் இல்லை. தமிழ்நாட்டுக்கு ஏற்படுவதைப் போன்ற தனிப்பட்ட கேடுகள் பிற மாநிலங்களுக்கு ஏற்படாது. மேலும், இந்த வரைவு இந்து மயமாதல் தன்மையை முதன்மையாகக் கொண்டுள்ளதால் ஏற்படக்கூடிய பிற்போக்கான விளைவுகள் கடுமை யானவை. அடித்தட்டு மக்களுக்கான உயர் கல்வி மறுக்கப்பட்டு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றுள்ள உயர்வினை முற்றிலுமாகத் தகர்த்து மீண்டும் எல்லாத்துறைகளிலும் பார்ப்பனிய ஆதிக்கத்தை ஏற்படுத்தும். தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங் கள் பெரிய அளவில் இவற்றைப் புரிந்து கொண்டு இந்த வரை வினை எதிர்க்க முனையப் போவதில்லை. தமிழர்கள்தாம் முழுமூச்சோடு எதிர்த்து இதனை முறியடிக்கவேண்டும். எனவே, தமிழ்நாட்டுச் சூழலுக்கு இக்கல்விக் கொள்கை எவ்வாறு பொருந்தாது என்பதை முதலில் காணலாம்.
பாரதிய சனதா அரசு பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே எல்லாவகையிலும் முயலும் என்பதற்கு, முழுமையான சான்று கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு பரிந்துரைத்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கை என்பதை இந்த வரைவை மேலோட்ட மாகப் படிப்பவர்கள் உணர்வார்கள். எனினும், வரைவு முழுவதையும் ஆழ்ந்து படித்தால் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதோடு நின்று விடுவதை மட்டும் இந்த வரைவு நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; தமிழ்நாடு போன்று கல்வித்துறையில் இந்தியாவில் வளர்ந்து நிற்கிற மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தவும் முனைகிறது. மேலும், பெருமுதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களிடம் உயர்கல்வியை ஒப்படைப்பது.. ஒப்படைக்கப்பட்டு அவர்கள் பயன் அடைந்தால் இன்றைய ஆட்சியாளர்களின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டுக்கு உதவும்... என்கிற அடிப்படையிலேயே இந்தக் கொள்கை வரைவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைவில் ஒன்பதாவது இயலிலிருந்து பதினெட்டாவது இயல்வரை தந்திருக்கக் கூடிய உயர்கல்வி குறித்த கொள்கை முழக்கங்களையும் அம் முழக்கங்களிலிருந்து ஏற்படும் அச்சுறுத்தல்கள் சிலவற்றை மட்டும் இங்குக் காணலாம்.
அதற்கு முன்பாக, உயர்கல்வியில் இந்திய அரசு கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில் இதுவரை கொண்டுவந்துள்ள மாற்றங்களின் விளைவுகளையும் காணவேண்டும். கடந்த நாற்பது ஆண்டுகளில் நமது உயர் கல்விமுறையில் மூன்று பெரிய கல்வி மாற்றங்களைச் சந்தித்து இருக்கிறோம்.
1. அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி கள் என்று மட்டுமே இருந்த நிலை மாறி, கல்வியைப் பரவலாக்குகிறோம் என்ற பெயரில் தன்னிதிக் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டமை.
2. 1989 வரை இளநிலை பட்டப் படிப்புகளில் இருந்த ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு எழுதுவது என்ற நிலையை மாற்றி ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதுகிற பருவ முறையைக் கொண்டுவந்தது. 1989 வரை இளநிலை பட்டப்படிப்பில் மூன்றாண்டுகளுக்கும் 1800 மதிப்பெண்களுக்கு பதினெட்டு தாள்களை எழுதினோம். இன்று மாணவர்கள் அதே மூன்றாண்டுகளுக்கு 4000 மதிப்பெண்களுக்கு 40 தாள்களை எழுதுகிற நிலைக்கு கொண்டு சேர்த்துள்ளது. இவை அல்லாமல் விழுக்காட்டு அளவில் பார்த்தால் நான்கு நாள்களுக்கு ஒரு அகமதிப்பீட்டுத் தேர்வு அல்லது அகமதிப்பீட்டுக் கட்டுரை எழுதுகிற அவலத் தையும் இன்றைய மாணவர்கள் சந்திக்கிறார்கள். இதனால், அறிவு வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டுக்கும் படிப்பது என்பது மறைந்துபோய் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் நிலை மிகுந்துவிட்டது.
