உடுமலை சுடரொளி - மலரினியன் நேர்காணல்

home poles 450தோழர் சுடரொளி. உடுமலைப்பேட்டைக்கு அருகில் கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர். தோழர் மலரினியன் அவரது துணைவர். அவர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர். உடுமலையில் 20 ஆண்டுகளாகப் பத்திர எழுத்தாளராக இருக்கிறார்.

மலரினியன் +2 படிக்கும்போதே அவருடைய நண்பருடைய அப்பா அறவாளி அய்யா அவர்களுடைய தொடர்பு கிடைத்தது. அப்போது அவர்களுடைய வீட்டுக்குப் போகும்போது பெரியாரியல் சம்பந்தமான புத்தகங்களை நிறைய படித்து பெரியாரியலை அறிந்தார். 2007 -ல் இருந்து 10ஆண்டுகளாக பெரியாரியல் கொள்கையில் தீவிரமாக இருந்து கொண்டு இருக்கிறார். சுடரொளி - மலரினியன் இணையர் விரிவாகப் பேசத் தொடங்கினர்.

பெரியாரியல் அமைப்புக்கு முன்பு ஏதாவது அமைப்புகளில் இருந்தீர்களா?

நான் தமிழ் அமைப்புகளில் இருந்தேன். ஆனால், தமிழ் அமைப்புகளுக்கும், பெரியாரியல் அமைப்புகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. தமிழர் அமைப்புகள் அடையாளப்படுத்து வதற்காக ஒரு மண்டபத்தில் கூடுவார்கள். கவிதைப் போட்டிகளை நடத்துவார்கள். ஏதாவது அறிஞர்களோட பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக 10, 20 பேர் கூடுவார்கள். அங்கேயே ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக் கொள்வார்கள். அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்திக்கொள்ள கவிதைப் போட்டிகளை நடத்துவார்கள். இதில் சமூகத்திற்கு எந்த ஒரு பயன்பாடும் இல்லை.

இயக்கங்களில் பெண்விடுதலை,சாதி ஒழிப்பு இவற்றையெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் நடைமுறைப்படுத்துவது கிடையாது. பெண்விடுதலைன்னு சொல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய வீடுகளில் பெண்களை அடிமைப்படுத்தித்தான் வைத்து உள்ளார்கள். தங்களுடைய மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்யும்போது, ஒரே சாதியில்தான் பெண் தேடுகிறார்கள்.

ஒரு அரங்கில் 50 பேர் கூடினால் அவர்களுக்குள்ளேயே மாற்றி, மாற்றி சால்வையைப் போத்திக் கொண்டு பாராட்டுகிறார்கள். அதுதான் ஒரு நிகழ்ச்சி. இதில் சமூகத்திற்கு எந்த ஒரு பயன்பாடும் இல்லை. அங்கு நடக்கும் நிகழ்ச்சி அந்த அரங்கத்தோடே முடிந்து விடுகிறது. இதனால் நான் தமிழ் அமைப்புகளில் இருந்து வெளியே வந்தேன்.

பெரியாரியல் தொடர்பாக பல்லடம் விஜயனின் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலமாக நிறைய விவாதம் செய்து, அவர் நிறைய விளக்கம் கொடுத்ததற்குப் பிறகு பெரியாரியல் அமைப்புகளில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். என்னுடைய குடும்பத்தாரும் என்னுடன் இணைந்து முழுமையாக பெரியாரியல் அமைப்புகளில் செயல்படுகிறார்கள்.

நீங்கள் பெரியாரியல் அமைப்புக்கு வந்த பிறகு வீடு கட்டினீர்களா?உங்களுடைய வீடு எந்த மாதிரி கட்டப்பட்டது?

பெரியாரியல் அமைப்புக்கு வந்த பிறகுதான் வீடு கட்டினோம். எங்களுடைய வீடு வாஸ்து பார்க்காமல் எங்களுடைய இட வசதியைப் பொறுத்து கட்டியுள்ளோம்.

வீடு கட்டுவதற்கு யாரிடமாவது ஆலோசனை கேட்டீர்களா?

ஆமாம். நண்பர்களிடமும்,உறவினர்களிடமும் ஆலோசனை செய்தோம். ஆனால், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள். அடி அளவில் பார்த்து சரியாகக் கட்டணும். நல்ல ஒரு ஜோதிடரிடம் போய்ப் பார்த்து உங்களுடைய ஜாதகத்தைக் கொடுத்துவிட்டீர்களானால் உங்களுக்கு எந்தத் திசையில் பார்த்து வீடு கட்டணும் என்று சொல்வார்கள். நீங்கள் அதன்படி கட்டுங்கள். என்பதுதான் பெரும்பாலான ஆலோசனைகளாக இருந்தது.

