தொடர்புடைய படைப்புகள்

வழிபாடு

வழிபாடு என்னும் சொல் வழி- படு என்று பிரிந்து ‘வழிபடுத்துதல்’ என்னும் பொருள்படும். வழிபடு என்பதிலிருந்து ‘வழிபாடு’ என்னும் சொல் தோன்றியது. வழிபடு என்பதற்கு வணங்குதல், பின்பற்றுதல், நெறிப்படுத்துதல், வழிச்செல்லுதல், பூசனை முறைகள் மேற்கொள்ளுதல் என்று தமிழகராதிகள் பலபொருள் தருகின்றன. தெய்வங்களை மகிழ்விப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அனைத்தும் வழிபாடு என்றும், இறைவனுடன் இரண்டறக் கலப்பதே வழிபாடு என்றும், உள்ளக் கதவினை இறைவனுக்காகத் திறப்பதே வழிபாடு என்றும் வழிபாடு குறித்துப் பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும் நம் முன்னோர் இட்டுச் சென்ற வழியில் செல்லுதலே வழிபாடாகும் என்று ஆய்வாளர் முனைவர்.க.காந்தி அவர்கள் உரைக்கிறார்.thiruparankundrama hindu andolanஇயற்கை வழிபாடு

இயற்கையின் கூறுகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, வான், மலை, ஞாயிறு, திங்கள் போன்ற இயற்கைப் பொருள்களை வழிபடும் தன்மையையே இயற்கை வழிபாடு என்றழைப்பர். இயற்கையின் சூழல்களுக்கு ஏற்ப மனிதர்களும் தமது வழிபாட்டினை வகுத்துக் கொண்டார்கள். மேலும் அச்சத்தின் விளைவாகவே வழிபாடுகள் தோன்றலாயின என்பர். பேயையும், பெருமழையையும், பொங்கும் கடலையும், பெருக்கும் ஆற்றையும், சூறாவளிக்காற்றையும் கண்டு அஞ்சிய மனிதர்கள் இயற்கையை வழிபடத் தொடங்கினார்கள்.

தொல்காப்பியர் கூறும் வழிபாடு

தமிழரின் தொன்மை இலக்கணமாகத் திகழ்வது தொல்காப்பியமாகும். நில அமைப்பைக் கொண்டு, பழந்தமிழரின் இயற்கையோடு இயைந்த தெய்வ வழிபாட்டு நெறியைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் பின்வருமாறு வரையறுக்கிறது.

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே" (தொல். பொருள் : 5)

என்கிறது. மேலும்,புறத்திணைகளில் ஒன்றான பாடாண் திணையில் மக்கள் இயற்கையினை வணங்கியதை,

"கொடிநிலை கந்தழி வள்ளி என்று
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே" (தொல்பொருள்)

எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது.

இலக்கியங்களில் இயற்கை வழிபாடு

நிலம், நீர், தீ, காற்று, வான் போன்றவை இயற்கையின் அமைப்புகளாகக் கொள்ளப்படுகின்றன. மண் செறிந்த நிலம், மேலோங்கிய வான், அவ்வானம் தழுவும் காற்று, அக்காற்றால் எழும் நெருப்பு, அந்நெருப்புக்கு முரணாக நீர் என ஒன்றுடன் ஒன்று தழுவி இவ்வுலகில் அமைந்துள்ள இயற்கையின் கூறுகளை மனிதர்கள் தம் சூழ்நிலைக்கேற்ப வழிபடும் முறைமையைச் சங்கப் புறநானூறு பாடல்,

மண்திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலையிய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பூதத்து இயற்கை...(புறம் 2: 1- 6 )

என இவ்வழிபாட்டினை ஐம்பூத வழிபாடு என்கிறது.

