பெரியார் தமிழ்த்தேசியத்தின் முன்னோடி ஆவார். 1938 இல் "தமிழ்நாடு தமிழருக்கே" என்னும் வலுவான முழக்கத்தை எழுப்பியவர். சாதி ஒழிப்பே தமிழர்களின் ஓர்மைக்கு வழி என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்கு முன்பே 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தன் பெயருக்குப் பின்னால் இருந்த "நாயக்கர்" என்ற சாதிப் பட்டத்தைத் துறந்து ஈ.வெ. இராமசாமி ஆனார். சாதி ஒழிப்புக்காகச் சடங்கு மறுப்பு, புராண மறுப்பு, இதிகாச மறுப்பு, வேத மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, அதன் உச்சமாகக் கடவுள் மறுப்பு ஆகிய கொள்கைகளைப் பின்பற்றினார். தனது திராவிடர் கழகத் தொண்டர்களையும் அவ்வாறே பின்பற்றச் செய்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு உள்ளிட்ட பிற்போக்குச் சிந்தனை எதிர்ப்பை இயக்கமாக மாற்றியவர். பெரியாரைச் சுருங்கச் சொன்னால் மக்களை விஞ்ஞான மனப்பான்மை உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்னும் மார்க்சியக் கடமையைத் தவறாது செய்தவர் பெரியார் எனலாம்.
அதே 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அன்னை மீனாம்பாள் உள்ளிட்ட குழுவினரால் பெண் விடுதலைக்காகப் பாடுபட்ட ஈ.வெ. இராமசாமிக்குப் "பெரியார்" என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
குடியரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் என்றுதான் 1927 திசம்பர் 18 வரை குறிப்பிடப்பட்டது. 1927 திசம்பர் 25 குடியரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம் அகற்றப்பட்டது. "சாதி ஒழிப்பும் தனித்தமிழ் நாடும் என் உயிரினும் மேலான இரு கொள்கைகள்" என ஆணித்தரமாகக் கூறிச் செயல்பட்டவர் பெரியார்.
1938 இல் ராஜாஜி சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக இருந்தபோது பள்ளிகளில் இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டது. அதை எதிர்த்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மக்கள் நடத்தினர். அதைப் பெரியாரும் மறைமலையடிகளாரும் ஏ.டி. பன்னீர்செல்வமும் ஆதரித்தனர். இந்தப் போராட்டம் முதல் மொழிப்போர் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தில்தான் "தமிழ்நாடு தமிழருக்கே" என்னும் முழக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவியது.
1939 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறைச்சென்ற பெரியார் விடுதலையானார். மக்கள் சிறைவாசலில் காத்திருந்த நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதும் கட்சி நல்ல வளர்ச்சி கண்டது. கட்சியின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாகவும் செல்வந்தர்களாகவும் இருந்ததால் பெரியாரின் தலைமையை ஏற்காமல் கட்சியை விட்டு விலகினர். 1944 இல் நீதிக்கட்சியின் பெயரைத் "திராவிடர் கழகம்" என்று மாற்றினார். நீதிக்கட்சி தேர்தலில் போட்டியிட்டது; திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது சமூகச் சீர்திருத்த இயக்கமாகச் செயல்படுகிறது.
திராவிடர் கழகத்தின் கொள்கைகள் நகர மக்களிடமும் கிராம மக்களிடமும் மாணவர்களிடமும் வெகுவாகப் பரவியது. பார்ப்பனர்களின் அடையாளங்களான இந்தி, சமஸ்கிருதம், மதச் சடங்குகள் போன்றவை மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டன. 1949 முதல் திராவிடர் கழகத்தினர் தங்கள் செயல்பாடுகளான மூடநம்பிக்கை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண் உரிமை, பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினர். அதே 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 (அல்லது செப்டம்பர் 16) அன்று திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் கட்சி அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது. பெரியாரின் தளபதியாக இருந்த அறிஞர் அண்ணா, பெரியாரிடம் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து சென்று திமுகவைத் தொடங்கினார். திராவிட நாடு அல்லது தனித்தமிழ் நாடு பெரியாரின் கொள்கையாக இருந்தது. டெல்லி அரசிடம் இணக்கமாகப் போவது அண்ணாவின் கொள்கையாக இருந்தது. அதுவே பிரிவினைக்குக் காரணமாக அமைந்தது. பெரியார் - மணியம்மை திருமணத்தையும் திமுகவினர் விமர்சித்தனர். "திராவிட நாடு திராவிடருக்கே" என்று பெரியார் முழங்கிக் கொண்டிருந்தபோது, "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்று அண்ணா முழங்கத் தொடங்கினார். பெரியார் கடவுள் மறுப்பு பேசிக் கொண்டிருந்தபோது, அண்ணா "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்னும் திருமூலர் திருமந்திரத்தைத் தனது கட்சியான திமுகவின் கொள்கையாக அறிவித்தார்.