நான் வீடு கட்டுவதற்கு சிக்கனமும், வீடு வலிமையாக இருக்கவும் மட்டுமே ஆலோசனைகளை எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி எந்த ஒரு ஆலோசனையும் இல்லை. முற்றிலும் மூடநம்பிக்கை நிறைந்ததாக இருந்தது. எனவே, எந்த ஒரு ஆலோசனையையும் நான் ஏற்கவில்லை. என்னுடைய இடவசதியைப் பார்த்து வீட்டு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டேன்.

உங்களுடைய இருவரது பெற்றோரும் நீங்கள் வாஸ்து பார்க்காமல் வீடு கட்டுவதை எப்படி எடுத்துக்கொண்டார்கள்?

எங்களுடைய வீட்டுலையும், மாமியார் வீட்டுலையும் எங்களுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்கள் எதுவும் சொல்வதும் இல்லை. செய்வதும் இல்லை உங்களுக்கு எது விருப்பமோ, அதன்படி செய்யுங்கள் என்றுதான் சொன்னார்கள். அதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சைனையும் இல்லை.

வாஸ்துக்கு மாறாக வீடு கட்டும்போது எஞ்ஜினியரிடம் ஆலோசனை செய்தீர்களா?

நம்மளுடைய தோழர் அ.ப.சிவா கட்டிடப் பொறியாளர் என்பதால், நான் அவரிடம் ஆலோசனை செய்தேன். அவரும் சிறப்பாகச் செய்து முடித்து விடலாம் என்று சொன்னார். ஆனால் நான் வேறு ஒரு பொறியாளரை வைத்து வீடு கட்டியிருந்தால் அவருக்கும் நமக்கும் ஒரு முரண்பாடாகவே இருந்து இருக்கும். என்னங்க இப்படிச் சொல்கிறீர்கள். அங்க அது வேண்டாங்கிறீங்க, இங்க இது வேண்டான்னு சொல்றீங்க என்று சொல்வார்கள்.

பொதுவாகவே எல்லோருக்கும் வீடு கட்டியிருக்கிற மாதிரி வாஸ்து சாஸ்திரத்தைப் பயன்படுத்தி இருப்பார். இப்போ 100 வீடுகள் கட்டியிருந்தால் 99 வீடு வாஸ்து முறைப்படிதான் இருக்கும். நாம் ஒருவர் மாத்திக் கட்டும்போது அவருக்கும் சிரமமாக இருக்கும். ஆனால் நம்மளுடைய உணர்வாளர் அ.ப.சிவா எஞ்ஜினியர் என்பதினால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

உங்களுடைய வீடு கட்டிய அமைப்பைப் பற்றிச் சொல்லுங்கள்?

தெற்குப் பார்த்து வாசல் இருந்தால் நல்ல காற்றோட்டமாக இருக்கும் என்று பொறியாளர் சொன்னார். நான் கூட அவரிடம் தெற்குப்பார்த்து இருந்தால் அதிகமான காற்று காரணமாக மண், தூசி படிந்துவிடும். கிழக்குப் பார்த்து வாசல் இருந்தால்தான் சூரியஒளி வீட்டுக்குள் படும். அப்பத்தான் குடும்பத்திற்கு நல்லது என்று சொல்கிறார்கள் என்றேன்.

அதற்குப் பொறியாளர் அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நீங்கள் தெற்குப் பார்த்து கட்டினால் நன்றாக இருக்கும். நீங்கள் கட்டியிருப்பதைப் பார்த்து நிறைய பேருக்கு இந்த மாதிரி வீடு கட்ட வேண்டும் என்று தோன்றும் என்று சொன்னார். ஆனால், இப்பொழுதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது. கிழக்குப் பார்த்து கட்டியிருந்தால் ஒரு செண்ட் இடத்தை நடைபாதைக்காகவே விட வேண்டியிருந்திருக்கும். ஆனால், நாங்கள் தெற்குப் பார்த்து கட்டியதால் வீட்டுக்கு வெளியே வந்தால் உடனே, நல்ல அகலமான சாலை உள்ளது. கிழக்குப் பார்த்து கட்டியிருந்தால் இடம் வீணாகியிருக்கும். இப்போது எங்களுக்கு இடமும் வீணாகவில்லை. ரொம்பவும் வசதியாகவும் இருக்கிறது.