உருவ வழிபாடு

ஞாயிறு வழிபாட்டைப் பழந்தமிழர் மக்கள் பெரிதும் போற்றி வந்துள்ளனர். பொங்கல் திருநாளில் அறுவடை செய்து தானியங்களைக் கதிரவனுக்குப் படைத்து வழிபடும் மரபு தமிழர் வழிபாட்டிற்குரிய முதன்மைத் திருநாளாக கொள்ளப்பட்டது. பழந்தமிழ் மக்கள் ஞாயிற்றினைத் தொழுதமையினை,

"தயங்குதிரைப் பெருங்கடலூடு தொழுத்தோன்றி
வியங்குகதிர் விரிந்த வெண்கேழு மண்டிலம்" (அகம் 263:1- 2)

என்று அகநானூறும்,

"முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்றநின் சொல்வளர்த் தோர்க்கே" (நற் 2 3:6- 8)

என்று நற்றிணையும், ஞாயிறு, திங்கள், தீச்சுடர் ஆகிய இயற்கையின் முக்கிய கூறுகளை பழந்தமிழர் வழிபட்டதைத் தொல்காப்பியமும் கூறுகிறது. மேலும்,

"கதிர் மதி உடல்தொறும் கண்கள் ஆதலின்" (அனு.இல.பொருள் 11)

என்று ஞாயிறு, திங்கள் இரு சுடரையும் மனித உடலின் இரு கண்களாக கொண்டது அறுவகை இலக்கணம். மக்களினங்கள் இவற்றை ஆண் பெண் எனக் கற்பித்து வழிபடத் தொடங்கினர் என இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றினையும்,திங்களையும் பயன் கருதித் தொழுதமையினை உலகப் பண்பாட்டு வரலாறு (History of world culture) எடுத்துரைக்கிறது. இயற்கையினை அச்சவுணர்வு நிலையில் அணுகி வழிபட்ட மனிதன் காலப்போக்கில் அதன் அருள் நிலையினை போற்றத் தொடங்கிக் கோட்டம் அமைத்து வழிபாட்டமையினைச் சிலப்பதிகாரம் வழி அறியமுடிகிறது. திங்களுக்கு நிலாக்கோட்டமும், ஞாயிற்றுக்கு உச்சிகிழான்கோட்டமும் அமைக்கப்பட்ட வழிபாட்டு நிலை இயற்கை வழிபாட்டின் இருந்து உருவமுடைய இறைவழிபாட்டிற்கு வழி அமைத்தமையினைப் புலப்படுத்துகிறது.

பழந்தமிழர் ஞாயிற்றினை ஆண் தெய்வமாகக் கருதி வழிபட்டுள்ளனர். இதனைச் சங்க இலக்கியத்தில் "பகல் கெழு செல்வன்" என நற்றிணையும், "பருதியுஞ் செல்வன்" என அகநானூறும் குறிப்பிடுகிறது. இவ்வகையில் இயற்கை வழிபாட்டின் அடிப்படையில் தோன்றிய இறைவழிபாடு காலப்போக்கில் பகுத்த தெய்வ வழிபாட்டிற்கு வழியமைத்தது. வேத முறையிலான வேள்வி வழிபாட்டு நிலைகள் கொண்டு ஆரியத் தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் தமிழர்களிடையே சிறப்புப் பெறுவதற்கு சமுதாயத்தில் உயர்ந்த நிலையிலிருந்த அந்தணரும், அரசருமே காரணமானார் என்பதை இலக்கியம் உறுதிப்படுத்துகிறது. தமிழரின் தனித்த வழிபாட்டுமுறை காலப்போக்கில் பிராபண்பாட்டின் தாக்கத்தால் கலப்புப்பெற்ற நிலையினை இலக்கியச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இயற்கைக்கு மாறான வழிபாடு

இயற்கையின் அச்சந்தரும் செயல்களே மனிதனைக் கடவுள் நெறிக்கு எடுத்துச் சென்றதென்பது மானிடவியலாரின் கருத்தாகும். மனிதனிடம் உள்ள ஆற்றலை ஓர் வரம்புக்குட்பட்டது எனக் கூறி கடவுள் நெறிக்கு மனிதனை ஆற்றுப்படுத்தி அவர்களிடம் அச்ச உணர்வை மேலோங்க செய்து அவன் அறிவுக்கும் ஆற்றலுக்கும் முறைவே புலப்படாத, உட்பட்டவற்றின் மீது நம்பிக்கை கொள்ள வைத்து இயற்கை வழிபாட்டை இறை வழிபாடாக மலர்ச்சிஅடையச் செய்து மதப் புகழுக்கு மட்டுமே வழிவகை செய்கிறது பாசிசக் கூட்டம்.