3. எல்லாக் கல்விநிலையங்களும் பல் கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரியாக இருந்த நிலையை மாற்றி, தன்னாட்சி அதிகாரம் கொண்ட தன்னிதிப் பல்கலை க்கழகங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்னும் பெயரில் உருவாக வழிவகுத்தது.
4. எல்லாக் கல்லூரிகளும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி, பல்கலைக் கழகத் தேர்வு எழுதிப் பட்டம் பெறுகிற முறையை மாற்றி, தன்னாட்சிக் கல்லூரிகளை உருவாக்கி, அந்தந்தக் கல்லூரிகள் தாங்களே பாடத்திட்டத்தை உருவாக்கி, தாங்களே தேர்வு நடத்திப் பட்டத்தை மட்டும் பல்கலைக்கழகத்தை வழங்கச் செய்வது. குறிப்பிடத்தக்க இந்த மாற்றங்கள் எல்லாம் பெரும்பான் மையும் கல்வி வளர்ச்சி என்ற பெயரிலேயே செய்யப்பட்டன.
விளைவுகளைப் பார்த்தால், ஆண்டு முழுவதும் தெளி வாகவும் செறிவாகவும் பயின்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு எழுதிய அன்றைய மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்ததும் விரிவுரையாளர் தகுதித் தேர்வு உடனடியாக எழுதி, சொல்லப்போனால், முதுகலை இரண்டாம் ஆண்டின் கடைசிப் பருவமாகிய நான்காம் பருவத்திலேயே விரிவுரை யாளர் தகுதித் தேர்வையும் எழுதி, எளிதில் தேர்ச்சி பெற்றனர். இன்று ராஜீவ் காந்தி கல்வித் திட்டம், அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் மிகச் சிறந்த கல்வியாளர்கள் என்று பிரதமர் வாஜ்பாய் அவரால் கருதப் பெற்ற முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா ஆகிய இரு பெரும் கார்ப்பரேட் முதலாளிகளை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையாகிய அம்பானி- பிர்லா அறிக்கை 2000 முதலான 'வளர்ச்சிக்கான' மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட பிறகு முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த பின்னரும் பல ஆண்டுகளுக்கு விரிவுரையாளர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத அவலத்தில் பலர் இருக் கிறார்கள். இன்றைய பள்ளி ஆசிரியர் பணித் தேர்வில் ஒரு விழுக்காட்டுக்குக் கீழே போய்விட்ட தேர்ச்சி எண்ணிக்கையும் இவர்களின் 'வளர்ச்சிக் கொள்கை'களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றமாகும்.
உயர்கல்வி குறித்துப் பேசத்தொடங்குகிற தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவின் ஒன்பதாவது இயல் உயர்கல்வி யை மறு சீரமைத்து நாடு முழுவதும் உலகத் தரம் வாய்ந்த பன்முகத்தன்மையை உருவாக்குதல் என்ற நோக்கத்தை முதன்மையாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது. இன்றைய நிலையில் உயர்கல்வி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வ தாகவும் பட்டியலிடுகிறது.
இந்தியாவில் 800-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் மற்றும் சுமார் 40 ஆயிரம் கல்லூரிகளில் உள்ளன என்று குறிப்பிடுகிற இந்த வரைவு குறிப்பிடத்தக்க வகையில் நமது நாட்டிலுள்ள 40 விழுக்காட்டிற்கும் மேலான கல்லூரிகள் 21-ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான பன்முக முறையான உயர்கல்வியில் இருந்து வெகு தொலைவில் நின்று, இன்னும் ஒற்றைப் பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றன என்கிறது. உண்மையில் 20 விழுக்காட்டிற்கு மேலான கல்லூரிகளில் அதாவது 8000க்கும் மேலான கல்லூரிகளில் 100க்கும் குறை வான மாணவர் எண்ணிக்கை இருப்பதாகத் தெரிவிக்கிறது. இத்தகைய கல்லூரிகளில் 0.5 விழுக்காடு எண்ணிக்கை யிலான அதாவது 40 கல்லூரிகள் கூடத் தமிழ்நாட்டில் இருக்காது என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நாலு விழுக்காடு கல்லூரிகள் (1600 கல்லூரிகள்) மட்டுமே மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை கொண்டிருக்கிறது என்கிறது வரைவு.