வாஸ்து என்பதும் மூடநம்பிக்கையா? அறிவியல் அணுகுமுறை அதில் இல்லையா?

இது முழுக்க முழுக்க மூடநம்பிக்கைதான். வாஸ்துவில் கழிப்பறையையோ, நூலகத்தைப் பற்றியோ கூறிப்பிடவேயில்லை. 100 சதம் வாஸ்து பார்த்துக் கட்டப்படும் வீடு என்றால், அதில் நூலகமோ, கழிப்பறையோ இல்லாமல்தான் கட்டணும். இல்லாத ஒன்று எப்படி வாஸ்துவில் வந்தது. நீங்கள் 100 வாஸ்து நிபுணர்களைப் பார்த்தால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாகத்தான் சொல்வார்கள். எப்படி ஜோதிடமும், ஜாதகமும் நாம் எத்தனை பேரிடம் பார்த்தாலும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் சொல்வார்களோ அப்படித்தான் வாஸ்துவும்.

ஆனால், அறிவியல்படி ஒரு நபருக்கு ஒரு வியாதி இருந்தால் நாம் எத்தனை மருத்துவரிடம் போனாலும் அவர்களின் அத்தனை பேரின் பதிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், நாம் வாஸ்து நிபுணரிடம் போனால் ஒருத்தர் ஜலமூலையில் சமையலறை இருக்க வேண்டும் என்பார். இன்னொருத்தர் உங்க ஜாதகப்படி இங்கதான் இருக்கவேண்டும் என்பார். இப்படி மாற்றி, மாற்றிச் சொல்லிக் குழப்பிவிடுவார்கள். இது நிச்சயமாக அறிவியலுக்குப் புறம்பான ஒரு மூடநம்பிக்கைதான்.

வாஸ்து பார்த்து வீடு கட்டியிருந்தால் கழிப்பிடம் இருக்கக்கூடாது வெளியில்தான் போயிட்டுவர வேண்டும். அப்படியிருக்கும்போது எல்லா வீடுகளிலும் கழிப்பிடம் இருக்கிறது. இப்படிப் பார்க்கும்போது அறிவியல்தான் வெற்றியடைந்திருக்கிறது.

வாஸ்துவில் எட்டு திசைகளின் சிறப்பம்சங்கள் பற்றி உங்களின் கருத்து என்ன?

இப்போது என்னோட வீட்டுக்கு வடகிழக்கு மூலைன்னா அது ஜலமூலை. அதே மூலை பக்கத்து வீட்டுக்கு வடமேற்கு மூலை. அது அவுங்களுக்கு வாயுமூலை. எனக்கு குபேரமூலை. ஜலமூலையில்தான் போர் போடணும் அப்படீன்னு சொல்கிறோம். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் வந்து அங்கே கழிப்பறை போவார்கள். காம்ப்பவுண்ட்டிற்கு இந்த பக்கம் எனக்கு ஜலமூலை எனக்கு தண்ணீர் இருக்கும். காம்ப்பவுண்டிற்கு அந்தப் பக்கம் அவுங்க கழிவுநீர் இருக்கும்.

கழிவுநீர் அங்கே வருவதனால்தான் அங்கே ஜலமூலை என்று அந்த காலத்தில் கிணத்தோடு தண்ணீர் வரும். அதாவது கழிப்பறையில் இருக்கிற தண்ணீர் எஞ்ஜி இதில்தான் வரும். அது மக்களுக்கு புரியாமல் அங்கேதான் தண்ணீர் வருது இதுதான் ஈசான் இருக்கிற இடம் என்றும் சொல்கிறார்கள்.

சமயலறையை அக்னி என்றும் ஒருசிலர் அக்னிமூலை அதாவது தென்கிழக்கு மூலையிலும் சமயலறையை வைப்பார்கள். ஒருசிலர் அக்னிமூலை தென்கிழக்கு மூலையிலும் கழிப்பறையைக் கட்டுவார்கள். ஒரு வீட்டுக்கு தென்மேற்கு மூலை கண்ணிமூலை என்றும் சொல்வார்கள். அங்கே பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். தென்மேற்கு மூலையை பூஜை அறையாக வைத்து இருப்பார்கள்.