வழிபடும் தெய்வம் துன்பக் காலங்களில் உதவும் என்ற நம்பிக்கை கொள்ள தொடங்கிய மாந்தர்கள் பல புதிரான செயலை உணர்விழந்து செய்கின்றனர். ஆண்களை விட பெண்களே அதிகமாக தெய்வ நம்பிக்கைகளில் அடிமைப்பட்டு வாழ்கின்றனர் என்றும் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களே அவர்களை மனமாற்றத்திற்கு உந்தப்பட்டு அச்ச உணர்வை அதிகப்படுத்தி இயற்கைக்கு மாறான இறைவழிபாட்டினை நோக்கிச் செயல்படுத்துகிறது என்றும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தீச் சட்டி ஏந்துதல், தீயில் இறங்குதல், பால்குடம் தூக்குதல், காவடி சுமத்தல், மண் சோறு சாப்பிடுதல்.... என இயற்கைக்கு ஒவ்வாத வழிபாடுகளை நோக்கிப் பயணிப்பது மக்களின் அறியாமையை வெளிப்படுத்தி நிற்கிறது. தமிழ்ச் சமூக வழிபாட்டில் பொது வழிபாடாக நிலைபெற்று காணப்பட்ட இயற்கை வழிபாட்டை மறந்து சாதிய அடிப்படையில் கோவில்களையும், அவரவர் சாதியை உயர்த்திப் பிடிக்கும் வகையில் வழிபாடுகளையும், விழாங்களையும், குடமுழுக்குகளையும் பல இடங்களில் நடத்தி புராண கட்டுக்கதைகளைக் கூறிப் பழமையையும் பரப்பி சமூக அமைப்பைச் சீரழித்து இன அழிவைத் தூண்டுகிறது ஆர்.எஸ்.எஸ் சங்கபரிவார் அமைப்பு கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்து முன்னணி திருப்பரங்குன்றத்தில் கலவரத் தீயைப் பற்ற வைக்கும் நோக்குடனே செயல்படுகிறது. ஆரியப் பார்ப்பனியத்தை அரங்கில் ஏற்ற முயல்கிறது.

தந்தை பெரியார் மொழிந்தது போல இந்து மதம் எனும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், பல மாதிரியான உருவக் கடவுள்கள் உண்டு. பிறவியிலேயே சாதி வகுக்கப்பட்டு பிராமணன், சூத்திரன், பஞ்சமன், என்ற உயர்வு தாழ்வு கொண்ட சாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றின் கீழ்படிதலாய் இருக்கிறோம். இதில் இருந்து மீள்வதற்குப் பல கடவுள் கொள்கை, மக்கள் பிறவி பேதக் கொள்கை ஆகியவற்றை ஒழித்து பகுத்தறிந்து அனைத்து மனிதர்களும் ஓர் ஆன் ஓர் பெண்ணிலிருந்து உருவாகி உலகமெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கங்களே. மனிதனுக்கு மனிதன் மரியாதையாக, அன்பாக, பக்தியாக, சாந்தியாக, சகோதரத்தன்மையாக, ஒற்றுமையாக, ஒழுக்கமாக, உதவியாக வாழும் கொள்கையே சமுதாயக் கொள்கையாகும் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது கடமையாகும். பெரியார் எனும் பெரு நெருப்பு கொண்டே இந்து என்கிற ஆரிய அடையாளத்தை உயர்த்திப் பிடித்து ஏனைய அடையாளங்களை அதற்கு கீழ்படுத்த எண்ணுகிற பார்ப்பனியத்திற்கு எதிராக சமூகப் பண்பாட்டுத் தளத்தில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த இயலும் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். ஜனநாயக ஆற்றல் கொண்டே இன அழிவைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ் சங்கபரிவார் - பாசிச பாசக - இந்துத்துவ சதியை முறியடிக்க இயலும் என்பதைக் கருத்தில் நிறைப்போம்.

சாதியத் தீண்டாமை போது வராத கடவுள்! பச்ச இளம் குழந்தையைக் கற்பழிக்கும் போது வராத கடவுள்! கோவிலில் மட்டும் எப்படி வரும்!

தமிழிசைப்பா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.