கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மோடி அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், தில்லி ஷந்தர் மந்தரில் திரண்டு போராட்டம் நடத்தினர். மனித உரிமைகளுக்கு எதிரான மூன்று கொடிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதில், ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

பாஷக அரசானது, 1860-ஆம் ஆண்டின் இந்தியத் தண்டனைச் சட்டத்திற்குப் (IPC) பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா (BNS), 1973ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு (CrPC) பதிலாக பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 1872-ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) ஆகிய புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முந்தைய குற்றவியல் சட்டத்தில் (Cr.PC) ஒருவரை ரிமாண்ட் செய்யும் அதிகாரம் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய புதிய சட்டம் (BNSS) பிரிவு 187, நிர்வாகத்துறை நடுவருக்கும் (வட்டாட்சியர்) ரிமாண்ட் அதிகாரத்தை வழங்கியுள்ளது. இது ஆட்சியாளர்களுக்கு பிடிக்காதவரை, சட்டவிரோத காவலில் வைக்க சட்டப்படியான அதி காரத்தை தருகிறது. இதன்மூலம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற பெருநகர நீதிமன்றங்கள், மாவட்ட உதவி அமர்வு நீதிமன்றங்கள் புதிய சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளன. நீதி மன்றங்களின் அதிகாரம் மற்றும் மாண்பு சிதைக்கப்பட்டுள்ளது.

ஒருவரை 14 நாட்கள் மட்டுமே ரிமாண்ட் செய்ய முடியும் என்ற நிலையில், புதிய சட்டம், நீதிபதி முன்பு ஆஷர்படுத்தாமலேயே 90 நாட்கள் வரை ரிமாண்ட் செய்ய வழி ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, சனநாயக ரீதியில் நடக்கும் தர்ணா, மறியல், ஆர்ப்பாட்ட நிகழ்வின்போது காவல்துறையுடன் ஏற்படும் தள்ளுமுள்ளுகளுக்குப் புதிய தண்டனைச் சட்டம் பிரிவு 131ன்படி வழக்கு போட்டு இரண்டு ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்க வகை செய்கிறது.

புதிய சட்டப்பிரிவு 172ன்படி காவல்துறை அதிகாரியின் வழி காட்டுதலை மீறும் நபரை அடைத்து வைக்கலாம், சிறைப்படுத்தலாம், வெளியேற்றலாம் என எல்லையில்லா அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் போலீஸ் அடக்குமுறை ராஜ்ஜியத்திற்கு வழிவகை செய்துள்ளது. இதுபோன்ற பல்வேறு சட்டப்பிரிவுகள் மனிதஉரிமை, சனநாயக உரிமைகளுக்கு எதிராகவும் ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறைக்கு ஆதரவாகவும் உள்ளன.

இவ்வாறு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் அரசியலமைப்பிற்கு விரோதமானவை. மொழி உரிமை, மாநில அரசுகளின் உரிமை, கூட்டாட்சித் தத்துவம், மக்களின் சனநாயக உரிமைகளுக்கு எதிரானவை. நீதிமன்றங்களின் அதிகாரத்தைக் குறைத்து, ஆளும் வர்க்கத்திற்கும், காவல்துறை, அரசு நிர்வாகம் உள்ளிட்ட அவர்களின் அடக்குமுறைக் கருவிகளுக்கு மிருகபலத்தை வழங்குகின்றன. மத வெறியர்களுக்கு சாதகமாகவும் உருவாக்கப்பட்டுள்ளன என்று சட்ட வல்லுநர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் போராடி வருகின்றனர்.

செய்தி: வழக்கறிஞர் தயாநிதி