அதே பக்கத்து வீட்டுக்குப் பார்த்தால் காம்ப்பவுண்டுக்கு அந்தப் பக்கம் தென்கிழக்கு மூலை அக்னி மூலையில் சமையலறையும் வைப்பார்கள். கழிப்பறையையும் வைப்பார்கள். இது எப்படி என்றால் சுவற்றிற்கு இந்த பக்கம் கழிப்பறை சுவற்றிற்கு அந்த பக்கம் பூஜை அறை. இப்படி இருக்கும் குழப்பத்தை இதை எப்படி ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்ற வாஸ்தாக ஏற்றுக்கொள்ள முடியும்.இது மிக மிகக் குழப்பமான செயல்.

வீடு கட்ட ஆரம்பிக்கிறது செவ்வாய், ஞாயிறு, அக்னிபயம் என்றும், திங்கள் வரவு என்றும், புதன், வியாழன், வெள்ளி சுபம் என்றும், சனி திருட்டு பயம் என்றும் சொல்கிறார்கள். இதில் நீங்கள் எந்த நாளில் வீடு கட்ட ஆரம்பித்தீர்கள்?எந்த நாளில் வீடு திறப்புவிழா செய்தீர்கள்?

நாங்கள் வீடு கட்டத் துவங்கியது செவ்வாய்க்கிழமை. மார்ச் 8 ஆம் தேதி. மகளிர் தினம். ஒரு ஞாபாகமாக இருக்கவேண்டும் என்று அந்த நாளில் தொடங்கினோம். எங்களுடைய வீட்டுக்கு ஆகஸ்ட் 17ஆம் தேதி மதியம் 1.30 மணிமுதல் 2 மணி வரை எமகண்ட நேரத்தில்தான் திறப்புவிழா செய்தோம்.

அஷ்டமி, நவமி நாட்களில் எந்த ஒரு சுபகாரியத்தையும் தொடங்கக்கூடாது என்பார்கள். ஆனால் அஷ்டமி அன்றுதான் வீடு திறப்புவிழா செய்தோம். தி.வி.க தலைவர் தோழர் கொளத்தூர்மணி அண்ணன் தான் திறப்புவிழா செய்தார். தோழர் விடுதலை இராஜேந்திரன் மற்றும் நம்மளுடைய இயக்கத் தோழர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். எங்களுடைய வீடு ரிப்பன் கட்பண்ணித்தான் திறப்புவிழா செய்தோம். வீட்டில் பால் காய்ச்சுவது, புரோகிதர் அழைத்து வந்து ஓமம் செய்தல் அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. ஒரு சின்ன கருத்தரங்கம் (வீடு கட்டுவது தொடர்பாக) நடத்தி திறப்புவிழா செய்தோம்.

வீடு திறப்புவிழா அன்று நாங்கள் கறிவிருந்து ஏற்பாடு செய்திருந்தோம். அஷ்டமி அன்று அசைவம் சமைக்கக் கூடாதுன்னு சொல்வார்கள். ஆனால் நாங்கள் அசைவம்தான் செய்தோம். வீட்டுக்கு வாழைமரம் கட்டுவது, வீட்டை அலங்கரிப்பது, மா இலைத் தோரணம் கட்டுவது போன்ற எதையும் செய்யவில்லை.

எங்களுடைய வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள்கூட நீங்கள் வீடுகட்டும்போதும் வாஸ்து பார்க்காமல் கட்டினீர்கள். திறப்புவிழாவிற்கும் அய்யரைக் கூப்பிடவும் இல்லை. நீங்க செலவுக்குப் பயந்து எல்லாம் இப்படிச் செய்கிறீர்கள். இப்படியெல்லாம் செய்தால் குடும்பத்திற்கு கஷ்டம் வந்திடும் அப்படீன்னு சொன்னார்கள். ஆனால்,அதைப் பற்றி எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.

சில புதிய வீடுகைைளயேகூட வாஸ்து சரியில்லை என்று கூறி, வாஸ்துப்படி இடித்து மாற்றி கட்டுவது பாதுகாப்பானதா? அதனால் பயன் உள்ளதா?

நிச்சயமாக அறிவுடையதும் அல்ல. பாதுகாப்பானதும் அல்ல. பயனுள்ளதும் அல்ல. வீடு கட்டுவதற்கு முன்பு அஸ்திவாரம் தோண்டி பீம் வைத்து, கட்டிடம் உறுதியாக இருக்கவேண்டும் என்று பெல்ட் கான்கிரீட் எல்லாம் போட்டு வீடு நன்றாக இருக்கவேண்டும் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து வடிவமைக்கின்றோம்.