இத்தகைய கல்லூரிகளில் சற்றேறக்குறைய 25 விழுக்காட்டுக்கும் அதிகமான கல்லூரிகள் தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. மேலும், இதில் இன்னும் மோசமாக ஆயிரக்கணக்கான சிறு கல்லூரிகளில் கற்பிக்கப் பேராசிரியர்கள் கூட இல்லை. மேலும், கல்விப்பணி சிறிதளவுகூட அங்கு நடைபெறுவதில்லை. இதனால், நாட்டின் உயர் கல்வி முறையில் நேர்மைத் தன்மை கடுமையாகப் பாதிக்கிறது என்கிறது வரைவு. இத்தகைய கல்லூரிகள் தமிழ்நாட்டில் ஒன்றுகூட இருக்க வாய்ப்பில்லை. இங்கு நிறைய போலியான கல்லூரிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெற்று வருகின்றன என்கிறது வரைவு. கல்லூரி என்ற பெயரில் முறையான அலுவலகம் கூட இல்லாமல் போலிப் பட்டங்களை வழங்குகிற சில திருட்டு நிறுவனங்களை மனதில் கொண்டே வரைவு இவ்வாறு தெரிவிக்கிறது என்பதை நாம் தெளிவாக உணர முடியும். இத்தகைய கல்லூரிகளும் பெரும்பாலும் தமிழ்நாட்டில் இல்லை.
இவ்வகையில் பார்த்தால் பெரும்பாலும் சமூக, பொருளாதார, வாழ்வியல் நிலைகளில் மிகவும் பின்தங்கிய வட இந்தியாவின் மாநிலங்களையே கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதால் இது முற்றிலும் தமிழ்நாட்டுக்கு பொருத்தமுடையது ஆகாது.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக உயர்கல்வியை மூன்று பேரும் பிரிவுகளுக்குள் கொண்டுவரப் பரிந்துரைக்கிறது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்படும் மூவகை உயர் கல்வி நிறுவனங்கள் முதல்வகை வகை ஆராய்ச்சிப் பல்கலைக் கழகங்கள். முதுகலைப் பட்டப்படிப்போடு இளநிலை பட்டப் படிப்புக் கல்வியையும் வழங்குகிற இந்தப் பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சிக்கும் இணையான முன்னுரிமை வழங்கும். இரண்டாம் வகை கற்பிக்கும் பல்கலைக்கழகங்கள். இளநிலை முதுநிலை முனைவர் பட்ட ஆய்வு, தொழில்முறை, தொழில் சார் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்கும். மூன்றாம் வகைக் கல்லூரிகள். இவை முழுவதும் இளநிலைப் பட்டபடிப்புக் கல்வியை வழங்குவதோடு தொழில் சார் தொழில்முறைசார் கல்விகள் உட்பட சான்றிதழ் பட்டப் படிப்புகளை வழங்கும். எதிர்கால உயர்கல்வி இந்த மூன்று வகைக் கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கும் என்கிறது வரைவு.
நீண்டகாலத்தில், கல்வி நிலையங்களின் எண்ணிக்கை குறைவாகவும் கல்வி நிலையங்களில் மாணவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும் என்கிறது. இந்தக் கூறுபாடுகள் தான் தமிழ்நாட்டுக்குப் பொருத்தமில்லாதது என்ற முடிவுக்கு வரவைக்கிறது. முதல் வகை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவை 150 முதல் 300 வரை எண்ணிக்கை கொண்டிருக்கும். மாணவர் சேர்க்கை 5000 முதல் 25000 வரை அதற்கு மேற்பட்ட மாணவர் களைக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைய பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை சொல்கிற தகுதியைப் பெறுகிற பல்கலைக்கழகங்களில் குறைந்த அளவாக 20 அரசு பல்கலைக்கழகங்களும் 20 நிகர்நிலைப் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இவை அல்லாமல் தன்னாட்சி அதிகாரம் கொண்டிருக்கிற முதல்தர பல்கலைக் கழகமாகத் தகுதி ஏற்கத்தக்க கல்லூரிகள் மிகக் குறைந்த அளவாக 30 கல்லூரிகளும் இருக்கும் என்று கணக்கெடுத்துக் கொண்டால் நாடு முழுவதற்கும் வைத்திருக்கிற குறைந்தபட்ச எண்ணிக்கையில் இரண்டில் ஒரு பங்கு அதிகபட்ச எண்ணிக்கையான நான்கில் ஒரு பங்கும் தமிழ் நாட்டில் மட்டுமே நடைபெற முடியும்.