1957 இல் நடைபெற்ற தேர்தலில் பெரியார் காங்கிரசை ஆதரித்தார். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது; திமுக 15 இடங்களைப் பிடித்தது. 1956 இல் பெரியார் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்து கொண்டார். இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை அலுவலக மொழியாக அரசிடம் வலியுறுத்திப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினார்.
முதன்முதலில் திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார் ஆவார். 1949 ஆம் ஆண்டு சனவரி 15, 16 நாள்களில் சென்னையில் "வள்ளுவர் குறள் மாநாடு" என்ற பெயரில் அது நடத்தப்பட்டது. திருக்குறளை ஆய்வு செய்வதும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் இந்த மாநாட்டின் நோக்கங்கள் ஆகும். "குறள் தத்துவத்தை விளக்கி, வெற்றிகரமாக நடத்தப்படும் இம்மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து தமிழ்ப் பார மக்களிடத்தில் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும்" என்று மாநாட்டு அழைப்பில் தந்தை பெரியார் கூறுகிறார். இன்று தமிழர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் திருக்குறள் நூல் இடம்பெற்றிருப்பதற்குத் தந்தை பெரியார் திருக்குறளுக்கு ஆற்றிய பணிகளே காரணமாகும்.
1925 மே 2 ஆம் நாள் குடியரசுப் பத்திரிகைத் தொடங்கப்பட்டது. 1928 நவம்பர் 7 ஆம் நாள் ரிவோல்ட் (Revolt) என்னும் ஆங்கில வார இதழ் தொடங்கப்பட்டது. 1933 நவம்பர் 20 இல் புரட்சி வார இதழ் தொடங்கப்பட்டது. 1934 ஏப்ரல் 15 இல் பகுத்தறிவு நாளிதழ் தொடங்கப்பட்டது. 1934 ஆகஸ்ட் 20 இல் பகுத்தறிவு வார இதழ் தொடங்கப்பட்டது. 1935 மே 1 ஆம் நாள் பகுத்தறிவு மாத இதழ் தொடங்கப்பட்டது. 1935 சூன் 1 ஆம் நாள் விடுதலை வார இருமுறை இதழ் தொடங்கப்பட்டது. 1937 சூன் 1 இல் விடுதலை நாளிதழ் தொடங்கப்பட்டது. உண்மை மாத இதழ் 1970 நவம்பர் 1 (மற்றும் 1971 செப்டம்பர் 1 இல்) "தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்" (The Modern Rationalist) ஆங்கில மாத இதழ் தொடங்கப்பட்டது. இத்தகைய இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து தமிழ்ச் சமூகத்திற்குத் தந்தை பெரியார் தொண்டு செய்தார். தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிசியஸ், வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள தமிழர்களிடையே பெரியாரின் தாக்கம் என்றும் உள்ளது.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை 20/01/1935 இதழில் இருந்து பெரியார் நடைமுறைப்படுத்தினார். தமிழில் அச்சுக் கோப்பதற்கு எளிதாகவும் தட்டச்சு செய்ய எளிதாகவும் வேண்டாத எழுத்துருக்களை நீக்கிவிட்டுச் சீர்மை எழுத்துகளை உருவாக்கினார்.
தனது இதழ்களான குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை ஆகியவற்றில் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார். அதே நேரத்தில் அண்ணா நடத்திய திராவிட நாடு இதழ் மற்றும் திமுகவினர் நடத்திய பல இதழ்களில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் 1978 இல் அரசாணை வெளியிட்டு 1979 இல் அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைச் செய்தவர் தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
தமிழ்த் தேசியத்தை வெறும் இனக்குழுவாதமாகச் சுருக்காமல் பெரியார் தடுத்தாட்கொண்டார். பெரியாரின் தமிழ்த்தேசியம் - சமூகநீதி, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, ஜனநாயகம், சோசலிசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பெரியாரின் முக்கிய முன்னெடுப்புகளால்தாம் தமிழர்களின் நெஞ்சங்களில் மேலோங்கியபடி "தமிழா இன உணர்வு கொள்" என்னும் பெரியாரின் முழக்கம் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. பெரியாரின் தமிழ்த்தேசியத்திற்கு அடிப்படை சாதி ஒழிப்பே ஆகும். சாதி ஒழிந்தால் தமிழ்த் தேசிய ஓர்மை ஏற்படும் என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார்.
பார்ப்பனியத்தின் பிடியில் இருந்த பொங்கல் திருநாளை மீட்டவர் தந்தை பெரியார். பொங்கல் விவசாயிகளின் உழைப்பையும் புதிய உற்பத்தியையும் கொண்டாடும் நாளாக பெரியாரால் பார்க்கப்பட்டது. பொங்கலை மதச்சார்பற்ற விழாவாக மாற்றியதோடு அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் வகையில் "தமிழர் திருநாள்" என்னும் பெயரைச் சூட்டி தமிழ்த்தேசியத்தோடு பொங்கலை இணைத்தார்.