இதை வாஸ்து பார்த்து இந்த இடத்தில் கதவு இருக்கக்கூடாது, இந்த இடத்தில் ஜன்னல் இருக்கக் கூடாது என்று நாம் அதை இடிக்கும்போது கட்டிடத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்படுகிறது. அது அந்த இடத்தை மட்டுமில்லாமல் டிரில்லிங் மிஷின் வைத்து உடைக்கும்போது அதனுடைய அதிர்வு முழுமையாக கட்டிடத்தையே பாதிக்கும்.

இப்படி நாம் மாற்றம் செய்யும்போது ஒரு 25 அல்லது 30 ஆண்டுகள் தாங்கக்கூடிய வீடுகள் ஒரு 10 ஆண்டுகளிலேயே ஆயுட்காலம் முடிந்துவிடும். ஒரு சின்ன நில அதிர்வு வந்தால் கூட அந்தக் கட்டிடம் தாங்காது. இப்படி வீடுகளை இடித்துக்கட்டுவது உண்மையிலேயே பாதுகாப்பானது அல்ல.ஒரு அறிவில்லாத செயல்தான்.

வீடு கட்டுவதில் வேறு என்ன மூடநம்பிக்கைகள் உள்ளன?

பார்ப்பனச் சுரண்டல்களை பற்றி தந்தைப் பெரியார் விளக்கமாகவே நமக்கு குடுத்தபாடம் இருக்கிறது. பக்தி வந்தால் புத்தி போகும்.புத்தி வந்தால் பக்தி போகும். என்று (அன்பு என்பது வேறு) பக்தி என்பது நம் மூளையில் போடப்பட்ட விலங்கு. பக்தியினால் புத்தி எப்படிப் போகிறது என்பதைக் கவனியுங்கள்.

நாம் புதிதாக வீடு கட்டும்போது கொத்தனார் ஒரு செங்கல்லை எடுத்து இரண்டாக உடைக்கிறார்கள். காரணம் அந்த இடத்தில் முழுக்கல்லை வைக்க முடியாது. பாதி கல்லைத்தான் வைக்க முடியும். வீடு கட்டும் உரிமையாளர் ரூ.3/- பெறுமானமுள்ள செங்கல்லை உடைத்த உடன் தனது செல்வம் அழிந்துவிட்டது போலக் கூச்சலிடுகிறார். அதே போலக் கொஞ்சம் சிமெண்ட கலவை கீழே சிந்தினாலும் கோபப்படுகிறார்.

அதே நபர் வீடு கட்டி முடித்தவுடன் கிரகப்பிரவேஷம் என்ற பெயரில் ஒரு பார்ப்பானை அழைத்து வருகிறான். வந்த பார்ப்பான் ரூ 500/- மதிப்புள்ள நெய்யை நெருப்பில் ஊற்றி வீணடிக்கிறான்.

செங்கல்லை உடைத்தபோது கூச்சலிட்ட மடையன் ரூ 500/-மதிப்புள்ள நெய்யை வீணடிக்கும்போது பக்தியுடன் கைகூப்பி வணங்கி நிற்கிறான். புத்தி இழந்து. மேலும் பார்ப்பான் சத்துள்ள பூசணிக்காயை இரண்டாக உடைத்து தெருவில் வீசி எறியச் சொல்லுவான். வீட்டின் உரிமையாளன் தலைவணங்கி பார்ப்பான் சொன்னபடியெல்லாம் செய்வான்.

கொத்தனார் உடைத்த செங்கல் இரண்டு பாகமும் வீணாகப் போவதில்லை. அடுத்த வரிசை வரும்போது மறு பாதி உபயோகப்படுத்தப்படும். ஆனால் நெருப்பில் ஊற்றிய நெய்யோ, உடைத்த பூசணிக்காயோ எவருக்கும் எந்த வகையிலும் பயன்படாது. இதே போலத்தான் பக்தியின் பெயரால் புத்தி இழந்து நாம் பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.

வாஸ்து பார்த்து வீடு கட்டுவது யாருக்கு இலாபம்? பொறியாளருக்கா? ஜோதிடருக்கா? வீட்டு உரிமையாளருக்கா? இதைப் பற்றி உங்களுடைய கருத்து?