இரண்டாம் நிலை கற்பிக்கும் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை 5000 முதல் 25000 வரை மாணவர் எண்ணிக்கை இருக்கும். இருபது ஆண்டுகளில் இவ்வகைப் பல்கலைக்கழகங்களில் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்து 2000 வரை இருக்கும். இன்றைக்குத் தன்னாட்சி கல்லூரிகளாகச் செயல்படக்கூடிய கல்லூரிகள் இதற்கான தகுதியைப் பெறுவதற்கு முனைந்தால் சற்றேறக்குறைய 100 கல்லூரிகள் அத்தகுதிகளைப் பெறு வதற்கு முயற்சி செய்யும் எனில் 20 ஆண்டுகளில் நாட்டின் மொத்த இலக்கு என்று வரைவு குறிப்பிடுகிற எண்ணிக் கையில் குறைந்த அளவாக பத்தில் ஒரு பங்கை இன்றைக்கே தமிழ்நாடு மட்டுமே பெற்றிருக்கிறது. மூன்றாம்வகையில் குறிப்பிடப்படும் இளநிலைப் பட்டப்படிப்பு கற்பிக்கக் கூடிய கல்லூரிகளைப் பொறுத்தவரையில் குறைந்த மாணவர் எண்ணிக்கை 2000 ஆகவும் அதிக அளவில் 5000 அல்லது அதற்கும் மேற்பட்டும் இருக்க வேண்டும். இந்தக் கல்லூரிகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் 5000 முதல் 10000 வரை நிறுவப்பட வேண்டும் என்கிறது வரைவு.
தமிழ்நாட்டில் இன்றைய கலை அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை மட்டும் பொதுவாகப் பார்த்தால் 98 அரசு கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் 1356 தன் நிதிக் கல்லூரிகள், ஆக, 1616 கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை கலை அறிவியல் கல்லூரிகளே. மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி உள்ளிட்ட பிற கல்லூரிகள் இடம்பெறும். இந்த எண்ணிக் கையைப் பொறுத்த அளவில் 12லிருந்து 20 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவில் குறைந்த அளவில் 50 விழுக்காட்டையும் அதிக அளவில் 20 விழுக் காட்டையும் ஒற்றை மாநிலம் ஆகிய தமிழ்நாடு இன்றே பெற்றுள்ளது. மருத்துவம், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையைச் சேர்த்துப் பார்த்தால் இந்த அளவு மேலும் மிகுதியாகும். ஆனால், வரைவு என்பது ஒட்டுமொத்த இந்தியா வுக்கும் கூறியது.
இங்கே ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். கடினமாக உழைத்து ஈட்டுகிற பொருளின் பெரும்பகுதியைக் கல்விக்காக மட்டுமே செலவழித்துத் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்று வாழ்வில் மேம்படுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டி ருப்பவர்கள் தமிழ்நாட்டினர். இயற்கையான வளக் குறைவு மட்டுமல்லாது, சோம்பேறிகளாகவும், பொருளீட்டும் திறன் அற்றவர்களாகவும், ஈட்டிய பொருளை எல்லாம் மனமகிழ் விற்கே செலவழிக்கிற குணம் கொண்டவர்களாகவும் திகழ் கிறார்கள் வட இந்தியாவின் குறிக்கத்தக்க மாநிலத்தவர் என்பது வட மாநிலங்களுக்கு சென்று வந்தவர்களுக்குத் தெரியும்.
