கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பெண்களுக்கு எதிராக நேரும் வன்கொடுமைகளைக் கண்டிப்பவர்கள் அனைவரும் சில கூட்டங்களுக்கு எதிரியே!

கடந்த ஆண்டு பாலியல் புகாரில், பாஷக வைச் சார்ந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக்கோரி, இந்தியாவிற்காகப் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராடினார்கள். அவர்களுள் ஒருவர் தான் வினேஷ் போகத்.

பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2024 ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான மல்யுத்தத்தில், 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த இந்தியாவின் வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாகச் சொல்லி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

vinesh pogathஇந்தத் தகுதி நீக்கம் குறித்து நாடாளுமன்றம், பல அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவராலும் பல யூகங்களும், கேள்விகளும் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இதற்கெல்லாம் முன்பே பதில் சொல்லும் வகையில் வினேஷ் போகத் ஏப்ரல் 12, 2024 அன்று ஒரு குறுஞ்செய்தியைப் பதிவிட்டு இருந்தார். அதில், "ஒலிம்பிக் தகுதிப்போட்டி ஏப்ரல் 19 நடைபெற இருக்கும் நிலையில் தனது பயிற்சியாளர் மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை அளிப்பவருக்கும் அங்கீகாரம் வழங்க ஒரு மாதமாக அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்தும் தனக்கு தகுந்த பதில் கொடுக்கக் கூட இந்திய அரசு தயாராக இல்லை எனவும், பிரிஜ் பூஷன் மற்றும் சஞ்சய் சிங், தான் ஒலிம்பிக்கில் பங்கேற்காதவாறு செய்வதற்கு எல்லாவகை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர், மற்றும் ஒலிம்பிக் பயிற்சியாளர்கள் அனைவரும் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள். ஒருவேளை அவர்கள் தண்ணீரில் ஏதேனும் கலந்து கொடுத்து என்னைத் தோல்வியடையச் செய்தாலும் ஆச்சரியம் இல்லை" என்ற ஐயத்தை அன்றே வினேஷ் போகத் போட்டிக்கு முன்பே எழுப்பி இருந்தார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் போட்டியாளருக்குப் போட்டிக்கு முன்பு உள்ள ஏழு நாட்களில் பயிற்சியாளர் மற்றும் உடற்பயிற்சி சிகிச்சையாளரின் உதவி இன்றியமையாதது. அவர்களுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே போட்டியாளரால் தக்க பயிற்சிகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பே தடை செய்து வைத்துள்ளது. அன்று பிரிஜ் பூஷன் என்னும் ஒற்றை நபரைக் காப்பாற்ற, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடிய இந்திய வீரர்கள், வீராங்கனைகளை மோடி அரசு "தேச விரோதிகள்” என்று கூறியதோடு மட்டுமின்றி எல்லைப் பாதுகாப்புப் படையைக் கொண்டு அடித்து இழுத்து சாலையில் வீசியதை உலகமே அறியும்.

குற்றம் சுமத்தப்பட்டவரின் மகன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதும், தவறினைத் தட்டிக் கேட்பவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதும் ஒரே அரசின் கீழ் தான் என்பதை நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அரை இறுதிக்குப் பிறகான 12 மணி நேரம் என்ன நடந்தது? இறுதிப் போட்டிக்குத் தயாராக எடையை பரிசோதித்த போது தான் 52.7 கிலோவாக அவரது எடை அதிகரித்து இருந்தது. பலுத்தூக்குதல், ஸ்கிப்பிங்(தாவுதல்), சைக்கிளிங் (மிதிவண்டி ஓட்டுதல்) போன்ற எடைக் குறைப்புப் பயிற்சிகளை மேற்கொண்ட வினேஷ், உணவு உட்கொள்ளவில்லை; ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்கவில்லை; ஒரு நொடி கூட உறங்கவில்லை. இறுதிக் கட்டமாக அதிகாலையில் நீராவிக் குளியல் போன்ற மருத்துவ முறையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இனி வியர்வையே வராது என்ற கட்டத்தில் தலை முடியை வெட்டுவது, உடலில் இருந்து சிறு அளவு இரத்தத்தை வெளியேற்றுவது என எடைக் குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன. இத்தனைக்கும் பிறகு வினேஷின் எடை 50.1 ஆகக் குறைந்தது. 100 கிராம் வினையாகி அவர் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்ததோடு தரவரிசையின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார். அவரது தகுதி இழப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சொல்லிவிட்டது.

பாரிசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகளாவிய ஒலிம்பிக் அமைப்பின் 142-வது அமர்வில், இந்தியாவிலிருந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டவர் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீத்தா அம்பானி. எட்டு ஆண்டுகளாகச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக இருந்து வரும் இவர் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்துக் குரல் கொடுக்காமல் இருந்தது ஏன்? இவருக்கும் பாஷக விற்குமான தொடர்பு என்ன?

இந்தத் தகுதி நீக்கம் இந்தியாவிற்கு யாரோ செய்த சதி என்று ஒரு தரப்பினர் பேசினாலும், இந்தியாவிற்குள்ளேயே வினேஷ் பதக்கம் வெல்வதில் விருப்பம் இல்லாத அரசியல்வாதிகளின் நாடகமாகக் கூட அல்லது பழிவாங்கலாகக் கூட இருக்கக்கூடும் என்பதை மேற்கூறிய நிகழ்வுகளின் வரிசை நம்மை எண்ண வைக்கிறது.

இவ்வளவு நடந்தும் பெண்களுக்கு, தான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தகுதிச் சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதிச் சுற்றுகளை ஒரே நாளில் வென்ற வினேஷ் போகத் இந்தியாவிற்குக் கிடைத்த தங்கம். இதை நாம் அனைவரும் வழிமொழிந்தே ஆக வேண்டும்.

இறுதிச்சுற்றுக்குத் தேர்ச்சி பெற்று, வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் உறுதியான நிலையில் அதாவது உலகமே பார்க்கவிருக்கும் மேடையில் வினேஷன் வெற்றி உரை உறுதி என்ற செய்தி யாரைப் அச்சுறுத்தியதோ !

இன்று வினேஷின் வெற்றிக்குரலை அவர்கள் தடுத்திருக்கலாம். இது போன்ற குரல்கள் தடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தாலும், இந்திய ஒன்றியத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து எங்கேனும் ஏதாவது ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். இது தவிர்க்க முடியாதது; யாராலும் தடுத்து நிறுத்த முடியாதது.

தன்னைத் தாக்க வரும் எதிரிகளை எதிர்த்து விரட்டி அடிக்கும் தேனீக்களைப் போல, இந்நாட்டில் நடைபெறும் அநீதிகளை, மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு இளைஞர்கள், மக்கள் திரள் ஒன்றுபட வேண்டும். உரிமைகளுக்காகக் களமாடிக் கைகோர்க்க வேண்டும்.

- தமிழ்நாடு ஆசிரியர் குழு