சில பொறியாளர்கள் வாஸ்து நிபுணராகவும், பொறியாளராகவும் இரண்டாகவும் செயல்படுகிறார்கள். இது இலாப நோக்கில் பார்த்து செய்யும்போது இதை இப்படிச் செய்யவேண்டும் என்று பார்த்துக் குடுப்பதற்காக ஒரு கமிஷன் பெற்றுக்கொள்கிறார்கள். பொறியாளர் மட்டும் இருந்துகொண்டு வாஸ்து நிபுணரிடம் போனால் அவங்களுக்கு ஒரு அதிகமான தொகை குடுக்க வேண்டியிருக்கும். வாஸ்து பார்த்தால் வாஸ்து நிபுணருக்கும் இரண்டாவதாக வாஸ்து நிபுணராகவும் இருக்கின்ற பொறி யாளருக்குத்தான் இலாபம். ஜோதிடருக்கும் இலாபம். வாஸ்து பார்க்காத வரைக்கும் நம்மளுக்குத்தான் இலாபம்.

வாஸ்து என்பது எந்த காலத்தில் இருந்து தொடங்கியது? நம்மளுடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து இருக்கிறதா? இல்லை இடைப்பட்ட காலத்தில் புகுத்தப்பட்டதா?

வாஸ்து சாஸ்திரம் பல ஆண்டுகளுக்கு முன்பே இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் குறுகிய காலத்தில்தான் இது பிரபலப்படுத்தப்பட்டிருக்கின்றது. என்னுடைய அப்பா, தாத்தா காலத்தில் எல்லாம் நாம் இருக்கிறதுக்கு ஒரு இருப்புடம் தேவை. அந்த இடத்தில் நமக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கிறதா என்று பார்த்து ஒரு சிறிய கூடாரங்களை போட்டுத்தான் வாழ்க்கையை வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள்.

அதற்குப் பின்பு பணவசதியைப் பொறுத்து வீட்டை, தேவையான அளவிற்கு அதிகப்படுத்திக் கொண்டார்கள். பணம் அதிகமாக, அதிகமாக என்ன செய்வது என்று தெரியாமல் ஜோதிடர்களுக்கு வாஸ்து பார்ப்பது என்று கூறி மூடநம்பிக்கையால் பணத்தைச் செலவழிக்கிறார்கள். அதேபோல் ஜோதிடரும் பணம் இருப்பவர்களைக் குழப்பிவிட்டுத் தேவையில்லாமல் பயத்தை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து பணம்பறிக்கும் வேலையைச் செய்கிறார்கள்.

உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் வாஸ்துப்படி வீடு கட்டவேண்டும் இல்லையென்றால் நோய் வந்துவிடும், கஷ்டம் வரும் என்று பயத்தை ஏற்படுத்துகிறார்கள். இப்படி மக்களைக் குழப்பிவிட்டு ஏமாற்றும் வேலை புரோகிதர்களின் வேலை. நாம் ஏமாந்து போவது நம்மளுடைய தவறு. ஏமாறுகின்ற மக்கள் இருக்கிறவரைக்கும் ஏமாற்றுகிறவன் இருந்தே தீருவான். நாம் தான் விழிப்புணர்வாக இருக்கவேண்டும்.

வாஸ்துக்கு மாறாக நீங்கள் வீடு கட்டியதால் உங்களுடைய குடும்பத்திற்கோ (அல்லது) தொழிலுக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா?

வாழ்க்கைமுறை என்பது அவங்க வாழ்கின்ற முறையைப் பொறுத்து. எந்த ஒரு ஜாதகமோ, வாஸ்தோ இவை எதுவுமே நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்வது இல்லை. நம்மளுடைய வாழ்க்கை முறையை நாம் நிர்ணயம் செய்யவேண்டும். நாம்தான் வாழ்கிறோம். நாம்தான் திட்டமிடவேண்டும் .நம்மளுடைய திட்டமிடுதல் சரியில்லையென்றால் வாழ்க்கையும் சரியில்லாமல் போய்விடும். நாம் திட்டமிடுவது சரியானதாக இருந்தால் நாம் எப்படிப்பட்ட வீடுகளில் இருந்தாலும் ஏன் வாடகை வீட்டில் இருப்பவர்கள்கூட பல இலட்சக்கணக்கில் வருமானம் பெற்று நன்றாக இருக்கிறார்கள். வாஸ்து முறைக்கும், வாழ்க்கை முறைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. வாஸ்துக்கு மாறாக வீடு கட்டியதால், என்னுடைய குடும்பத்திற்கோ, என்னுடைய தொழிலுக்கோ எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. நாங்கள் நன்றாக இருக்கிறோம்.