"எதிர்காலத்தில் ஆடவர்கள் படித்த பெண்களையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்திருக் கிறார்களாம். எனவே பெண் பிள்ளைகளே படித்துக் கொள் ளுங்கள். இல்லை என்றால் உங்களுக்கு நல்ல மணமகன் கிடைக்க மாட்டான். திருமணம் ஆகாமல் போய்விடலாம்" என்றெல் லாம் திருமண வீடுகளில், பெண்கள் கூடுகிற இடங்களில் பேசி, பெண்கல்வியின் இன்றியமையாமையை உணர்த்திய தந்தை பெரியார், "உங்கள் ஊரில் கோயில் கட்டுகிற காசில் சிறிதளவை ஒதுக்கி பள்ளிக்கூடம் ஒன்று கட்டுங்கள்" நான் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரும்போது பள்ளிக்கூடத்தையும் திறந்து வைக்கிறேன்" என்று நிபந்தனை விதித்தும் பள்ளிக் கூடத்தில் உணவு வழங்கியாவது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று கருதிய காமராசர் உள்ளிட்ட கல்விச் சிந்தனை மிகுந்த தலைவர்கள் ஆற்றிய பணிகளால் கல்வியில் இன்று குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றி ருக்கிற தமிழ் நாட்டுக்கும் தமிழ் நாட்டோடு ஒப்பிட்டால் பத்தில் ஒரு பங்கு கூடக் கல்வி வளர்ச்சி பெறாத மாநிலங்களுக்கும் பொதுவான தேசியக் கல்விக் கொள்கை எதற்காக வேண்டும்? எனவே, மிகக்குறைந்த எண்ணிக்கைளில் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இருக்கிற மாநிலங்களைத் தேர்ந் தெடுத்து அந்த மாநில அரசுகளுக்கு உதவிபுரிந்து செய்ய வேண்டிய வேலைகளை ஒட்டுமொத்தமாகத் தேசியக் கல்விக் கொள்கையாக அறிவித்திருக்கிறார்கள். இது அறியாமல் செய்ய பட்டதல்ல, திட்டமிட்டே செய்யப்பட்டது.
மேலும், இதில் சிக்கல் என்னவெனில், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது இந்திய உயர் கல்வியானது மூவகைப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குள் அடங்கும். அதனால் அவற்றின் எண்ணிக்கை அளவில் சிறியதாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனம் தற்போது இருக்கும் அளவைக் காட்டிலும் மிகப் பெரியதாக இருக்கும் என்கிறது வரைவு. அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த மூவகைக் கல்வி நிறுவனங்களும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மண்டலங்களிலும் சமமான முறையில் நிறுவப்பட வேண்டும் என்கிறது. இங்கேதான் சிக்கல் எழுகிறது. இவ்வாறு சமமான முறையில் நிறுவப்பட்டால் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் ஐந்திலிருந்து பத்து வரையிலான ஆராய்ச்சிப் பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருக்கும். அவ்வாறெனில் இன்றைக்கு இயங்குகிற அரசு பல்கலைக்கழகங்களில் சற்றேறக்குறைய 15 முதன்மையான பல்கலைக்கழகங்கள் முதல் நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆகத் திகழ்வதற்குத் தகுதியற்றதாக நிராகரிக்கப் படும். இதே நிலையே மற்ற இருவகைக் கல்வி நிலையங் களுக்கும் ஏற்படும். வருங்காலங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கிட வட மாநிலங்களுக்கே முதன்மை அளிக்கப்படும்.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் வட இந்தியர்கள் வளம்பெற்றுக் கொழுக்க, ஏற்கனவே வளர்ந்துவிட்டதாகக் கூறி, தமிழ்நாடு புறக்கணிக்கப்படும். ஒரே நாடு என்று கூறப்பட்டு விட்டதால் வடக்கு, தெற்கு என்றெல்லாம் பிரித்துப் பார்க்கக் கூடாது என்ற வஞ்சக முழக்கம் முன் வைக்கப்படும். இன் றைக்கு இந்த வரைவு வருவதற்கு அடிப்படையானவர்களுள் துணைவேந்தர் தேர்வு தொடங்கி பள்ளி ஆசிரியர்கள் பணியமர்த்தல் வரை தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி, ஊழலை விதைத்துவிட்டுக் கல்விச் சீர்திருத்தம் குறித்துப் பேசுகிற பெருங்கொள்ளையர்களாகிய அரசியல்வாதிகள், கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் தங்களைக் கல்வி வள்ளல்கள் என்று அழைத்துக் கொள்கிற வணிக நோக்கில் கல்வி நிலையங்களை நடத்துகிறவர்கள், தங்கள் பொறுப்பை மறந்து ஆசிரியத்தன்மைக்கு மாறாக அரசு உழியர்கள் என்ற மனப்பான்மைக்கு வந்துவிட்ட பெரும்பான்மையான பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஆகிய இவர்களே முதன்மையான வர்கள். மேற்கூற்றில் விதிவிலக்கானவர்கள் மிகக்குறை வானவர்களே.