"மக்களின் இன்பத்திற்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பம் அடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே, அதற்கு என்ன செய்வது?" என்று கேட்ட காலத்தில், "பொங்கல் பண்டிகையைத் தமிழர்கள் பண்டிகையாகக் கொண்டாடலாம்" என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறியது. இந்தச் செய்தி வந்த ஆண்டு 19/01/1969 ஆகும்.
"சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயம், பழக்கவழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றினுமே நம் இழிவு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே இவை எல்லாவற்றிலிருந்தும் நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும் இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்து விடமாட்டா" என்று 27/01/1950 அன்று வெளியான விடுதலையில் பெரியார் எழுதுகிறார்.
"ஆரியப் பார்ப்பன இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடாதே! தமிழர்களுக்கு விழா என்றால் அது பொங்கல்தான். அதுதான் சாதிக்கு அப்பாற்பட்ட விழா; தீட்டு என்கிற ஆரியக் கருத்தாக்கத்தை ஏற்காத விழா; அதுதான் தமிழர்களின் புத்தாண்டு விழா" என்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பெரியார் பரப்புரை செய்தார்.
1921 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட புலவர்கள், அறிஞர்கள் கூடி மூன்று முடிவுகளை எடுத்தனர்:
- திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது.
- அதையே தமிழர் ஆண்டு எனக் கொள்வது.
- திருவள்ளுவர் காலம் கி.மு. 31; திருவள்ளுவர் ஆண்டு முதல் மாதம் தை, இறுதி மாதம் மார்கழி; கிழமைகள் வழக்கில் உள்ளவை என்று முடிவு செய்யப்பட்டது.
திருச்சியில் 1937 திசம்பர் 26 இல் தமிழர் மாநாடு நடைபெற்றது. அதன் தலைவர் சோமசுந்தர பாரதியார். அந்த மாநாட்டில் பெரியார், க.சு.பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், தமிழ்த்தென்றல் திரு.வி.க, தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்றுகளுடன் "தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுக் தொடக்கம்; பொங்கலே தமிழர் விழா" என்று அறுதியிட்டுப் பேசினார். "அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று தந்தை பெரியார் கூறியவுடன் மாநாட்டு அரங்கமே அதிர்ந்தது.
தமிழ்த்தென்றல் திரு.வி.க, "என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.இரா. அவர்கள் என்னோடு இருந்து பாடுபட்டவர். என் தாயாகவும் அவர் தந்தையாகவும் இருந்து சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தோம். சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் ஈ.வெ.இரா பொங்கலை ஏற்றுக் கொண்டமைக்கு இந்தத் தமிழகமே பாராட்டுதலைச் செய்வதற்குப் காத்துக் கொண்டிருக்கிறது" என்று பேசினார். இப்படிப் பெரியாரும் தமிழ் அறிஞர்களும் சேர்ந்து பொங்கலைத் தமிழ்த் தேசிய விழாவாக மாற்றினர்.
தமிழ்ப் சமூகத்திற்குத் தன்மானமும் எழுச்சியும் பெரியாரின் இடிமுழக்கங்களால் தமிழினத்திற்கு ஊட்டப்பட்டன. "மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு", "சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி", "படிப்புக்குச் சரஸ்வதியை நம்பாதே, அறிவாளியையும் ஆசிரியர்களையும் நம்பு", "செல்வத்துக்கு லட்சுமியை நம்பாதே, உழைப்பை நம்பு" என்பன போன்ற வாசகங்கள் இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்கும் பொருந்தும்.
சாதி வளர்ப்பிலும் மறைமுக இந்துத்துவ வளர்ப்பிலும் அக்கறை காட்டும் போலித் தமிழ்த்தேசியர்களுக்குத் தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பும் கடவுள் மறுப்பும் இடையூறாக உள்ளன. எனவே வரலாற்றுக் காலவரிசைகளை மாற்றிப் போட்டுப் பெரியார் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப எடுத்த கருத்துகளையும் முடிவுகளையும் வெட்டியும் ஒட்டியும் தங்களுக்கு ஏற்றார்போல் திரித்தும் கூறி பெரியாரை அவதூறு செய்கின்றனர். வரலாறு தெரியாத இளம் தலைமுறையினர் அதை நம்பி ஏமாந்து போகின்றனர். போலித் தமிழ்த் தேசியர்களின் வலையில் இளைஞர்கள் விழுந்தால் தமிழ்நாடு ஒரு நூற்றாண்டு பின்னுக்கு இழுக்கப்படும். அதைத் தடுக்க பெரியார் தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த அனைத்துத் தொண்டுகள் குறித்த செய்திகளையும் துண்டறிக்கைகளாகவும் சிறு வெளியீடாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது நமது வரலாற்றுக் கடமையாகும். பெரியாரைத் தமிழ்ச் சமூகத்துக்குப் புதுப்பித்துத் தருவது காலத்தின் கட்டாயமாகும்.
- தங்க குமரவேல்