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இது நாடு முழுவதும் இருக்கிற பொது நிலைமையாகும். இவர்களின் தன்னலவெறி கல்விச் சீரழிவுக்குக் காரணமானது. அதுவே சீர்திருத்தம் என்கிற பெயரில் இத்தகைய மோசடிகளுக்கு அடிப்படையாகிவிட்டது. வயல்களில் தவறான விதைகளை விதைத்து, பயிர்களைவிட களைகள் மிகுதியாக இருக்கும் நிலையில் முற்றிலுமாகக் களைகளை நீக்கி, பயிர்களைச் செழிக்கச் செய்து இனியாவது சரியான விதைகளை விதைத்து நல் விளைச்சலை பெற வேண்டிய வேளாளன், எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று சொல்லி, சீமைக்கருவேல விதைகளை விதைத்தால் விறகுக் காவது ஆகும் என்று முடிவு எடுப்பதைப் போல, கல்வி நிலை யங்களை முறைப்படுத்திட, தகுதியானவர்களைத் துணை வேந்தர்களாக நியமித்து, தகுதியற்றவர்கள் முதல்வர்களாக பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக வந்துவிடாமல் தடுத்து, கல்வியை வளர்த்தெடுப்பதற்கான வேலையைச் செய்ய வேண்டிய அரசு அதற்கு மாறாக, முற்றிலுமாகக் கல்வி வளர்ச்சி யைச் சீர்குலைத்து உயர்கல்வியை உருக்குலைக்கும் பணியினைச் செய்வதற்கே இந்த தேசியக் கல்விக் கொள்கை 2019 உதவும்.
மேலும், கல்வித்துறையில் தொண்டுள்ளத்தோடு ஈடுபடு கிற தனியாரை ஊக்குவிக்க வேண்டும், உலகின் 200 தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து குறிப்பிட்ட பல்கலைக் கழகங்களைத் தேர்ந்தெடுத்து அவை இந்தியாவில் கல்வி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பன போன்ற வரைவின் பரிந்துரைகள் இந்தியக் கல்வித் துறையைத் தனியார் கைகளிலேயும், பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலேயும் ஒப்படைப்பதற்குத் திட்டமிட்டுகிறதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இது மிக விரிவாக, தனித்து ஆய்வு செய்வதற்கு உரியதாகும்.
இதுவரை உயர்கல்வி குறித்துக் கொள்கை முடிவுகள் எடுக்க, நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க, நிதி உதவிகளை அளிப்பதற்கு எனத் தன்னாட்சியாக இயங்கி வந்த பல்கலைக் கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் கலைக்கப்பட்டு 'ராச்ட்ரிய சிக்சா ஆயோக்' என்கிற தேசியக் கல்வி ஆணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இது இந்தியக் கல்விக்கான உச்ச அதிகாரம் கொண்ட குழுவாகும். இந்த அமைப்பு கல்விக்கான பார்வை / இலக்கை உருவாக்குவதும் வெளிப்படுத்துவதும், செயல்படுத்துவதும், மதிப்பீடு செய்வதும் மற்றும் மறுசீரமைப்பு ஆகிய பொறுப்பையும் கொண்டிருக்கும். இந்த நோக்கத்தை அடைய உதவும் நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கி மேற்பார்வை செய்யும். இதன் தலைவராக நாட்டின் பிரதமர் இருப்பார். (இன்றைய நிலையில் மாண்புமிகு நரேந்திர மோடி இருப்பார்). இதன் துணைத் தலைவராக மத்திய கல்வி அமைச்சர் இருப்பார். உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள், சுழற்சி முறையில் மாநில முதலமைச்சர்கள் இருப் பார்கள். பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட துறைச் செயலாளர் களும் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள். 50 விழுக்காடு அளவிற்குப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும் இருப்பார்கள்; கடைசியாகக் கல்வியாளர்களும் அல்லது கல்வியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் இருப்பார்கள்.
100 விழுக்காடு கல்வியாளர்களையே கொண்டு இயங்கிய உயர்கல்வித்துறையின் அமைப்புகளைக் கலைத்துவிட்டு 50 விழுக்காட்டுக்கு மேல் அரசியல்வாதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்கி இந்த அரசியல்வாதிகளின் துணையோடு கல்வித்துறையைச் சீர்படுத்தப் பரிந்துரைக்கிறது வரைவு. பெயரளவிலாவது கட்சி சார்பற்றவர் என்று கருதப் படுகிற ஆளுநர் துணைவேந்தர் நியமன நிலையை நாம் அறிவோம். அரசியல் ஆதிக்கம் இல்லாத நிலையில் அவர்களின் மறைமுக அழுத்தங்களைச் சில நேரங்களில் நிறைவேற்றி னாலும் பல நேரங்களில் நிறைவேற்ற மறுக்கிற பல்கலைக் கழக மானியக் குழு முதலான அமைப்புகளையும் கலைத்து விட்டு நேரடியாக அரசியல்வாதிகளின் கைக்குக் கல்வித்துறையைக் கொண்டு சேர்ப்பது எவ்வளவு கேடாய் முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும் உறுதியாகப் பிரதமரின் எண்ணத்தை நிறைவேற்ற முயல்வார்கள் எனில், 50 விழுக்காடு அளவுக்கு இவர்கள் இடம் பெற்றிருக்கிறபொழுது ஒட்டுமொத்த கல்வி குறித்த முடிவு களையும் ஒற்றை மனிதராகப் பிரதமர் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிற ஒரு சர்வாதிகார முறையை இந்த வரைவு பரிந்துரைக்கிறது என்று சொன்னால் அது பிழை ஆகாது. ஒரே இந்தியா, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி என்ற நிலையை நோக்கி நகர்கிற பாரதிய சனதாக் கட்சியின் ஆட்சி எல்லாத்துறைகளிலும் ஒற்றைத் தலைமையை நோக்கியும் நகர முற்படுகிறது என்பதை வரைவு தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. மக்களாட்சி தத்துவத்தைச் சிறிது சிறிதாகச் சிதைக்காமல் ஒட்டுமொத்தமாகக் குழி தோண்டிப் புதைத்து விடுகிற நிலைக்கே நம் ஆட்சியாளர்கள் வந்து இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாகிறது.
மாநில அளவில் பெரிய வளர்ச்சி பெற்றிருக்கும் தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுத்து, உலகின் ஈடுஇணை யற்ற மொழியாகிய தமிழை அழித்தொழித்து, சாதிய வேறுபாடுகளும் மத வெறியும் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு நோக்க. அவை மிகக் குறைவாக இருக்கிற தமிழ்நாட்டில் மத வெறியைத் திணித்து, வேறுபாடுகளை நிலை நிறுத்துகின்ற பணியை இந்த அறிக்கை செய்யும். இந்துத்துவா திணிப்பு, மொழிச்சிக்கல், பண்பாட்டுச்சிதைவு, கல்வித் துறையை இந்தியப்பெரு நிறுவனங்களிடம் பன்னாட்டு நிறுவனங்களிடமும் ஒப்படைத்தல் மற்றும் கல்வித்துறையின் நிருவாகத் தலைமை உள்ளிட்ட தனித்தனியாகப் பார்க்கப்பட வேண்டிய கூறுகள் நிறைய உள்ளன. அவை குறித்து எதிர்வரும் இதழ்களில் அல்லது தனி நூலில் விரிவாக விளக்க வேண்டும்.
வேதங்கள் சொன்னால் போதும்; அந்தணர் சொன்னால் போதும்; அரசர் சொன்னால் போதும்; அவைதாம் இறுதி; அவற்றை எவரும் எதிர்க்கக் கூடாது என்ற ஆதிக்கக் கொள்கை இந்தத் துணைக்கண்டம் முழுவதும் உச்சத்தில் இருந்தபோது, எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு எனவும் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவுப் பாதை காட்டிய திருவள்ளுவரும், மண்டிக்கிடந்த மூடப்பழக்க வழக்கங்களின் கேடுகளை உணர்த்தி, அறிவார்ந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதையே தான் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்த தந்தை பெரியாரும் வாழ்ந்த தமிழ் மண்ணில் மூடக் கொள்கைகளை மூர்க்கமாகத் திணிக்கிற பெரும் முயற்சியைச் செய்கிறவர்களின் கொடுஞ் செயலை எல்லா நிலையிலும் எதிர்த்து, தமிழ்நாட்டைக் காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும்.
- முனைவர் சோம.இராசேந்திரன்